சொகூர் சுல்தானகம்

(ஜொகூர் சுல்தானகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சொகூர் சுல்தானகம் அல்லது சொகூர் பேரரசு (மலாய் மொழி: Kesultanan Johor; ஆங்கிலம்: Johor Sultanate அல்லது Johor-Riau, Johor-Riau-Lingga-Pahang, Johor Empire; சாவி: کسلطانن جوهر) என்பது தீபகற்ப மலேசியாவின் தென்பகுதியில் ஆட்சி செய்த அரசு; மலாக்கா சுல்தானகத்தின் அரசர் சுல்தான் மகமுட் சாவின் மகனார் அலாவுதீன் ரியாட் சா II என்பவரால் 1528-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

சொகூர் சுல்தானகம்
Kesultanan Johor
தொடக்கம்: 1528–தற்போதுவரை
15-ஆம் நூற்றாண்டில் சுல்தானகத்தின் ஆதிக்கம்
15-ஆம் நூற்றாண்டில் சுல்தானகத்தின் ஆதிக்கம்
நிலைமுன்னாள் அரசு
மலாக்கா சுல்தானகத்தின் பிரிவு
தலைநகரம்சொகூர்
பேசப்படும் மொழிகள்மலாய்
சமயம்
இசுலாம்
அரசாங்கம்மரபுவழி அரசாட்சி
சுல்தான் 
வரலாறு 
• தொடக்கம்
தொடக்கம்: 1528
• போர்த்துகேயரின் வரவு
தற்போதுவரை
நாணயம்தங்க, வெள்ளிக் காசுகள்
முந்தையது
பின்னையது
சிறீவிஜயம்
மலாக்கா சுல்தானகம்
பேராக் சுல்தானகம்
போர்த்துக்கீசிய மலாக்கா

1511-இல் போர்த்துகீசியர்கள் மலாக்காவின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு முன்பு ஜொகூர் மாநிலம், மலாக்கா சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

பொது தொகு

ஜொகூர் சுல்தானகம், அதன் ஆட்சியின் உச்சத்தில், இன்றைய நவீன கால ஜொகூர், பகாங், திராங்கானு மற்றும் கிள்ளான் ஆற்றில் இருந்து லிங்கி மற்றும் தஞ்சோங் துவான், மூவார், பத்து பகாட் வரையிலான பிரதேசங்களைக் கட்டுப்படுத்தியது.

சிங்கப்பூர், புலாவ் திங்கி மற்றும் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கரிமுன் தீவுகள் (Karimun), பிந்தான் தீவு, புலாங் (Bulang), லிங்கா (Lingga), புங்குரான் தீவுகள் (Bunguran); சுமத்திராவில் உள்ள பெங்காலிஸ் (Bengkalis), கம்பார், சியாக் தீவுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.[1]

காலனித்துவ ஆட்சி தொகு

காலனித்துவ காலத்தில், பிரதான நிலப்பகுதி பிரித்தானியரால் நிர்வகிக்கப்பட்டது. இந்தோனேசியப் பகுதி டச்சுக்காரர்களால் நிர்வகிக்கப்பட்டது. இதனால் பின்னர் ஜொகூர் சுல்தானகம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. (ஜொகூர் சுல்தானகம்; மற்றும் ரியாவ் சுல்தானகம்).[2]

1946-இல், ஜொகூர் சுல்தானகத்தின் பிரித்தானிய பிரிவு மலாயன் யூனியன் (Malayan Union) அமைப்பில் ஒரு பகுதியாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மலாயா கூட்டமைப்பில் (Federation of Malaya) சேர்ந்தது.

பின்னர் 1963-இல் மலேசியா கூட்டமைப்பிலும் இணைந்தது. 1949-இல், டச்சுப் பிரிவு இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக மாறியது.

சுல்தான் மகமுட் ஷா தொகு

1511-இல், மலாக்கா போர்த்துகீசியர்களிடம் வீழ்ந்தது. சுல்தான் மகமுட் ஷா மலாக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுல்தான் மகமுட் ஷா மலாக்கா தலைநகரை மீட்க பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

போர்த்துகீசியர்கள் பதிலடி கொடுத்து, சுல்தான் மகமுட் ஷாவைப் பகாங்கிற்குத் தப்பிச் செல்லும்படி கட்டாயப் படுத்தினர். அங்கு இருந்து சீனா நாட்டின் உதவியைப் பெறுவதற்கு முயற்சிகள் செய்தார். எனினும் உதவிகள் கிடைக்கவில்லை.

பின்னர் சுல்தான் மகமுட் ஷா, சிங்கப்பூரின் தென்கிழக்கே இருந்த பிந்தான் தீவிற்குச் சென்றார். பிந்தான் தீவு இப்போது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக உள்ளது. அங்கு ஒரு புதிய தலைநகரை நிறுவினார்.

பிந்தான் தீவு தொகு

பிந்தான் தீவின் சுற்றுப்புற மாநிலங்களில் இருந்த ஆட்சியாளர்கள், சுல்தான் மகமுட் ஷாவை மலாக்காவின் ஆட்சியாளராக மரியாதை கொடுத்து, தொடர்ந்து உதவிகள் செய்து வந்தனர். அவர் பிந்தான் தீவில் ஒரு மலாய் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவராக ஆனார்.

ஒரு புதிய தளம் நிறுவப்பட்ட நிலையில், சுல்தான் மகமுட் ஷா சீர்குலைந்த மலாய்ப் படைகளைத் திரட்டி போர்த்துகீசியர்களுக்கு எதிராக பல தாக்குதல்களையும் முற்றுகைகளையும் செய்தார். 1510-களின் பிற்பகுதியில் மலாக்காவில் இருந்த போர்த்துகீசியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுத்தார்.

போர்த்துகீசியர்களை எதிர்த்து, சுல்தான் மகமுட் ஷா, 1515 முதல் 1519 வரை பல தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியுற்றன.

பிந்தான் தீவில் இருந்த சுல்தான் முகமது ஷாவை அடக்குவதற்கு போர்த்துகீசியர்கள் தீவிரமாகக் களம் இறங்கினார்கள். பிந்தான் தீவில் சுல்தான் முகமது ஷா இருக்கும் வரையில் தங்களுக்கு ஆபத்து என்பதையும் உணர்ந்தார்கள்.

பிந்தான் தீவு தீக்கிரை தொகு

சுல்தான் முகமது ஷாவின் அச்சுறுத்தல்களை அடியோடு களைந்து விட வேண்டும் என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தனர். ஆக பிந்தான் தீவையே அழித்துவிட முடிவு செய்தார்கள். ஒரு பெரும் படையைத் திரட்டி பிந்தான் தீவிற்கு அனுப்பினர். இது 1526-ஆம் ஆண்டில் நடந்தது.

அந்தப் படைக்கு பெட்ரோ மாஸ்காரன்காஸ் (Pedro Mascarenhas) என்பவர் தலைமை தாங்கினார். பிந்தான் தீவையே அழித்து விட வேண்டும் என்று போர்த் தளபதிக்கு கட்டளை இடப்பட்டது. அதன் படியே அவரும் செய்து முடித்தார். 1526-ஆம் ஆண்டு பிந்தான் தீவைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

அலாவுதீன் ரியாட் ஷா II தொகு

சுல்தான் முகமது ஷாவும் அவருடைய குடும்பத்தினரும் பிந்தான் தீவில் இருந்து சுமத்திரா, ரியாவ் (Riau) தீவுக் கூட்டத்தில் இருக்கும் கம்பார் எனும் இடத்திற்குத் தப்பிச் சென்றனர். அங்கேயே சுல்தான் முகமது ஷா தன்னுடைய கடைசி நாட்களையும் கழித்தார்.

1528-ஆம் ஆண்டு சுல்தான் முகமது ஷா காலமானார். அத்துடன் மலாக்கா சுல்தான்களின் வரலாற்றுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. அப்போது சுல்தான் முகமது ஷாவுக்கு, முசபர் ஷா (Muzaffar Shah); அலாவுதீன் ரியட் ஷா (Alauddin Riayat Shah II) என இரு மகன்கள் இருந்தார்கள்.[3]

முசபர் ஷா, தீபகற்ப மலேசியாவின் வடக்குத் திசைக்குச் சென்று பேராக் சுல்தானகத்தை (Sultanate of Perak) நிறுவினார். இன்னொரு மகன் அலாவுதீன் ரியாட் ஷா II, ஜொகூருக்குச் சென்று ஜொகூர் சுல்தானகத்தை (Johor Sultanate) நிறுவினார்.[4]

ஜொகூர் சுல்தானகம் தொகு

1529 ஆம் ஆண்டில், அலாவுதீன் ரியாத் ஷா II, தன் முதல் தலைநகரை ஊஜோங் தானா (Hujung Tanah) எனும் இடத்தில் நிறுவினார். இந்த இடம் கோத்தா திங்கியில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பெக்கான் துவா (Pekan Tua) என்று இப்போது அழைக்கப் படுகிறது.[5]

அங்கு கோத்தா காரா (Kota Kara) எனும் கோட்டை ஆற்றின் கரையோரத்தில் நிறுவப்பட்டது. 1535-இல், எஸ்டெவாவோ டா காமா (Estêvão da Gama) என்பவரின் தலைமையில் சுமார் 400 போர்த்துகீசியப் படைகள் ஜொகூர் மீது படையெடுத்தன.[5]

கோத்தா காரா கோட்டை தொகு

கோத்தா காரா கோட்டை மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அந்தக் கோட்டை தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டது. இருப்பினும் போர்த்துகீசியத் துருப்புக்கள் கோட்டையின் மீது தொடர்ந்து வெடி குண்டுகளை வீசின. ஆனாலும் ஒரு கட்டத்தில் பின்வாங்க வேண்டி இருந்தது. சில நாட்கள் கழித்து மீண்டும் படை எடுத்து அந்தக் கோட்டையை எரித்து விட்டனர்.

அலாவுதீன் ரியாட் ஷா II, ஜொகூர் ஆற்றின் மேல்புறமாக இருந்த சயோங் பினாங்கு (Sayong Pinang) எனும் இடத்திகுப் பின்வாங்கினார். அவரின் தலைமை அதிகாரி செரி நர திராஜா (Seri Nara Diraja), சயோங் பினாங்கில் காலமானார்.[5]

அமைதி ஒப்பந்தம் தொகு

அலாவுதீன் ரியாட் ஷா II, சிறிது காலத்திற்குப் பிறகு பெக்கான் துவாவுக்குத் திரும்பி கோட்டையை மீண்டும் கட்டினார். மீண்டும் 400 போர்த்துகீசிய துருப்புக்களால் கோட்டை தாக்கப்பட்டது. அந்தப் படையெடுப்பில் 30 போர்த்துகீசியத் துருப்புக்கள் கொல்லப் பட்டனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜொகூருக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே ஓர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

1540-ஆம் ஆண்டில், அலாவுதீன் ரியாத் ஷா தனது தலைநகரை ஜொகூர் லாமாவுக்கு மாற்றினார். ஜொகூர் லாமா ஜொகூர் ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ளது.

ஆச்சே தாக்குதல் தொகு

சுமத்திராவின் வடக்கு முனையில் இருந்த அச்சே சுல்தானகத்தால் ஜொகூர் அச்சுறுத்தப்பட்டது. 1539-ஆம் ஆண்டில், சுமத்திராவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஜொகூர் சுல்தானகத்தின் துணை மாநிலமான அரு, 160 கப்பல்களைக் கொண்ட 12,000 கடற்படையினரால் தாக்கப்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அச்சே மக்கள், மலாக்கா மலாய் மக்கள், மலபார் மக்கள், குஜராத்திகள் மற்றும் துருக்கிய மக்கள். அலாவுதீன் ரியாட் ஷா தனது நண்பர்களான பேராக் மற்றும் சியாக் ஆளுநர்களின் உதவியுடன் ஒரு கடற்படையைச் சேகரித்து, 1540-இல் அருவைத் தாக்கினார்.

சுங்கை பனே போர் தொகு

அவர் அருவை மீண்டும் கைப்பற்றினார். அந்தத் தாக்குதலில் 14 அச்சே கப்பல்கள் மட்டுமே மிஞ்சின. ஆயிரக் கணக்கான அச்சே துருப்புக்கள் இறந்தனர். இந்தப் போர் சுங்கை பனே போர் (Battle of Sungai Paneh) என்று அழைக்கப்படுகிறது.

1564-ஆம் ஆண்டில், அச்சேயின் சுல்தான், அலாவுதீன் அல்-காகர் (Alauddin al-Qahar), அருவின் மீது படையெடுத்து தோற்கடித்தார். அருவில் இருந்து ஜொகூர் ஆட்சியாளர்களை வெளியேற்றினார்.

ஜொகூர் லாமா தொகு

அச்சே சுல்தான், பின்னர் அருவில் இருந்து ஜொகூர் லாமா மீது தாக்குதலைத் தொடங்கினார். காரா கோட்டையும் ஜொகூர் லாமா நகரமும் அழிக்கப்பட்டன. அலாவுதீன் ரியாத் ஷா கைப்பற்றப்பட்டு அச்சேவுக்குக் கொண்டு வரப்பட்டார்.

பின்னர் அங்கு அலாவுதீன் ரியாத் ஷா கொல்லப் பட்டார். அவரின் மரணத்திற்குப் பின்னர் மர்கும் சாயிட் அச்சே (Marhum Syahid di Acheh) எனும் சிறப்பு பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அலாவுதீன் ரியாத் ஷாவிற்குப் பிறகு அவரின் மகன் இரண்டாம் முசாபர் ஷா (Muzaffar Shah II) ஆட்சிக்கு வந்தார்.

ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியாளர்கள் தொகு

ஜொகூர் சுல்தான்கள் ஆட்சி காலம்
மலாக்கா ஜொகூர் வம்சாவழி
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா II
1528–1564
சுல்தான் முசபர் II
1564–1570
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா I
1570–1571
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா II
1571–1597
சுல்தான் அகமட் ரியாட் ஷா III
1597–1615
சுல்தான் அப்துல்லா மாயாட் ஷா
1615–1623
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா III
1623–1667
சுல்தான் இபுராகிம் ஷா
1677–1685
சுல்தான் மகமுட் II
1685–1699
பெண்டகாரா வம்சாவழி
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா IV
1685–1699
மலாக்கா ஜொகூர் வம்சாவழி
சுல்தான் அப்துல் ஜாலில் ரகமட் ஷா IV
1718–1722
பெண்டகாரா வம்சாவழி
சுல்தான் சுலைமான் பட்ருல் ஆலாம் ஷா
1722–1760
சுல்தான் அப்துல் ஜாலில் முவாசாம் ஷா
1760–1761
சுல்தான் அகமட் ரியாட் ஷா
1761–1761
சுல்தான் மகமுட் ஷா III
1761–1812
சுல்தான் அப்துல் ரகுமான் முவாசாம் ஷா
1812–1819
சுல்தான் உசேன் ஷா
1819–1835
சுல்தான் அலி இசுகந்தர் ஷா
1835–1855
தெமாங்கோங் வம்சாவழி
ராஜா தெமாங்கோங் இபுராகிம்
1855–1862
சுல்தான் அபு பாக்கார்
1862–1895
சுல்தான் இபுராகிம்
1895–1959
சுல்தான் இசுமாயில்
1859–1981
சுல்தான் இசுகந்தர்
1981–2010
சுல்தான் இபுராகிம் இசுமாயில்
2010–இன்று வரையில்

மேற்கோள்கள் தொகு

  1. Turner, Peter; Hugh Finlay (1996). Malaysia, Singapore and Brunei. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86442-393-1. https://books.google.com/books?id=tXGoCJaIk7cC. 
  2. Richard Olaf Winstedt (1992). A history of Johore, 1365–1895. Kuala Lumpur: Malaysian Branch of the Royal Asiatic Society. பக். 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-99614-6-2. 
  3. "Mahmud Shah | sultan of Malacca".
  4. bin Mansor, Suffian (2017). Buku Teks Sejarah Tingkatan 2. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-983-49-1647-3. 
  5. 5.0 5.1 5.2 "The history of Kota Johor Lama began in 1540 when Sultan Alauddin Riayat Shah II (second King of Johor 1528-1564) moved to Tanjung Batu which is located on the banks of the Johor River. He built a city built of stone and then reclaimed with the construction of this city". பார்க்கப்பட்ட நாள் 13 July 2022.

வெளி இணைப்புகள் தொகு

நூல்கள் தொகு

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொகூர்_சுல்தானகம்&oldid=3925071" இலிருந்து மீள்விக்கப்பட்டது