கோரிய நேரத்து ஒளிதம்

கோரிய நேரத்து ஒளிதம் (Video on Demand, VOD) அல்லது கோரிய நேரத்தில் ஒளிதமும் ஒலிதமும் (Audio and Video on Demand, AVOD) அமைப்புகள் பயனர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் தேர்ந்தெடுத்த ஒளித அல்லது ஒலித நிகழ்ச்சிகளைக் காண/கேட்க வழி செய்கின்றன. தொலைக்காட்சிகளுக்கும் தனி மேசைக் கணினிகளுக்கும் கோரிய நேரத்து ஒளிதம் வழங்க பெரும்பாலும் இணைய நெறிமுறைத் தொலைக்காட்சித் தொழினுட்பம் பயன்படுகிறது.[1] கோரிய நேரத்து ஒளிதத்தின் ஒரு வகையே விட்டதைப் பிடித் தொலைக்காட்சி ஆகும்.

கோரிய நேரத்து தொலைக்காட்சி அமைப்புகள் இருவழிகளில் கோரிய நேரத்து ஒளிதத்தை வழங்குகின்றன; தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி மூலமோ கணினி அல்லது பிற கருவி மூலமோ நிகழ்ச்சிகளை நிகழ்நேர ஓடையாக வழங்குகின்றன அல்லது கணினி, எண்ணிம ஒளித பதிவுக் கருவி அல்லது பெயர்த்தகு ஊடக இயக்கியில் தரவிறக்கம் செய்துகொண்டு பின்னர் வேண்டிய நேரத்தில் காண வகை செய்கின்றன. பெரும்பாலான கம்பிவட மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் காட்சிக்கு கட்டணம் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கோரிய நேரத்து ஒளிதத்தை இந்த இரு வழிகளிலும் தங்கள் வாடிக்கையாளர்கள் பெற வகை செய்கின்றனர். தரவிறக்கம் செய்யத் தேவையான எண்ணிம ஒளிதப் பதிவுக் கருவியையும் வாடகைக்கு விடுகின்றனர். இணையத்தைப் பயன்படுத்தும் இணையத் தொலைக்காட்சி கோரிய நேரத்தில் ஒளிதம் பெறப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

சில வான்பயணச் சேவைகளில் பயணிகளின் வான்பயணத்தின் போது பொழுதுபோக்க கோரிய நேரத்தில் ஒளிதமும் ஒலிதமும் நிகழ்ச்சிகளை இருக்கையின் முன்னால் அல்லது கைப்பிடிகளில் பொருத்தப்பட்டுள்ள தனிப்பட்ட காட்சித்திரைகளில் வழங்குகின்றனர். முன்னதாக இச்சேவையாளர்கள் பதிவு செய்திருந்த ஒளி அல்லது ஒலிக் கோப்புகளை வேண்டிய நேரத்தில் தற்காலிக நிறுத்தம், விரைவான முன்செலுத்துகை அல்லது விரைவான பின்செலுத்துகை வசதிகளுடன் இயக்க வழி செய்துள்ளனர்.

சான்றுகோள்கள் தொகு

  1. "Broadband Users Control What They Watch and When". Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரிய_நேரத்து_ஒளிதம்&oldid=3552247" இலிருந்து மீள்விக்கப்பட்டது