கட்டிடக்கலை வரைபடம்

கட்டிடக்கலை வரைபடம் என்பது, கட்டிடத் திட்டம் ஒன்றுக்காகக் கட்டிடக்கலைஞர்களால் வரையப்படும் தொழில்நுட்ப வரைபடம் ஆகும். கட்டிடக்கலை வரைபடங்கள் பல வகைகளாக உள்ளதுடன் அவை பல்வேறு நோக்கங்களுக்காகவும் வரையப்படுகின்றன. இவற்றுள் பின்வரும் நோக்கங்களும் அடங்கும்:

  1. வடிவமைப்பு எண்ணக்கரு ஒன்றைக் கட்டிடத் திட்டத்துக்கான முன்மொழிவாக வளர்த்துஎடுத்தல்.
  2. கட்டிடத் திட்டம் பற்றிக் கட்டிடத்தைக் கட்டுவிக்க இருப்பவருக்கு விளங்கவைத்தல்.
  3. கட்டிட ஒப்பந்தகாரருக்கு அதனைக் கட்டுவதற்குத் தேவையான விபரங்களை வழங்குதல்.
  4. கட்டி முடிந்த கட்டிடங்கள் பற்றிய விபரங்களைக் கொண்ட ஒரு ஆவணமாக அமைதல்.[1][2][3]
கட்டிடக் கலைஞர் அடால்ஃப் லூசு என்பவரால் வடிவமைக்கப்பட்ட அம்சுடர்டாமில் உள்ள ஒரு இசையரங்கக் கட்டிடத் திட்டத்துக்காக வரையப்பட்ட கட்டிடக்கலை வரைபடங்கள் சில. 1888 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இவை தவிர மேலும் பல பயன்களும் கட்டிடக்கலை வரைபடங்களுக்கு உண்டு. ஏற்கெனவே இருக்கும் கட்டிடங்களை ஆவணப்படுத்துவதற்கும் அக்கட்டிடங்களை அளந்து கட்டிடக்கலை வரைபடங்களை வரைவது உண்டு.

கட்டிட வரைபடங்கள் இதற்காக உள்ள வழக்குகளுக்கு (convention) அமைவாகவே வரையப்படுகின்றன. இவ்வழக்குகள், வரைபடத் தாள் அளவுகள், வரைபடங்களில் அளவுகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அலகுகள், அளவுத்திட்டங்கள், குறியீடுகள், போன்றவற்றை உள்ளடக்குகின்றன. பழைய காலத்தில் வரைபடங்கள் தாள்களில் மையினால் வரையப்பட்டன. வரைபடங்களுக்கு கூடுதல் பிரதிகள் தேவைப்படின் மீண்டும் கைகளால் வரைய வேண்டும். 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் "படியெடு தாள்" (tracing) எனப்படும் ஒருவகை ஒளிகசியும் தாள் அறிமுகமான பின்னர் வரை படங்கள் படியெடு தாள்களில் வரையப்பட்டன. இவ்வகையான தாளில் வரையப்பட்ட வரைபடங்களில் இருந்து வேண்டிய அளவு எண்ணிக்கையில் படிகளை எடுப்பதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்பட்டன. கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் கட்டிடக்கலை வரைபடங்களை உருவாக்குவதிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று வரைபடங்களைக் கைகளினால் வரையும் முறை ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டது எனலாம்.

ஒரே தாளில் கட்டிடத்தின் மூன்றுவகை வரைபடங்கள்

வரைபட வகைகள் தொகு

இரு பரிமாணத் தாளில் ஒரு கட்டிடத்தின் படத்தை முழுமையாக வரைந்து தேவையான அதன் விபரங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியாது. இதனால், வெவ்வேறு வகையான விபரங்களைக் கொடுப்பதற்குப் பொருத்தமான வெவ்வேறு வகை வரைபடங்கள் வரையப்படுகின்றன.

  • மனை அமைவுப்படம்
  • தளக் கிடைப்படம்
  • நிலைப்படம்
  • வெட்டுப்படம்
  • விபரப்படம்
  • இயலுறு தோற்றப் படம்

என்பவை இவற்றுள் முக்கியமானவை.

மனை அமைவுப்படம் தொகு

 
வாசிங்டன் டி. சி யில், சார்ச்டவுனில் உள்ள டம்பார்ட்டன் ஆக்சு என்னும் பூங்காவின் மனை அமைவுப்படம்.

மனை அமைவுப்படம் (site layout plan) என்பது, கட்டிடத்துக்குரிய மனை (site) முழுவதையும் காட்டும் வரைபடம் ஆகும். மனை மட்டுமன்றி, மனையை அணுகுவதற்குரிய சாலைகள் போன்றவற்றையும் இவ்வரைபடத்தில் காட்டுவதுண்டு. மனையின் வாயில், அதற்குள் ஏற்கெனவே இருக்கும் கட்டிடங்கள், புதிதாகக் கட்டவுள்ள கட்டிடங்கள், மதில்கள், மரங்கள், அணுகுவழிகள் போன்ற பல வகையான அம்சங்கள் இவ்வரை படத்தில் காட்டப்படும். திசைகளையும் இப்படம் குறித்துக் காட்டும். மனை அமைவுப் படத்தின் முக்கியமான நோக்கம் கட்டிடங்கள், எல்லைகள், சாலைகள், அணுகுவழிகள் போன்றவை தம்முள் ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள அமைவுத் தொடர்புகளைக் காட்டுவதும் முழுமையாக அவற்றின் நோக்குதிசைகளை (orientation) அறிய உதவுவதும் ஆகும்.

கட்டிடத் திட்டத்தின் விபரமான வடிவமைப்புக்கள் தொடங்குமுன் மனை அமைவுப்படம் வரைந்து பல்வேறு அம்சங்களின் அமைவிடங்களை இறுதியாக்குவது வழக்கம். மனை அமைவுப்படம் வரையும்போது, கட்டிடங்கள் சாலையில் இருந்து எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும், மனையின் எல்லைக்கும் கட்டிடங்களுக்கும் இடையிலான மிகக்குறைந்த தூரம், போன்ற சட்ட விதிகள் தொடர்பான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இவை தவிர, வெய்யில், வெளிக் காட்சிகள், இரைச்சல் போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு கட்டிடங்களின் நோக்குதிசைகள் முடிவு செய்யப்படும்.

தளக் கிடைப்படம் தொகு

 
வீடு ஒன்றின் நிலத்தளக் கிடைப்படம்

தளக் கிடைப்படம் கட்டிடக்கலை வரைபடங்களில் மிகவும் அடிப்படையானதும் மிக முக்கியமானதுமான வரைப்படம். இது கட்டிடத்தைக் கிடைத்தளத்தில் வெட்டி மேலிருந்து பார்ப்பது போன்றது. பொதுவாக இவ்வெட்டுத் தளம் சாளரத்தின் கீழ் சட்டத்துக்குச் சற்று மேல் இருக்குமாறு வெட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மாடிகளைக் கொண்ட கட்டிடங்களில் ஒவ்வொரு மாடிக்கும் ஒவ்வொரு தளக் கிடைப்படம் வரையப்படும். இவை, நிலத்தளக் கிடைப்படம், முதல் தளப் படம், இரண்டாம் தளப் படம், .... எனப் பெயரிடப்படுவது வழக்கம். கூரையை மேலிருந்து பார்த்து வரையும் படம் கூரைக் கிடைப்படம் எனப்படும். தளக் கிடைப்படத்தில் இருந்து கட்டிடத்தில் உள்ள அறைகள், நடைவழிகள், படிக்கட்டுகள், முற்றங்கள் போன்றவற்றினதும் மற்றும் பல கட்டிடக் கூறுகளினதும் அமைவிடங்கள், அளவுகள் போன்றவை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். அத்துடன், பல்வேறு அறைகளுக்கு இடையிலான தொடர்புகளையும் தளக் கிடைப்படங்களில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும். கதவுகள், சாளரங்கள் போன்றவற்றின் அமைவிடங்களும் தளக் கிடைப்படங்களில் காட்டப்படுவது வழக்கம். தளக் கிடைப்படங்களில் அறைகளின் பெயர்கள் உட்படப் பல்வேறு குறிப்புக்களும் இருப்பது உண்டு. பெரிய கட்டிடங்களுக்கான தளக் கிடைப்படங்களை எல்லா விபரங்களையும் தெளிவாகக் காட்டக்கூடிய வகையில் ஒரே தாளில் வரைய முடியாமல் இருக்கக்கூடும். அவ்வாறான வேளைகளில், கட்டிடத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துத் தனித்தனியான தளக் கிடைப்படங்களை வரைவது உண்டு.

கட்டிடக்கலைத் தளக் கிடைப்படங்கள் வேறு பல வரைபடங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாகத் தள முடிப்புக் கிடைப்படங்கள், உட்கூரைக் கிடைப்படங்கள் போன்ற கட்டிடக்கலை வரைபடங்களும்; நீர் வழங்கல் முறைமை, மின் வழங்கல் முறைமை போன்றவற்றைக் காட்டும் பிற துறைசார் வரைபடங்களைத் தளக் கிடைப்படங்களை அடிப்படையாகக் கொண்டே வரைகின்றனர்.

நிலைப்படம் தொகு

 
பாரிசில் உள்ள பந்தியன் கட்டிடத்தின் முன்பக்க நிலைப்படம்

நிலைப்படம் என்பது கட்டிடமொன்றின் நிலைக்குத்துப் பகுதிகளைக் காட்டுவதற்காக வரையப்படும் வரைபடம் ஆகும். சிறப்பாகக் கட்டிடங்களின் வெளிப்புற முகப்புத் தோற்றங்களை நிலைப்படங்கள் மூலம் காட்டுவர். உள்ளக அலங்காரத் தேவைகளுக்காக கட்டிடங்களின் உட்புறச் சுவர் நிலைப்படங்களும் வரையப்படுவது உண்டு. செவ்வகம் போன்ற எளிமையான கிடைத்தள வடிவங்களைக் கொண்ட கட்டிடங்களின் முகப்புத் தோற்றங்களை முற்றாக விவரிப்பதற்கு நான்கு நிலைப்படங்கள் போதுமானவை. ஆனால், சிக்கலான கிடைத்தள வடிவங்களைக் கொண்ட கட்டிடங்களுக்குக் கூடுதலாகப் பல நிலைப்படங்கள் தேவைப்படக்கூடும். நிலைப்படங்களுக்குப் பெயரிடுவதில் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. முகப்புக்கள் நோக்கும் திசையைக் கொண்டு அவற்றைக் காட்டும் நிலைப்படங்களுக்குப் பெயரிடுவது ஒரு முறை. இதன்படி வடக்கு நிலைப்படம், கிழக்கு நிலைப்படம் போன்றவாறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. எளிமையான குறைவான நிலப்படங்கள் தேவைப்படும் கட்டிடங்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். ஆனால், சிக்கலான கட்டிடங்களைப் பொறுத்தவரை இம்முறை இலகுவானதல்ல. இவ்வாறான வேளைகளில், நிலைப்படம்-1, நிலைப்படம்-2 என எண்களைப் பயன்படுத்திப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இம்முறையைப் பயன்படுத்தும்போது, எண்கள் குறிக்கும் முகப்புக்கள் எவை என்பதைக் கிடைப்படங்களில் குறித்துக் காட்டவேண்டும்.

கட்டிட முகப்புக்களின் வடிவங்களைக் காட்டுவதும்; கதவுகள், சாளரங்கள், அழகூட்டல் கூறுகள் மற்றும் பிற அம்சங்களின் அமைவிடங்களைக் காட்டுவதும்; அவை ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்புகளைக் காட்டுவதுமே நிலைப்படங்கள் வரையப்படுவதன் நோக்கம் ஆகும். எனினும், நிலைப்படங்களில் அளவுகள் காட்டப்படுவது இல்லை. இதனால், மேற்சொன்ன கூறுகளின் அளவுகளையோ, அவற்றின் அமைவிடங்களையோ துல்லியமாக நிலைப்படங்களிலிருந்து பெற முடியாது. கட்டிடங்களின் உயரங்களையும் ஓரளவுக்கு அறிந்துகொள்ள நிலைப்படங்கள் உதவக்கூடும் ஆயினும், துல்லியமான அளவுகள் வெட்டுப் படங்களிலேயே கொடுக்கப்படுவது வழக்கம்.

வெட்டுப்படம் தொகு

 
போஸ்ட்டாம் என்னும் இடத்திலுள்ள வானியற்பியல் நிறுவனக் கட்டிடத்தின் வெட்டுப்படம்

வெட்டுப்படம் என்பது கட்டிடங்களை நிலைக்குத்தாக வெட்டினால் எப்படித் தோன்றுமோ அவ்வாறு வரையப்படும் படங்கள் ஆகும். இவ்வரைபடங்கள் நிலம், நிலத்தளம், மேற்தளங்கள், கூரை, சுவர்கள், வளைகள், கதவுகள், சாளரங்கள் போன்ற கூறுகளை அவற்றின் வெட்டுமுகங்களாகக் காட்டுவதால், அவை தொடர்பான விவரங்களைக் கொடுப்பதற்கு வெட்டுப்படங்கள் மிகவும் உகந்தவை. இவற்றை மட்டுமன்றி, அறைகளூடாக வெட்டும்போது அவற்றின் உட்பகுதிகளையும் நிலைப்படங்களாக வெட்டுப்படங்களில் காட்ட முடிகிறது. கட்டிடங்களின் பல்வேறு கிடை, நிலக்குத்துக் கூறுகளின் அமைவிடங்கள், அவற்றுக்கிடையேயான தொடர்புகள் போன்றவை குறித்த அடைப்படையான நிலக்குத்து அளவீடுகள் வெட்டுப்படங்களிலேயே கொடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நிலமட்டத்திலிருந்து தரைத்தளத்தின் உயரம், ஒவ்வொரு தளத்துக்கும் இடைப்பட்ட தூரங்கள், காங்கிறீற்றுத் தளங்களின் தடிப்பு, சுவர்களின் உயரங்கள், சாளரங்களின் கீழ்ப்படியின் உயரம் போன்ற தகவல்கள் வெட்டுப்படங்களில் தரப்படுகின்றன. தவிர, கட்டிடப்பொருட்கள் உட்படக் கட்டிடக்கூறுகளின் விபரங்களும் குறிப்புக்களாக வெட்டுப்படங்களில் இடம் பெறுவதுண்டு.

வெட்டுப்படங்கள் எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டு பெயரிடப்படுகின்றன. இவை வெட்டுப்படம் 1-1, வெட்டுப்படம் 2-2 என்றவாறு அல்லது வெட்டுப்படம் AA, வெட்டுப்படம் BB என்று அமையும். தளக் கிடைப்படங்களில் வெட்டும் தளத்தின் இடத்தைக் கோடுகளினால் குறித்துப் பெயரிட்டிருப்பர்.

மேற்கோள்கள் தொகு

  1. Gary R. Bertoline et al. (2002) Technical Graphics Communication. p.12.
  2. Wisegeek, the basic definition of the scope of CAD drawings.
  3. David Byrnes, AutoCAD 2008 For Dummies. Publisher: John Wiley & Sons; illustrated edition (4 May 2007). ISBN 0-470-11650-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடக்கலை_வரைபடம்&oldid=3889726" இலிருந்து மீள்விக்கப்பட்டது