கதகளி (மலையாள ஒலிப்புமலையாளம்: കഥകളി) இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதகளி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது.[1] இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன. பெரும்பானமையாக மலையாள சமூக மக்களால் இந்த நடனம் ஆடப்பட்டு வருகிறது.[2][3][4]

கேரளப்
பண்பாடு

மொழி
இலக்கியம்
நடனம்
இசை
நாடகம்
ஓவியம்
சினிமா
உணவு
உடை
கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்பு கலை

கதகளி

கதகளி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாக பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன.

முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன.

கதகளி வேசப் பொருத்தம் தொகு

தேவர்கள், அசுரர்கள் முதலான புராண சம்பந்தமான பாத்திரங்களே பெரும்பாலும் இந்நாடகங்களில் வருகின்றபடியால், பரிச்சயமான தோற்றத்தைத் தவிர்த்து, அமானுஷ்யமான கதாபாத்திரங்களாக வேஷக்கட்டு அமைகிறது. கதகளி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப் படுகின்றனர்.

பச்சை வேசம் தொகு

தேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்களுக்கு, அரிசிப் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் 'சுட்டி' அமைப்பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும்பைப்பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும்படி ஒப்பனை செய்வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச்சாயம் தீட்டப்படும். இதழிலே சிவப்பு, புருவத்திலே மைக்கறுப்பு, நெற்றியிலே நாமம் முதலியன இடம்பெறும். கதகளி சம்பிரதாய அஹார்ய அபிநயம் வருமாறு: கச்சை, முன்வால், பின்வால், உடுத்துக்கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப்பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக்காய்மணி, கிரீடம், நெற்றிச்சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளிநகம் போன்ற ஆடையாபரணாதிகளே கதகளியின் சம்பிரதாய ஆஹார்ய அபிநயமாகும்.

கத்தி வேசம் தொகு

மூக்கின் கீழிருந்து கண்வரை கத்தரிபோல, வெள்ளை பூசி, அதிலே ரத்தச் சிவப்புப் பூசினால் மேலே குறித்த பச்சை வேஷத்தில் மாறுதல் ஏற்பட்டு கத்தி வேஷம் ஆகிறது. நெற்றியிலே புருவங்களுக்கிடையிலும், மூக்கு நுனியிலும், வெள்ளை உருண்டைகள் ஒட்டப் பெற்று, முகத்தின் தோற்றமே மாறுபாடடைந்து இராவணன், ஹம்சன், சிசுபாலன் முதலிய அசுரர்களைக் குறிக்கின்றது. கோரப்பற்கள் பயங்கரமான இராக்ஷத தோற்றத்தை அளிக்க வல்லன.

 
கதகளி நடனம்

தாடி வேசம் தொகு

சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத் தாடிகளைத் தாங்கியிருப்பதனால் இந்த வகைக்குத் தாடி வேஷம் என்று பெயர். சிவப்புத் தாடி துச்சாதனனைப் போன்ற கொடியவர்களையும், வெள்ளைத்தாடி அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களையும் குறிக்கிறது.

கரி வேசம் தொகு

கறுப்பு சாயத்திலும், கறுப்பு உடையிலும் தோன்றும் சூர்ப்பனகை போன்ற பாத்திரங்களுக்கு கரி வேஷம் என்று பெயர்.

மினுக்கு வேசம் தொகு

உடம்பில் அழகிய நிறமாக இலேசாக வர்ணம் பூசி, மைக்காத் தூளைத் தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர்கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக்கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல்களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடையிலும் அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும்பாலோர் கீரீடம் அணிந்திருப்பர்.

கதகளி நடிப்பு முறை தொகு

பேச்சில்லாத நாடகமானபடியால் அபிநயம் நாடகத்தின் மொழியாக அமைகிறது. 10 அல்லது 12 வயதிலும் ஆரம்பிக்கப் பெற்று, நடிகர்களுக்குக் கடுமையான பயிற்சியளிக்கப் படுகிறது. கதகளி நடக்க இருப்பதை மத்தளம் முழக்கி அறிவிப்பார்கள். இரவு சுமார் 9 அல்லது 10 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நாடகம் நடைபெறும். மேடையையும் சபையையும் பிரித்துக் காட்டும் வகையிலே, பெரிய குத்து விளக்கு வைக்கப் பெற்று, அதன் ஒளியிலே நாடகம் நடிக்கப் பெறும். முதலில் மத்தளம், செண்டை வாசிப்பார்கள். இது அரங்குகழி எனப்படும். அதன்பின் தெய்வ வணக்கம். அப்புறம் திரை நோக்கு. இது பக்திரஸமான பாடல். பாடும்போது திரைக்குப் பின்னாலிருந்து கலாசங்களுடன் ஆடும் பாடல். சில வேளைகளில் திரையைப் பதித்து முகத்தை மட்டும் சபையோருக்குக் காட்டுவார்கள். திரை எடுத்ததும் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள், அதற்கப்புறம் மேளப்பதம். இது கதையின் அறிமுகப்பாடல். இதன் பின்னர் ஆட்டக்கதை. இறுதியில் தனாசி என்னும் மங்களம் ஆகும்.

கதகளி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்பவர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் திருப்பிப் பாடுவார்கள். இவர்கள் பாடும்போது நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள். பாட்டும், நடனமும் அநேகமுறை நடைபெறும். காதற் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். இது மெதுவாக ஒருமணி நேரமாவது நிகழும். கதையிலே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நாடகங்கள் போதிக்கின்றன. வீரம், ரெளத்திரவம் ஆகிய ரஸங்கள் கதகளியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அசுர பாத்திரங்கள் மேடையில் தோன்றும்போது கர்ஜனை செய்வதும் முன்னால் பிடித்திருந்த திரையைப் பிடித்திழுப்பது போன்ற ஆர்ப்பாட்டங்களும் செய்வர். இவ்வாறாக இரவு முழுவதும் நடைபெறும் கதகளி விடியும் தருணத்தில் பக்தி ரஸமான நடனத்துடன் நிறைவுபெறும்.

மேற்கோள்கள் தொகு

  1. Williams 2004, ப. 83-84, the other nine are: Bharatanatyam, Kathak, Kuchipudi, Odissi, Manipuri, Cchau, Satriya, Yaksagana and Bhagavata Mela.
  2. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. பக். 359. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8239-3179-8. https://archive.org/details/illustratedencyc0000loch. 
  3. Peter J. Claus; Sarah Diamond; Margaret Ann Mills (2003). South Asian Folklore: An Encyclopedia. Routledge. பக். 332–333. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-93919-5. https://books.google.com/books?id=ienxrTPHzzwC. 
  4. Phillip B. Zarrilli (2000). Kathakali Dance-drama: Where Gods and Demons Come to Play. Routledge. பக். xi, 17–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-13109-4. https://archive.org/details/kathakalidancedr0000zarr. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கதகளி&oldid=3885992" இலிருந்து மீள்விக்கப்பட்டது