காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை

காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, (Invisible Pink Unicorn) இறை நம்பிக்கையை அங்கதம் செய்யும் பகடி சமயத்தின் ஒரு பெண் கடவுளாகும்.[1] கொம்புக்குதிரை வடிவத்தைக் கொண்டிருக்கும் இக்கடவுளைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் என்று இறை நம்பிக்கையின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட, இறைமறுப்பாளர்களும் பிற சமய ஐயப்பாட்டாளர்களும் இக்கருத்துருவைப் பயன்படுத்துகின்றனர். இது ரசலின் தேனீர்க் கேத்தலின் தற்கால மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பறக்கும் இடியாப்ப அரக்கனும் ஒப்பு நோக்கக்கூடியவை.[2]

மரபுச்சின்ன முறைப்படி வரையப்பட்ட ஒரு காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை

காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, (க.இ.கொ) மீயியற்கை நம்பிக்கைகள் அடிப்படையற்றவை என்று வாதிடப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, இறை நம்பிக்கை பற்றிய எந்தக் கூற்றிலும் “இறைவன்” என்ற சொல்லுக்குப் பதில் “காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்ற பெயரைப் பயன்படுத்தினால் பொருந்தி வரும் என்பது இறை மறுப்பாளர்களின் வாதம்.[3] இந்தக் கொம்புக்குதிரையைக் காணமுடியாது; எனினும் அது இளஞ்சிவப்பு நிறம் கொண்டது என்ற இரு கூற்றுகளும் ஒன்றை ஒன்று பொய்யாக்கும் கூற்றுகள். இறைவனின் தன்மை குறித்த நம்பிக்கையாளர்களின் கருத்துகள் இவ்வாறே அமைந்துள்ளன என்று இறைமறுப்பாளர்கள் கருதுகின்றனர். இறைவன் இல்லை என்று நிறுவ எப்படி இயலாதோ அதே போல இக்கொம்புக்குதிரை இல்லை என்பதையும் உறுதியாக நிறுவ இயலாது.[4]

வரலாறு தொகு

க.இ.கொ கருத்துரு இணையத்தில் தோன்றி பரவலானது, ”ஆல்ட்.அதீசம்” போன்ற யூஸ்னெட் இணைய மன்றங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. தற்போது அதற்கெனப் பல தனிப்பட்ட இணையதளங்களும் உள்ளன. உறுதிப்படுத்தக்கூடிய தரவுகளின்படி, ஜூன் 7, 1990 இல் முதன் முதலில் ”ஆல்ட்.அதீசம்” மன்றத்தில் அது பேசுபொருளானது.[5] பின்பு கல்லூரி மாணவர் குழுவொன்று 1994-95 காலகட்டத்தில் க.இ.கொ கருத்துருவை மேலும் விரிவுபடுத்தியது. ஐயோவா பல்கலைக்கழக டெல்னெட் இணைய மன்றச் சேவையைப் பயன்படுத்திய அம்மாணவர்கள் க.இ.கோ வுக்கென தனியே ஒரு கொள்கை அறிக்கையை உருவாக்கினர். அந்த அறிக்கையில் தன்னளவில் பொருத்தமானதும் ஆனால் உண்மையில் முட்டாள்தனமானதுமான ஒரு சமயத்தை விளக்கினர். அண்டத்தில் எண்ணிலடங்கா காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரைகள் உள்ளன என்பதே அந்தப் பகடி சமயத்தின் அடிப்படை.[6] அந்த அறிக்கையில் தான் (பிற்காலத்தில் புகழ்பெற்ற) பின்வரும் விளக்கம் இடம் பெற்றிருந்தது:

காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரைகள் பெரும் ஆன்மீக சக்தி கொண்டவை. நமக்கு இது எப்படித் தெரியும் என்கிறீர்களா? அவை ஒரே நேரத்தில் காணமுடியாதவையாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதும் அவற்றின் ஆன்மீக சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. ஏனைய சமயங்களைப் போலவே காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை சமயம் தருக்கத்தையும் நம்பிக்கையையும் ஒரு சேர அடிப்படையாகக் கொண்டது. அவை இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை என நாம் நம்புகிறோம். அதே நேரம் அவற்றை நாம் பார்த்ததேயில்லை என்பதால் அவற்றை யாராலும் காண முடியாது என்று தருக்க அடிப்படையில் அறிகிறோம். — ஸ்டீவ் எலே[7][8]

கருத்துகள் தொகு

க.இ.கொ வைப் பற்றிய வாதங்களில் அவரை யாரும் காணமுடியாது என்பதால், அப்படிப்பட்ட ஒருவர் உண்மையில் இல்லை என்றோ அவரது நிறம் இளஞ்சிவப்பல்ல என்றோ யாராலும் நிறுவ முடியாது என்ற கருத்து பொதுவாக வைக்கப்படும். இது பிற சமயத்தாரின் இதே போன்ற நம்பிக்கையைப் பகடி செய்கிறது - இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் அண்டத்தைப் படைத்தவர் என்கிறார்கள். ஆனால் அவர் அவ்வண்டத்தின் விதிகளுக்கு அப்பாற்பட்டவர், எனவே நமது புலன்களையும் இவ்வுலகின் முறைகளையும் கொண்டு அவரை உணர முடியவில்லை என்றால் அவர் ஒருவர் இல்லை எனக்கொள்ளலாகாது என்று வாதிடுகின்றனர். இப்படி இறைவனுக்கென குணங்களையும் பட்டியலிட்டுவிட்டு, அவற்றுக்கு எந்தவித ஆதாரங்கள் இல்லையென்றாலும் அவரைக் காணமுடியாததால் அவருக்கு அக்குணங்கள் இல்லை (அல்லது அவரே இல்லை) என்று சொல்லமுடியாது என்று வாதிடும் நம்பிக்கையாளர்களைப் பகடி செய்கிறது க.இ.கொ.

க.இ.கொ வின் பக்தர்கள் தங்களிடையே நகைச்சுவையாகப் பகடி வாதங்களை நடத்துவர். எடுத்துக்காட்டாக யாராலும் க.இ.கொ வைக் காணமுடியாது என்று வாதிடுவர். அனைவராலும் அவரைக் காணமுடியாது என்றும், மிகப்பெரும்பாலானோரால் அவரைக் காணமுடியாது என்றும், முழு நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே அவரைக் காணமுடியாதென்றும் பல வாதங்கள் முன்வைக்கப்படும். இந்தப் பகடி வாதங்கள், பல சமயங்களில் நடைபெறும் நீளமான, பெருஞ்சிக்கலான இறையியல் வாதங்களை அங்கதம் செய்கின்றன.[6]

க.இ.கொ சமய நூல்களை இறைவனற்றதாக்க உதவுகிறது. சமய நூல்களில் இறைவன் குறிப்பிடப்படும் இடங்களில் அதற்குப் பதிலாக ”காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்று மாற்றிவிட்டுப் படித்தால் வாசகர்கள் ஒரு புதிய கோணத்தில் சமய நூல்களை அணுக முடியும் என்பது இறை மறுப்பாளர்களது கருத்து.

எடுத்துக்காட்டாகத் திருவிவிலியத்தின் தொடக்க நூலின் முதற் சொற்றொடர்களை:

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.

பின்வருமாறு மாற்றலாம்:

தொடக்கத்தில் காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரையின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை, "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை ஒளி நல்லது என்று கண்டார். காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.

தொடக்க நூல் 1:1 (மாற்றப்பட்டது) [7][8]

ஒப்புநோக்கக் கூடிய கருத்துகள் தொகு

1996 இல் ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவர். எல். வில்சன் என்பவரால் குழந்தைகளுக்கான ”கேம்ப் குவெஸ்ட்” என்ற கட்டற்ற சிந்தனை கோடைக்கால முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் யாராலும் காணமுடியாத கொம்புக்குதிரையொன்று, கற்பிக்கும் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.[10] இறை மறுப்பாளர் ரிச்சர்ட் டாக்கின்சு எழுதிய தி காட் டெலூசன் (கடவுள் என்னும் ஏமாற்றல்) நூலில் காணமுடியாத கொம்புக்குதிரையை ரசலின் தேனீர்க் கேத்தலோடு ஒப்பிட்டுள்ளார்.[11] கார்ல் சேகன் எழுதிய “டீமன் ஹாண்டட் வோர்ல்ட்” (ஆவி சூழ் உலகு) நூலில் யாரோ ஒருவர் தனது மகிழுந்து நிறுத்தும் அறையில் டிராகன் ஒன்று வாழ்கின்றது என்று நம்புவதைக் குறிப்பிடுகிறார். நெருப்பைக் கக்க வல்ல அந்த டிராகனை யாராலும் காணவோ உணரவோ இயலாது.[12]

சமய நோக்கு தொகு

ஆய்வாளர்கள் ஏபெல், ஷேஃபர் ஆகியோர் க.இ.கொ சமய நம்பிக்கையை மட்டுமே விமர்சிக்கின்றது, ஆனால் சமயத்தைப் பின்பற்றுவதில் இடம்பெறும் சமூக நடவடிக்கைகள், சமூக அக்கறை போன்றவற்றை கண்டுகொள்வதில்லை என்று விமர்சித்துள்ளனர்.[13][Note 1]

குறிப்புகள் தொகு

  1. Abel & Schaefer (2010) state (paragraph 53, page 14) "This study's findings suggest that the IPU critique of religion is mostly misdirected. The belief commitments of religious people usually have less to do with beliefs than commitments, as evidenced by the overwhelming lack of theological understanding that characterizes a typical congregation."

மேற்கோள்கள் தொகு

  1. Angeles, Peter A. (October 2010). Harper Collins Dictionary of Philosophy. Harper Perennial, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-06-461026-8. }}
  2. Maartens, Willie (2006-06-01). Mapping Reality: A Critical Perspective on Science and Religion. iUniverse. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-595-40044-2. 
  3. Narciso, Dianna (2004-03-01). Like Rolling Uphill: Realizing the Honesty of Atheism. Media Creations. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-932560-74-2. 
  4. Andrew Stuart Abel and Andrew Schaefer (2010). "Seeing Through the Invisible Pink Unicorn". Journal of Religion and Society (Rabbi Myer and Dorothy Kripke Center for the Study of Religion and Society) 12. பன்னாட்டுத் தர தொடர் எண்:1522-5658. http://moses.creighton.edu/JRS/2010/2010-8.pdf. பார்த்த நாள்: 2014-10-16. 
  5. Scott Gibson (1990-07-17). "'Proof' of God's Existence". alt.atheism. (Web link). Retrieved on 2007-04-10. "how about refuting the existence of invisible pink unicorns?"
  6. 6.0 6.1 Alex Tufty Ashman (2007-02-08). "The Invisible Pink Unicorn". h2g2. பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2008-05-08. {{cite web}}: External link in |author= (help)CS1 maint: numeric names: authors list (link)
  7. 7.0 7.1 Judson Poling, Garry Poole, MS Debra Poling (2003). Do Science and the Bible Conflict?. Zondervan. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-310-24507-0. https://archive.org/details/dosciencebibleco0000poli. 
  8. 8.0 8.1 Jack Huberman (2006). The Quotable Atheist. Nation Books. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56025-969-8. 
  9. திருவிவிலியம், தொடக்கநூல் 1:1
  10. Clark, Michael D. (2006-07-21). "Camp: "It's Beyond Belief"". The Cincinnati Enquirer இம் மூலத்தில் இருந்து 2006-08-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060813115617/http://news.cincinnati.com/apps/pbcs.dll/article?AID=%2F20060721%2FNEWS01%2F607210412. பார்த்த நாள்: 2006-08-16. 
  11. Dawkins, Richard (2006). "The God hypothesis: the poverty of agnosticism". The God Delusion (Trade paperback ). Kent: Bantam Press. பக். 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-593-05825-1 இம் மூலத்தில் இருந்து 2010-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100212193102/http://www.richarddawkins.net/mainPage.php?bodyPage=godDelusion.php. பார்த்த நாள்: 2007-07-20. 
  12. Sagan, Carl (1997). "The Dragon In My Garage". The Demon-Haunted World: Science As A Candle In the Dark. Ballantine Books. பக். 171–173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-345-40946-9 இம் மூலத்தில் இருந்து 2011-08-06 அன்று. பரணிடப்பட்டது.. http://www.users.qwest.net/~jcosta3/article_dragon.htm. பார்த்த நாள்: 2014-10-16. 
  13. Abel, Andrew Stuart; Schaefer, Andrew (2010). "Seeing Through the Invisible Pink Unicorn". Journal of Religion & Society 12: 14. http://moses.creighton.edu/jrs/2010/2010-8.pdf. பார்த்த நாள்: 2014-10-16.