கலவியற்ற இனப்பெருக்கம்

கலவியற்ற இனப்பெருக்கம் (Asexual reproduction) அல்லது பால்சாரா இனப்பெருக்கம் என்பது ஒரு தனியனில் மட்டும் இருந்து அடுத்த தலைமுறை தனியன்கள் உருவாகும் ஒரு வகையான இனப்பெருக்க முறையாகும். குறிப்பிட்ட அந்த தனியனில் இருக்கும் மரபணுக்கள் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். இங்கே தாய், தந்தை என்ற இரு பெற்றோர் இருப்பதில்லை. முக்கியமாக இந்த வகை இனப்பெருக்கத்தில், உயிரணுக்களில் மடியநிலை இழப்புடன் ஏற்படும் ஒடுக்கற்பிரிவினால் உருவாகும் பாலணுக்களின் தோற்றமோ, அல்லது அவற்றிற்கிடையில் நிகழும் கருக்கட்டலோ நிகழ்வதில்லை.

மர்கன்டியோபைடா (ஈரலுருத் தாவரம்) தாவரங்களில் கலவியுறா இனப்பெருக்கம்: உதிரும் இலை முளைத்தல்

இதுவே ஆர்க்கீயா, பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற தனிக்கல உயிரினங்களில் உள்ள முதன்மையான இனப்பெருக்க முறையாகும். அதேவேளை பல்கல உயிரினங்களான பூஞ்சை, வேறும் பல தாவரங்களும் கலவியில்முறை இனப்பெருக்கத்தை தமது இனப்பெருக்க முறையாகக் கொண்டுள்ளன.

கலவியற்ற இனப்பெருக்க வகைகள் தொகு

உயிரணுப்பிளவு இனப்பெருக்கம் (Fission) தொகு

 
மெய்க்கருவிலிகளில் இருகூற்றுப் பிளவு (எ.கா. பாக்டீரியா)

இங்கே நேரடியாக உயிரினத்தில் ஏற்படும் பிளவின் மூலம், அடுத்த தலைமுறை உயிரினம் உருவாகின்றது. இது இருகூற்றுப் பிளவு அல்லது பல்கூற்றுப் பிளவு முறையில் நிகழலாம். இவ்வகையான இனப்பெருக்க முறை பொதுவாக தனிக்கல / ஒரு கல உயிரினங்களிலேயே நிகழும். ஆர்க்கியா, பாக்டீரியா போன்ற நிலைக்கருவிலிகளிலும், தனிக்கல மெய்க்கருவுயிரிகளான அதிநுண்ணுயிரிகளிலும், தனிக்கல பூஞ்சைகளிலும் இவ்வகையான இனப்பெருக்கம் நிகழும்.

ஒருகூற்றுப் பிளவு என்பதில், ஒரு உயிரினமானது இரண்டாக பிளவுபட்டு இரு தனியன்களை உருவாக்குதல் ஆகும். அங்கே ஒரு உயிரணு பிளவுபட்டு இரு மகள் உயிரணுக்களை உருவாக்குகின்றது. மெய்க்கருவுயிரிகளாயின் உயிரணுக் கருவும், தொடர்ந்து முதலுருவும் இரண்டாகப் பிரிந்து இரு உயிரணுக்களை உருவாக்கும்.

பல்கூற்றுப் பிளவு எனில், உயிரணுக் கருவானது பல தடவைகள் இழையுருப்பிரிவுக்கு உட்பட்டு, பல உயிரணுக் கருக்களை உருவாக்கிய பின்னர், முதலுருவும் பிரிந்து பல மகட்கலங்களை உருவாக்கும்.[1][2][3] .

அரும்புதல் முறை இனப்பெருக்கம் (Budding) தொகு

ஒரு தனியனில் அரும்புகள் போல் உருவாகும் நீட்சிகள் பின்னர் அதிலிருந்து விடுபட்டு ஒரு புதிய தனியனாக வளர்ச்சியடையும். ஐதரா (hydra) போன்ற விலங்குகளில் இவ்வகையான அரும்புதல் முறையைக் காணலாம். சில தனிக் கல உயிரினங்களிலும், உயிரணுவானது அரும்புதல் முறையால் புதிய கலத்தை உருவாக்கும்.

 
இரு அரும்புகளுடன் இருக்கும் ஐதரா
 
அரும்புதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் சக்ரோமைசிஸ் செரவிசே

பதியமுறை இனம்பெருக்கம் (Vegetative reproduction) தொகு

ஒடுக்கற்பிரிவினால் உருவாகும் பாலணுக்களின் சேர்க்கையால் உருவாகும் வித்துக்களோ, நுண்வித்திகளோ இன்றி தாவரங்கள் வேறு பல வழிகளில் புதிய தாவரங்களை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. அவை பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.[4]. தாவரங்களில் இலைகள் (Kalanchoe), தண்டுகள் (ரோஜா, கரும்பு), தண்டுக்கிழங்குகள் / நிலத்தடித்தண்டுகள் (இஞ்சி), கிழங்குகள் (உருளைக்கிழங்கு), குமிழ்த்தண்டுகள் (வெங்காயம்) போன்றவை பதியமுறை இனப்பெருக்கத்துக்கு உதவக் கூடியவையாக உள்ளன.

நுண்வித்தி முறை இனப்பெருக்கம் (Sporrogenesis) தொகு

பல பல்கல உயிரினங்களின் வாழ்க்கை வட்டத்தில் நுண்வித்துக்கள் உருவாக்கம் மூலம் இனப்பெருக்கம் நிகழ்கின்றது. விலங்குகள், சில அதிநுண்ணுயிரிகளில் ஒடுக்கற்பிரிவு மூலம் பாலணுக்கள் உருவாக்கப்பட்டு, அந்தப் பாலணுக்களுக்கிடையே நிகழும் கருக்கட்டல் புதிய தனியனை உருவாக்கும். இவ்வாறு கருக்கட்டல் நிகழ்வதற்காகவன்றி, உருவாக்கப்படும் வித்துக்கள் நுண்வித்துக்கள் எனப்படுகின்றது. இவை மடியநிலை இழப்புடனோ, அல்லது இழப்பின்றியோ உருவாகும் நுண்வித்துக்களாக இருக்கலாம். தாவரங்கள், பாசிகளில் இருமடிய உயிரணுக்களில் நிகழும் ஒடுக்கற்பிரிவின் மூலம் உருவாகும் ஒருமடிய நுண்வித்துக்கள் புதிய தனியன்களாக வளர்ச்சியடையும். இவ்வகையான இனப்பெருக்கத்தில் ஒருமடிய தனியன்களும், இருமடிய தனியன்களும் காணப்படும். இங்கே ஒடுக்கற்பிரிவும், மடியநிலை இழப்பும் ஏற்பட்டாலும்கூட, பாலணுக்களுக்கிடையே கருக்கட்டல் நிகழாதலால் கலவியற்றமுறை இனப்பெருக்கமாகவே கருதப்படும். இதுபோலன்றி பூஞ்சைகள், சில பாசிகளில் முழுமையான நுண்வித்து உருவாக்கம் நிகழும். அதாவது இழையுருப்பிரிவு மூலம் மடியநிலையில் மாற்றமின்றி உருவாக்கப்படும் இனப்பெருக்க நுண்வித்துக்கள் பரவலடைந்து, புதிய தனியன்களாக வளர்ச்சியடையும்.

துண்டாதல்முறை இனப்பெருக்கம் (Fragmentation) தொகு

பெற்றோரில் ஏற்படும் துண்டாதல் மூலம் தனியாக்கப்படும் ஒரு பகுதி, புதிய தனியனாக உருவாதல் இவ்வகை இனப்பெருக்கமாகும். இங்கே துண்டாகும் ஒவ்வொரு சிறு பகுதியும், முழுமையான முதிர்ந்த தனியனாக விருத்தியடையும். அனலிடா தொகுதியைச் சேர்ந்த புழுக்கள், விண்மீன் உயிரிகள், ஈரலுருத் தாவரங்கள், பாசிப்பூஞ்சைகள் போன்றவற்றில் இவ்வகையான இனப்பெருக்கம் நிகழும்.

பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் (Agamogenesis) தொகு

ஆண் பாலணு இன்றியே இனப்பெருக்கம் நிகழுக்கூடும். இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளாக கன்னிப் பிறப்பையும் கலப்பில்லா வித்தாக்கத்தையும் கூறலாம்.

கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுவது பெண் பாலணுவானது கருக்கட்டல் நிகழாமலேயே முளையமாக மாறி முளைய விருத்தி க்கு உட்பட்டு புதிய தனியனை உருவாக்குவதாகும். தாவரங்கள், முதுகெலும்பிலிகளான எறும்பு, தேனீ போன்ற பூச்சி வகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள், முதுகெலும்பிகளான சில ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன்கள், மிக அரிதாக பறவைகள் போன்றவற்றில் இவ்வகை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.

கலப்பில்லா வித்தாக்கம் (Apomixis) எனப்படுவது பன்னத்திலும், வேறு பூக்கும் தாவரங்களிலும் கருக்கட்டல் நிகழாமலே புதிய இருமடிய நுண்வித்திகள் உருவாதல் ஆகும். ஏனைய வித்துத் தாவரங்களில் மிக அரிதாகவே இவ்வாறான இனப்பெருக்கம் நிகழும். இது இருவகைகளாக நடைபெறுகிறது:

  • பாலணுசார் கலப்பில்லா வித்தாக்கம்: ஒடுக்கற்பிரிவு முழுமையடையாது உருவான இருமடிய முளையப்பையில் கருக்கட்டாத சூல் முட்டையிலிருந்து முளையம் உருவாதல்
  • மையக்கல முளையாக்கம்: முளையப்பையைச் சூழ்ந்துள்ள இருமடிய மையக்கல இழையத்திலிருந்து முளையம் உருவாதல்

மையக்கல முளையாக்கம் சில ஆரஞ்சு/நாரத்தை வித்துக்களில் நிகழ்கிறது. இவ்வாறு உருவான முளையம் தாயின் அச்சாக உள்ளது.

ஆண் பாலணுக்களிலிருந்தும் கலப்பில்லா வித்தாக்கம் நிகழலாம். ஆப்பிரிக்கத் தாவரமான சகாரா சைப்பிரசு (Cupressus dupreziana) என்ற மரவகையில் முளையத்தின் மரபணுக்கள் மகரந்தத்திலிருந்தே பெறப்படுகின்றன.

இதனையும் பார்க்க தொகு

மேலும் அறிய தொகு

  • Graham, L., J. Graham, & L. Wilcox. 2003. Plant Biology. Pearson Education, Inc., Upper Saddle River, N.J.: pp. 258–259.
  • Raven, P.H., Evert, R.F., Eichhorn, S.E. 2005. Biology of Plants, 7th Edition. W.H. Freeman and Company Publishers, NY.
  • Avise, J. 2008. Clonality: The Genetics, Ecology, and Evolution of Sexual Abstinence in Vertebrate Animals. Oxford University Press

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Cell reproduction". Encyclopædia Britannica.
  2. Britannica Educational Publishing (2011). Fungi, Algae, and Protists. The Rosen Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781615304639. http://books.google.com.ph/books?id=_U9MB4iUpDIC&lpg=PA102&dq=multiple%20fission&hl=en&pg=PA101#v=onepage&q=multiple%20fission&f=false. 
  3. P.Puranik, Asha Bhate (2007). Animal Forms And Functions: Invertebrata. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176257916. http://books.google.com.ph/books?id=-kdq6RyyVE0C&lpg=PA87&dq=multiple%20fission&hl=en&pg=PA87#v=onepage&q=multiple%20fission&f=false. 
  4. "Asexual Reproduction". Ucmp.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 2010-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவியற்ற_இனப்பெருக்கம்&oldid=3355667" இலிருந்து மீள்விக்கப்பட்டது