குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்

குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள் என்பது அமெரிக்கக் கண்டங்களில் கொலம்பசுக்கு முந்திய கால கட்டங்களில் அக்காலத்து ஓவிய மரபுகளைப் பின்பற்றி வரையப்பட்ட ஓவியங்களைக் குறிக்கும். ஐரோப்பியர்கள் அமெரிக்காக் கண்டத்தைக் கண்டுபிடித்து அங்கே தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்ட காலத்துக்கு முன்னும், பின்னும்; அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென்னமெரிக்கா, கரிபியன் தீவுகள் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தாயக மக்களின் பண்பாடுகள் பல வகையான காட்சிக் கலைகளை உருவாக்கியுள்ளன. இவற்றுள் ஓவியங்களும் அடங்குகின்றன. இவ்வோவியங்களை அவர்கள், துணி, விலங்குத் தோல், பாறை, முகத்தையும் உள்ளடக்கிய மனித உடற் பகுதிகள், வெண்களிப் பொருட்கள், கட்டிடச் சுவர்கள், மரப் பலகைகள், போன்ற கிடைக்கக்கூடியனவும் பொருத்தமானவையுமான பல வகையான மேற்பரப்புக்களில் வரைந்துள்ளனர். ஆனால், அழியக்கூடிய பொருட்களான துணி போன்றவற்றில் வரைந்த ஓவியங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. நீண்ட காலம் நிலைத்து இருக்கக்கூடிய வெண்களிப் பாண்டங்கள், சுவர்கள், பாறை மேற்பரப்புகள் போன்றவற்றில் வரையப்பட்ட ஓவியங்களிற் பல இன்றும் கிடைக்கின்றன.

தென்கிழக்கு உத்தாவில் உள்ள பாறை ஓவியம்


இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய ஓவியம், தென்னமெரிக்காவில், பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் உள்ள சவெர்னா ட பெட்ரா பின்ட்டாடாவில் (Caverna da Pedra Pintada) உள்ள குகை ஓவியம் ஆகும். இது 11,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. வட அமெரிக்காவில் உள்ள மிகவும் பழைய ஓவியம், ஒக்லகோமாவில் உள்ள கூப்பர் காடெருது மண்டையோடு (Cooper Bison Skull) என்பதாகும்.

குடியேற்றத்துக்கு முந்திய ஓவியங்கள் தொகு

அமெரிக்காக் கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் தனித்துவம் வாய்ந்தனவும், தனியான பண்பாடுகளைக் கொண்டனவுமான பல சமுதாயங்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன. இவை, குலக்குறிகள், சமயக் குறியீடுகளைக் கொண்ட பொருட்கள், அழகும் வெளிப்பாட்டுத்தன்மையும் கொண்ட ஓவியம் தீட்டிய பொருட்கள், போன்றவற்றை உருவாக்கியுள்ளன. தென்னமெரிக்காவினதும், கரிபியத் தீவுகளினதும் ஓவியங்களில் வலுவான ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காணப்படுகின்றது. ஐரோப்பியர்கள் புதிய நிலங்களைத் தேடிய காலத்திலும் அதன் பின்பும், தாயக அமெரிக்கக் கலைகள் மீது ஐரோப்பியக் கலைகள் தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே அமெரிக்கத் தாயக மக்களின் கலைகள் ஐரோப்பியக் கலைகள் மீது தாக்கத்தையும் செல்வாக்கையும் கொண்டிருந்தன. 15 ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும், எசுப்பானியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய வலிமை மிக்க குடியேற்றவாத நாடுகள் அமெரிக்காக்களில் வலுவாகக் காலூன்றி இருந்தன. 19 ஆம் நூற்றாண்டளவில் பண்பாட்டுச் செல்வாக்கு அத்திலாந்திக்குக்குக் குறுக்கே இரு திசைகளிலும் ஏற்பட்டன.

இடையமெரிக்கா தொகு

தியோத்திகுவாக்கான் தொல்லியல் களத்தை அழகு செய்யும் அங்குள்ள சுவரோவியங்களும், தியோத்திகுவாக்கான் ஆக்கிரமிப்பாளருடன் ஏற்பட்ட சண்டைகளை விவரித்து மாயா நாகரிக மக்களால் வெட்டப்பட்ட படவெழுத்துக் கல்வெட்டுக்களும், இப்பகுதியின் பண்டைய நாகரிகம் பற்றி விளங்கிக் கொள்வதற்குப் பெருமளவு துணை செய்கின்றன. ஆயிரக் கணக்கில் காணப்படும் சுவரோவியங்கள் கிபி 450 - 650 காலப்பகுதியில் உச்ச நிலையை எட்டின.

பெரும் பெண் கடவுள் தொகு

தியோத்திகுவாக்கானில் உள்ள தெப்பான்தித்லா வளாகத்தில் பல சுவரோவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வோவியங்களின் மையக்கருவாக உள்ள உருவங்கள் மழைக்கும் போருக்குமான அசிட்டெக் கடவுளான திலாலொசக்குக்கு இணையான தியோத்திகுவாக்கான் கடவுள் என 1942 ஆம் ஆண்டில், அன்போன்சோ காசோ என்னும் தொல்லியலாளர் அடையாளம் கண்டார். 1970களில் எசுத்தர் பாசுத்தோரி என்னும் ஆய்வாளர் இதனை மீளாய்வு செய்து இது பெண் கடவுள் என்றார். இக்கடவுள் உருவுடன் சேர்ந்திருக்கும் உருவங்களின் பாலினம், தலையில் இருக்கும் பச்சைப் பறவை, உருவுக்கு மேலே காணும் சிலந்திகள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே அவர் இந்த முடிவுக்கு வந்தார். பயிர்களுக்கும், வளத்துக்குமான சொச்சிக்குவெட்சால் (Xochiquetza) என்னும் காலத்தால் மிகவும் பிந்திய அசுட்டெக்குக் கடவுளுக்கு முன்னோடியான பெண்கடவுள் இது என்னும் முடிவுக்கு வந்தார்.


இதற்குப் பின்னர் இப் பெண் கடவுளை தெப்பன்தித்லா தவிர்ந்த வேறு இடங்களிலும் அடையாளம் கண்டுள்ளனர். தியோத்திகுவாக்கானில் உள்ள தெத்தித்லா வளாகம், கருஞ்சிறுத்தை மாளிகை, வேளாண்மைக் கோயில் என்பன இவ்விடங்களுள் அடங்கும் அத்துடன் இப் பெண் கடவுளின் உருவம் பல்வேறு கொள்கலன்களிலும் வரையப்பட்டுள்ளது.

சுவரோவியக் கோயில் தொகு

மெக்சிக்க மாநிலமான சியாப்பாசில், குவாத்தமாலாவுடனான எல்லைக்கு அருகில் உள்ள தொல்லியல் களமான பொனம்பாக்கில் பிரிய வண்ணம் தீட்டிய சுவரோவியங்கள் உள்ளன. இங்கே உயரம் குறைவானதும் படியமைப்புக் கொண்டதுமான பிரமிடு மேடையில், சுவரோவியக் கோயில் எனப்படும், மூன்று அகைகளுடன் கூடிய ஒடுங்கிய நீளமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் உட்புறச் சுவர்களில் மாயர்களுடைய ஓவியங்களின் சிறப்பான எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் ஒரு போரையும் அதன் விளைவுகளையும் சித்தரித்துக் காட்டுகின்றன.