இலங்கையின் மலைப் பொழில்கள்

இலங்கையின் மலைப் பொழில்கள் என்பன இலங்கையின் நடுவில் மலைநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்துக்கு மேலாக அமைந்துள்ள சூழலியற் பகுதி உள்ளடக்குகின்ற காடுகள் ஆகும். வளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ள இக்காடுகள் உலக வாழ் உயிரினங்கள் பலவற்றிலும் தனிச் சிறப்பு மிக்க இனங்கள் ஏராளமாக வாழும் இடமாகும்.[1] இக்காடுகள் தாழ்நில மழைக்காடுகளை விட மிகக் குளிர்ச்சியானவையாகும். இதன் காரணமாக, இங்கு மேகக் காடுகள் உருவாவதற்குத் தேவையான சூழற் தகைமை காணப்படுகிறது.[2] இலங்கையின் தனிச் சிறப்பான பூக்கும் தாவரங்களில் பாதிக்கும் கூடுதலானவை இக்காடுகளில் காணப்படுகின்ரன. மேலும், தனிச் சிறப்பான முள்ளந்தண்டுளிகளில் 51 வீதமானவை இக்காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இலங்கைக்கே உரிய மரங்கள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் 34 வீதத்துக்கும் கூடுதலானவை இம்மலைப் பொழில்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றன. இக்காடுகளில் மிகப் பொதுவாகவே முறுக்குண்ட, வளைந்த, நெளிந்த மரங்கள் காணப்படுகின்றன. அவ்வாறே, ஏராளமான ஓர்க்கிட் தாவரங்களும் பாசித் தாவரங்களும் பன்னத் தாவரங்களும் இக்காடுகளில் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன.[2] மலைப் பொழில்களில் மரங்கள் 10-15 மீட்டர் உயரம் வளர்கின்றன. இவை தாழ்நில மழைக்காடுகளில் காணப்படும் மரங்களைவிட உயரம் மிகக் குறைவானவையாகும்.[3] மேலும், இவ்வுயர் நிலக் காடுகள் இலங்கையின் முக்கிய ஆறுகள் பலவற்றிற்கும் நீர்தாங்கு பகுதிகளாகக் காணப்படுகின்றன.[4]

இலங்கையின் மலைப் பொழில்கள்

காட்டுப் பகுதி தொகு

இலங்கையின் மலைப் பொழில்களின் அமைவு உண்மையில் கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்துக்கும் மேலாகவே காணப்படுகின்றது.[3] இம்மலைப் பொழில்கள் மொத்தமாக 3099.5 எக்டேர் நிலப்பரப்பை, அதாவது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 0.05 வீதமானவற்றைத் தம்மகத்தே உள்ளடக்குகின்றன. இக்காடுகள் பிதுருதலாகல, கிக்கிலிமான, மீப்பிலிமான, அக்ரபோப்பத்தலாவ, சிவனொளிபாத மலை மற்றும் ஹக்கல போன்ற மலையுச்சிகளுடனான இடங்களிலேயே அமைந்துள்ளன. இவற்றின் கீழான பகுதிகளில், அதாவது கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டருக்கு இடைப்பட்ட பகுதிகளில், மலைப்பாங்கான காடுகள் காணப்படுகின்றன. அம்மலைப்பாங்கான காடுகள் மொத்தமாக 65,793.3 ஹெக்டேர் நிலப்பரப்பை, அதாவது இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 1.04 வீதத்தைத் தம்முள் உள்ளடக்குகின்றன.

மாவட்டம் மலைசார் காடுகள்
எக்டேரளவு
மலைப்பாங்கான காடுகள்
எக்டேரளவு
இரத்தினபுரி 40.8 15,711.4
கண்டி 935.1 8,633.3
கேகாலை 3,705.4
நுவரெலியா 1,940.1 29,384.1
பதுளை 94.5 3,030.3
மாத்தளை 89.0 4,780.4
மாத்தறை 536.2
மொனராகலை 11.2
மொத்தம் 3,099.5 65,792.3

புவிச்சரிதவியல் வரலாறு தொகு

இலங்கை மையோசீன் காலப் பிரிவில் தக்காண தீபகற்பத்திலிருந்து வேறாகிய போதும் இத்தீவின் தொடக்கம் கோண்டுவானா நிலப்பரப்புடன் இணைந்திருந்தது.[1] உயிர்ப் புவியியல் சார் தன்மைகளை ஆராய்கையில், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தாழ்நில ஈரவலய மழைக்காடுகள் அவற்றின் அருகிலிருக்கும் மலைப் பொழில்களிலும் பார்க்கக் கூடுதலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இலங்கைத் தீவு பிரிந்த பின்னர் அப்பகுதிக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்த உலர்ந்த, சூடான தட்பவெப்பநிலையாகும். பிற்காலத்தில் பிளைட்டோசீன் காலத்தின் போது இரு நிலப்பரப்புகளும் ஒன்று சேர்ந்திருந்த போதும் இந்தியாவின் ஈரவலயக் காடுகளுக்கும் இலங்கையின் ஈரவலயக் காடுகளுக்கும் இடைநடுவே உண்டான மிக உலர்ந்ததும் வெப்பம் கூடியதுமான காலநிலை, அக்காடுகளுக்கிடையில் உயிரியல் தொடர்பு ஏற்படுவதைத் தடுத்துவிட்டது. இதன் காரணமாகவே இலங்கையின் தென்மேற்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் உயிரினங்கள் இப்பகுதிகளுக்கே உரிய தனிச் சிறப்பான இனங்கள் ஏராளமாகத் தோன்றுவதற்கு வழியேற்பட்டது.

தன்மைகள் தொகு

இலங்கையின் நடுப்பகுதி மலைநாட்டின் மலைகளின் சராசரி உயரம் 1800 மீட்டராக இருந்த போதும் அவற்றிற் சில மலையுச்சிகள் 2500 மீட்டர்ர் உயரத்தை விடவும் கூடியனவாகும். கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1500 மீட்டர் உயரத்தைக் கொண்டதாயிருந்தாலும் நக்கிள்ஸ் மலைத்தொடரின் சில பகுதிகள் 1800 மீட்டரிலும் கூடியனவாகும். இவ்வுயரத்தின் காரணமாக அங்கு காணப்படும் சராசரி வெப்பநிலை குறைவானது என்பதால் அப்பகுதிகள் தாழ்நிலப் பகுதிகளை விட குளிர்ச்சியானவையாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளின் சராசரி வெப்பநிலை 15°C-20°C ஆகும்.[3] டிசம்பர் முதல் பெப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் இப்பகுதிகளில் நிலத்தின் பனி ஏற்படுவதைக் காண முடியும்.

இக்காடுகள் பெறும் சராசரி வருடாந்த மழை வீழ்ச்சி 2000-2500 மிமீ ஆகும். மே முதல் செப்டெம்பர் வரை நிலவும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக பெருமளவு மழைவீச்சியைப் பெறுகின்ற போதும் திசம்பர் முதல் பெப்ரவரி வரை நிலவும் வடகிழக்குப் பருவ மழையும் குறிப்பிடத்தக்க மழைப் பொழிவை இக்காடுகள் பெறுவதற்குக் காரணமாகின்றது. இலங்கைத் தீவின் முக்கிய ஆறுகள் அனைத்தும் மத்திய மலைநாட்டிலேயே உற்பத்தியாகின்றன. அதேவேளை, அவ்வாறுகளுக்கான நீர்தாங்கு பகுதிகளாக இலங்கையின் மலைப் பொழில்கள் திகழ்கின்றன.

தாவரங்கள் தொகு

இச்சூழலியற் பகுதியின் தாவரவியற் தன்மையானது இங்கு நிலவும் தட்பவெப்பநிலை (காலநிலை) மற்றும் இப்பகுதியின் உயரம் என்பவற்றாலேயே தீர்மானிக்கப்படுகிறது. மலைப் பொழில்களில் கூடுதலாகக் காணப்படுபவை இருசிறகி வகைத் தாவரங்களாகும். அதேவேளை மலைசார் புன்னிலங்கள் (புல் பரப்பு நிலங்கள்) மற்றும் மேகக் காடுகளில் உரோசாவினத் தாவரங்களே கூடுதலாகக் காணப்படுகின்றன. இலங்கையின் மலைப் பொழில்களைச் சேர்ந்த சிகரக் காட்டுவள சரணாலயம் தனிச் சிறப்பான இருசிறகி இனங்களைக் கொண்டுள்ளது. உரோசாவினத் தாவரங்கள் பத்தனைப் புன்னிலங்களிலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இம்மலைப் பொழில்களில் ஒருகாலத்தில் சுதந்திரமாப் பரவிக் கிடந்த ஆசிய யானைகள் இவற்றில் இப்போது காணப்படுவதில்லை.[1] மத்திய மலைநாடுகளின் ஏனைய பகுதிகளை விட மிக வித்தியாசமான தாவர இனங்கள் நக்கிள்ஸ் மலைத்தொடரில் காணப்படுவது புவியிற் பிரிவினை காரணமாகவாகும்.

உயிர்ப்பல்வகைமை தொகு

இந்த மலைப் பொழில்களில் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்கக் கூடுதலான எண்ணிக்கையான இலங்கைக்குத் தனிச் சிறப்பான இனங்கள் காணப்படுகின்றன.[1] இலங்கைத் தீவில் காணப்படும் பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் இலங்கைக்குத் தனிச் சிறப்பான முண்ணாணிகளில் 51 வீதமானவையும் இக்காடுகளில் காணப்படுகின்றன. சற்று விலகி நிற்கும் நக்கிள்ஸ் மலைத்தொடர் மத்திய மலைநாட்டுக்கே தனிச் சிறப்பாயமைந்து தப்பி வாழும் ஏராளமான தாவர இனங்களையும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது. இலங்கையின் மலைப் பொழில்களில் இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், செடிகள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் 34 வீதத்தினைக் கொண்டுள்ளன.

விலங்குகள் தொகு

முலையூட்டிகள் தொகு

இலங்கையின் மலைசார் மழைக்காடுகளில் காணப்படும் இலங்கையில் மட்டுமே காணப்படும் எட்டு முலையூட்டி இனங்களில் ஐந்து இனங்கள் இம்மலைப் பொழில்களுக்கே உரித்தானவையாகும்.[1] கொறிணிகள், பேரெலிகள், வௌவால்கள் போன்ற சிறிய முலையூட்டி இனங்களின் ஏராளமான துணையினங்கள் இம்மழைக்காடுகளிலேயே வாழ்கின்றன. இந்த முலையூட்டி (பாலூட்டி) இனங்களில் 70 சதவீதமானவை சிறிய பூனை ஒன்றின் பருமனிலும் குறைவானவையாகும்.[2] எனினும், இக்காடுகள் இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய ஊனுண்ணி விலங்கான இலங்கைச் சிறுத்தை வாழ்வதற்கு உகந்த இடமன்று. இலங்கைச் சிறுத்தை அழிவை எதிர்நோக்கும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்மலைப் பொழில்களில் காணப்படும் கொறிணிகளில் ஐந்து இனங்களும் அழிவை எதிர்நோக்குவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பறவைகள் தொகு

இலங்கையின் மலைப் பொழில்கள் தன்னகத்தே தனிச் சிறப்பாகக் காணப்படும் பறவை இனங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது. இம்மழைக்காடுகளில் வாழும் பறவையினங்கள் இருபதில் ஐந்து இனங்கள் இக்காடுகளுக்கு மாத்திரமே உரியனவாகும். இப்பறவையினங்களுள் செம்முகப் பூங்குயில் தனிச் சிறப்பானதும் அழகானதுமாகும்.

ஊர்வனவும் ஈரூடகவாழிகளும் தொகு

பறவைகள், முலையூட்டிகள் என்பவற்றைவிட இலங்கையில் காணப்படும் ஊர்வன கூடுதல் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன.[5] புதிய வகை மீனினங்கள், நண்டுகள் என்பவற்றுடன் தவளை இனங்களும் பல்லி இனங்களும் இலங்கையில் இன்னும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.[1]

காப்பு தொகு

1990 முதல் 2005 வரையான 15 வருட காலப்பகுதியில் இலங்கையில் உலகிலேயே மிகவும் அதிகமாகக் கன்னிக் காடுகள் அழிக்கப்படுவது நிகழ்ந்துள்ளது.[6][7] அக்காலப் பகுதியில் இலங்கையின் காட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 18 வீதம் அழிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கையின் விலங்கினங்கள் பல அழிவை எதிர்நோக்கத் தொடங்கின. 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, இலங்கைக்கேயுரித்தான தவளை இனங்களில் 11 வகை இனங்கள், அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் முற்றும் அழிந்துள்ளன. அத்துடன், மேலும் 11 தவளை இனங்கள் அழிவுறும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. அவற்றின் வாழிடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினாலேயன்றி அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகக் கடினம்.[7] 1820 ஆம் ஆண்டு முதல் கோப்பிப் (காப்பி) பயிரிடவும் அதன் பின்னர் தேயிலைப் பயிரிடவும் பெரிய காடுகள் பலவும் அழிக்கப்பட்டுள்ளன. அக்காடுகளின் சில சிறிய பகுதிகள் வேறு விவசாயப் பயிர்களுக்காக ஒதுக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

மலைப் பொழில்களின் அழிவிற்கு அவற்றில் ஏற்படுகின்ற மண்ணின் நச்சுத் தன்மை மற்றுமொரு காரணமாகும்.[8] நக்கிள்ஸ் மலைத்தொடர் மாறுபாடான முறையில் அழிவிற்கு உட்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெரியளவில் இடம் பெறும் நறுமணப் பொருட்கள் பயிரிடல், குறிப்பாக ஏலப் பயிர்ச்செய்கை காரணமாக காடுகள் அழிக்கப்படலாமெனும் அச்சம் நிலவுகிறது.[9]

தற்போது இச்சூழலியற் பகுதியின் ஐந்து பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் சேர்ந்து மொத்தமாக வெறுமனே 457 கிமீ2 பரப்பளவையே உள்ளடக்குகின்றன.[1] அந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளாவன:

பாதுகாக்கப்பட்ட பகுதி பரப்பளவுகிமீ2 IUCN வகைப்படுத்தல்
பிதுருதலாகல 80 VIII
ஹக்கல 20 I
நக்கிள்ஸ் 217 IV
சிகரக் காட்டுவள சரணாலயம் 120 IV
ஓட்டன் சமவெளி 20 II
மொத்தம் 457

மேலும் பார்க்க தொகு

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 விக்கிரமநாயக்க, எரிக் டி. மற்றும் குணதிலக்க, சாவித்திரி. "இலங்கையின் மலைப் பொழில்கள் (IM0155)". worldwildlife.org. உலக வனவிலங்கு நிதியம். பார்க்கப்பட்ட நாள் 2009-09-16.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. 2.0 2.1 2.2 "இலங்கையின் மலைப் பொழில்கள் (IM0155)". nationalgeographic.com. உலக வனவிலங்கு நிதியம். 2001. பார்க்கப்பட்ட நாள் 2009-03-28.
  3. 3.0 3.1 3.2 (சிங்கள மொழி) சேனாரத்ன, பி.எம். (2005). இலங்கைக் காடுகள் (1st ). நுகேகொட: சரசவி வெளியீட்டகம். பக். 22–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-401-1. 
  4. ஜயந்த, ஜயந்த (2006-05-29). "காடுகளும் ஏனைய தாவர வகைகளும்". Daily News இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604214200/http://www.dailynews.lk/2006/05/29/fea06.asp. பார்த்த நாள்: 2009-09-15. 
  5. "இலங்கை - உலக ஊர்வன வாழிடம்". pdn.ac.lk. பேராதனைப் பல்கலைக்கழகம். 30 மே 2008. Archived from the original on 2009-05-28. பார்க்கப்பட்ட நாள் 2009-03-28.
  6. டி லிவேரா, லங்கிகா (9 செப்டெம்பர் 2007). "இழந்த மழைக்காடுகளை மீளவளர்த்தல்". The Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/070909/Plus/plus0011.html. பார்த்த நாள்: 2009-03-28. 
  7. 7.0 7.1 பட்லர், ரெற் ஏ. (6 நவம்பர் 2006). "சர்வதேச மழைக்காட்டு மீட்பு அமையத்தின் தலைவர் கலாநிதி ரணில் சேனாநாயக்கவுடனான நேர்காணல்". mongabay.com. Mongabay. பார்க்கப்பட்ட நாள் 2009-03-28.
  8. ரணசிங்க, பி.என். (2008). "இலங்கையின் மலைசார் காடுகளின் மேற்புறத்திலிருந்தான அழிவில் மண்ணின் நச்சுத் தன்மை வகிக்கக்கூடிய பங்கின் சாத்தியம்". Astrophysics Data System. அமெரிக்க புவிப்பௌதிகவியல் ஒன்றியம். பார்க்கப்பட்ட நாள் 2009-03-28. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  9. Wickramage, Florence. "Parasites' Knuckled fist casts long shadow over 'Lanka's Alps'". Daily News இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604202320/http://www.dailynews.lk/2005/06/04/fea05.htm. பார்த்த நாள்: 2009-03-28.