சர்மத் காஷணி

சூபி ஞானி

சர்மத் காஷணி (Sarmad Kashani) அல்லது வெறுமனே சர்மத் (ca 1590-1661) என்பவர் பாரசீக மொழி பேசிய ஆர்மீனிய ஆன்மீகவாதி மற்றும் கவிஞர், சூபிஞானி ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்து நிரந்தரமாக வசித்தார். முதலில் யூதராக இருந்த இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக தனது சமயத்தை துறந்திருக்கலாம். [1] இருப்பினும் "அவரது மதமாற்றம் அநேகமாக பெயரளவிலான மற்றும் மேலோட்டமானதாக மட்டுமே இருந்தது, ஏனெனில் அவரே பின்னர் யூதர்களை தங்களை மதம் மாறவேண்டாம் என்று எச்சரித்தார்" [2] [3] சர்மத், தனது கவிதையில், தான் யூதரோ, முஸ்லீமோ, இந்துவோ இல்லை என்று கூறுகிறார்.

பிறப்புc. 1590
ஆர்மீனியா, சபாவித்து ஆர்மீனியா
இறப்பு1661
முகலாயப் பேரரசு
பள்ளிசூபித்துவம்
முக்கிய ஆர்வங்கள்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சர்மத் 1590 இல் ஆர்மீனியாவில் ஆர்மீனிய யூத வணிகர் குடும்பத்தில் பிறந்தார். சர்மத் பாரசீக மொழியை நன்கு அறிந்திருந்தார். வணிகரான இவரது தொழிலுக்கு அது அவசியமானதாக இருந்தது. மேலும் இவரது பெரும்பாலான படைப்புகளை பாரசீக மொழியில் இயற்றினார். இவர் பாரசீக மொழியில் தோராவின் மொழிபெயர்ப்பை உருவாக்கினார். [4] முகலாயப் பேரரசில் வணிகராக குடிபெயர்வதற்கு முன்பு முல்லா சத்ரா, மிர் ஃபிண்டிரிஸ்கி ஆகியோரிடம் பயின்றார். [5]

முகலாயப் பேரரசில் பயணம் தொகு

ஈரானிய பொருட்களை விற்று இந்தியாவின் விலை உயர்ந்த மாணிக்கம், மரகதம், நறுமணப் பொருட்களை வாங்க முகலாயப் பேரரசுக்கு வந்தார். இன்றைய பாகிஸ்தானின் சிந்துவில் உள்ள தட்டாவில், அவரது நெருங்கிய சீடர்களில் ஒருவரான அபய் சந்த் என்ற இந்துவை சந்தித்தார். அவர்களது உறவின் தன்மை குறித்து விவாதம் இருந்தாலும் [6] அபய் சந்தின் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. சர்மத்தின் பாடல்களைத் தவிர, அவர்களின் சந்திப்பு பற்றிய விவரங்களை உறுதிப்படுத்த எந்த வரலாற்று பதிவுகளும் இல்லை. தோரா மற்றும் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டை மொழிபெயர்ப்புப் பணிக்கு சர்மத் அபய் சந்தைப் பயன்படுத்தியபோது, அபய் சந்த் இஸ்லாம் அல்லது யூத சமயத்துக்கு மாறியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். பிற்காலங்களில், சர்மத் அனைத்து சமயங்களையும் விமர்சிக்கும் ஆன்மீக நிலைப்பாட்டை எடுத்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில், அவர் தனது உடமைகளை கைவிட்டு, தலைமுடி வளரவிட்டு, நகங்களை வெட்டாமலும் நகர வீதிகளில் அலையத் தொடங்கினார். சர்மத், அபய் சந்த் ஆகியோர் லாகூர், பின்னர் ஹைதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று, இறுதியாக தில்லியில் குடியேறினர் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது. இருப்பினும் நிகழ்வுகளை உறுதிப்படுத்த நம்பகமான சான்றுகள் எதுவும் இல்லை.[சான்று தேவை]

தில்லி வாழ்க்கை தொகு

இருவரும் ஒன்றாகப் பயணித்த காலத்தில் அவர் கவிஞராகவும், பூடகமானவராகவும் புகழ்பெற்றார். இதனால் முகலாய பட்டத்து இளவரசர் தாரா சிக்கோ தன் தந்தையின் அரசவைக்கு சர்மத்தை அழைக்க வைத்தார். இந்த சந்தர்ப்பத்தில், சர்மத் அரசரின் வாரிசான தாராவை மிகவும் ஆழமாக கவர்ந்தார். தாரா இவரை தன் ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டார்.

சர்மத் ஒரு நிர்வாண பக்கிரி என பிரெஞ்சு மருத்துவரும் பயணியுமான பிரான்சுவா பெர்னியர் குறிப்பிட்டுள்ளார். [7]

இறப்பு தொகு

சகோதரர் தாரா ஷிகோவுடன் நடந்த வாரிசுப் போரில் வெற்றிபெற்ற ஔரங்கசீப் (1658-1707) தாராவைக் கொன்று அரியணை ஏறினார். ஆனால், சர்மத் ஒருபோதும் அவுரங்கசீப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து தாரா சிகோவின் புகழ்பாடி ஔரங்கசீப்பின் வெறுப்பைப் பெற்றார். அதனால் ஔரங்கசீப்பால் சமய மறுப்பு குற்றம் சாட்டபட்ட சர்மத் கைது செய்யப்பட்டார். சர்மத் 1661 இல் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது கல்லறை இந்தியாவின் தில்லியில் உள்ள ஜமா பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ளது.

சர்மத் நாத்திகம் மற்றும் வழக்கத்திற்கு மாறான சமய நடைமுறைகளைக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார். [8]

‘அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’ என்பதைக் குறிக்கும் சொற்றொடரில் ‘லாஇலாஹ’ அதாவது ‘கடவுள் இல்லை’ என்று மட்டுமே எப்போதுமே உச்சரித்துக்கொண்டிருக்கிறார் சர்மத் என்ற புகார் எழுப்பப்பட்டது. ஔரங்கசீப் தனது உலமாவைச் சர்மத்திடம் ஏன் "கடவுள் இல்லை" என்று திரும்பத் திரும்பச் சொன்னதைக் கேட்கும்படி கட்டளையிட்டார், மேலும் முழுவதுமாக கலிமா துதி பாடக் கட்டளை இட்டார். [9] அதற்கு அவர், “தற்போது மறுப்பு என்ற கட்டத்தில் நான் ஆழ்ந்திருக்கிறேன். ஏற்பு என்ற ஆன்மிக நிலையை நான் இன்னும் எட்டவில்லை. இப்போது கலிமாவை வாசித்தால் நான் பொய் சொல்வதாகிவிடும்” என்றார் இதனால் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவுரங்கசீப்பின் அரசவை வரலாற்றாசிரியர் அலி கான்-ராசி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டபோது உடனிருந்தார். மரணதண்டனை மேடையில் சொல்லப்பட்ட சில மர்மவாதிகளின் வசனங்களை அவர் விவரிக்கிறார்: "முல்லாக்கள் அகமது சொர்க்கத்திற்குச் சென்றார் என்று கூறுகிறார்கள், சர்மத் அகமதுவுக்கு சொர்க்கம் வந்தது என்று கூறுகிறார்." . . . "ஒரு சலசலப்பு ஏற்பட்டது, நாங்கள் நித்திய தூக்கத்திலிருந்து கண்களைத் திறந்தோம். அக்கிரமத்தின் இரவு நிலைத்திருப்பதைக் கண்டு, நாங்கள் மீண்டும் தூங்கினோம்."

சர்மத் குறித்து அபுல் கலாம் ஆசாத் தொகு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி அரசியல் ஆளுமைகளில் ஒருவரான அபுல் கலாம் ஆசாத், தனது சிந்தனை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்காக தன்னை சர்மத்துடன் ஒப்பிட்டார். [10]

குறிப்புகள் தொகு

  1. Prigarina, Natalia. "SARMAD: LIFE AND DEATH OF A SUFI" (PDF). Institute of Oriental Studies, Russia. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  2. Prigarina, Natalia. "SARMAD: LIFE AND DEATH OF A SUFI" (PDF). Institute of Oriental Studies, Russia. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  3. Fischel, Walter J. “Jews and Judaism at the Court of the Moghul Emperors in Medieval India.” Proceedings of the American Academy for Jewish Research, vol. 18, 1948, pp. 137–77, https://doi.org/10.2307/3622197. Accessed 1 May 2022.
  4. Fishel, Walter. "Jews and Judaism at the Court of the Mugal Emperors in Medieval India," Islamic Culture, 25:105-31.
  5. Puri, Rakshat; Akhtar, Kuldip (1993). "Sarmad, The Naked Faqir". India International Centre Quarterly 20: 65–78. 
  6. V. N. Datta (27 November 2012), Maulana Abul Kalam Azad and Sarman, ISBN 9788129126627, Walderman Hansen doubts whether sensual passions played any part in their love [sic]; puri doubts about their homosexual relationship
  7. . 1996. 
  8. "Votary of freedom: Maulana Abul Kalam Azad and Sarmad". Tribune India. 7 October 2007. http://www.tribuneindia.com/2007/20071007/spectrum/book1.htm. 
  9. Najmuddin, Shahzad Z. (2005). Armenia: a Resumé: with Notes on Seth's Armenians in India. Trafford Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4120-4039-6. https://books.google.com/books?id=0BI8kFya06UC&pg=PT100. 
  10. Votary of freedom - Maulana Abul Kalam Azad and Sarmad by V. N. Datta, Tribune India, 7 October 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மத்_காஷணி&oldid=3439782" இலிருந்து மீள்விக்கப்பட்டது