கபா காந்தி இல்லம், ராஜ்கோட்

கபா காந்தி இல்லம் (Kaba Gandhi No Delo), இந்தியத் தலைவரான மகாத்மா காந்தியின் முதன்மை குடும்ப இல்லமாக, குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட்டில் இருந்த இல்லம் ஆகும். அவர் லண்டனிலும் தென்னாப்பிரிக்காவிலும் தங்கியிருந்த காலங்கள் தொடங்கி 1915 ஆம் ஆண்டு வரை அந்த இல்லம் அவருடைய குடும்ப இல்லமாக இருந்தது. 1915 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய அவர் அகமதாபாத்தில் கொச்சரப் ஆசிரமத்தை நிறுவினார். [1] [2] கபா காந்தி இல்லம் தற்போது காந்தி ஸ்மிருதி என்ற பெயருக்கு மாற்றப்பட்டு அருங்காட்சியகமாக இயங்கி வருகிறது.

மகாத்மா காந்தியின் தந்தையான கரம்சந்த் காந்தி, கபா காந்தி என்றும் அழைக்கப்பட்டார். வீட்டின் பெயர் காந்திஜியின் தந்தையின் பெயரினைக் கொண்டு அமைந்ததாகும். குஜராத்தியில், கபா காந்தி நோ டெலோ என்ற சொல்லுக்கான பொருள் 'கபா காந்தியின் குடியிருப்பு' என்ற நிலையில் அமையும்.

வரலாறு தொகு

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கபா காந்தி இல்லம் பழைய பாணி மற்றும் பாரம்பரிய பாணி என்ற இரு வகைப் பாணிகளிலும் கட்டப்பட்ட இல்லமாகும்.

குடும்ப இல்லம் தொகு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தந்தை கரம்சந்த் உத்தன்சந்த் காந்தி (கபா காந்தி) ராஜ்கோட்டில் வசித்து வந்தபோது ராஜாவுக்கு திவானாக (பிரதமர்) பணியாற்றிய இல்லம் இதுவே ஆகும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் 1881 ஆம் ஆண்டு முதல் 1887 ஆம் ஆண்டு வரை தனது ஆரம்ப வாழ்க்கையின் சில வருடங்களை இந்த இல்லத்தில் கழித்து வந்துள்ளார். இது ஒரு பொதுவான சௌராஷ்டிரா டெலா வகையைச் சேர்ந்த இல்லமாக அமையும். இது ஒரு வளைந்த நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. அந்த நுழைவாயிலிலிருந்து மையப் பகுதிக்கு செல்லும் வகையில் இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இல்லம் கி.பி. 1880-81 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தற்போது இந்த இல்லத்தில் அவரது வாழ்க்கையின் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத் தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நிலையான கண்காட்சியகம் தொகு

கபா காந்தி நோ டெலோ எனப்படுகின்ற கபா காந்தி இல்லம் தற்போது ஒரு நிரந்தர கண்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிரந்தரக் கண்காட்சியகத்தில் காந்தி ஸ்மிருதி அமைந்துள்ளது. (டெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதிக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை). கபா காந்தி நோ டெலோ, ராஜ்கோட்டில் நெய் காந்தா சாலையில் அமைந்துள்ளது. ராஜ்கோட் முன்னர் குஜராத்தில் உள்ள சௌராஸ்டிரா என்ற சுதேச மாநிலத்தின் தலைநகராக இருந்தது.

பின்னர் இது "காந்தி ஸ்மிருதி" என்ற பெயரில் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியத் தலைவரும் தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தி பயன்படுத்திய உடமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவரைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் பொருள்கள் இந்கு காட்சியில் உள்ளன. இந்த வளாகத்திற்குள் ஒரு அரசு சாரா அமைப்பு இளம் சிறுமிகளுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த இடம் பொது மக்கள் வந்து பார்வையிடுவதற்காக திங்கள் முதல் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நடுப்பகல் 12.00 மணி வரையும், பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் திறந்திருக்கும். [3]

செல்லும் வழி தொகு

சாலை
குஜராத்தின் பிற நகரங்களிலிருந்து மாநில போக்குவரத்து பேருந்துகள் வழியாக இவ்விடத்தை எளிதில் வந்து சேரலாம். ரஸ்மல் ஏரியின் மறுபுறத்தில் பேடி கேட்டிலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. ஆட்டோ ரிக்‌ஷாக்கள் நகரத்தை சுற்றி வருவதற்கு மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன. அகமதாபாத், பரோடா, மும்பை, பூஜ், பாவ்நகர், உனா, மவுண்ட் அபு மற்றும் உதய்பூர் ஆகிய இடங்களுக்கும் இங்கிருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்
குஜராத் மற்றும் இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் ரயில் மூலம் ராஜ்கோட் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொச்சின், கோயம்புத்தூர், கொல்கத்தா, அமிர்தசரஸ், பாட்னா மற்றும் போபால் ஆகிய நாடுகளுக்கான ரயில்கள் ராஜ்கோட்டில் உள்ளன. பொதுவாக ராஜ்கோட் சந்தி என்று அழைக்கப்படும் ரயில் நிலையம் டீன் பட்டி மூன்றாம் நுழைவாயிலிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
விமானம்
ராஜ்கோட்டில் உள்நாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் மும்பைக்கு வாரத்திற்கு நான்கு விமானங்களை இயக்குகிறது. அதனைத் தவிர ஜெட் மற்றும் சஹாரா விமானங்களும் இங்கிருந்து தினசரி இயங்குகின்றன.

குறிப்புகள் தொகு

  1. Kaba Gandhi No Delo, Rajkot பரணிடப்பட்டது 12 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. On the Salt March: the historiography of Gandhi's march to Dandi by Thomas Weber. HarperCollins Publishers India, 1997. ISBN 978-81-7223-263-4.
  3. "Kaba Gandhi no Delo, Karamchand Gandhi, Rajkot, Tourism Hubs, Gujarat, India". www.gujarattourism.com. Archived from the original on 2019-11-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.