தமிழருவி மணியன்

காந்தியவாதி

தமிழருவி மணியன் (ஆங்கில மொழி: Tamilaruvi Manian) தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். இவரது இயற்பெயர் தெய்வசிகாமணி.[1] முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர் இவரை தமிழருவி எனும் பெயரால் பாராட்டினார். அன்று முதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார்.

தமிழருவி மணியன்

கல்வி

தமிழருவி மணியன் சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியல் பயின்று பட்டம் பெற்றார்.[2] பின்னர் கல்வியியல், சட்டம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

பணி

சென்னை சூளைப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஒற்றுமைக் குழு மேல்நிலைப் பள்ளியில் (Hindu Union Committee Higher Secondary School) சமூக அறிவியல் ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். சிலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

அரசியல்

இந்திய தேசிய காங்கிரசில்

காமராசரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இவர், அவரது தலைமையில் கீழ் இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு, சிண்டிகேட் காங்கிரசு எனப்பட்ட நிறுவன காங்கிரசு ஆகியவற்றில் இணைந்து தொண்டாற்றினார்.[1] [3]

ஜனதா கட்சியில்

காமராசரின் மறைவிற்குப் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.[1] [3]

ஜனதாதளத்தில்

இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே ஜனதா தளத்தில் இணைந்து அதன் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளராக இருந்தார்.[1] [3]

லோக்சக்தியில்

இராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா தளத்திலிருந்து பிரிந்து லோக்சக்தி என்னும் கட்சியைத் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[1] [3]

தமிழக லோக்சக்தி தொடக்கம்

பின்னர் தமிழக லோக்சக்தி எனக் கட்சி தொடங்கினார். [3]

தமிழ் மாநில காங்கிரசில்

மூப்பனாரின் அழைப்பை ஏற்று தமிழக லோக்சக்தி கட்சியை கலைந்து தமாகாவில் இணைந்து அதன் பொதுச்செயலர் ஆனார்.[1] [3]

இந்திய தேசிய காங்கிரசில்

இந்திய தேசிய காங்கிரசில் த.மா.கா. இணைந்தபொழுது இந்திய் தேசிய காங்கிரசில் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளராக ஆனார். 2008 ஆம் ஆண்டில் ஈழ இனப்பிரச்சனையில் அக்கட்சியின் நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்டு அங்கிருந்து விலகினார். [1] [3]

காந்திய மக்கள் இயக்கம் தொடக்கம்

2009 ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.[3] [1]

காந்திய மக்கள் கட்சி தொடக்கம்

காந்திய மக்கள் கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை 10 பிப்ரவரி 2014 அன்று தொடங்கியவர், பின்னர் அதை 2022ல் காமராசர் மக்கள் கட்சி என மாற்றினார்.[4][5]

ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளர்

2020ஆம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க முனைந்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக 2020 திசம்பர் 5ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.[1] பின்னர் அக்கட்சி தொடங்கப்படவே இல்லை.

பதவி

மு.கருணாநிதியால் தமிழக திட்டக்குழு தலைவரானார். [3]

படைப்புகள்

தமிழருவி மணியனின் எழுத்துகளும் சொற்பொழிவுகளும் பின்வரும் நூல்களாக வெளிவந்துள்ளன:

  1. அன்பிற் சிறந்த தவமில்லை
  2. அடிமனத்தின் சுவடுகள்
  3. காமராசரும் கவிராசரும்
  4. கம்பன் காட்டும் இந்திரசித்தன்
  5. ஞானபீடம்
  6. ஊருக்கு நல்லது சொல்வேன்
  7. எங்கே போகிறோம் நாம்
  8. கனவு மெய்ப்பட வேண்டும்
  9. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
  10. தமிழருவி
  11. மறக்க முடியாத மனிதர்கள்
  12. வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
  13. நட்பை போற்றுவோம்

இவர் ஒற்றைச்சிறகு என்னும் ஒரே ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த அச்சிறுகதைக்கு 2012 ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிந்தனையின் விருது கிடைத்தது.[6]

சான்றடைவு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 யார் இந்த தமிழருவி மணியன்? தந்திடிவி, 2020 திசம்பர் 5
  2. புதிய தலைமுறை 2009-11-12, பக்.26-27
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 தமிழருவி மணியன் பாலிமர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி
  4. "காந்திய மக்கள் கட்சி". Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.
  5. "காமராசர் மக்கள் கட்சி". பார்க்கப்பட்ட நாள் 2022-09-13. {{cite web}}: |archive-url= requires |archive-date= (help)
  6. 2012 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழருவி_மணியன்&oldid=3650695" இலிருந்து மீள்விக்கப்பட்டது