சஞ்சய் காந்தி

இந்திய அரசியல்வாதி

சஞ்சய் காந்தி (Sanjay Gandhi; 14 திசம்பர் 1946 – 23 சூன் 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திரா காந்தி மற்றும் பெரோஸ் காந்தியின் இளைய மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் நேரு-காந்தி குடும்ப உறுப்பினராவார். இவரது வாழ்நாளில், தனது தாய்க்குப் பின் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விமான விபத்தில் ஏற்பட்ட மரணத்தைத் தொடர்ந்து இவரது மூத்த சகோதரர் இராஜீவ் காந்தி அவர்களின் தாயின் அரசியல் வாரிசாகி, இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரானார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.

சஞ்சய் ஃபெரோஸ் காந்தி
தொகுதிஅமெதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-12-14)14 திசம்பர் 1946
இறப்பு23 சூன் 1980(1980-06-23) (அகவை 33)
புது தில்லி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்மேனகா காந்தி
பிள்ளைகள்வருண் காந்தி
நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சஞ்சய் புது தில்லியில் 1946 திசம்பர் 14 அன்று இந்திரா காந்திக்கும் பெரோஸ் காந்திக்கும் இளைய மகனாகப் பிறந்தார். மூத்த சகோதரர் ராஜீவைப் போலவே, இவரும் தில்லியில் உள்ள புனித கொலம்பா பள்ளி, டெஹ்ரா டன், வெல்ஹாம் ஆண்கள் பள்ளி , தேராதூன் டூன் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச உறைவிடப் பள்ளியான எகோல் துமாண்டேயில் கல்வி பயின்றார்.[1] காந்தி பல்கலைக்கழகத்தில் சேரவில்லை. ஆனால் வாகனப் பொறியியலை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டார். இங்கிலாந்தின் கிரூவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.[2][3][4]. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார்.[5] இவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டும் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்சய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.

மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு தொகு

1971-இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரித்த, நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான தானுந்து' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்சயிடம் அனுபவமோ, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான தயாரிப்பு உரிமத்தையும், ஒப்பந்த உரிமையையும் இவர் பெற்றார். இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971-இல் நிகழ்ந்த வங்காளதேச விடுதலைப் போரும், பாக்கித்தான் மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன. இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரசு பெற்ற மகத்தான வெற்றியும் இந்திரா காந்தியை மேலும் அதிகார ஆற்றல் மிக்கவராக்கின. இன்று இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி உத்யோக் என்ற நிறுவனத்தை, சஞ்சய் காந்தி நிறுவினா. ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் காட்சிப் பொருளாக முன் வைத்தது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்சய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலர் ஊழல் பெருகி வருவதாக ஆட்சேபம் தெரிவித்தனர்.[6] மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்சய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். மேலும் ஜப்பான் நாட்டு சுசூக்கி வாகன நநிறுவனத்திடம் இந்தியாவில் மக்களுக்கான மலிவான வாகனங்களை தயாரிப்பதற்கான வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது. ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (சப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெற்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.

நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு தொகு

1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார். செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரசு அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயண், ஆச்சார்ய கிருபளானி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள்.

நெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்சய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்சய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. எந்தப் பதவிக்கும் தெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. மார்க் டுல்லி பின்வருமாறு கூறுகிறார், "காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை இந்திரா காந்தி, நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.[7]

அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு தொகு

சஞ்சய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்சய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் எனக் கூறப்பட்டது. மிகவும் விரோதமான அரசியல் சூழலில், காந்தி இந்திராவின் ஆலோசகராக முக்கியத்துவம் பெற்றார். இவரது செல்வாக்கு வியத்தகு முறையில் அதிகரித்தது. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்சய் நியமித்ததாகக் கூறப்படுகிறது

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால் தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்சய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.

ஜமா பள்ளி சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள் தொகு

1976 இல், சஞ்சய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தில்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் இசுலாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான ஜக்மோகன் தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்சய் உத்தரவிட்டதாக தெரிகிறது.[8] இதனால் 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டு நபர்களாவது இறந்திருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது.[9] இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.

நெருக்கடி நிலையின் போது, இந்திரா 20 அம்ச பொருளாதார திட்டத்தை வளர்ச்சிக்காக அறிவித்தார். காந்தி தனது சொந்த மிகக் குறுகிய ஐந்து அம்சத் திட்டத்தையும் விளம்பரப்படுத்தினார்.

பின்னர் அவசரகாலத்தின் போது சஞ்சயின் திட்டம் இந்திராவின் 20 அம்சத் திட்டத்துடன் இணைக்கப்பட்டு இருபத்தைந்து அம்சங்கள் கொண்டத் திட்டத்தை உருவாக்கியது.[10] மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்சய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஐந்து அம்சத் திட்டங்களில், சஞ்சய் இப்போது குடும்பக் கட்டுப்பாடு முயற்சிக்காக முக்கியமாக நினைவுகூரப்படுகிறார். இது இந்தியாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியது.[11][12]

கட்டாயக் கருத்தடைத் திட்டம் தொகு

செப்டம்பர் 1976 இல், சஞ்சய் காந்தி மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு பரவலான கட்டாய கருத்தடை திட்டத்தைத் தொடங்கினார். திட்டத்தைச் செயல்படுத்துவதில் சஞ்சய் காந்தியின் பங்கு எவ்வளவு என்பது சற்றே சர்ச்சைக்குரியது. சில எழுத்தாளர்கள் [13][14][15][16] காந்தியை அவரது சர்வாதிகாரத்திற்கு நேரடியாகப் பொறுப்பேற்கிறார்கள். சிலர்,[17] காந்தியை விட திட்டத்தை செயல்படுத்தின அதிகாரிகளைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

படுகொலை முயற்சி தொகு

சஞ்சய் காந்தி மார்ச் 1977 இல்[18] கொலை முயற்சியில் இருந்து தப்பினார். அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, புதுதில்லியில் இருந்து தென்கிழக்கே 300 மைல் தொலைவில் அவரது வாகனம் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டனர்.[18]

1977-1980: அவமானமும் மீட்சியும் தொகு

பிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், ஜனதா கட்சி கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போது, சஞ்சய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திராவையும் சஞ்சயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்சய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.

நாளடைவில், இந்திரா காந்தி கைதானது நியாயமற்றதாக மக்களிடையே தோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரசு கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியிலிருந்து சஞ்சய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.

சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம் தொகு

சஞ்சய் காந்தி 24 செப்டம்பர் 1974 அன்று புதுதில்லியில் தன்னைவிட 10 வயது இளையவரான மேனகா ஆனந்த் என்பவரை மணந்தார்.[19] இவர்களுக்கு வருண், இவரது மரணத்திற்கு சற்று முன்பு பிறந்தார். மேனகாவும் வருணும் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகளாக உள்ளனர்.

இறப்பு தொகு

1980 சூன் 23 அன்று புதுதில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையத்திற்கு அருகே நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி தலையில் காயம் ஏற்பட்டு உடனடியாக இறந்தார்.[20][21].

இவரது மனைவி மேனகாவின் கூற்றுப்படி, சஞ்சய் காந்தி தனது குடும்பத்தை ஜோராஸ்ட்ரிய நம்பிக்கையில் தனது குழந்தைகளை வளர்க்க விரும்பினார்.[22]

இறப்பிற்குப் பின்னர் தொகு

காந்தியின் மரணம் இந்தியாவின் அரசியல் முகத்தை பாதித்தது.[23] காந்தியின் மரணம் அவரது தாயார் தனது மற்றொரு மகன் ராஜீவை அரசியலில் ஈடுபடுத்த வழிவகுத்தது. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, அவருக்குப் பிறகு ராஜீவ் இந்தியாவின் பிரதமரானார் . காந்தியின் விதவையான மேனகா இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு தனது மாமியாரிடமிருந்து பிரிந்து, ஐதராபாத்தில் சஞ்சய் விசார் மஞ்ச் என்ற பெயரில் சொந்தக் கட்சியைத் தொடங்கினார். மேனகா பல ஆண்டுகளாக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் பணியாற்றினார். தற்போது, அவரும் அவரது மகன் வருணும் இந்தியாவில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளனர். மே 2014 இல் பிரதமர் நரேந்திர மோதியால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் அமைச்சராக அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மேனகா, தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் மக்களவைத் தொகுதி) பாஜகவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வருண் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபிட் தொகுதியின் பாஜக உறுப்பினர் ஆவார்.[24]

சான்றுகள் தொகு

  1. Singh, Rani (13 September 2011) (in en). Sonia Gandhi: An Extraordinary Life, An Indian Destiny. St. Martin's Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-34053-4. https://books.google.com/books?id=F_g67qLkXfgC&q=ecole+circle+ecole+d%27humanit%C3%A9&pg=PT26. 
  2. First Woman of India St. Petersburg Times, 10 January 1966.
  3. "Maruti and Sanjay Gandhi: The history of an illicit, extraordinary love affair". Motoroids. http://www.motoroids.com/features/maruti-and-sanjay-gandhi-the-history-of-an-illicit-extraordinary-love-affair/. 
  4. இந்தியாவின் முதல் பெண்மணி செயின்ட் பீடர்ஸ்பர்க் டைம்ஸ், ஜனவரி 10, 1966.
  5. Rani Singh (2011). Sonia Gandhi: An Extraordinary Life, An Indian Destiny. St. Martin's Press. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-34053-4. https://books.google.com/books?id=F_g67qLkXfgC&pg=PT6. 
  6. Bhupesh Bhandari (11 July 2015). "Emergency and Sanjay Gandhi: How Maruti's origin lies in cronyism, corruption and blackmail". Business Standard. http://www.business-standard.com/article/beyond-business/emergency-and-the-maruti-story-start-of-a-small-wonder-115070900758_1.html. 
  7. மார்க் டுல்லியின் 'அம்ரித்சர் - திருமதி காந்தியின் கடைசி போர், பக்கம் 55, ஐஎஸ்பிஎன் 81-291-0917-4
  8. India Since Independence: Making Sense Of Indian Politics. Pearson Education India. 2012. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131734650. https://books.google.com/books?id=8v7Vr2iQUHkC&pg=PA171. 
  9. "புது தில்லியில் நடந்த மோதலில் 12 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது", தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 20, 1976
  10. Emma Tarlo (2001). Unsettling memories : narratives of the emergency in Delhi. Berkeley: University of California Press. பக். 27–28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-23122-1. https://books.google.com/books?id=3IO1WB2H8UUC&pg=PR5. 
  11. Eliza Ann Lehner. "Conceiving the Impact: Connecting Population Growth and Environmental Sustainability" (PDF). Harvard College. Archived from the original (PDF) on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  12. Warren C. Robinson, தொகுப்பாசிரியர் (2007). The global family planning revolution : three decades of population policies and programs. Washington, D.C.: World Bank. பக். 311–312. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8213-6951-7. https://books.google.com/books?id=c67CZT-ZGVEC&pg=PA311. 
  13. Vinay Lal. "Gandhi". Archived from the original on 6 January 2005. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013. Sanjay Gandhi, started to run the country as though it were his personal fiefdom, and earned the fierce hatred of many whom his policies had victimized. He ordered the removal of slum dwellings, and in an attempt to curb India's growing population, initiated a highly resented program of forced sterilization.
  14. Subodh Ghildiyal (29 December 2010). "Cong blames Sanjay Gandhi for Emergency 'excesses'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110828145401/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-29/india/28661327_1_slum-clearance-sanjay-gandhi-sterilization. ""Sanjay Gandhi's rash promotion of sterilization and forcible clearance of slums ... sparked popular anger"" 
  15. Kumkum Chadha (4 January 2011). "Sanjay's men and women". Archived from the original on 4 February 2011. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013. The Congress, on the other hand, charges Sanjay Gandhi of "over enthusiasm" in dealing with certain programmes and ... "Unfortunately, in certain spheres, over enthusiasm led to compulsion in enforcement of certain programmes like compulsory sterilisation and clearance of slums. Sanjay Gandhi had by then emerged as a leader of great significance.".
  16. "Sanjay Gandhi worked in an authoritarian manner: Congress book". 28 December 2010. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013.
  17. K. Ishwaran (1988). India: The Years of Indira Gandhi. Brill Academic Pub. 
  18. 18.0 18.1 "Sanjay Gandhi escapes assassination". St. Petersburg Times. 15 March 1977. https://news.google.com/newspapers?id=L68pAAAAIBAJ&pg=3171,5737930&dq=sanjay+gandhi&hl=en. 
  19. "Quiet Wedding in New Delhi". The Milwaukee Journal. AP (New Delhi). 3 December 1974. https://news.google.com/newspapers?id=vK8oAAAAIBAJ&pg=5251,1361602&dq=sanjay+gandhi&hl=en. [தொடர்பிழந்த இணைப்பு]
  20. [Vinod Mehta "The Sanjay Story, 2015 Harper Collins Publishers India.]
  21. http://www.independent.co.uk/news/obituaries/air-marshal-jaffar-zaheer-principled-indian-air-force-officer-806294.html
  22. John Hinnells (2005), The Zoroastrian Diaspora: Religion and Migration, OUP Oxford, pp. 397–398, ISBN 978-0-19-826759-1
  23. [India Today] https://www.indiatoday.in/magazine/cover-story/story/19800715-sanjay-gandhi-dies-in-a-dramatic-plane-crash-his-passing-to-leave-a-political-vacuum-821253-2014-01-22 [Issue date:-15 July 1980]
  24. "Election Results 2014: BJP Leader Varun Gandhi Wins From Sultanpur" (in en). NDTV.com. https://www.ndtv.com/elections-news/election-results-2014-bjp-leader-varun-gandhi-wins-from-sultanpur-562233. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_காந்தி&oldid=3882714" இலிருந்து மீள்விக்கப்பட்டது