ஜெகந்நாத் சங்கர்சேத்

ஜெகந்நாத் சங்கர்சேத் முர்குட் (Jagannath Shankarsheth Murkute) (10 பிப்ரவரி 1803 - 31 சூலை 1865) இவர் இந்தியாவைச் சேர்ந்த நன்கொடையாளரும், கல்வியாளருமாவார். 1803 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள தெய்வத்ன பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த பணக்கார முர்குட் குடும்பத்தில் பிறந்தார். தனது சமூகத்திற்காக சமயச் கடமைகளைச் செய்த தனது முன்னோர்களைப் போலல்லாமல், இவர் வர்த்தகத்தில் ஈடுபட்டார். விரைவில் மிகவும் நம்பகமான தொழிலதிபர் என்ற நற்பெயரை வளர்த்தார். அரேபியர்களும், ஆப்கானியர்களும், பிற வெளிநாட்டு வணிகர்களும் தங்கள் செல்வங்களை வங்கிகளிடம் விட இவரது காவலில் வைக்கத் தேர்ந்தெடுத்தனர். இதனால் இவரது வணிகம் மிகவும் உயர்ந்தது. இவர் விரைவில் ஒரு பெரிய செல்வத்தைப் பெற்றார். அதில் பெரும்பகுதியை இவர் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

ஜெகந்நாத் சங்கர்சேத்
1863இல் ஜெகந்நாத் சங்கர்சேத்
பிறப்பு(1803-02-10)10 பெப்ரவரி 1803
முர்பாத், மகாராட்டிரம், இந்தியா
இறப்பு(1865-07-31)31 சூலை 1865
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
1991 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் சங்கர்ஷேத்

சமூகப் பணியும் கல்விப் பணியும் தொகு

மும்பையின் பல அரங்கங்களில் இவர் ஒரு தீவிரத் தலைவராக ஆனார். கல்வியில் மேம்பாடுகளின் அவசியத்தை முன்னறிவித்த இவர், பள்ளி அமைப்பு, மும்பையின் பூர்வீகப் பள்ளி போன்றவற்றை நிறுவினார். இது மேற்கு இந்தியாவில் முன்னெப்போதுமில்லாத வகையில் இருந்தது. இவைகள் தொடர்ச்சியான பெயர் மாற்றங்களைச் சந்தித்தது: 1824 ஆம் ஆண்டில், இது மும்பை பூர்வீக பள்ளி நிறுவனம், 1840 இல், கல்வி வாரியம் எனவும், 1856 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்வி நிறுவனம் எனவும் மறியது. இவரது காலத்தில் நன்கு அறியப்பட்ட பால்சாத்திரி ஜம்பேகர், தாதாபாய் நௌரோஜி, மகாதேவ் கோவிந்த் ரனதே, ராமகிருட்டிண கோபால் பண்டார்கர் ஆகியோர் இருந்த அதே நிறுவனமாகும். பின்னர், கோபால கிருட்டிண கோகலே, பால கங்காதர திலகர் போன்றவர்களும் கூட எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர். மாணவர்களின் இலக்கிய மற்றும் அறிவியல் சங்கத்தை தங்கள் பள்ளியில் முதன்முதலில் பெண்களுக்காகத் திறந்தபோது, இந்து சமூகத்தின் சில உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, இவர் தேவையான நிதிகளை வழங்கினார். இவர் தொடங்கிய பிற கல்வித் திட்டங்களில் ஆங்கிலப் பள்ளியும், சமசுகிருதப் பள்ளியும், சமசுகிருத நூலகமும் அடங்கும். இவை அனைத்தும் தெற்கு மும்பையின் கிர்கானில் அமைந்துள்ளன.

வளர்ச்சிப் பணிகள் தொகு

1845 ஆம் ஆண்டில், சர் ஜம்சேத்ஜி ஜீஜீபாயுடன் சேர்ந்து, இந்தியாவில் இரயில்வேயைக் கொண்டுவருவதற்காக இந்திய இரயில்வே சங்கத்தை இவர், உருவாக்கினார். இவரது யோசனைக்கும், இந்தியாவில் இரயில்வேயைத் தொடங்குவதற்கான முயற்சிகளுக்கானத் திட்டங்களுக்காக பிரிட்டிசு அரசாங்கத்துடன் விவாதித்தார். இறுதியில், இந்த சங்கம் கிரேட் இந்தியன் பெனின்சுலா இரயில்வேயில் இணைக்கப்பட்டது. மேலும் இந்த இரயில்வேயின் பத்து இயக்குநர்களில் ஜீஜீபாயும், இவரும் இரண்டு இந்தியர்களாக இருந்தனர். ஒரு இயக்குநராக, இவர் மும்பை மற்றும் தானே இடையே இந்தியாவில் நடந்த முதல் இரயில் பயணத்தில் பங்கேற்றார். இது சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.

மும்பையில் இவரும், சர் ஜார்ஜ் பேர்ட்வுட்டும், முனைவர் பாவ் தாஜியும் சேர்ந்து 1857 தொடங்கி நகரத்தின் சில முக்கிய புனரமைப்பு முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தனர். மூவரும் படிப்படியாக குறுகியத் தெருக்களின் வலைப்பின்னலால் ஆன ஒரு நகரத்தை ஒரு விசாலமான மற்றும் காற்றோட்டமான நகரமாக மாற்றினர். இது சிறந்த வழிகள் மற்றும் அற்புதமான கட்டிடங்களால் அலங்கரிக்கப்பட்டது. சட்டமன்றக் குழுவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியராக இருந்தார். மேலும், மும்பை கல்வி வாரியத்திலும் உறுப்பினரானார். மும்பையின் ஆசியச் சங்கத்தின் முதல் இந்திய உறுப்பினராகவும் இருந்தார். மேலும் ஒரு பள்ளியை வழங்கியதாகவும், கிராண்ட் ரோட்டில் ஒரு அரங்கத்திற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கியதாகவும் அறியப்படுகிறது. சர் ஜான் மால்கம் இந்துக்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை அடக்குவதற்கு இவரது செல்வாக்கை பயன்படுத்தினார். மேலும் இந்து சமூகத்திற்கு சோனாபூரில் (இப்போது மரைன் லைன்ஸ் ) தகன மைதானம் வழங்குவதற்கான இவரது முயற்சிகளும் பலனளித்தன. இவர் இந்து கோவில்களுக்கு தாராளமாக நன்கொடை அளித்ததாக அறியப்படுகிறது. 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போரின்போது, ஆங்கிலேயர்கள் இவரது ஈடுபாட்டை சந்தேகித்தனர். ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் இவரை விடுவித்தனர். இவர் சூலை 31, 1865 அன்று மும்பையில் இறந்தார். இவர் இறந்து ஒரு வருடம் கழித்து மும்பையின் ஆசியச்சங்கத்தில் ஒரு பளிங்குச் சிலை அமைக்கப்பட்டது. தெற்கு மும்பையின் கிராண்ட் சாலையில் உள்ள முந்தைய கிர்காம் சாலைக்கும், சௌக் சாலிக்கும் இவரது ( நானா சௌக்) பெயரிடப்பட்டது. [1]

இவரது முயற்சியால், மும்பை மாகாணத்தின் முதல் அரசியல் அமைப்பான மும்பைச் சங்கம் 1852 ஆகத்து 26 அன்று நிறுவப்பட்டது. இதில் இவர் உட்பட, சர் ஜம்சேத்ஜி ஜீஜீபாய், நௌரோஜி புர்சுங்கி, முனைவர் பாவ் தாஜி லாட், தாதாபாய் நௌரோஜி மற்றும் விநாயக் சங்கர்சேத் ஆகியோர் பல்வேறு உறுப்பினர்களாக இருந்தனர். சர் ஜம்சேத்ஜி ஜீஜீபாய் இந்த அமைப்பின் முதல் தலைவராக இருந்தார்.

குடும்ப வரலாறு தொகு

இவரது மூதாதையர் பாபுல்சேத் கன்பசேத் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொங்கணில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். அவரது மகன் சங்கர்சேத் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு மும்பையின் முக்கிய தொழிலதிபர் ஆவார். இன்றைய மும்பையின் கோட்டை வணிக மாவட்டத்தில் உள்ள கன்போ வீதி (இப்போது ருஸ்டோம் சித்வா மார்க் என்று அழைக்கப்படுகிறது), கண்பசேத்தின் பெயரிடப்பட்டது. ஆனால் பலர் கருதுவது போல், இவர்கள் இராணுவ வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அல்ல. [2]

அறப்பணிகள் தொகு

மும்பை, பைகுல்லாவில் முன்பு விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகமாக இருந்த புகழ்பெற்ற இலண்டன் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட டாக்டர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம் பல பணக்கார இந்திய தொழிலதிபர்கள் உட்பட இவரும், டேவிட் சசூன், சர் ஜம்சேத்ட்ஜி ஜீஜீபாய் போன்ற பரோபகாரர்களின் ஆதரவோடு கட்டப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கர்சேத் பாபுல்சேத் அவர்களால் கட்டப்பட்ட பவானி-சங்கர் மந்திர் மற்றும் நானா சௌக் அருகே உள்ள ராம் மந்திர் ஆகியவை தற்போது சங்கர்சேத் குடும்பத்தின் வசம் உள்ளன.

குறிப்புகள் தொகு

  1. "Mumbai's Elphinstone Station Renamed, Here Are 9 More Stations That Have Unique History" (in en). indiatimes.com. 19 July 2018. https://www.indiatimes.com/news/india/mumbai-s-elphinstone-station-renamed-here-are-9-more-stations-that-have-unique-stories-about-them-349621.html. பார்த்த நாள்: 12 December 2018. 
  2. "Rustom Sidhwa Marg: 'It is tragic only a few remember the fearless crusader, let alone recall his services to nation'". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-20. Archived from the original on 2020-06-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாத்_சங்கர்சேத்&oldid=3573245" இலிருந்து மீள்விக்கப்பட்டது