இளஞ்சேட்சென்னி

இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், பொ.யு க்கு முந்தையவர்களாகக் கருதப்படும், பரணர்[1] என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார்[2] என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான் சென்னி. வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறியுள்ளனர்.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இறந்தான் என்பது முடத்தாமக் கண்ணியர் இயற்றிய பொருநராற்றுப்படை மூலம் தெரியவருகிறது.

சோழ வேந்தன் இளஞ்சேட் சென்னியை அடிப்படையாகக் கொண்டு மூன்று தொகுதிகள் அடங்கிய ‘வென்வேல் சென்னி’ எனும் வரலாற்றுப் புதினத்தை எழுதியுள்ளார், இளம் எழுத்தாளர் சி.வெற்றிவேல், சாளையக்குறிச்சி. மௌரியரின் தென்னகப் படையெடுப்பு, மூவேந்தர்கள் மொழிபெயர் தேயத்தில் கூட்டுப்படை அமைத்து தமிழகத்தைக் காவல் காத்தது, சென்னி பாழிக் கோட்டையைத் தகர்த்தது ஆகிய நிகழ்வுகளின் அடிப்படையில் ‘வென்வேல் சென்னி’ புதினத்தை இயற்றியுள்ளார்.

பலரா? தொகு

அரசர் வெற்றி, கொடை பாடிய புலவர்
உருவப் பஃறேர் (பல்தேர்) இளஞ்சேட் சென்னி தேரில் ஏறிப் படை நடத்திச் சென்றவன். 'வயமான் சென்னி' எனப் போற்றப்பட்டவன். பரணர் [4]
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி வடவடுகரை வாட்போரில் ஓட்டியவன். புலவர்க்குப் போர்களத்திலேயே களிறுகளைப் பரிசாக நல்கியவன். புலவர் குடும்பத்துக்கு அணிகலன் நல்கினான். ஊன்பொதி பசுங்குடையார் [5]
(பாழி நூறிய) இளம்பெருஞ்சென்னி செருப்பாழி நகரை நூறியவன், வடுகரை வென்றவன் இடையன் சேந்தன் கொற்றனார் [6]
சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி தேரில் படை நடத்திச் சென்றான். பாமுள்ளூர் சேரர் கையில் இருக்கும்போதே தனது என்று சொல்லிப் பாணர்களுக்கு வழங்கினான் ஊன்பொதி பசுங்குடையார் [7]
நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி நெய்தலங்கானல் அரசன். பகைவர் பணிந்தபோது தண்டிக்காதவன். வள்ளல் ஊன்பொதி பசுங்குடையார் [8]

வென்வேல் சென்னி தொகு

இது எழுத்தாளர் சி. வெற்றிவேல் என்பவரால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது. மௌரியரின் தென்னகப் படையெடுப்பு, மூவேந்தர் கூட்டணி, வடுகப் போர், சோழ வேந்தன் இளஞ்சேட் சென்னியின் செருப்பாழிப் போர் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. புறநானூறு நான்காம் பாடல்
  2. புறநானூறு 266 ஆம் பாடல்
  3. அகநானூறு 375 ஆவது பாடல்:
    .....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
    விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
    குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
    செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
    வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....
  4. புறம் 4, 266
  5. புறம் 370, 378
  6. அகம் 375
  7. புறம் 365
  8. புறம் 10

உசாத்துணை நூல்கள் தொகு

வெளிப்பார்வை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளஞ்சேட்சென்னி&oldid=3521216" இலிருந்து மீள்விக்கப்பட்டது