சமூகத் தத்துவம்

சமூகத் தத்துவம் (Social philosophy) என்பது சமூக நடத்தை, சமூகம், சமூக நிறுவனங்கள் பற்றிய கேள்விகள், சித்தாந்தங்கள் பற்றிய விழுமியங்கள் சார்ந்த தத்துவ இயலின் ஒரு பிரிவாகும். மேலும், இது பொருள் சார்ந்த கருத்துக்களை விட அறநெறி சார்ந்த கருத்தியலைக் கொண்டுள்ளது.[1] சமூகத் தத்துவவாதிகள், அரசியல், ஒழுக்கம், சட்ட விதிகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த வினாக்கள், கருத்தியல்களின் வளர்ச்சி ஆகியவை தொடர்பான புரிதலுக்கு அதிக முக்கியத்துவம் அழைக்கின்றனர். சமூக மெய்யியல் ஆய்விலிருந்து உலகாயத தத்துவங்களான குடியாட்சி, மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் உலக நீதி ஆகியவற்றின் புரிதலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.[2]

சமூகப் பிரச்னைகள் மற்றும் சமூகச் நடத்தை குறித்த தத்துவம் சார்ந்த கேள்விகளை சமூகத் தத்துவம் வெளிக்கொணர்கிறது. சமூகத் தத்துவம் என்பது, சமூக ஒப்பந்த விதி, பண்பாட்டுத் திறனாய்வு, மற்றும் தனிமனிதத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளுடன் தொடர்புடையது. சமூகத் தத்துவம் தனிமனித மற்றும் சமூகக் கூறுகள், அவற்றிற்கிடையே உள்ள தொடர்பு போன்றவற்றை உள்ளடக்கியது. சமூகத் தத்துவத்தில் தனிமனிதத்துவம் அடிக்கடி சமூகத்திலிருந்து தனிமனிதன் பிரிவது குறித்த கேள்விகள் தொடர்பாக வருகின்றது. சமூகத் தத்துவம் என்பது சமூகவியல், மனிதவியல் மற்றும் உளவியல் போன்றவற்றுடன் பெரும்பாலும் கலந்தே வருகின்றது. அவை சமூகத் தத்துவவாதிகள் படித்து, ஒருங்கிணைப்பதற்கான அறிவியல் மற்றும் ஆய்வுகளை அளிக்கிறது. பெரும்பாலான கலந்துரையாடல்களும், விதிகளும் சமூகத் தத்துவம் மற்றும் சமூக அறிவியல் போன்றவற்றின் கூறுகளைக் கொண்டதாகவே விளங்குகின்றன. சமூகத் தத்துவத்தின் பெரும்பகுதி குறிப்பாக, உரிமை, புரட்சி, சொத்து மற்றும் அதிகாரம் போன்ற தலைப்புகளில் அரசியல் தத்துவத்துடன் இணைந்தே வருகின்றது. இருந்தபோதிலும், சமூகத் தத்துவமானது, சமூகக் கலந்துரையாடல், அதிகாரம், முரண்பாடுகள் போன்ற தெளிவான வரையறை இல்லாதவற்றையும் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, சட்டத் தத்துவமானது முறையாக அமைந்த அரசாங்கம் மற்றும் அதன் சட்டங்கள் குறித்து விளக்கும்போது, சமூகத் தத்துவமானது, தாமாக உருவான குழுக்களின் சமூக அமைப்புகள் மற்றும் புகழ் பெற்ற மனிதர்களின் சமூக செல்வாக்கு போன்ற வரையற்ற பிரச்னைகளைக் குறித்து விளக்குகிறது. இவ்வகையில், நாம் ஓர் ஆளுநரின் பதவிக்குரிய செல்வாக்கையும், ஒரு பெயர் பெற்ற உயர்நிலைப் பள்ளி மாணவனின் சமூக செல்வாக்கையும் வேறுபடுத்திப் பார்க்கலாம்.சமூகத் தத்துவம் என்பது ஒரு குழுவின் சக்தி, மக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் விதம் போன்றவற்றையும் விளக்கக் கூடியது. புது வடிவங்கள், மரபுகள், மூட நம்பிக்கைகள், கூட்டங்கள் போன்றவை இத்தலைப்பின் கீழ் வரக்கூடியவை. சமூகத் தத்துவமானது சமூக மதிப்பீடுகள், அதன் தொடர்பான சமூகம் ஏற்றுக் கொள்ளும் அல்லது புறக்கணிக்கும் ஒழுக்கக் கோட்பாடுகள் குறித்தும் விளக்கக் கூடியதாக இருப்பதால், இது ஒழுக்கம் மற்றும் ஒழுக்க விதிகளுடன் கலந்தே வருகின்றது. சிலர் சமூகத் தத்துவம் என்பதை சமூகத்திற்கான தத்துவம் என்று குறிப்பிடலாம், ஆனால், அவ்வாறு சொல்லும்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தத்துவத்துடன் அது குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

உட்பிரிவுகள் தொகு

சமூக நீதிக்கான கேள்விகளுக்கும், விழுமியங்கள் அல்லது அற விதிகளுக்கான கேள்விகளுக்கும் இடையே அடிக்கடி கருதக்கூடிய அளவில் குழப்பங்கள் நேர்வதுண்டு. சமூக நீதியின் மற்ற பிரிவுகள் அரசியல் தத்துவம், சட்டவியல் ஆகியவற்றை உள்ளடக்கியவை. அவை பெரும்பாலும் நாடுகளின் அரசியல், அரசாங்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பானவை ஆகும். சமூகத் தத்துவம், விழுமியங்கள் மற்றும் அரசியல் தத்துவம் ஆகிய அனைத்துமே சமூக அறிவியலின் பிரிவுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை ஆகும். மேலும், சமூக அறிவியல் பிரிவுகள் அனைத்துமே, சமூக அறிவியல் தத்துவ நோக்குடன் இணையும் தன்மையுடையவை.

மொழிகளின் தத்துவமும், சமூக அறிவு ஆய்வியலும் சமூகத் தத்துவத்துடன் குறிப்பிடத்தகுந்த அளவில் கலக்கக் கூடிய உட்பிரிவுகள் ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Definition of SOCIAL PHILOSOPHY".
  2. Overview - Journal of Social Philosophy - Wiley Online Library. doi:10.1111/(issn)1467-9833/homepage/productinformation. https://onlinelibrary.wiley.com/page/journal/14679833/homepage/ProductInformation.html. 
  3. "Social Philosophy". Cavite State University Main Campus.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகத்_தத்துவம்&oldid=2868586" இலிருந்து மீள்விக்கப்பட்டது