கடல்சார் பாலூட்டி

கடல்சார் பாலூட்டிகள் (Marine mammal) என்பன தமது வாழ்வுக்காகக் கடல் அல்லது பிற கடல்சார்ந்த சூழற்றொகுதிகளில் தங்கியிருக்கும் பாலூட்டிகள் ஆகும். இவற்றுள், கடல் நாய்கள், திமிங்கிலங்கள், துருவக் கரடிகள் போன்றவை அடங்குகின்றன. இவை ஒரு தனித்துவமான வகையையோ, முறையான ஒரு குழுவையோ சேர்ந்தன அல்ல. ஆனால், ஒருங்குமுறைக் கூர்ப்புக் காரணமாகப் பல்கணத் (polyphyletic) தொடர்பைக் கொண்டுள்ளன. உணவுக்காகக் கடல்சார் சூழலில் தங்கியிருப்பதும் இவற்றை ஒன்றிணைக்கின்றது.

ஒரு திமில் முதுகுத் திமிங்கிலம் (மெகாட்டெரா நோவேயாங்கிளியே)
ஒரு சிறுத்தைக் கடல்நாய் (ஐட்ருர்கா லெப்டோனிக்சு)

கடல்சார் வாழ்க்கை முறைக்கு இசைவாக்கம் பெற்றதில், கடல்சார் பாலூட்டிகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. செட்டாசியன்களும் (cetaceans), சிரேனியன்களும் (sirenians) முழுமையாக நீரில் வாழ்பவை. இதனால் இவை நிரந்தரமான நீர்வாழிகள். கடல் நாய்களும், கடற்சிங்கங்களும் குறை நீர்வாழிகள். இவை பெரும்பாலான தமது நேரத்தை நீரில் கழித்தாலும், இனச்சேர்க்கை, இனப் பெருக்கம், தோலுரித்தல் போன்ற முக்கிய தேவைகளுக்காக நிலத்துக்கு வருகின்றன. இவற்றுக்கு முரணாகத் துருவ நாய்களும், துருவக் கரடிகளும் நீர் வாழ்க்கைக்கு இசைவாக்கம் பெற்றவை அல்ல. கடல்சார் பாலூட்டிகள் உணவிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. சில மிதவைப் பிராணிகளை (zooplankton) உண்கின்றன. ஏனையவை மீன், கணவாய், ஓட்டுமீன், கடற்புல் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. குறைந்த அளவில் பிற பாலூட்டிகளை உண்பனவும் உள்ளன. நிலத்தில் வாழ்பவற்றோடு ஒப்பிடுகையில் கடல்சார் பாலூட்டிகள் குறைந்த அளவிலேயே உள்ளனவாயினும், சூழற்றொகுதிகளில் அவற்றின் பங்கு பெரியது. குறிப்பாகச் இரையாகும் உயிரினங்களின் தொகையைக் கட்டுப்படுத்தி சூழல் சமநிலையைப் பேணுவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. 23% கடல்சார் பாலூட்டிகள் அழிந்துபோவதற்கான வாய்ப்புநிலையைக் கொண்டிருப்பதால் சூழல் சமநிலையைப் பேணுவது தொடர்பிலான அவற்றின் பங்கு குறித்துக் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

கடல்சார் பாலூட்டிகள் முன்னர் தாயக மக்களால் உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் கொல்லப்பட்டன. பிற்காலத்தில் இவை வணிகம், கைத்தொழில் ஆகிய நோக்கங்களுக்காக வேட்டையாடப்பட்டதால், திமிங்கிலம், கடல் நாய்கள் போன்ற இனங்களின் தொகை விரைவாகக் குறைந்தது. வணிக வேட்டையால், இசுட்டெலரின் கடற்பசுவும், மேற்கிந்தியக் கடல் நாயும் முற்றாக அழிந்துவிட்டன. வணிகம் சார்ந்த வேட்டை முடிவுக்கு வந்த பின்னர் சாம்பல் திமிங்கிலம், வடக்கத்திய யானைக் கடல் நாய் போன்ற சில இனங்கள் மீண்டும் பெருகத் தொடங்கியுள்ளன. அதே வேளை வேறுசில இனங்கள் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. வேட்டை தவிர மீன்பிடித்தலின்போது சில கடல்சார் பாலூட்டிகள் வலைகளில் அகப்பட்டு இறப்பதும் உண்டு. கடல் பயணங்கள் அதிகரித்திருப்பதால் வேகமாகச் செல்லும் கப்பல்களுடன் பெரிய கடல்சார் பாலூட்டிகள் மோதும் நிலையும் ஏற்படுகின்றது. வாழிடச் சூழலின் தரம் குறைவதாலும் கடல்சார் பாலூட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், உணவைத் தேடிப் பெறும் வாய்ப்புக்களும் குறைகின்றன. இரைச்சல் மாசடைதலாலும், எதிரொலி மூலம் இடமறியும் கடல்சார் பாலூட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. புவிசூடாதல் காரணமாக ஆர்க்டிக் சூழலில் தரக்குறைவு ஏற்படுவதால் அப்பகுதியில் வாழும் கடல்சார் பாலூட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

கூர்ப்பு தொகு

கடல்சார் பாலூட்டிகள், கடலில் உணவுக்காகத் தங்கியிருக்கும் 129 இனங்களைக்கொண்ட ஒரு பல்வகைமைக் குழு.[1][2] இவை ஒரு தனித்துவமான வகையோ, முறையான ஒரு குழுவோ அல்ல எனினும் ஒருங்குமுறைக் கூர்ப்பினால் பல்கணத் (polyphyletic) தொடர்பைக் கொண்டுள்ளன. உணவுக்காகக் கடல்சார் சூழலில் தங்கியிருப்பதும் இவற்றுக்குப் பொதுவான ஒரு இயல்பு.[3] உருவவியல் தொடர்பில் குழுக்களிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மேம்பட்ட இரைதேடும் திறனுக்கான தேவையே கூர்ப்புக்கான முக்கிய உந்து சக்தியாக இருந்துள்ளது.[4][5]

பரம்பலும், வாழிடமும் தொகு

கடல்சார் பாலூட்டிகள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. எனினும் அவற்றின் பரம்பல் துண்டுதுண்டாகக் காணப்படுவதுடன், இது கடலின் உற்பத்தித் திறனுடன் பொருந்திக் காணப்படுகின்றது.[6] இனங்களின் எண்ணிக்கை வடக்கிலும் தெற்கிலும் 40° குறுக்குக்கோட்டை அண்டி உயர்வாகக் காணப்படுகின்றது. இது, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆசுத்திரேலியா ஆகிய பகுதிகளை அண்டிய, முதல்நிலை உற்பத்தி அதிகமாக இருக்கும் இடங்களுடன் பொருந்துகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Kaschner, K.; Tittensor, D. P.; Ready, J.; Gerrodette, T.; Worm, B. (2011). "Current and Future Patterns of Global Marine Mammal Biodiversity". PLoS ONE 6 (5): e19653. doi:10.1371/journal.pone.0019653. பப்மெட்:21625431. Bibcode: 2011PLoSO...619653K. 
  2. Pompa, S.; Ehrlich, P. R.; Ceballos, G. (2011-08-16). "Global distribution and conservation of marine mammals". Proceedings of the National Academy of Sciences 108 (33): 13600–13605. doi:10.1073/pnas.1101525108. Bibcode: 2011PNAS..10813600P. 
  3. Jefferson, T. A.; Webber, M. A.; Pitman, R. L. (2009). Marine Mammals of the World A Comprehensive Guide to their Identification (1st ). London: Academic Press. பக். 7–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-383853-7. இணையக் கணினி நூலக மையம்:326418543. 
  4. Uhen, M. D. (2007). "Evolution of marine mammals: Back to the sea after 300 million years". The Anatomical Record 290 (6): 514–22. doi:10.1002/ar.20545. பப்மெட்:17516441.  
  5. Savage, R. J. G.; Domning, Daryl P.; Thewissen, J. G. M. (1994). "Fossil Sirenia of the West Atlantic and Caribbean Region. V. the Most Primitive Known Sirenian, Prorastomus sirenoides Owen, 1855". Journal of Vertebrate Paleontology 14 (3): 427–449. doi:10.1080/02724634.1994.10011569. 
  6. Berta, A; Sumich, J. L. (1999). "Exploitation and conservation". Marine Mammals: Evolutionary Biology. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-093225-2. இணையக் கணினி நூலக மையம்:42467530. https://archive.org/details/marinemammalsevo0000bert. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்சார்_பாலூட்டி&oldid=3580633" இலிருந்து மீள்விக்கப்பட்டது