சதுரங்க இறுதியாட்டம்

சதுரங்கத்தில் இறுதியாட்டம் (endgame) அல்லது முடிக்கும் ஆட்டம் என்பது சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலையைக் குறிப்பதாகும்.[1]

நடு ஆட்டத்தில் இருந்து இறுதியாட்ட வரிசை தொடங்கும் நேரம் தெளிவற்றதாகவும் அடிக்கடி மாறுபடுவதாகவும் உள்ளது. இத்தொடக்கம் படிப்படியாக ஆரம்பித்து மெதுவாகவும் நிகழலாம் அல்லது சில சோடி காய்களை பரிமாறிக் கொள்வதன் மூலமாக விரைவாகவும் நிகழலாம். எனினும் இறுதியாட்டம் நடு ஆட்டத்தினின்று பல்வேறு வேறுபட்ட பண்புகளை வழங்க முனைகிறது. அத்ற்கேற்ப வீரர்களும் பல்வேறு மூலோபாய தந்திரங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக இரு வீரர்களின் காலாட்களும் ஆட்டத்தில் முக்கியத்துவம் பெற்று எப்படியாவது சதுரங்கப் பலகையின் எட்டாவது வரிசைக்கு முன்னேறி பதவியேற்றம் பெற முயற்சிக்கிறார்கள். நடு ஆட்டத்தில் எதிரியிடம் சரணடைதல் என்ற அச்சுறுத்தலால் பாதுகாக்கப்பட்ட ராசா இறுதியாட்டத்தில் வலிமையுடன் நிற்கிறார். சதுரங்கப் பலகையின் நடுப்ப்குதிக்கு அவரை அழைத்து வந்து பயனுள்ள தாக்கும் வீரராகவும் பயன்படுத்தப்படுகிறார்.

அதேசமயம் சதுரங்க விளையாட்டின் திறப்புக் கோட்பாடுகளின் பிரபலம் மற்றும் வீழ்ச்சி காரணமாக அடிக்கடி மாற்றம் பெறும் திறப்புக் கோட்பாடுகள், நடு ஆட்டத்தில் இடம்பெறும் காய்களின் இருப்பிடங்களுக்கு புதுப்புது வாய்ப்புகள் தந்து வேறுபடுத்துகின்றன. ஆனால் இறுதியாட்டக் கோட்பாடுகள் மாறாமல் இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்குத் தோற்பது போலத் தெரியும் வெள்ளை நிறக்காய்களை அமைத்து வெற்றி அல்லது சமநிலை ஏற்படுத்தும் தீர்க்கப்பட்ட நகர்வுகள் மூலம் இறுதியாட்டக் கோட்பாடுகளை பலர் தொகுத்துள்ளனர்.

பொதுவாக சதுரங்க இறுதியாட்டங்களில் வெற்றி பெறுவதற்கு ஏற்ற வலுவான நிலையில் உள்ளவர் ( சதுரங்கப் பலகையில் எஞ்சிநிற்கும் காய்களின் மொத்த புள்ளிகள் கணக்கின் அடிப்படையில் ) எதிரியின் புள்ளிகள் கணக்கை மேலும் குறைப்பதற்காக காலாட்கள் தவிர்த்து மற்ற காய்களின் பரிமாற்றம் செய்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தப் பரிமாற்றம் வெள்ளைக் காய்களுடன் ஆடுபவர் பெற்ற கூடுதல் பலத்தை வெற்றியாக மாற்றும். எதிர்த்து ஆடும் வீரர் இந்த மாற்றம் நிகழாமல் தடுக்க பாடுபடுவார்.

இறுதியாட்டத்தில் எஞ்சி நிற்கும் காய்களைப் பொறுத்து இறுதியாட்டங்களைப் பலவாறு வகைப்படுத்தலாம். இறுதியாட்டங்களின் சில பொதுவான வகைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.

பிரிவுகள் தொகு

சதுரங்க இறுதியாட்டம் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.  :

கருத்தியலான இறுதியாட்டம் – சதுரங்கப் பலகையில் காய்கள் எங்கெங்கே அமைந்திருந்தால் அந்த ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து எவ்வாறு வெற்றிபெற முடியும் என்பதற்கான நகர்வுகளின் வரிசை முறை சரியாக அறியப்பட்டும் நன்கு பகுப்பாய்வு செய்யப் பட்டவைகளாகவும் அமைந்துள்ள கருத்துகளின் தொகுப்பு முதல் வகையாகும். நன்கு அறியப்பட்ட கோட்பாட்டு நிலையில் காய்கள் அமைந்துவிட்டால் அந்த ஆட்டத்தை முடிப்பதற்கு சிற்சில நுணுக்கங்கள் தெரிந்து வைத்திருத்தல் போதுமானது.

செயல்முறை இறுதியாட்டம் – வீரர்களுக்கிடையில் நடந்து கொண்டிருக்கும் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சதுரங்கப் பலகையில் காய்கள் புதிய அமைவிடங்களில் பொருந்தி நின்று இறுதியாட்டம் தொடங்குவது இரண்டாம் நிலையாகும். ஆடும் வீரர் தன்னுடைய திட்டமிட்ட திறமையான நகர்த்தல்கள் மூலம் கோட்பாடுகளில் தீர்வு செய்யப்பட்ட அமைவிடங்களுக்கு காய்களை நகர்த்திச் சென்று ஆட்டத்தின் போக்கை கோட்பாட்டை நோக்கி வழிமாற்றி வெற்றியை வசப்படுத்தும் செயல்முறைகள் இந்நிலையில் அடங்கும். .

கலைத் திறனுடைய இறுதியாட்டம் (ஆய்வுகள்)- இறுதியாட்டக் கருத்தியலில் திட்டமிடப்பட்ட அமைவு நிலைகளில் மறைந்து கொண்டிருக்கும் ஐயப்பாடான மற்றும் சிக்கல்கள் நிறைந்த சிக்கல்களை கண்டறிதலும் தீர்வுசெயதலும் மூன்றாம் நிலையில் அடங்கும் (போர்டியச் மற்றும் சார்க்கோசி 1981: vii). பொதுவாக இந்தக் கருத்துகள் ஆய்வுகளைக் கருதவில்லை.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்க_இறுதியாட்டம்&oldid=3242781" இலிருந்து மீள்விக்கப்பட்டது