கலை (ஒலிப்பு, Art) எனப்படுவது "நுட்பமான தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது".[1] மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலை நுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.[2][3] பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக் காட்டுவது கலை நுட்பமாகும். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும்.

சிற்பக்கலை: ஆனந்தத் தாண்டவ நடராசர்

மிகப்பழமையான கலைகள் யாவும் காட்சிப்படங்களையோ (ஓவியங்கள், புகைப்படங்கள், கட்புல ஊடகங்கள்), காட்சிப் பொருட்களையோ (சிற்பங்கள், அச்சுகள், வார்ப்புகள்) சார்ந்த காட்சிக்கலைகளாக உள்ளன. எனவே தான் அதன் வரலாறு மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. கட்டிடக்கலையும் காட்சிக்கலைகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் காட்சி விளம்பரமும்[4], அலங்கார வனப்பும் கலைகளின் ஈர்ப்பு மையங்களாகும். இசை, அரங்கு, திரைப்படம், நடனம், நாடகம், உள்ளிட்ட ஏனைய அரங்கேற்றல் கலைகள், இலக்கியம், ஊடகங்கள், போன்றவையும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும்.[2][5]

17ஆம் நூற்றாண்டு வரையிலும் கலை, திறமைக்கும், ஆளுமைக்கும் ஒப்பான அறிவியல் நுட்பத்தின் பகுதியாகக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அழகியல் முதன்மை பெற்று கற்பனை வளம், திறன் சார்ந்து பயனுறு கலைகளாகவும், நுண்கலைகளாகவும் பகுத்தாயப்பட்டன. கலையானது நிலை, நிகழ்வின் நகலாக்கம், கதைப்புனைவு, நிகழ்வின் வெளிப்பாடு, உணர்ச்சிகளின் தொடர்பு மற்றும் இதர தரவுகளைக் கொண்டிருக்கலாம். உரோமாயர்களின் கலை வரலாறானது மனிதனின் மதம் மற்றும் அறிவியல் தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6]

எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும்.[7][8][9] எனினும் இது தான் கலை என்றும், இது கலை அல்ல என்றும் எச்செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களிலும் ஆயப்படவேண்டிய ஒன்று. மனித திறன், ஆற்றல், கற்பனை வளத்தின்[10] முகவாண்மையாக கலை விளங்குகிறது.[11]

கவின் கலைகள் மற்றும் நுட்பக்கலைகள் தொகு

கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.

கவின்கலைகள் தொகு

கவின்கலைகளை அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம்.

கட்புலக் கலைகள் தொகு

இரு பரிணாம முறையில் நகலாகவோ, கற்பனையாகவோ காட்சிப்படுத்தப்படும் கலைகள் ஆகும்.

ஓவியம் தொகு

கல், கண்ணாடி, துணி, காகிதம், பைஞ்சுதம் போன்றவற்றில் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி வரையப்படும் அழகியல் சார்ந்த செயற்பாடு ஓவியக்கலை ஆகும். வரைபவரின் கருத்தியல், நோக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வண்ணங்கள், அச்சுகளால் வெளிப்படுத்தும் கலை ஆகும். உடல் ஓவியம், கேலிச் சித்திரம், காபி ஓவியம், துணி ஓவியம், கண்ணாடி ஓவியம், குகை ஓவியம், போன்றவை ஓவியக்கலையின் பல்வேறு வடிவங்களாகும்.

சிற்பம் தொகு

கல், கண்ணாடி, உலோகம் முதலியவற்றால் செதுக்கியோ, வார்த்தோ செய்யப்படும் முப்பரிமாண கலைப்பொருள் சிற்பம் ஆகும். தனிச் சிற்பம், புடைப்புச் சிற்பம், செதுக்குச் சிற்பம், இயங்கியல் சிற்பம், அடுக்கற்கலைச் சிற்பம் போன்றவை சிற்பங்களின் வகைகளாகும். உரோமானிய, கிரேக்க, எகிப்திய, இந்தியக் கலைச் சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றன. பெரும்பாலான சிற்பங்கள் கடவுள், மதம், இனத்தலைவர்கள், மற்றும் பண்பாடு சார்ந்த கதை மாந்தர்களின் உருவங்களை உருவகிக்கின்றன.

ஒளிப்படம் தொகு

ஒளிப்படம், நிழற்படம் (அ) புகைப்படமானது, ஒளி எதிரொளிப்பின் மூலம் பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற (அ) அதன் மீது தெளித்து வெளிவருகின்ற ஒளியினால் ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அதன் பிம்பத்தைப் பதிவிட்ட படத்தைக் குறிக்கும். அழகுற எடுக்கப்படும் அச்சுப்பிரதி (அ) ஒளிப்படம் பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் நிகழ்வை வரலாற்றில் பதிவிக்கின்றன.இது பொதுவாக ஒளிப்பட முறை, எண்மிய ஒளிப்பட முறை என இருவகைப்படும். இவற்றின் நிறம் மற்றும் தரத்தின் அடிப்படையிலும் ஒளிப்படங்கள் வேறுபடும்.

அரங்காடல் கலைகள் தொகு

அரங்குகளின் மூலம் அரங்கேற்றப்படும் கலைகள் அரங்காடல் கலைகள் ஆகும். கலைகளின் சிறப்புமையைக் கொண்டு அரங்குகள் மாறுபடும்.

இசை தொகு

ஒழுங்கு செய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஒலிகளால் ஒருங்கிணைக்கப்படும் கூறு இசை ஆகும். ஒலி அளவு, இசைக் கருவிகளின் ஒலிப்பினம், அதிர்வுகள் போன்றவை இசையை மென்மையாக்கும் காரணிகளாகும். மேற்கத்திய, இந்திய, சீன இசைகள் தங்களின் பண்பாட்டுடன் ஒன்றியமைந்ததாகும்.

நடனம் தொகு

தாளத்துக்கும், இசைக்கும் ஒத்திசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். சமூகம், பண்பாடு, சமயம் சார்ந்தோ, சார்பற்ற மகிழ்ச்சிக்காகவோ நிகழ்த்திக் காட்டும் நிகழ் கலையாகவோ கொள்ளப்படும். சில விலங்கினங்களில் இனப்பெருக்கத்திற்காக துணையைக் கவரும் விதமாக அவைகளால் நிகழ்த்தப்படுகிறது.

இந்திய (பரத நாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சிபிடி, கதக்), மேற்கத்திய உள்ளிட்ட நடனக்கலைகள் நடனத்தில் பண்டைய இலக்கியக் கதைகள், வரலாறு, சமூக நிகழ்வுகள், காதல் போன்றவற்றை நடன அசைவுகளின் மூலம் உணர்த்தும் விதமாக அமைக்கப் பெற்றிருக்கும்.

கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், முதலியன தமிழகத்தின் கிராமப் புறங்களில் பல்வேறு கால கட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த நடன வகைகளாகும்.

நாடகம் தொகு

மையக் கருவான கதையுடன், நடிப்பு, ஒப்பனை, ஓவியம், திரை, மற்றும் ஒலி, ஒளி, உடன் ஒருங்கமைக்கப்பட்ட அரங்கமைப்பு, ஆகிய இயலும், இசையும் சேர்த்து ஒன்றிணைப்பால் படைக்கப்படுவது நாடகம் ஆகும்.

முத்தமிழின் மூன்றாம் தமிழான நாடகத் தமிழில், நாடகக் கலையின் இலக்கணங்கள், குறிப்புகள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், குணநூல், கூத்தநூல், உள்ளிட்டவற்றில் இருக்கப்பெற்றதை உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார்.

எழுத்துக் கலைகள் தொகு

மொழியின் எழுத்துருக்களாலும், உரைஞர், கவிஞரின் படைப்பாற்றலாலும், புனையப்படும் கற்பனைப் புனைவுகள், நடப்புகள், வராலாறுகள் எழுத்துக் கலைகளுள் அடங்கும்.

கதை தொகு

உரைநடை இலக்கியப் புனைவு மொழிபு (அ) கதை ஆகும். ஒரு மையக் கருவைக் கொண்டு அதனை ஒட்டிய சம்பவங்கள், நிலைப்பாடுகளுடன் தொடர்பு படுத்தி புனையப்படுவது கதை. திரைப்படங்களில் அதன் காட்சிப்படுத்தலுக்கேற்ப திரைக் கதைகளாக வடிவம் பெறுகின்றன.

கதைகள் பெரும்பாலும் இயல்பான நிகழ்வை மிகைப்படுத்தி கற்பனைத் திறனை மிகுவித்து உரைப்பதாகும். கதை, சிறுகதை, தொடர்கதை, படக்கதை என அதன் தன்மை, வடிவங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படும்.

கவிதை தொகு

ஓசை சந்தத்துடன் கூடிய, ஒத்திசை பண்புச் சொற்களால் உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்த உதவும் இலக்கிய வடிவம் கவிதை ஆகும். கவிதைப் படைப்புகள் அதன் நோக்கம் கொண்டு இருந்ததைப் படைத்தல், இருப்பதைப் படைத்தல், இருக்க வேண்டியதைப் படைத்தல் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. கவிதை பண்டைய வழக்கில் பண், விருத்தம், நூற்பா என்றும் மேலும் நவீனத்துவத்தினால் புதுக் கவிதை, ஐக்கூ, எனவும், பலவகையான வடிவங்களைக் கொண்டுள்ளது.

கட்டுரை தொகு

பண்டைய இலக்கியங்கள் யாவும் செய்யுள் மற்றும் பாட்டு நடையிலேயே இருந்தன. பிந்நாளில் அனைவரும் ஆய்ந்தறியும் வண்ணம் உரைநடையில் (அ) செம்மையான மொழி நடையில் உரைகள் கட்டமைக்கப்பட்டன. இவை எளிய மொழி நடையில் பல்வேறு தலைப்புகளைக் கொண்டும் அறிக்கைகளாக உரைப்படுத்தப்படுகின்றன. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே (அ) விவாதித்து விபரிப்பதே கட்டுரை ஆகும்.

நுட்பக்கலைகள் தொகு

கலைகளின் அறிவியல் தாக்கம் சார்ந்த கடினமான வரையறைக்குட்பட்ட கலைகள் நுட்பக் கலைகள் ஆகும்.

கலை - வரையறைகள் தொகு

தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம்.

உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும் என்னும் தமிழறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.

கலை வரலாறு தொகு

கலை சரியானதொரு காலகட்டத்தில் தோன்றியதென்று வரையறுக்கவியலாது. இருப்பினும் கலை சார்ந்த ஆக்கங்களைக் கொண்டு கலை இனம் காணப்படுகிறது. மேலும் கலையின் வரலாறுகள் அது தோன்றின இனம், மொழி, தேசம், பண்பாடு சார்ந்து பின்வருமாறு பகுக்கப்படுகிறது.

வரலாற்றுக்கு முந்திய காலக் கலைகள் தொகு

  • வரலாற்றுக்கு முந்திய கால ஐரோப்பியக் கலைகள்
  • வரலாற்றுக்கு முந்திய கால ஆசியக் கலைகள்
  • ஆபிரிக்கச் சுதேசக் கலைகள்
  • அமெரிக்கச் சுதேசக் கலைகள்
  • ஓசானியச் சுதேசக் கலைகள்

பண்டைய உலகின் கலைகள் தொகு

  • பண்டைய மெசொபொத்தேமியக் கலைகள்
    • சுமேரியக் கலைகள்
    • பபிலோனியக் கலைகள்
    • அசிரியக் கலைகள்
  • பண்டைய எகிப்தியக் கலைகள்
  • பண்டைய எச்சியன் கலைகள்
    • மினோவன் நாகரீகம்
    • மைசனியன் நாகரீகம்
    • கிரேக்கக் கலைகள்
    • கிரேக்கோ-பௌத்தக் கலைகள்
    • உரோமப் பண்பாடு
    • ஆரம்பகாலக் கிறித்தவக் கலைகள்
  • ஐரோப்பியக் கலை வரலாறு
    • கிறித்தவக் கலைகள்
    • மத்தியகாலக் கலைகள்
    • மறுமலர்ச்சிக் காலம், தொடக்க மறுமலர்ச்சி ஓவியங்கள், மற்றும் மறுமலர்ச்சிச் செவ்வியம்
    • பரோக், மற்றும் ரோகோகோ
    • புதுச்செவ்வியம், நவீன கலைகள்
  • இந்தியத் துணைக் கண்டம்
    • இந்தியக் கலைகள்
      • தமிழர் கலைகள்
      • மொகலாயக் கலைகள்
    • இலங்கைக் கலைகள்
      • சிங்களக் கலைகள்
      • இலங்கைத் தமிழர் கலைகள்
    • இசுலாமியக் கலைகள்
  • தூரகிழக்கு நாடுகளின் கலைகள்
    • பௌத்த கலை
    • சீனக் கலை
    • செப்பானியக் கலை
    • திபேத்தியக் கலை
    • தாய் கலை
    • இலாவோசு கலை
  • அமெரிக்க நாடுகளின் கலைகள்
    • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கலைகள்
    • மெக்சிக்கோவின் கலை
    • மத்திய அமெரிக்கக் கலைகள்
    • தென் அமெரிக்கக் கலைகள்

தற்காலக் கலைகள் தொகு

  • ஊடகக் கலை
  • நவீனக் கலை

கலைகள் வகைப்பாடு தொகு

பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை ஒரே வகைப்பாட்டில் வகைப்படுத்துவது கடினம்.

  • கா. சிவத்தம்பி கலைகளை வகைப்படுத்துவது நோக்கி குறிப்பிடுகையில்,கலைகளை வகைப்படுத்துவதில் பயில்நெறிகளுக்கேற்ப வேறுபாடுகள் உள்ளன. அவை,
    • புலப்பயன்பாடு கொண்டு, கட்புலக் கலைகள், வாய் மொழிக்கலைகள் எனவும்,
    • வழங்கப் பெறும் முறைமை கொண்டு அவைக்காற்றுகலைகள், அல்லாதவை எனவும்,
    • ஆக்கப்படும் முறைமை கொண்டு, வாய்மொழி எழுத்துக்கலைகள், குழைபொருட்கலைகள் எனவும் வகுக்கப்படும் மரபும் உண்டு.

கற்றல்வழி வகைப்பாடு தொகு

  • எளிமையாகக் கற்கக்கூடிய கலைகளைப் பொதுக் கலைகள் (அ) எளிய கலைகள் என்றும்,
  • நீண்ட பயிற்சி அல்லது பொருள் செலவு செய்து கற்கவேண்டிய கலைகளை நுண்கலைகள் (அ) கலை நுட்பங்கள் என்றும் கூறலாம்.

இனவழி வகைப்பாடு தொகு

கலைவெளிப்பாடுகள் இனம், மொழி, பண்பாடு சார்ந்ததாக இருக்கும் பொழுது,

  • தமிழர் வழிக் கலைகள்,
  • பிற இனப் பிரதேச வழி கலைகள் என்றும் பிரிக்கலாம்.

மேலும், கலைகளின் தன்மைகளை பொறுத்து நிகழ் கலைகள், கட்புலக் கலைகள், தொழில்சார் கலைகள் என்றும் வகைப்படுத்தலாம்.

இவை தவிர மெய்யியல் கலைகள் என்னும் பிரிவும் உண்டு. அவையாவன: சூரிய கலை, சந்திரகலை (இடகலை), அக்கினி கலை என இவைகளை "சரவியல்" வரையறுக்கின்றது.[சான்று தேவை]

கலை வடிவங்கள் தொகு

கலைச் செயற்பாடுகள் தொகு

  1. புலனுணர்வு செயற்பாடு
  2. கலைநயச் செயற்பாடு
  3. முன்கணிப்புச் செயற்பாடு
  4. உல்லாசச் செயற்பாடு
  5. மதிப்பீட்டுச் செயற்பாடு
  6. போதனைச் செயற்பாடு

கலை வடிவங்கள், வகைகள், ஊடகம் மற்றும் பாணிகள் தொகு

திறன் மற்றும் கைவினை வடிவங்கள் வகைகள் தொகு

நோக்கம் தொகு

உந்துதல் செயற்பாடுகள் தொகு

கலை பல்வேறு நோக்கச் செயற்பாடுகளுக்காக தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டது.

  • சமூக, மக்கள் தொடர்பு
  • பொழுது போக்கு
  • அரசியல் மாறுபாடு
  • சமூக விளைவுகள்
  • மனநல சீர்படுத்தல்
  • வர்த்தகமயமாக்கல்
  • ரசனைக் கவர்தல்

ஊக்கமில்லாத செயற்பாடுகள் தொகு

பயன்பாட்டைக் குறித்து கவனம் கொள்ளாத அறிவுசார் நுண்கலைகள் எவ்வித ஊக்கத்தையும், நோக்கத்தையும் கொள்ளாது, எல்லைகளற்ற மனித கற்பனைத்திறனின் செயற்பாடுகளைச் சார்ந்தது. இலக்கியங்கள், இசை, நடனம் முதலிய கலைகளின் செயற்பாடுகள் பெரும்பாலும் உந்துதலற்றதாகும்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
  2. 2.0 2.1 "Art: definition". Oxford Dictionaries. Archived from the original on 2016-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
  3. "art". Merriam-Websters Dictionary.
  4. Is advertising art?
  5. "Art, n. 1". OED Online. December 2011. Oxford University Press. http://www.oed.com. (Accessed 26 February 2012.)
  6. Gombrich, Ernst. (2005). "Press statement on The Story of Art". The Gombrich Archive. Archived from the original on 6 October 2008. பார்க்கப்பட்ட நாள் 18 November 2008.
  7. Stephen Davies (1991). Definition of Art. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8014-9794-0. 
  8. Robert Stecker (1997). Artworks: Definition, Meaning, Value. Pennsylvania State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-271-01596-5. https://archive.org/details/artworksdefiniti0000stec. 
  9. Noël Carroll, தொகுப்பாசிரியர் (2000). Theories of Art Today. University of Wisconsin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-299-16354-9. 
  10. "art". Encyclopædia Britannica.
  11. Dr. Robert J. Belton. "What Is Art?". Archived from the original on 27 April 2012.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Art
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை&oldid=3794288" இலிருந்து மீள்விக்கப்பட்டது