ச. ஆறுமுகம்

சண்முகம் ஆறுமுகம் (Sanmugam Arumugam, 31 ஆகத்து 1905 – 6 மார்ச் 2000) இலங்கைத் தமிழ் நீர்ப்பாசனத் துறைப் பொறியியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

எஸ். ஆறுமுகம்
எஃப்ஐசிஇ
பிறப்பு(1905-08-31)31 ஆகத்து 1905
நல்லூர், இலங்கை
இறப்பு6 மார்ச்சு 2000(2000-03-06) (அகவை 94)
இனம்இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள்பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
கல்கிசை புனித தோமையர் கல்லூரி
இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி
கிங்ஸ் கல்லூரி, லண்டன்
பணிபொறியியலாளர்
சமயம்இந்து

ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும் தொகு

ஆறுமுகம் 1905 ஆகத்து 31 இல் இலங்கையின் வடக்கே வண்ணார்பண்ணையில்[1] வைரவநாதர் சண்முகம் என்பவருக்குப் பிறந்தார்.[2][3][4] தந்தை வி. சண்முகம் யாழ்ப்பாணம் காவல்துறையில் தலைமை எழுத்தராகப் பணி புரிந்தவர்.[1] ஆறுமுகம் இரண்டு வயதாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.[1] யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று 1921 இல் இளையோருக்கான கேம்ப்ரிட்ச் சோதனை எடுத்துத் தேறினார். பின்னர் 1922 இல் கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் சேர்ந்து மூத்தோருக்கான கேம்பிரிட்ச் சோதனையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.[2][3]

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் 1923 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து 1927 ஆம் ஆண்டில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[5] பின்னர் அவர் லண்டன் சென்று கிங்ஸ் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பயின்று 1930 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.[2][3]

பணி தொகு

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஆறுமுகம் மான்செஸ்டரில் பொறியியலாளராகப் பணியாற்றினார்.[2][3] 1932 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியலாளராகப் பணியாற்றினார்.[2][3] இலங்கையின் பல்வேறு பாகங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.[2]

1948 ஆம் ஆண்டில், ஆறுமுகம் வவுனியாவில் பணியாற்றிய போது, திருக்கேதீச்சரம் கோவிலுக்கு தண்ணீர் தாங்கி ஒன்றை அமைப்பதற்காக பாலாவியில் அணை ஒன்றைக் கட்டினார்[3] அத்துடன் கோவில் புனரமைப்பிற்கு முன்னின்று உழைத்தார்.[3] யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுத் திட்டம் ஒன்றையும் (ஆறுமுகம் திட்டம் என இது அழைக்கப்படுகிறது) இவர் முன்னெடுத்தார். கனகராயன் ஆற்றில் இருந்து வரும் நன்னீரை யாழ் குடாநாட்டுக்கு வடமராட்சி நீரேரியூடாகத் திருப்பிவிடும் இத்திட்டத்தின்[3][6][7] முதற்கட்டப் பணிகள் 1950களிலும், 1960களிலும் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும் சுண்டிக்குளம் கடல் நீரேரியை வடமராட்சி நீரேரியுடன் இணைக்கும் முக்கியமான முள்ளியான் கால்வாய் அமைக்கப்படாததால், இத்திட்டம் முழுமை பெறவில்லை.[3] இவர் காலத்திலேயே ஆனையிறவு புகையிரதப் பாலமும் பெருந்தெருக்கள் பாலமும் மண் அணைகளாய் மூடப்பட்டன. இதனால் ஆனையிறவு ஏரிக்கு மேற்குப் பக்கத்தினால் கடனீர் உட்புகுவது தடுக்கப்பட்டது.[8]

ஆறுமுகம் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பத்து ஆண்டுகளும், பின்னர் பதில் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.[2] 1965 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.[3] இளைப்பாறிய பின்னரும், நீர் வழங்கு சபையின் பணிப்பாளராகவும், பிரதமப் பொறியாளராகவும் 1972 வரை பணியாற்றினார். 1966-67 காலப்பகுதியில் இலங்கைப் பொறியியலாளர் கழகத்தின் தலைவராக இருந்து பணியாற்றினார்.[2][3]

இளைப்பாறிய பின்னர் ஆறுமுகம் வரலாற்றாய்வுகளிலும், இலங்கையில் தமிழ்க் கலாச்சாரம், இந்து நாகரிகம் பற்றிய நூல்கள் எழுதுவதிலும் காலம் கழித்தார்.[2] தாம் பணியாற்றிய காலங்களில் தூர்ந்து போன குளங்களைத திருத்துவதற்கும் இருப்பனவற்றைப் பராமரிப்பதற்கும் அவர் இலங்கை முழுவதும் பயணம் செய்யவேண்டியிருந்தது. குளங்களுக்குப் பக்கத்திலே பல கோயில்கள் அழிந்துபோன நிலையிலும் இருந்ததை அவர் கவனித்துள்ளார். பராமரிப்பின்றியும், பின்னர் வந்த போர்த்துக்கேயப் படையெடுப்பினாலும், இயற்கைக் காரணங்களாலும் பல கோயில்கள் அழிந்து விட்டதை அறிந்து அவற்றின் தொன்மையையும் பண்டைய பெருமையையும் நூல்வடிவிலே கொண்டு வந்தார். இலங்கையின் பண்டைய கோயில்கள் பற்றி ஆங்கிலத்தில் இவர் எழுதிய இரண்டு நூல்கள் 1980 இலும் 1991 இலும் வெளிவந்தன. இந்த இரண்டு நூல்களும் ஒரு நூலாக 2014 இல் வெளியிடப்பட்டது.[9]

இறுதிக் காலம் தொகு

ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு இவர் 1983 இல் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார். அங்கு அவர் 2000 மார்ச் 6 இல் காலமானார்.[3][4] இவருக்கு திரு, சிறீ, சக்தி என மூன்று மகன்களும், சுசீலா, விமலா, பிரேமளா, அகிலா என நான்கு மகள்களும் உள்ளனர்.[2]

எழுதிய நூல்கள் தொகு

  • Development of Village Irrigation Works (1957)
  • Maintenance of Major Irrigation Works
  • Ground Water in the Jaffna Peninsula
  • Development of Water Resources of Ceylon (1969)
  • Some Ancient Hindu Temples of Sri Lanka (1980)
  • Lord of Thiruketheeswaram (1981)
  • Stone Sculptures in Colombo Hindu Temple (1990)
  • Thiru Koneswaram (1990)
  • Lombok and its Temples (1991)
  • More Hindu Temples of Sri Lanka
  • Dictionary of Biography of the Tamils of Ceylon (1997)
  • Hundred Hindu Temples of Sri Lanka - Ancient Medieval And Modern (2014)
  • A Nallur Clan and Connections
  • Sangarathai Clan
  • Water Resources of Ceylon

மேற்கோள்கள் தொகு

தளத்தில்
ச. ஆறுமுகம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 "Obituary: The late Mr V. Shanmugam". Hindu Organ. 13 மார்ச் 1907. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 16–17. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 "Sanmugam Arumugam (1905–2000)". Tamil Times XIX (5): 30–31. 15 May 2000. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php/Tamil_Times_2000.05. பார்த்த நாள்: 26 ஆகஸ்ட் 2014. 
  4. 4.0 4.1 "ICE members' deaths for December 1999 to May 2000 A-O". New Civil Engineer. 6 சூலை 2000. http://www.nce.co.uk/ice-members-deaths-for-december-1999-to-may-2000-a-o/827160.article. 
  5. Ceylon University College Prospectus 1936–37. இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி. 1936. பக். 53. http://www.noolaham.org/wiki/index.php?title=Ceylon_University_College_Prospectus_1939_-_37. 
  6. Arumugam, Thiru; Shanmugarajah, K.; Mendis, D. L. O. (31 ஆகத்து 2008). "A River for Jaffna". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2013-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105232516/http://www.island.lk/2008/08/31/features5.html. 
  7. Yatawara, Dhaneshi (18 அக்டோபர் 2009). "Fresh water for Jaffna farmers". சண்டே ஒப்சேர்வர் இம் மூலத்தில் இருந்து 2014-07-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140726211930/http://www.sundayobserver.lk/2009/10/18/fea05.asp. 
  8. குணநாயகம், குமாரசாமி (14 டிசம்பர் 2014). "யாழ்ப்­பாணக் குடா­நாட்டின் நன்னீர் தேவை". வீரகேசரி. 
  9. சுந்தரலிங்கம், பராசக்தி (25 ஆகத்து 2014). "எமது சந்ததிக்கு அரியதொரு பொக்கிஷம்". பார்க்கப்பட்ட நாள் 26 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ஆறுமுகம்&oldid=3366820" இலிருந்து மீள்விக்கப்பட்டது