சாம் பிட்ரோடா

சாம் பிட்ரோடா (1942 ஆம் ஆண்டு மே 4 அன்று பிறந்தவர்) (உண்மைப் பெயர் சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா) ஒரு கண்டுபிடிப்பாளர், தொழில் முனைவாளர் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர். தற்போது, இந்தியாவின் பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்னும் துறையில் பிரதம மந்திரிக்கு ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா இந்தியாவின் தொலைத் தொடர்புப் புரட்சிக்குப் பொறுப்பானவராகவும் கருதப்படுகிறார்.[1] ஒரு ஆலோசகராக, அவர் தகவல்களின் அடிப்படைக் கட்டமைப்பின் உருவாக்கத்தைப் பார்வையிட்டு, அதன் மூலம் பல்வேறு துறைகளிலும் குடிமக்களுக்குச் சேவைகள் வழங்கப்படுதலை மேலும் செழுமையாக்குவதற்கான ஏற்பாட்டினை உருவாக்குவார்; மேலும், இந்தியாவின் 'புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான பத்தாண்டு'க் காலம் என்பதற்கான திட்ட வரைவு ஒன்றை உருவாக்குவதிலும் அவர் ஈடுபட்டிருப்பார்.

Sam Pitroda
Pitroda at the World Economic Forum's India Economic Summit 2009
பிறப்பு4 மே 1942 (1942-05-04) (அகவை 81)
Titlagarh, Orissa, India
பணிTelecom engineer, development guru, inventor, entrepreneur
வலைத்தளம்
[1] Profile on C-Sam.com

அவர் தேசிய அறிவுத்தள ஆணைக்குழுவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார் (2005-2008). உயர் அளவிலான அந்த ஆலோசனைக் குழு, இந்தியாவின் பிரதம மந்திரிக்கு அறிவுத் திறன் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றிய கொள்கைகளைப் பரிந்துரைப்பதாகும். தேசிய அறிவுத் தள ஆணைக்குழுவானது, தனது பணிக் காலத்தில் அறிவுத்தள ஆணையமைப்பின் பல்வேறு அம்சங்களின் மீது, ஏறத்தாழ 27 கவனக்குவிப்பு மையங்கள் பற்றிய சுமார் 300 பரிந்துரைகளை அளித்தது. திரு பிட்ரோடா சுமார் 100 முக்கியத் தொழில்நுட்ப உரிமங்களை தன் வசம் கொண்டுள்ளார்; மேலும், உலகெங்கும் பல தொழில் முனைவுகளிலும், சொற்பொழிவுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அவர் சி-சாம் இங்க் என்னும் நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மைத் தலைமை அதிகாரியும் ஆவார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சிகாகோ நகரிலும், இதன் அலுவலகங்கள் லண்டன், டோக்கியோ, மும்பை, வடோதரா ஆகிய நகரங்களிலும் உள்ளன. சி-சாமின் மேம்பாட்டு மையங்கள், யூ.எஸ் மற்றும் ஐரோப்பாவின் மையத் தொழில் நுட்பங்களைப் பின்பற்றி, தற்போது இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள், வாடிக்கையாளரின் தேவைக்கேற்றவாறு வடிவமைத்தல் மற்றும் செலவீனத்தைக் குறைக்கும் வகையிலான விரிவுறுத்தல்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி வருகிறது.

அவர் ஐக்கிய நாடுகள் அவைக்கும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டு, அவரது வாழ்க்கை வரலாறான சாம் பிட்ரோடா: ஒரு வாழ்க்கை வரலாறு என்னும் புத்தகம் பிரசுரிக்கப்பட்டு ஐந்து வாரங்களுக்கு, தி எகனாமிக் டைம்ஸ் பட்டியலில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக விளங்கியது.

1980ஆம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் ஆலோசகராக, சாம் பிட்ரோடா, இந்தியாவில் தொலைத் தொடர்பில் புரட்சிக்கு வித்திட்டது மட்டும் அல்லாமல், சமூகத்தின் மேம்பாட்டிற்கும் பயன்பாட்டிற்கும் தொலைத் தொடர்பு, கல்வியறிவு, பால் பண்ணை, நீர், நோய்க்காப்பு, எண்ணெய் விதைகள் என்று பல வழிகளிலும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த மும்முரமாக முனைந்தார் இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டின் சமுதாயத்தில், சிறப்புரிமையற்றவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட முறையில் சேவைகளை வழங்குவதுடன் தொழில் நுட்பத்தை இணைப்பதன் மூலம், அத்தகைய தொழில் நுட்பம் ஆற்றக்கூடிய பங்கை அவர் தொடர்ந்து வரையறுத்து வருகிறார்.

1964 ஆம் ஆண்டு துவங்கி திரு பிட்ரோடா பெரும்பாலும் சிகாகோவின் இல்லினோயிஸ் நகரிலேயே தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். [1]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சாம் பிட்ரோடா இந்தியாவில் ஒரிஸ்ஸா மாநிலத்தில் டிட்டாகர் என்னுமிடத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் குஜராத்திலிருந்து ஒரிஸ்ஸாவிற்கு இடம் மாறியவர்கள். அவர்கள் மகாத்மா காந்தியாலும் அவரது தத்துவங்களாலும் மிகுந்த அளவில் ஆட்கொள்ளப்பட்டனர். இதன் விளைவாக, பிட்ரோடாவும் அவரது சகோதரரும் காந்தியத் தத்துவத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக குஜராத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர் குஜராத்தில் உள்ள வல்லப் வித்யாநகரில் தமது பள்ளிப் படிப்பையும், இயற்பியல் மற்றும் மின்னணு ஆகியவற்றிலான தமது முதுகலைப் பட்டத்தை வடோதராவில் உள்ள மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு அவர் யுஎஸ் சென்று, சிகாகோவில் உள்ள இல்லினோயிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் மின்சாரப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கை தொகு

தொழில் வாழ்க்கையின் துவக்க காலம் தொகு

1960 ஆம் ஆண்டுகளின் இறுதிகளிலும் மற்றும் 1970 ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும், தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தில் கையால் இயக்கப்படும் ஆரம்ப காலக் கணினிக் கணக்கிடல் முறைமைகளின் புதுமையான முற்போக்கு வடிவங்களை அமைப்பதிலும் அவற்றிற்கான ஆராய்ச்சி வேலைகளிலும் சாம் பிட்ரோடா ஈடுபட்டிருந்தார். 1975 ஆம் ஆண்டு மின்னணு நாட்குறிப்பேட்டை அவர் கண்டு பிடித்தார். இதன் காரணமாக, கையால் இயக்கப்படும் கணினிக் கணக்கிடல் தொழில் நுட்பத்தின் ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

1974 ஆம் ஆண்டு, சாம் பிட்ரோடா வெஸ்காம் ஸ்விட்சிங் என்னும் பெயரில் நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். உலகில் முதன் முதலாக எண்ணியல் முறையில் விசைகளைத் தயாரித்த நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். 580 டிஎஸ்எஸ் விசை என்னும் புரட்சிகரமான புதிய அமைப்பு முறை ஒன்றை அவர் உருவாக்கினார். இதை மிகக் கச்சிதமாக வடிவமைத்து முடிப்பதற்கு அவர் ஏறத்தாழ நான்கு வருடங்கள் செலவிட்டார். இவ்வாறாக, 1978 ஆம் ஆண்டில் அது உலகின் முன்பாக வெளியிடப்பட்டபோது, உடனடியாகப் பிரபலம் அடைந்து அன்றைய சந்தையில் மிகவும் வெற்றிகரமான அமைப்பு முறைமைகளில் ஒன்றாகத் திகழலானது. நாளடைவில் வெஸ்காமை, ராக்வெல் இண்டர்நேஷனல் என்னும் நிறுவனம் வாங்கியது. பிட்ரோட் இதன் துணை அதிபரானார். ஒரு பொறியாளராகத் தாம் செலவிட்ட நாற்பது வருடங்களில், திரு பிட்ரோடா, தொலைத் தொடர்புத் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட உரிமங்களுக்காக மனுச் செய்துள்ளார். மிக அண்மையில் மனுச் செய்யப்பட்ட அத்தகைய ஒரு உரிமம் அலைபேசியின் அடிப்படையிலான விற்பாற்றல் தொழில் நுட்பமாகும்.[2][3] இது அலை பேசி வழியிலான நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத அனைத்துப் பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கும் ஆற்றல் கொண்டது.

1983 ஆம் ஆண்டு அவர் தனது சொந்தக் கருத்தாக்கமாக கம்ப்யூகார்ட்ஸ் என்னும் கணினி-கருத்துடைய சீட்டு விளையாட்டு ஒன்றையும் உருவாக்கினார். இது தசமத்திற்குப் பதிலாக இரும எண்களை (1,2,4,8...) பயன்படுத்தியது; மேலும், ஒரு கணினிப் பூச்சியைக் கோமாளியாகக் கொண்டிருந்தது. இந்த விளையாட்டில் வழக்கமான சீட்டுக் கட்டு ராஜா என்னும் சீட்டிற்கு இணையாக ஒரு 'நிரலாளர்' இருந்தார்; இது பார்ப்பதற்குக் கொஞ்சம் பிட்ரோடாவின் சாயலிலேயே இருந்தது. திரு பிட்ரோடா, 1990 ஆம் ஆண்டுகளின்போது உருவாகிக் கொண்டிருந்த சந்தைகளில், அலைபேசி பரிவர்த்தனை தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு மேம்பாடு ஆகியவற்றில் மிகுந்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

மிக அதிகம் பயணம் செய்த ஒரு மனிதரான திரு பிட்ரோடா, சர்வதேச நிகழ்ச்சிகளில் மிக அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு பேச்சாளராகவும் திகழ்கிறார். திரு பிட்ரோடா தமது நேரத்தை சிகாகோ மற்றும் டெல்லிக்கு இடையில் பங்கீடு செய்து கொள்கிறார்.

அரசாங்க சேவை தொகு

1984 ஆம் ஆண்டு திரு பிட்ரோடா அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியால் இந்தியாவிற்குத் திரும்ப வரும்படி அழைக்கப்பட்டார். இந்தியாவிற்கு வருகை புரிந்ததும் சுயச்சார்பு நிறுவனமான செண்டர் ஃபார் டெவலெப்மெண்ட் ஆஃப் டெலிமேடிக்ஸ் (சி-டாட்) என்னும் தொலைத் தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். 1987 ஆம் ஆண்டு, திருமதி இந்திரா காந்தியைத் தொடர்ந்து பிரதமரான ராஜீவ் காந்தியின் ஆலோகராக, இந்தியாவின் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு தொலைத் தொடர்புக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.

1987 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கு ஆலோசகராக இருந்த காலகட்டத்தில், திரு பிட்ரோடா, தொலைத் தொடர்பு, நீர், கல்வியறிவு, நோய்த்தடுப்பு, பால்பண்ணை மற்றும் எண்ணெய் விதைகள் ஆகியவற்றுடன் தொடர்புற்ற ஆறு தொழில்நுட்ப இலக்குகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தினார். இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையுரிமைக் கழகத்தின் நிறுவனரும் முதல் தலைவரும் அவரேயாவார்.

இந்தியாவின் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு தொலைத் தொடர்புக் கொள்கைகளை வரையறுக்கும் பொறுப்பினை திரு பிட்ரோடா ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவின் தொலைத் தொடர்புப் புரட்சிக்குப் பெருமளவில் அவரே காரணகர்த்தாவாக மதிக்கப்படுகிறார்; குறிப்பாக, தற்போது எங்கும் கிடைக்கப் பெறுகிற மஞ்சள்-குறியீடு கொண்ட பிசிஓ எனப்படும் பொதுத் தொலைபேசி அலுவலகங்கள் உருவாவதற்கு அவரே காரணம். இவை உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கும் மிக விரைவிலும், விலை மலிவாகவும், கையாள எளிதாகவும் உள்ள பொதுத் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுள்ளன.

1990 ஆம் ஆண்டுகளில், சாம் பிட்ரோடா தனது வணிக ஆர்வங்களைக் கவனிப்பதற்காக சிகாகோவிற்குத் திரும்பி விட்டார். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களை அடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, பிரதம மந்திரியாகப் பதவியேற்ற டாக்டர் மன்மோஹன் சிங், இந்தியாவிற்கு வருமாறும் தேசிய அறிவுத்தள ஆணைக்குழுவிற்குத் தலைமை ஏற்குமாறும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய அரசாங்கம் இந்திய ரயில் துறையின் ஐசிடி மீதான ஒரு நிபுணர் குழுவிற்குத் தலைமை தாங்குமாறு திரு சாம் பிட்ரோடாவிற்கு அழைப்பு விடுத்தது. 2009 ஆம் ஆண்டு அக்டோபரில், திரு பிட்ரோடா இந்தியப் பிரதம மந்திரிக்கு (டாக்டர் மன்மோஹன் சிங்) பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்பதன் மீதான ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இது ஒரு மத்திய அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்து கொண்டதாகும்.[4]

விருதுகள் தொகு

2002 ஆம் ஆண்டு திரு பிட்ரோடா டேட்டாக்வெஸ்ட் ஐடி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பெற்றார்.

திரு பிட்ரோடா மிகவும் கௌரவம் மிக்கதான, கனடா இந்தியா அறநிறுவனத்தின் (சிஐஎஃப்) சஞ்சலானி உலகார்ந்த இந்திய விருது 2008 என்னும் விருதினையும் பெற்றுள்ளார். கனடா இந்தியா அறநிறுவனம் உருவாக்கிய இந்த விருதானது ஒவ்வொரு வருடமும் உலகார்ந்த முறையில் தலைமைப் பண்புகள், இலக்கு சார்ந்த தொலைப்பார்வை மற்றும் தனிப்பட்ட சிகரப் பண்பு ஆகியவை அனைத்தும் கொண்ட ஒரு மிகச் சிறந்த இந்தியருக்கு அளிக்கப்படுகிறது. இது இந்தியர்களான நம் அனைவரையுமே நமது மரபினைப் பற்றிப் பெருமை கொள்ளச் செய்வதாகும். திரு பிட்ரோடா, இந்த விருதினை கனடா நாட்டு பிரதம மந்திரியான ஸ்டீஃபன் ஹார்ப்பர் மற்றும் முன்னாள் இந்திய ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலையில் பெற்றுக் கொண்டார்.

2009ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இது அறிவியல் மற்றும் பொறியியல் ஆகியவற்றிற்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு, "உலகார்ந்த இந்தியன்" என்னும் ராஜீவ் காந்தி விருதினையும் திரு பிட்ரோடா பெற்றார்.


கௌரவிப்புகள் தொகு

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 அன்று, அகில பாரதிய விஸ்வகர்மா மஹாசபா (ஏபிவிஎம்) என்னும் அமைப்பால், விஸ்வகர்மா சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக அவர் தில்லியின் முதன் மந்திரி திருமதி ஷீலா தீக்ஷித் மற்றும் ஏபிவிஎம் தலைவரான செடிலால் ஷர்மா ஆகியோரின் முன்னிலையில் வாழ்த்தப்பட்டார். 2008 ஆம் ஆண்டு, இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவர்களின் உலக வலைப் பின்னல் [2] என்னும் அமைப்பால், உலகின் மிக முதன்மையான தலைவர் என்று பிட்ரோடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதர பங்களிப்புகள் தொகு

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆந்திரப் பிரதேச மாநில விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆந்திரா பல்கலைக் கழகம் சாம் பிட்ரோடாவிற்கு அறிவியல் முனைவர் பட்டம் அளித்து கௌரவித்தது.

1993 ஆம் ஆண்டு சாம் பிட்ரோடா, இந்தியாவில் பெங்களூருக்கு அருகில் உள்ளூர் ஆரோக்கிய மரபு மறு உருவாக்கக் கட்டளை (எஃப்ஆர்எல்ஹெச்டி) [5] என்னும் அமைப்பைத் தோற்றுவிக்க[6] உதவினார். தற்சமயம் அவர் அதன் நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் நோக்கமானது, மிகப் பெரும் பாராம்பரியம் கொண்டதும் தரம் மிகுந்ததுமான இந்திய மருத்துவ அறிவின் முழுப் பயனையும் அடைவதாகும்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-02. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  3. http://en.wikipedia.org/w/index.php?title=Sam_Pitroda&action=edit&editintro=Template:BLP_editintrow.sampitroda.com
  4. http://www.deccanherald.com/content/29270/pitroda-appointed-adviser-pm.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-21. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_பிட்ரோடா&oldid=3782076" இலிருந்து மீள்விக்கப்பட்டது