கொடுங்கல்லூர் குஞ்சிக்குட்டன் தம்புரான்

மலையாள எழுத்தாளர்

கொடுங்கல்லூர் குஞ்சிக்குட்டன் தம்புரான் (Kodungallur Kunjikkuttan Thampuran) (1868 - 1914) இவர் இந்தியாவின் கேரளாவில் வாழ்ந்த ஓர் மலையாளக் கவிஞரும், சமசுகிருத அறிஞருமாவார். இவரது பிறப்பு பெயர் இராம வர்மன் என்பதாகும். 874 நாட்களுக்குள் முழு மகாபாரதத்தையும் தனது கையாலேயே, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்ததின் மூலம் இவர் பிரபலமானவர். இவர் பொதுவாக கேரள வியாசர் அறியப்படுகிறார்.

பிறப்பு தொகு

1868 செப்டம்பர் 18 இல் (மலையாள சகாப்தம் 1040 கன்னி 4) [1] இவரது தந்தை வெண்மணி அச்சன் நம்பூதிரிப்பாடு, தாய் குஞ்சிப்பிள்ளை தம்புராட்டி ஆவர். இவரது குழந்தை பருவத்தில் இவர் "குஞ்சிக்குட்டன்" என்ற புனைப்பெயரால் அறியப்பட்டார்.

வாழ்க்கை தொகு

இவரது குடும்ப ஆசிரியர் வளப்பில் உண்ணி ஆசான் இவரது முதல் ஆசிரியராக இருந்தார். பின்னர் மூணாம்கூர் கோதவர்மா தம்புரானின் கீழ் படித்தார். வித்வான் குஞ்ஞிராம வர்மன் தம்புரானிடமிருந்து தர்க்க சாத்திரத்தையும், வல்லிய கொச்சுண்ணி தம்புரானிடமிருந்து சோதிடத்தையும் கற்றுக்கொண்டார். இவர் கொல்லம் ஆண்டு 1047 இல் கவிதை எழுதத் தொடங்கினார். 16 வயதில், முழுநேரக் சமசுகிருதக் கவிஞரானார். வெண்மணி அச்சன், வெண்மணி மகனின் செல்வாக்கின் கீழ் மலையாளத்தில் கவிதை எழுதத் திரும்பினார். இவர் தனது 21 வயதில் கொடுங்கல்லூர் கோயிபள்ளி பப்பியம்மாவை மணந்தார். கொல்லம் ஆண்டு 1062 இல், இவரது 22 வயதில், "கவிபாரதம்" என்ற முதல் நூல் வெளியிடப்பட்டது. [2] தனது 39 வயதில், பப்பியம்மா இறந்தபோது, இவர் திருச்சூர் கிழக்கே சிறம்பில் குட்டிப்பாரு அம்மாவை இரண்டாவதாக மணந்தார். பின்னர் இவர் கோழிக்கோடு நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த சிறீதேவி தம்புராட்டியை மணந்தார். 1914 சனவரி 22 இல் தனது 48 வயதில், இவர் இறந்தார்.

இலக்கிய இயக்கங்கள் தொகு

குஞ்சிக்குட்டன் தம்புரான் மலையாளத்தில் இரண்டு இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினார்: பச்ச மலையாளம் (தூய மலையாளம்), புராண இதிகாச விவர்த்தனம் (இதிகாசங்கள், புராணங்களின் மொழிபெயர்ப்பு).

பச்ச மலையாள இயக்கம் தொகு

குஞ்சிக்குட்டன் தம்புரானுக்கு ஏராளமான அறிவார்ந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களின் சந்திப்பு "கவி சம்மேளனம்" என்பதும் பிரபலமானது. சமசுகிருதத்தின் அதிகப்படியான செல்வாக்கைத் தவிர்த்து, தூய மலையாளத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினர். இந்த இயக்கம் "பச்ச மலையாளம்" இயக்கம் என்று அறியப்பட்டது.

மொழிபெயர்ப்புகள் தொகு

இந்தியாவின் பழைய வசனங்களை சேகரித்து ஆய்வு செய்தார். இவர் முழு மகாபாரதத்தையும் 874 நாட்களுக்குள் மொழிபெயர்த்துள்ளார். 1068 ஆம் ஆண்டு மலையாள சகாப்தத்தில், சிபி அச்சுத மேனனின் தலைமையில், மகாபாரதத்தை கிளிப்பாட்டு என்று மொழிபெயர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொல்லம் ஆண்டு 1068 கன்னி 17 இன் மலையாள மனோரமா நாளிதழில் இதன் விளம்பரம் தோன்றியது. ஐந்தாண்டுகளில் மொழிபெயர்ப்பை முடிக்க திட்டம் இருந்தது. குஞ்ஞிகுட்டன் தம்புரான் எந்தப் பகுதியை ஒதுக்கினாலும், இவர் அதை உடனே முடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதன் கையெழுத்துப் பிரதி கிடைக்கவில்லை.

குறிப்புகள் தொகு

  1. A.D. Harisarma (Introduction to NBS second edition). Mahakavi Kunhikuttan Thampuran: Jiivitavum kritikaLum by Prof. K. Sivarama Menon, published by The Mathrubhumi Printing & Publishing Co. Ltd. Calicut (1989)
  2. Pallippattu Kunjukrishnan; Mahachcharitha Samgraha sagaram, The great Indians- A biographical Dictionary; Vol V. Minarva Press, 1967.

வெளி இணைப்புகள் தொகு