கதிர்காமம் (கோயில்)

கதிர்காமம் கோயில் (Kataragama temple, சிங்களம்: කතරගම) இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களர், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. இத்தள முருகனை சிங்களர் வணங்கும் சிங்காரவேலர் என்றும் போற்றப்படுகிறார்.

கதிர்காமம்
கதிர்காமம் is located in இலங்கை
கதிர்காமம்
கதிர்காமம்
இலங்கையில் கதிர்காமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்:6°25′N 81°20′E / 6.417°N 81.333°E / 6.417; 81.333
பெயர்
பெயர்:கதிர்காமம் முருகன் கோயில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:ஊவா
அமைவு:கதிர்காமம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கதிர்காமன் / பண்டார நாயகன்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி. 1100 – 1400களில் [1]

வரலாறு தொகு

  • கதிர்காம முருகனின் பெயர் தமிழ் மொழியில் பண்டார நாயகன் என்றும் சமசுகிருத மொழியில் கதிர்காமன் என்று அழைக்கப்படுகிறது.
  • அப்பெயர் இத்தள முருகனுக்கு ஏற்பட காரணம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியாக (கதிர்) சரவணப் பொய்கையில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் முருகப்பெருமான் அழகான முகத்தில் (காமன்) தோன்றியதால் இத்தளத்திற்கு கதிர்காமம் என்ற பெயரும் முருகனுக்கு கதிர்காமன் என்ற பெயரும் ஏற்பட்டது.
  • அவையெல்லாம் இத்தள முருகனின் குணாதிசயங்கள், லீலைகள், வீரசெயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் முருகனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கதிர்காமம் முன் தோற்றம்

கோயில் அமைப்பு தொகு

ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காமக் கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காமக் கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது.

கருவறையின் சிறப்பு தொகு

ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது

விழாக்கள் தொகு

வருடாந்த பெருவிழா தொகு

பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்தப் பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர்ப்பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.

பிற விழாக்கள் தொகு

ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டு வருகின்றன.[2]

பாடியோர் தொகு

அருணகிரிநாதர் இத்தலத்தினை வணங்கி வழிபட்டு 25க்கும் மேற்பட்ட திருப்புகழ் மாலைகளைப் பாடியுள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kataragama temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Peiris, Kamalika (31 சூலை 2009). "Ancient and medieval Hindu temples in Sri Lanka" இம் மூலத்தில் இருந்து 2011-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629044948/http://www.dailynews.lk/2009/07/31/fea25.asp. பார்த்த நாள்: 6 ஒக்டோபர் 2010. 
  2. 2.0 2.1 மணி.மாறன், கதிர்காம மாலை, The Journal of the Thanjavur Maharaja Serfoji's Sarasvati Mahal Library and Research Centre, 2016, Vol.LVI, பருவ இதழ் 7, பக்.1-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்காமம்_(கோயில்)&oldid=3868346" இலிருந்து மீள்விக்கப்பட்டது