கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானம்

மகாராணி கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானம் (Kempa Nanjammani Vani Vilasa Sannidhana) (1866-1934) மைசூரின் ராணியும், ஆட்சியாளருமானவர். இவர் மகாராஜா பத்தாம் சாமராச உடையாரின் மனைவியும் மற்றும் மகாராஜா நான்காம் கிருட்டிணராச உடையாரின் தாயாராவார். மைசூர் வரலாற்றில் இவர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார். குடிமக்களுக்கு இவர் செய்த பங்களிப்புகள், மகாராணியாக ஆட்சி புரிந்தது மற்றும் இளம் இளவரசர் நான்காம் கிருட்டிணராச உடையாரின் தாயாக இருந்தது போன்றவை. இந்தியாவின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரான இவரது பாத்திரங்கள் பாராட்டத்தக்கவை. மைசூர் ராணிகளின் வரலாற்றில் மூன்று அரிய ரத்தினங்களில் ஒன்றாக இவர் கருதப்படுகிறார்.

கெம்பா நஞ்சம்மணி
மைசூரின் மகாராணி
தனது பேரன் ஜெயச்சாமராஜா உடையாருடன் மகாராணி
துணைவர்பத்தாம் சாமராச உடையார்
வாரிசு(கள்)நான்காம் கிருட்டிணராச உடையார்
காந்தீரவ நரசிம்மராஜா உடையார்
ஜெயலட்சுமி அம்மணி
கிருட்டிணராஜ அம்மணி
சாலுவாஜ அம்மணி
மரபுஉடையார் அரச குலம்
தந்தைநரசராஜ அர்சு
தாய்கெம்பாநஞ்சம்மணி
பிறப்பு1866
கல்லே, மைசூர் அரசு
இறப்பு7 சூலை 1934 (அகவை 67–68)
பெங்களூர், மைசூர் இராச்சியம்
சமயம்இந்து சமயம்

வாழ்க்கை தொகு

இவர் மகாராஜா பத்தாம் சாம்ராச உடையாரை 1878 மே 26 அன்று திருமணம் செய்து கொண்டார். 1881 ஆம் ஆண்டில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 18 வயதாக இருந்த இளவரசர் பத்தாம் சாமராச உடையாரிடம் ஆங்கிலேயர்கள் மைசூரை ஒப்படைத்தனர். அரசத் தம்பதியருக்கு 1884 ஆம் ஆண்டில், நான்காம் கிருட்டிணராச உடையார் பிறந்தார். விரைவாக அடுத்தடுத்து, இவர்களுக்கு மற்றொரு மகனான காந்தீரவ நரசிம்மராச உடையார் மற்றும் மூன்று மகள்களும் பிறந்தனர்.

ரீஜென்சி தொகு

மகாராஜா சாமராச உடையார், 1894இல் கொல்கத்தாவுக்கு சென்றபோது, தொண்டை அழற்சி நோய் ஏற்பட்டு தனது 32 வயதிலேயே திடீர் மரணத்திற்கு ஆளானார். இதனால் 13 ஆண்டுகள் மட்டுமே இவரது நம்பிக்கைக்குரிய ஆட்சி நீடித்தது. இளவரசர் கிருட்டிணராசேந்திர உடையார் இன்னும் சிறுவனாக இருந்ததால் மகாராணி கெம்ப நஞ்சம்மணி மைசூர் இராச்சியத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் 1895 முதல் 1902 வரை சுமார் எட்டு ஆண்டுகள் ஆட்சியிலிருந்தார்.

அந்த காலத்தில் திவானாக இருந்த சர் கே. சேசாத்ரி ஐயர், ஆட்சி அமைப்பின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைமை நீதிபதியும் மற்றும் பல முறை திவானாக பணியாற்றியவருமான சர் தி. ஆர். ஏ. தம்புச் செட்டி, கடைசியக இவரது சகோதரரும் இராணியின் தனிச் செயலாளராகவும் இருந்த எம். காந்தராஜ் அர்சு ஆகியோர் மைசூரை சரிவிலிருந்து மீள மகாராணிக்கு உதவினர். இவர்களின் திறமையான நிர்வாகத்தின் விளைவாக அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து மின்சாரம் தயாரித்தல், இந்திய அறிவியல் நிறுவனத்தை ஊக்குவித்தல், மாரி கனவே பள்ளத்தாக்கு அணைக்கட்டின் (வாணி விலாச சாகரம்) கட்டுமானம், புதிய அரண்மனை அமைத்தல், மைசூரில் புதிய இடங்களை விரிவுபடுத்துதல், குழாய்கள் மூலம் நீர் வழங்கல் மற்றும் பெங்களூரில் விக்டோரியா மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற பணிகள் இவர்களின் பணிக்கு போதுமான சாட்சியமாக இருந்தது.

மகாராணி கெம்ப நஞ்சம்மணி மகளிர் கல்வியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இவரது ஆதரவின் கீழ் மகாராணி கல்லூரி அமைக்கப்பட்டது. இவர் இந்து மதத்தைத் தீவிரமாக பின்பற்றுபவராக இருந்தார். ஆனால் பிற மதங்களையும் சமமாக மதித்தார்.

ஓய்வு மற்றும் கடைசி நாட்கள் தொகு

தனது மகன் நான்காம் கிருட்டிணராசேந்திர உடையாருக்கு உரிய வயது வந்தவுடன் 1902 ஆகத்து 8, அன்று, மைசூரின் அரியணையின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

சிறுது காலம் நோயால் அவதிப்பட்ட இவர் 1934 சூலை 7 அன்று பெங்களூரில் இறந்தார். [1]

நினைவு தொகு

பழைய மைசூர் பகுதியில் 'வாணி விலாசம்' என்ற முன்னொட்டுடன் பல மாளிகைகள் உள்ளன. ஒரு மொகல்லா (நீட்டிப்பு), நீர் வழங்கும் பணிகள், மகப்பேறு மருத்துவமனை, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஒரு பாலம், பெண்கள் சங்கம் மற்றும் ஒரு சாலை போன்றவைகள் இன்றுவரை, இவரது நினைவை நினைவுபடுத்துகிறது.

குறிப்புகள் தொகு

  1. "Queen Mother of Mysore Dead". The Indian Express. 9 July 1934. https://news.google.com/newspapers?id=sao-AAAAIBAJ&sjid=EkwMAAAAIBAJ&pg=2100%2C1932427. பார்த்த நாள்: 8 May 2017. 

வெளி இணைப்புகள் தொகு