ஜெயசிக்குறு

ஜெயசிக்குறு (சிங்களம்:"ஜயசிகுறுய்" வெற்றி நிச்சயம்) என்பது இலங்கை அரசபடையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக நீண்டகால இராணுவ நடவடிக்கையாகும்.

ஜயசிக்குறுய் நடவடிக்கை
ஈழப்போரின் பகுதி
நாள் மே 13, 1997 - 1999[1]
இடம் இலங்கை
புலிகள் வெற்றி
பிரிவினர்
இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகள்
பலம்
5 பிரிவுகள்[1] தெரியாது
இழப்புகள்
1,350 சாவு,
4,000 காயம் (SLA claims)[2]
over 3,000 killed (LTTE claim)[2]
3,614 சாவு,
1,899 காயம் (SLA claim)[1]
1,500 killed (LTTE claim)[2]


பின்னணி தொகு

யாழ்ப்பாணத்தை இலங்கை அரசபடைகளிடம் இழந்தபின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை ஓயாத அலைகள் ஒன்று என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம்வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல்வழியாக மட்டுமே இருந்தன. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ-9 அல்லது கண்டி வீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப் புலிகள் வசமிருந்தன.

யாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் இராணுவ நடவடிக்கையொன்று திட்டமிடப்பட்டது. அதற்கு முன்பாக, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் முதன்மைப் பாதையைத் தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வர 'எடிபல' என்ற பெயரில் ஓர் இராணுவ நடவடிக்கை இலங்கை அரசபடைகளாற் செய்யப்பட்டது. அந்நடவடிக்கை எந்தவித எதிர்ப்பைச் சந்திக்காத பொழுதும் வவுனியாவில் இருந்து பறையன் ஆலங்குளம் வரையிலான ஏ-30 வீதியில் இருமருங்கும் அமைந்திருந்த அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் வவுனியா நகரப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மீளக்குடியமரவில்லை. பின் யாழ்ப்பாணத்துக்கான வினியோகப் பாதையைத் திறக்கும் நோக்குடன் 'ஜெயசிக்குறு' என்ற பெயரில் 13 மே 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையான 78 கிலோமீற்றர் நீளமான ஏ-9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். இந்நடவடிக்கை 5 டிசம்பர் 1998 அன்று இலக்கை அடையாமலேயே இடையில் இலங்கை அரசபடைகளால் கைவிடப்பட்டது.

சிறிலங்கா அரசபடையினரின் தாக்குதல் தொகு

தென்முனை தொகு

அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த அவர்களின் நேரடி மேற்பார்வையில் இருபதாயிரம் படைவீரர்களைக் கொண்டு இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஏற்கனவே இலங்கை அரசபடையினரின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே முதன்மைத்திட்டம். எனினும் இந்நடவடிக்கை இரு முனைகளில் ஒரேநாளில் தொடங்கப்பட்டது. ஏ-9 நெடுஞ்சாலையை மையமாக வைத்து தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கிய ஒரு முனையும், கிழக்குப் புறமாக மணலாற்று இராணுவ முகாம்களிலிருந்து நெடுங்கேணி நோக்கிய ஒரு முனையும் திறக்கப்பட்டன. பின் ஓமந்தையிலிருந்து ஏ-9 வழியாக தொடர்ந்து முன்னேறுவதும், நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் வரை இன்னொரு முனையால் முன்னேறி புளியங்குளத்தில் இரு முனைப் படைகளும் ஒன்றிணைந்து தொடர்ந்தும் கிளிநொச்சி நோக்கி முன்னேறுவது என்ற மூலோபாயத் திட்டத்துடன் அரசபடைகள் செயற்பட்டன. இந்நடவடிக்கையில் மிக உச்ச அளவில் வான்படை மற்றும் கவசப்படைகளை இலங்கை அரசு ஈடுபடுத்தியது.

கிளிநொச்சி முனை தொகு

நீண்டகாலம் வன்னியின் தென்முனையில் மட்டும் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்ட இராணுவத்தினர் பின்னர் புதிய முனையொன்றினூடு முன்னேற்ற முயற்சிளைத் தொடங்கினர். வவுனியாவிலிருந்து போய்ச்சேர வேண்டிய இலக்கான கிளிநொச்சியிலிருந்து புதிய சமர் முனையைத் திறந்து வவுனியோ நோக்கி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இதன்மூலம் ஒரேநேரத்தில் ஏ-9 நெடுஞ்சாலையின் இரு முனைகளிலிலிருந்தும் அச்சாலையைக் கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

புலிகளின் எதிர்த்தாக்குதல் தொகு

அதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர். விடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின் தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர். புலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார். நேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.

முன்னேறிய இலங்கைப்படையினரை வழிமறித்துத் தாக்கிய சண்டைகளில் புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு போன்ற இடங்களில் நடைபெற்ற சண்டைகள் மிகக் கடுமையானவை. இலங்கை அரசபடையினரை எதிர்கொள்வதற்கென்று புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்புப்படையணியான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி இவ்வெதிர்ப்புச்சமரில் புகழ்பெற்றது.

விடுதலைப்புலிகளின் எதிர்ப்பை மீறி ஏ-9 நெடுஞ்சாலையில் மாங்குளம் வரை இலங்கை அரசபடைகள் முன்னேறின. 30 செப்டம்பர் 1998 அன்று மாங்குளம் பகுதி இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட இறுதி நிலப்பகுதி இதுதான்.

புலிகளின் வலிந்த தாக்குதல் தொகு

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் முன்னேறிய இலங்கை அரசபடையினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் அவ்வப்போது பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல் தொகு

ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாக அந்நடவடிக்கைப் படையினர் மீது புலிகளால் நடத்தப்பட்ட பெரிய வலிந்த தாக்குதல் இதுவாகும். 10.06.1997 அன்று தாண்டிக்குளம் இராணுவக் கூட்டுப்படைத்தளம் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஓர் இரவும் ஒரு பகலும் நடைபெற்ற தாக்குதலில் முகாம் வெற்றிகொள்ளப்பட்டு மறு இரவு புலியணிகள் பின்வாங்கின. இத்தாக்குதலின்போது குறைந்தபட்சம் ஒரு MI-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி சேதமாக்கப்பட்டது. இத்தாக்குதலில் புலிகளின் கரும்புலி அணியினரும் பங்கு கொண்டிருந்தனர்.

பெரியமடு படைமுகாம் மீதான தாக்குதல் தொகு

தாண்டிக்குளம் தாக்குதல் நடைபெற்று சில நாட்களும் ஜூன் மாதம் 24 ஆம் நாள் மீண்டுமொரு வலிந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு மூலம் இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த பன்றிக்கெய்த குளம், பனிக்கநீராவி, பெரியமடுப் பகுதிகளில் அமைந்திருந்த படைத்தொகுதி மீது நடத்தினர். இதில் புலிகளால் 120 mm பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. பின்னர் புலியணிகள் குறிப்பிட்ட இடத்தைவிட்டுப் பின்வாங்கின. இத்தாக்குதலை களத்தில் தலைமையேற்று வழிநடத்திககொண்டிருந்த புலிகளின் தளபதி லெப்.கேணல் தனம் களத்திலேயே கொல்லப்பட்டார்.

ஓமந்தை படைமுகாம் மீதான தாக்குதல் தொகு

பெரியமடு தாக்குதலின்பின் சரியாக ஒருமாதத்தில் பெருமெடுப்பினாலான அடுத்த வலிந்த தாக்குதலொன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஓமந்தை என்ற இடத்தில் அமைந்திருந்த ஆட்லறிகள் உள்ளடங்கிய இராணுவக் கூட்டுத்தளம் மீது 01.08.1997 அன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனைய வலிந்த தாக்குதல்களோடு ஒப்பிடுகையில் புலிகளுக்கு எதிர்பார்த்த பலனைத்தராமல் தோல்வியில் முடிந்தது இத்தாக்குதல். இத்தாக்குதலில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருது செயற்பட்ட, சிறந்த பாடகர் என அடையாளப்படுத்தப்பட்ட பாடகர் மேஜர் சிட்டு உட்பட 130 போராளிகள் கொல்லப்பட்டனர்.

கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல் தொகு

1997 ஒக்டோபர் மாதத்தில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் பக்கமாக மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்பு என்னும் இடத்தை இலங்கை அரசபடையினர் கைப்பற்றினர். அம்முனையில் முன்னேறிய படையினருக்கு வினியோகத் தளமாகச் செயற்பட்ட கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் என்ற கிராமங்களில் அமைந்திருந்த கூட்டுப்படைத்தளம் மீது ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலொன்றைத் தொடுத்தனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடம் இலங்கை அரசபடையினரின் முக்கியமான ஆயுத, வெடிபொருட் களஞ்சியமென்பதால் பல மோட்டார் பீரங்கிகளுட்பட நிறைய ஆயுத தளபாடங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். இத்தாக்குதலில் இரு T-55 இரக டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலை களத்தில் நேரடியாக வழிநடத்திய புலிகளின் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தன் களத்திலேயே கொல்லப்பட்டார். கிழக்கு மாகாணத்திலிருந்து ஜெயசிக்குறுவை எதிர்கொள்ளும் சமருக்காக வன்னிக்கு வருகைதந்திருந்த அணியிலிருந்த சந்திரகாந்தன் 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்' என்று புலிகளால் கெளரவிக்கப்பட்டார்.

கிளிநொச்சி நகரம் மீதான தாக்குதல் தொகு

வவுனியாவிலிருந்து படையினர் போய்சேர வேண்டிய இடமான கிளிநொச்சி நகரம் புலிகளால் தாக்குதலுக்குள்ளானது. மற்ற வலிந்த தாக்குதல்கள் போலன்றி இம்முறை நகரை நிரந்தரமாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவரும் நோக்குடன் புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். 1996 ஒக்டோபரில் புலிகளின் வசமிருந்த கிளிநொச்சி நகரை சத்ஜெய-1,2,3 நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசபடை கைப்பற்றியிருந்தது. அந்நகரத்தை மீளக் கைப்பற்றவதற்காக 2.2.1998 அன்று புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். எதிர்பார்த்தது போல் தாக்குதல் வெற்றியளிக்கவல்லை. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே கைப்பற்றித் தக்கவைத்துக்கொண்டனர் புலிகள். சில மாதங்கள் கழித்து செம்ரெம்பர் 1998 இல் ஓயாத அலைகள் இரண்டு என்ற பெயரிட்டு தாக்குதலொன்று நிகழ்த்தி கிளிநொச்சி நகரை முற்றாகக் கைப்பற்றிக் கொண்டனர்.

ஜெயசிக்குறு நடவடிக்கை முடிவு தொகு

05.12.1998 அன்று இலங்கை அரசபடையினரால் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 13.05.1997 அன்று தொடங்கப்பட்ட இந்நடவடிக்கை கிட்டத்தட்ட பத்தொன்பது மாதங்களின் பின் கைவிடப்பட்டது. அதுவரையான காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட இலக்கில் அண்ணளவாக அரைவாசிப்பகுதியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியிருந்தன. இந்த நடவடிக்கைக் காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட இலக்கான கிளிநொச்சி நகரை புலிகள் கைப்பற்றியதன் மூலம் இராணுவம் போய்சேர வேண்டிய தூரம் இன்னும் அதிகரித்தது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Operation Jayasikurui, Sri Lanka Army
  2. 2.0 2.1 2.2 TamilNet: 13.05.98 A long year on the road
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசிக்குறு&oldid=2685150" இலிருந்து மீள்விக்கப்பட்டது