தன்வந்திரி

தன்வந்திரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி(தனிக்கோயிலில்) காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது. தமிழ் மருத்துவத்தின்படி தன்வந்திரி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார்.[1]

தன்வந்திரி
அதிபதிஆயுர் வேதத்திற்கு
தமிழ் எழுத்து முறைதன்வந்திரி
வகைவிஷ்ணுவின் அவதாரம்
ஆயுதம்சக்கரம்
விழாக்கள்தந்தேரஸ்

தன்வந்திரி அவதாரம் தொகு

வடிவம் தொகு

 
தன்வந்தரி ஓவியம்

பழமையான சமஸ்கிருத விஷ்ணுதர்மோத்தர புராணத்தின்படி, தன்வந்திரி நான்கு கைகளுடன் அழகிய தோற்றத்தில் இருப்பவர். வலது கை ஒன்றில் சங்கும் மற்றொன்றில் அமிர்தமும் இடது கை ஒன்றில் சக்கரமும், மற்றொன்றில் அட்டைப்புழுவும் கொண்டிருக்கிறார்.[2][3][4] சில நூல்களின்படி அமிர்தம், சங்கு, மூலிகைக் கொடி மற்றும் ஆயுர்வேத நூலினைக் கையில் கொண்டிருப்பார் எனவும் விவரிக்கின்றன.[5]

அவதாரத் தோற்றம் தொகு

தேவர்கள் அசுரர்களுடன் போராடி வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகப் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்.[6]

மருத்துவம் தொகு

தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையே குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.[7]

இலக்கிய குறிப்புகள் தொகு

மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், பத்ம புராணம், விஷ்ணுதர்மோத்தர புராணம் போன்ற புராணங்களில் தன்வந்திரியைக் கடவுளாகக் குறிப்பிடும் குறிப்புகள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி தரும் பட்டியலில் பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக தன்வந்திரி குறிப்பிடப்படுகிறார். வைத்திய சிந்தாமணி, தன்வந்திரி தண்டகம் 140, நாலுகண்ட ஜாலம், தன்வந்திரி கலை, தன்வந்திரி ஞானம், தன்வந்திரி தைலம், தன்வந்திரி கருக்கிடை, தன்வந்திரி நிகண்டு போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் குறிப்பிடப்படுகிறது.[8][9]

மேற்கோள்கள் தொகு

  1. "எப்போதும் இளமையாக இருக்கவும், நோயில்லா வாழ்வும் கிடைக்க தன்வந்திரி சித்தரின் இந்த மந்திரத்தை 108 முறை இப்படி உச்சரியுங்கள்!". தெய்வீகம். பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  2. "ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஜயந்தியும் ஆரோக்கிய பாரதியும்". விஜயபாரதம். https://vijayabharatham.org/sri-dhanwandri/. பார்த்த நாள்: 2 December 2023. 
  3. Stutley, Margaret (2019-04-09) (in en). The Illustrated Dictionary of Hindu Iconography. Routledge. பக். 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-429-62425-4. https://books.google.com/books?id=vQWQDwAAQBAJ&dq=dhanvantri+iconography&pg=PT123. 
  4. Lad, Vasant (2002) (in en). Textbook of Ayurveda. Ayurvedic Press. பக். 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-883725-07-5. https://books.google.com/books?id=hJIeAQAAIAAJ&q=dhanvantari+leech. 
  5. "மருத்துவ பிதாமகன் தன்வந்திரி!". கல்கி. https://kalkionline.com/magazines/mangayar-malar/father-of-medicine-dhanvantri. பார்த்த நாள்: 2 December 2023. 
  6. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் - 10
  7. அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில்
  8. "சித்தர் இலக்கியம்". த.இ.க. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  9. "dhanvantari nighantu". www.historyofayurveda.org. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்வந்திரி&oldid=3838607" இலிருந்து மீள்விக்கப்பட்டது