எண்ணிம பிரேத பரிசோதனை

எண்ணிம பிரேத பரிசோதனை (Digital autopsy) என்பது பாதிப்பில்லா பிரேதப் பரிசோதனையாகும். இதில் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சி.டி) அல்லது காந்த அதிர்வு அலைவு வரைவு (எம்ஆர்ஐ) வருடி உள்ளிட்ட எண்ணிம முப்பரிமாண படத் தொழில்நுட்பம் மூலம் மனித உடலின் மெய் நிகர் ஆய்வுக்காக முப்பரிமாண படங்களை உருவாக்குதலாகும்.

எண்ணிம பிரேத பரிசோதனை என்பது எண்ணிம கருவிகளைக் கொண்டு கணினிமயமாக்கப்பட்ட சூழலில் பிரேத பரிசோதனை நடத்துவதாகும். எண்ணிம மயமாக்கலின் முதல் படி இறந்தவரிடமிருந்து மூல தரவு படங்களை வழங்கும் மருத்துவ இமேஜிங் முறைகளுடன் தொடங்குகிறது. கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (சி.டி மின்வருடி) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (எம்ஆர்ஐ) வருடி ஆகியவை மிகவும் பொதுவான முறைகள். முப்பரிமாண மருத்துவ காட்சிப்படுத்தல் என்பது 3 டி உடலை ஆராய்வதற்கும் எண்ணிம பிரேதப் பரிசோதனை செய்வதற்கும் எண்ணிம சூழலை வழங்கும் தொழில்நுட்ப செயல்முறையாகும்.

எண்ணிம பிரேதப் பரிசோதனை என்ற வார்த்தையை 1985க்கு முன்னர் பழக்கத்தில் இல்லை. ஆய்வுக் கட்டுரைகளிலும் காண முடியாது. இருப்பினும், இதே போன்ற பல சொற்கள் உள்ளன: தனிப்பட்ட உறுப்புகளுக்கான பிரேதப் பரிசோதனை சி.டி ஸ்கேனிங் பயன்படுத்தி,[1] வால்யூமெட்ரிக் கதிரியக்க ஸ்கேனிங்,[2] மெய் நிகர் பிரேதப் பரிசோதனை [3] மற்றும் விர்டோப்சி.[4]

வரலாறு தொகு

முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிம பிரேதப் பரிசோதனை ஒன்று 1980ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மெயின்சு பல்கலைக்கழக மருத்துவமனை நரம்பியல் கதிரியக்கத் துறையில் நடத்தப்பட்டது. இதில் 105 மனித மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் இறந்து பிறந்த குழந்தைகளின் மாதிரிகள், கர்ப்பகாலம் 13 முதல் பிரசவத்திற்கு பிந்தைய மாதம் 18 வரை ஆய்வு செய்யப்பட்டது.[5] அப்போதிலிருந்து 2டி சிடி ஸ்கேன் படங்களின் பயன்பாட்டிலிருந்து படிப்படியாக பல்படி-பிளானர் புனரமைப்புகளின் (எம்.பி.ஆர்) இன்றைய தொழில்நுட்ப, உயர் வரையறை 3D பதிப்புவரை உருவாகியுள்ளது. ஆம்ஸ்டர்டமில் உள்ள கல்வி மருத்துவ மையத்தில் பண்டைய மம்மியாக்கப்பட்ட மாதிரிகள் குறித்து எண்ணிம 3 டி பரிசோதனையால் மனித மற்றும் விலங்கு உடற்கூறியல் மற்றும் நோயியலின் பல்வேறு அம்சங்கள் 1998ஆம் ஆண்டில் வெற்றிகரமாக ஆய்வு செய்யப்பட்டன. அன்றிலிருந்து இதேபோன்ற ஆய்வுகள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் செய்யப்பட்டுள்ளன. சி.டி.கதிரியக்கத் துழாவப்பட்ட பட முறையினைப் பயன்படுத்தி பிணப்பதனத்திலிருந்து பெறப்பட்ட துழாவற்பட தரவுகளின் எண்ணிம 3 டி பகுப்பாய்வு, கர்ணக் கோயிலில் மந்திரம் சொல்பவர்கள் முகங்கள் உட்படக் காட்சிப்படுத்த உதவியது. இந்த தொழில்நுட்பம் எம்பாமிங் மற்றும் அடக்கம் செயல்முறைகள் குறித்த பரந்த தகவல்களையும் வழங்கியுள்ளது.[6] ஆஸ்திரேலியாவில் 2009 ஆம் ஆண்டில், விக்டோரியன் புதர் தீவிபத்தின் போது டி.வி.ஐ செயல்முறையின் 2 ஆம் கட்டத்தின் போது விஐபிஎம், சிடி ஸ்கேனிங் மற்றும் டிஐகோம் தரவின் எண்ணிம பகுப்பாய்வு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. அணைத்து இறந்த உடல்களும் சிதறிய எச்சங்களும் குறிப்பிட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி சி.டி. வருடி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. எண்ணிம பரிசோதனை மனிதரல்லாத எச்சங்களின் இருப்பைப் பிரிக்க உதவியது மட்டுமல்லாமல், கடுமையான சிதைவுற்ற உடல்களை அடையாளம் காண்பதில் பயனுள்ளதாகவும் இருந்தது.[7]

எண்ணிம பிரேதப் பரிசோதனையானது தற்பொழுது சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய ராஜ்யம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்க வல்லுநர்கள் இதை வண்ணமயமான முப்பரிமாண காட்சிகளை வழங்காத பிரேதப் பரிசோதனை கணினி டோமோகிராபி (பிஎம்சிடி) என்று அழைக்கின்றனர். சுவிட்சர்லாந்தில், இது விர்டோப்ஸி (மெய் நிகர் பிரேதப் பரிசோதனை) என்று அழைக்கப்படுகிறது. நோயியல் நிபுணர்கள் (தடயவியல் நோயியல் வல்லுநர்கள்) இந்த செயல்முறையை எண்ணிம பிரேதப் பரிசோதனை என்கின்றனர்.

கருத்து தொகு

தடயவியல் பிணக்கூறு ஆய்வு அல்லது பிரேதப் பரிசோதனை இறப்பிற்கான காரணங்களை அறிய, இறப்பானது திடீர் என நிகழ்ந்ததா, எதிர்பாராத, வன்முறை காரணமாக நிகழ்ந்ததா, இறப்பிற்குக் காரணமாகப் போதைப்பொருள் உள்ளதா, அல்லது சந்தேகத்திற்கிடமான மரணங்கள் நிகழும் போது காரணத்தைக் கண்டறிவதை உள்ளடக்கியது.[8] எண்ணிம பிரேதப் பரிசோதனையும் வழக்கமான ஓர் பிரேதப் பரிசோதனையைப் போலவே உடற்கூறு ஆய்வினை மேற்கொள்ளாமல் அதே புலனாய்வு கேள்விகளுக்கு பதிலளிக்க முயல்கிறது.

நடைமுறையில் உள்ள பிரேதப் பரிசோதனையின் போது ஏற்படும் சில சிக்கல்களைச் சமாளிக்க எண்ணிம பிரேதப் பரிசோதனை நடைமுறைக்கு வந்தது. வழக்கமான பிரேதப் பரிசோதனையின் முக்கிய சிக்கல்கள்:

  • துண்டிக்கப்பட்ட உடலைப் பாதுகாப்பதுடன், அழிவு மற்றும் மாசு இல்லாத நடைமுறைகளுடன் சேகரிப்பது சாத்தியமில்லை.
  • சில உடல் பகுதிகளில் தரவு கையகப்படுத்தல் சாத்தியமற்றது, குறிப்பாக விபத்து காரணமாகச் சிதைவுற்ற திசுக்கள், உடல் பகுதிகள்
  • ஆதாரங்களின் பார்வையாளர்-சுயாதீன ஆவணங்கள் கிடைக்கவில்லை
  • இறந்தவர், உறவினர்கள் மற்றும் மதக் கடமைகளிலிருந்து உடலினை கையகப்படுத்தல்
  • பேரழிவுகளின் போது மெதுவான மற்றும் முழுமையற்ற தரவு கையகப்படுத்தல்
 
முப்பரிமாண உடலின் தசைகள் (இந்த படம் iDASS ஆல் உருவாக்கப்பட்டது மற்றும் iGene Sdn க்கு பதிப்புரிமை பெற்றது. பி.டி.)
 
முப்பரிமாண உடலின் எலும்புக்கூடு (இந்த படம் iDASS ஆல் உருவாக்கப்பட்டது மற்றும் iGene Sdn க்கு பதிப்புரிமை பெற்றது. பி.டி. )

மேலே குறிப்பிட்ட சிக்கல்களுக்கு எண்ணிம பிரேதப் பரிசோதனை ஒரு சிறந்த தொழில்நுட்ப தீர்வாகும். சி.டி அல்லது எம்.ஆர்.ஐ வருடிககள் போன்ற மருத்துவ உருவவரைவு முறைகளைப் பயன்படுத்துவதால் இறந்தவரின் உடலில் எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாமல், மாசுபடுத்தாமல், உடலை ஆய்விற்காக அறுவை மூலம் பிரிக்காமல் மேற்கொள்ளவல்லது. இது இந்த நடைமுறையின் படியாகும். மேலும், இந்த படங்களை மென்பொருள் செயலாக்கத்துடன் காட்சிப்படுத்தப்படுகிறது. கடினமான பகுதிகளிலிருந்து உடற்கூறியல் கண்ணோட்டத்திலும் உடலினை கண்ணியமாகப் பயன்படுத்தித் தரவைப் பெறுவது இரண்டாவது படியாகும். கணினியில் உள்ள எண்ணிம உடல்களைப் பல முறை ஆய்விற்கு உட்படுத்தலாம். கிடைக்கக்கூடிய உருவத்தினை பல்வேறு ஊடகங்களிலும் (புகைப்படம், திரைப்படம் போன்றவை) பயன்படுத்தி ஆய்வு செய்யலாம்). வழக்கமான பிரேதப் பரிசோதனையில் எடுத்துக்கொள்ளும் நேரத்தை இந்நடைமுறையுடன் ஒப்பிடுகையில், விரைவான மதிப்பீடு இம்முறையில் கிடைக்கிறது.

இருப்பினும், எண்ணிம பிரேதப் பரிசோதனையில் செயல்முறைப் படுத்துவதில் வரம்புகள் உள்ளன. ஊடுகதிர் மற்றும் காந்தப்புலங்களை (சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ) அடிப்படையாகக் கொண்ட மருத்துவ உருவவரைவு முறைகளில் வழங்கப்படும் தரவு இந்த தொழில்நுட்பங்களால் நாம் பதிவு செய்யக்கூடியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. காட்சிப்படுத்தல் மென்பொருளில் உருவகப்படுத்தப்பட்டதை ஒப்பிடுகையில், உட்புற உடல் உறுப்புகளின் உண்மையான நிறம் மற்றும் இறந்தவர்களில் அவற்றின் மாற்றங்களில் மிகவும் வெளிப்படையான வேறுபாடுகள் தெரிகின்றன. இந்த தொழில்நுட்ப தீர்வின் புதுமை ஒரே சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நிபுணர்களிடையே அறிக்கைகளின் நிலைத்தன்மை குறித்த ஆய்வுகளுக்கு போதுமான நேரம் கொடுக்கவில்லை. மேலும், எண்ணிம பிரேதப் பரிசோதனையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து சில ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்பம் தொகு

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவு முறையானது எண்ணிம பிரேதப் பரிசோதனைக்கு மிகவும் பொருத்தமான பொதுவான உருவவரைவு முறையாகும். இறந்தவரைப் பகுப்பாய்வு செய்வது உருவத் தரவை பெற சி.டி. குருதிக் குழாய் வரைவு பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகளில் வெளியீடு நிலையான படக் கோப்புகளாகும் (DICOM கோப்புகள்). ஒவ்வொரு படமும் 5 மிமீ தடிமன் உள்ளது, எனவே முழு உடல் வருடியபின் (மனித சராசரி உயரம் 175 செ.மீ) மனித உடலின் 3500 படங்களை (துண்டுகள்) உருவாக்கி ஒரு தொகுதியாக ஒழுங்கமைக்கப்படுகிறது. பின்னர் இதனைப் பயன்படுத்தி இரு பரிமாண படங்களும் மனித உடலின் 3 டி திட்டத்தை உருவாக்குகின்றன. 3 டி மாதிரி ஆர்ஜிபிஏ பரிமாற்ற செயல்பாடு மூலம் வண்ணமயமான மாதிரிக்கு மாற்றப்படுகிறது. இந்த 3 டி மாதிரியைக் கையாளுவதும் அனைத்தையும் காட்சிப்படுத்தலும் படச் செயலாக்க அம்சங்களும் எண்ணிம பிரேதப் பரிசோதனை செய்வதற்கான எண்ணிம கருவிகளில் உள்ளடக்கியுள்ளது. இந்த அம்சங்கள் மூலம் நோயியல் நிபுணர், முழு உடலையும் ஆராய்தல், அல்லது சந்தேகிக்கூடிய உடல் பகுதிகள் மற்றும் உறுப்புகளை வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய உதவுகின்றன. படச் செயலாக்க வழிமுறைகள் தோல், தசை மற்றும் எலும்புகள் போன்ற உடல் திசுக்களின் அடுக்குகளைப் பிரித்தறிய உதவுகின்றன. மேலும், காற்று போன்ற குறைந்த அடர்த்தி பொருள்களையும், உலோகம் போன்ற புறப்பொருட்களையும் (உயர் அடர்த்தி பொருள்களையும்) முப்பரிமாண உடலில் குறிக்கவும் பார்க்கவும் முடியும். உதாரணமாக, உள் புழை அல்லது குடல்கள் போன்ற காற்று (உள்ளே) உள்ள உறுப்புகளை மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கலாம் அல்லது துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாக உடலில் உள்ள குண்டுகளின் எச்சங்களைக் காணலாம்.

பிரேத பரிசோதனை நடத்துதல் தொகு

எண்ணிம பிரேதப் பரிசோதனை முறையில் தொடர்புடைய மீதரவுகளுடன் வழக்கைப் பதிவு செய்வதன் மூலம் செயல்முறை தொடங்குகிறது. பாதுகாப்பு, பிரேதத்தைக் கையாளுதல் மற்றும் உடலின் நிலை காரணமாக சவக்கிடங்குகளுக்கு அருகிலே எண்ணிமப் பிரேதப் பரிசோதனை நிலையத்தினை நிறுவி சோதனை செய்தல் வசதியானது. இறந்த உடலின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களுடன் உடலானது வருடப் படும் (ஸ்கேன் செய்யப்படும்). உயிருடன் உள்ள உடலுடன் இறந்த உடலை ஒப்பிடுகையில் இறந்தவர்களின் உடலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் வேறுபாடுகள் உள்ளன. வருடியின் திறனைப் பொறுத்து இச்செயலுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம். வருடியின் நிறைவில் படங்கள் DICOM கோப்புகளாக (முழு உடல் வருடலில் சுமார் 3500 கோப்புகள்) காட்சிப்படுத்தல் செயல்முறைக்கு அனுப்பப்படும். இறுதியில் ஒரு வண்ணமயமான முப்பரிமாண மெய் நிகர் உடலாக்கப்படும். இது எண்ணிம கருவிகளைக் கொண்டு நேர்மறை அல்லது எதிர்மறை காரணங்களைக் கண்டுபிடிக்கலாம். முப்பரிமாண ஆய்வுடன் செயல்முறை முடிந்து விடுவதில்லை. இம்முறையில் கண்டுணர்ந்தது பல்லூடக அறிக்கையாக எண்ணிம முறையில் தயாரிக்கப்படும். இந்த அறிக்கையில் படங்களுடன் கூடிய அனைத்து உரை முடிவுகளும், பரிசோதனையின் போது எண்ணிம முறையில் பதிவு செய்யப்பட்ட திரைப்படமும் அடங்கும். இந்த அறிக்கை நீதிமன்றத்தில் பொதுவான சமர்ப்பிப்புக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்தில் சாட்சியாகவும் காண்பிக்கப்படும்.

ஏற்றுக்கொள்வது தொகு

தடயவியல் விசாரணைகளின் சட்ட நடைமுறைகளாக எண்ணிம பிரேதப் பரிசோதனையை ஏற்றுக்கொண்ட நீதி அமைப்புகள் உலகம் முழுவதும் குறைவாகவே உள்ளன. இதில் முன்னோடியாக சுவிட்சர்லாந்து உள்ளது. வலுவான மத பின்னணி கொண்ட இஸ்ரேல் போன்ற நாடுகள் தடயவியல் உருவவரைவினை மாற்றாகவோ அல்லது பிரேதப் பரிசோதனை அறிக்கையுடன் இணைத்து ஏற்றுக்கொள்ளவோ இல்லை. இது வழக்குகள் மற்றும் ஆவணங்களின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்.[9] சில ஆராய்ச்சியாளர்கள் எண்ணிம பிரேதப் பரிசோதனையின் நம்பகத்தன்மையை வழக்கமான (நிலையான) பிரேதப் பரிசோதனையுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயன்றனர். நோய்க்கிருமி வழிமுறைகள் தொடர்பாக எண்ணிம பிரேதப் பரிசோதனை 68% துல்லியமானதாக உள்ளது.[10]

இங்கிலாந்தில், சுகாதாரத் துறையானது சவக்கிடங்கு அடிப்படையிலான உருவவரைவு மையங்களால் வழங்கப்படும் பிராந்திய சேவையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த தேசிய குறுக்கு வெட்டு பிரேதப் பரிசோதனை உருவவரைவு சேவைக்கான பரிந்துரைகளைப் பரிசீலித்து வருகிறது.[11] மேலும், ராயல் கல்லூரி கதிரியக்கவியலாளர்களும், ராயல் கல்லூரி நோயியலாளர்களும் இங்கிலாந்தில் முதியவர்களின் பிரேதப் பரிசோதனையில் பிரேதப் பரிசோதனை குறுக்கு வெட்டு உருவவரைவினை தரப்படுத்த ஆவணம் ஒன்றைத் தயாரித்தனர்.[12]

மேற்கோள்கள் தொகு

  1. Törő, Klara (2015). "Medicolegal evaluation of environmental-related mortality". Edorium J Forensic Sci 1: 4–8. http://www.edoriumjournalofforensicscience.com/archive/2015-archive/100002F02KT2015-toro/100002F02KT2015-toro.pdf. பார்த்த நாள்: 4 December 2015. 
  2. Thali, Michael J.; Braun, Marcel; Kneubuehl, Beat P.; Brueschweiler, Walter; Vock, Peter; Dirnhofer, Richard (May 5, 2000). "Improved vision in forensic documentation: forensic 3D/CAD-supported photogrammetry of bodily injury external surfaces combined with volumetric radiologic scanning of bodily injury internal structures provides more investigative leads and stronger forensic evidence". Proc. SPIE 3905, 28th AIPR Workshop: 3D Visualization for Data Exploration and Decision Making. 28th AIPR Workshop: 3D Visualization for Data Exploration and Decision Making 213: 213–221. doi:10.1117/12.384876. http://proceedings.spiedigitallibrary.org/proceeding.aspx?articleid=916092. பார்த்த நாள்: 4 December 2015. 
  3. D. N., Notman; Tashjian, Joseph; Aufderheide, Arthur C.; Cass, Oliver W.; Shane 3rd, O. C.; Berquist, T. H.; Gray, J. E.; Gedgaudas, E. (1986). "Modern imaging and endoscopic biopsy techniques in Egyptian mummies". American Journal of Roentgenology 146 (1): 93–96. doi:10.2214/ajr.146.1.93. பப்மெட்:3510047. https://archive.org/details/sim_ajr-american-journal-of-roentgenology_1986-01_146_1/page/93. 
  4. Törő, Klara (2015). "Medicolegal evaluation of environmental-related mortality". Edorium J Forensic Sci 1: 4–8. http://www.edoriumjournalofforensicscience.com/archive/2015-archive/100002F02KT2015-toro/100002F02KT2015-toro.pdf. 
  5. Flodmark, O; Becker, LE; Harwood-Nash, DC; Fitzhardinge, PM; Fitz, CR; Chuang, SH (1980). "Correlation between computed tomography and autopsy in premature and full-term neonates that have suffered perinatal asphyxia". Radiology 137 (1): 93–103. doi:10.1148/radiology.137.1.7422867. பப்மெட்:7422867. https://archive.org/details/sim_radiology_1980-10_137_1/page/93. 
  6. Clark, Nick (10 April 2014). "British Museum uses CT scans to show mummies' faces after thousands of years". 
  7. O’Donnell, C.; Iino, M.; Mansharan, K.; Leditsc, J.; Woodford, N. (February 2011). "Contribution of postmortem multidetector CT scanning to identification of the deceased in a mass disaster: Experience gained from the 2009 Victorian bushfires". Forensic Science International 205 (1–3): 15–28. doi:10.1016/j.forsciint.2010.05.026. பப்மெட்:20691550. http://www.fsijournal.org/article/S0379-0738(10)00280-X/abstract. 
  8. Dolinak, David; Matshes, Evan; Lew, Emma O. (2005). Forensic Pathology: Principles and Practice. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080470665. https://books.google.com/books?id=JdtgE0eHTL4C. 
  9. Tal, S; Berkovitz, N; Gottlieb, P; Zaitsev, K (March 2015). "Acceptance of forensic imaging in Israel.". Isr Med Assoc J 17 (3): 141–4. பப்மெட்:25946763. https://www.ima.org.il/FilesUpload/IMAJ/0/109/54550.pdf. பார்த்த நாள்: 7 December 2015. 
  10. Westphal, Saskia E.; Apitzsch, Jonas; Penzkofer, Tobias; Mahnken, Andreas H.; Knüchel, Ruth (23 June 2012). "Virtual CT autopsy in clinical pathology: feasibility in clinical autopsies". Virchows Archiv 461 (2): 211–219. doi:10.1007/s00428-012-1257-4. பப்மெட்:22729140. 
  11. "THE USE OF POST-MORTEM IMAGING (ADULTS)" (PDF). Courts and Tribunals Judiciary. Archived from the original (PDF) on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  12. "RCR/RCPath statement on standards for medico-legal post-mortem cross-sectional imaging in adults" (PDF). The Royal College of Radiologists. The Royal College of Radiologists. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிம_பிரேத_பரிசோதனை&oldid=3682362" இலிருந்து மீள்விக்கப்பட்டது