கணியன் பூங்குன்றனார்

தமிழ்நாட்டின் சிவகங்கையிலுள்ள, திருப்பத்தூரின், மகிபாலன்பட்டியில் பிறந்த சங்ககாலப் புலவர்.

கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். கணிமேதையார், கணிமே வந்தவள்[1] என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார்.[2]

கணியன் பூங்குன்றனாரின்  புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல பன்னாட்டு இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு, இசையமைப்பாளர் இராஜன் சோமசுந்தரத்தால் வெளியிடப்பட்டது. அமேசான் பன்னாட்டு இசைப்பட்டியலில் இடம்பிடித்துப் பெரும்புகழ் பெற்றது. 2019-ல் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது.[3]

பாடல்கள் தொகு

புறநானூற்றிலும் (புறம்: 192) நற்றிணையிலும் (நற்றிணை: 226) இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

புறநானூறு 192 தொகு

இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.

பொருள் தொகு

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை
அது போல துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை
சாதல் மற்ற பிறத்தல் அது போல; வாழ்தல்
வாழ்தலை இனிது என்று நம்பி மகிழ்ந்து மயக்க முறுதலும் இல்லை
வாழ்தலை தீயது என்று எண்ணி வெறுத்தலும் இல்லை
வானத்தில் மின்னலுடன் வருகின்ற சிறுத்துளி மழைநீர் ஒன்றுசேர்ந்து பெரிய கல்லைக் கூட பேராற்று நீர்வழி ஓடி பள்ளத்தில் தள்ளுகிறது.

அது போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
என்பது போல சான்றோர் பார்வையில் தெளிந்த வண்ணம் ஆகும்
ஆதலினால், பெருமையில் பெரியோரை வியந்து போற்றுவதும் தவறு அதைவிட
சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் மிகவும் தவறு.


யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால், நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஆகிய உண்மைகளைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது.

நற்றிணை 226 தொகு

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாந்தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இவ்வுலகத்தானே.

தரும் செய்தி தொகு

பொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன். போக வேண்டாம் என்று சொல்லும் தலைவியின் கூற்றாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நல்ல மாந்தர் யார், நல்ல மன்னர் யார், உயர்தவம் எது என்றெல்லாம் விளக்கிவிட்டுத் தோழியிடம் அவள் தொடர்கிறாள். அவர் இருப்பதால் தான் நாம் நன்னுதலோடு இருக்கிறோம். (அவர் பிரிந்தால் நுதல் பசந்துவிடும் அல்லவா) அதனால் தாம் செய்யும் பொருளின் பயனை அவரே உணரவில்லை. வேர்வை கசிய வெயில் கொளுத்தும் நீண்ட பாதையில் அவர் செல்ல, நான் இங்கே இருந்துகொண்டு எம் காதலர் சென்றார் என்று சொல்லிக்கொண்டு இருப்பது முறையா? உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் பிரிவு கூடாது என்று தெரியும் என்கிறாள். பிரிதல் பொருட்டு வாடுதலைக் குறிக்கும்.

கணிப்பு தொகு

பூங்குன்றனார் கணிப்பு அவரது இரண்டு பாடல்களிலும் உள்ளன.

பொருண்மொழிக் காஞ்சியில் தொகு

  • உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.
  • மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.
  • நன்மை தீமைகளைக் கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா என்றார்.
  • சாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.
  • வாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.
  • பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை இனிது என மகிழக்கூடாது என்றார்.
  • வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை முனிந்து வாழ்க்கையே இன்னாது (துன்ப மயமானது) என வெறுக்கக் கூடாது என்றார்.
  • பிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.
  • வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர வைத்தார்)
  • வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு பாறைகளில் மோதிக்கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.
  • நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் = 'முறை' என்பது ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர்படகைச் செலுத்தும் துடுப்பு)

இந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.

இந்தத் தெளிவின் பயன் யாது?

மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.

அகத்திணைப் பாடலில் தொகு

பாலை நிலத்து மக்களின் வாழ்க்கையையும் இவர் புதுமையாகப் பார்க்கிறார்.

  • மாந்தர் யார்? மரம் சாவும் மருந்து என்பது தீ. பாலை நிலத்தில் தீ இடாதவர் நன்மாந்தர். மலையிலும் காடுகளிலும் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்துக் காய்ந்தபின் தீயிட்டுக் கொளுத்துவர். இப்படிக் கொளுத்திய நிலத்துக்குப் புனம் என்று பெயர். இக்காலத்திலும் மலைவாழ் மக்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. இக்காலத்தில் புனத்தைப் புனக்காடு என்கின்றனர். பாலை நிலத்தில் இவ்வாறு தீ இட்டால் காடு முழுவதும் எரிந்துவிடும். மரம் தழைத்திருக்கும் குறிஞ்சியில் வெட்டிக் காய்ந்த மரங்கள் மட்டுமே எரியும். எனவே பாலை நிலத்தில் தீ இடாதவர் நன்மக்கள் என்கிறார் இந்தப் புலவர்.
  • உயர்தவம் எது? உடலிலுள்ள வலிமைக்கும், உள்ளத்திலுள்ள தெம்புக்கும் உரம் என்று பெயர். 'நெஞ்சில் உரமும் இன்றி' என்று பாரதியார் பாடுவதை அறிவோம். இப்படிப்பட்ட உரத்தைச் சாகடித்துவிட்டுச் செய்யும் தவம் ஒருவகை. இது உயர்தவம் ஆகாது. உரத்தைக் கொல்லாமல் துறவு மேற்கொள்வதே உயர்தவம். இத்தகைய உயர்தவம் செய்வாரைத் திருவள்ளுவர் நீத்தார் என்கிறார்.
  • மன்னர் யார்? பிறர் வளம் கெடப் பொன் வாங்காதவர் நல்ல மன்னர். மன்னர் குடிமக்களிடம் வரி வாங்கலாம். ஆனால் அவர்களது செலவுவளம் அழியும் வகையில் மிகுதியாக வாங்காமல் அளவோடு அவர்களிடமிருந்து பொன் பெற வேண்டும். இப்படிப் பொன் பெற்று ஆள்பவர் நல்லரசர் என்கிறார்.

உசாத்துணை தொகு

  • இரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் (2003), சென்னை: அருணோதயம்.

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 344
  2. Vē. Irā Mātavan̲, Ca. Vē Cuppiramaṇiyan̲ (1986). Heritage of the Tamils: education and vocation. International Institute of Tamil Studies. பக். 16. 
  3. "திருவாரூர் இளைஞரின் சர்வதேச சாதனை: புகழ்பெற்ற சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குச் சிம்பொனி இசை!". Hindu Tamil Thisai. 4 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணியன்_பூங்குன்றனார்&oldid=3853177" இலிருந்து மீள்விக்கப்பட்டது