தமிழ்நாடு விடுதலைப்படை

தமிழ்நாடு விடுதலைப்படை என்பது இந்தியா மற்றும் இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இந்திய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இதன் தலைமைத்தளபதியாக தமிழரசன் இருந்தார். இது தமிழர்களுக்காகதனித்தமிழ்த்தேசம் அமைக்க போராடிய தமிழ்த்தேசிய அமைப்பாகும்.[1] கி.பி. 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்று செய்த தமிழின படுகொலைக்கு எதிராக இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை.[2] இந்த இயக்கம் சூலை 2, 2002 அன்று இந்திய அரசால் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.[3] இந்திய அரசால் 2002ல் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இவ்வியக்கம் முற்றிலும் செயல்படாமல் போனது.

தமிழ்நாடு விடுதலைப்படை கொடி

துவக்கமும் நோக்கமும் தொகு

தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் முதல்முறையாக 70 தொடக்கத்தில் தமிழ்நாடு விடுதலைப்படை அறிவிப்பை வெளியிட அதனால் பள்ளி ஆசிரியரும், தமிழ்தேசிய சிந்தனையாளருமான கலியப்பெருமாள் ஈர்க்கப்பட்டார். நக்சல்பாரிகளுடன் தமிழ்த்தேசியம் தொடர்பான கருத்தாக்கத்தில் புலவர் கலியப்பெருமாளும் தமிழரசனும் அன்பழகன் சுந்தரமும் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தனர். நக்சல்பாரிகள் இந்திய மார்க்குசிய லெனினிய பொதுவுடைமை கட்சியுடன் (இபொக மாலெ) ஒருமித்த இந்தியாவின் கருத்தாக்கத்தில் உடன்பட்டனர். அதனால் கலியப்பெருமாள், தமிழரசன், சுந்தரம் போன்றோர் கொண்ட தனித்தமிழ்நாடு கொள்கையை இந்திய பொதுவுடைமை தலைமை நிராகரித்தது. இது நக்சல்பாரிகள் இயக்கம் தமிழ்நாடு தரப்பு இந்தியத்தரப்பு என அதிகாரப்பூர்வமாக இரண்டாக நக்சல் இயக்கம் பிரிவுபட வழிவகுத்தது. இதனால் தமிழ்நாடு தரப்பு சுந்தரம் தலைமையில் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய பொதுவுடைமை கட்சியையும் அதன் ஆயுதப்பிரிவாக தமிழரசன் தமிழ்நாடு விடுதலைப்படை படையணியையும் உருவாக்கினர்.

இந்த இயக்கத்தின் நோக்கம் தனித்தமிழ்நாடு கொள்கையாகவும் அதை அடைய ஆயுதப்போராட்டமே வழி என்பதாகவும் இருந்தது.

ஆரம்பகால செயல்பாடுகள் தொகு

1985ல் இருந்து 1987 வரை இந்த இயக்கம் சிறுசிறு குண்டுவெடிப்புகளிலும் சமூகத்தின் பகைவர்களாக அவர்கள் கருதும் நபர்களை கொலை செய்தும் வந்தார்கள். அவர்களுக்கான நிதியை பெருக்க இந்தியமயமாக்கப்பட்ட வங்கிகளை கொள்ளையடித்தனர். அப்படி ஒரு வங்கியை செப்டம்பர் 1, 1987 அன்று கொள்ளையடிக்கும் போது தமிழரசனும் அவருடைய இயக்கத்தினர் நால்வரும் காவல்துரையினர் பொதுமக்களின் வேடத்தில் இருந்து அடித்துக்கொன்றனர்.[4]

தமிழரசன் கொலை செய்யப்பட்ட பிறகு லெனின் எனப்படும் தெய்வசிகாமணி தவிபவுக்கு தலைவரானார். இவரின் தலைமையில் இயக்கத்தின் செயல்பாடுகள் மேலும் தீவிரமடைந்தன. தவிபவின் கிளைகள் செயம்கொண்டம், அரியலூர், வல்லம், திருச்சி, தென்னார்காட்டு மாவட்டங்கள் என விரியத்தொடங்கின. மார்ச்சு 29 1994 அன்று லெனின் என்கிற தெய்வசிகாமணி தென்னார்காட்டின் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தை வெடி வைத்து தகர்க்க முயன்ற போது கொல்லப்பட்டார். லெனின் தெய்வசிகாமணி மறைவுக்கு பின்னர் கூவாகம் இராமசாமியும் இளவரசனும் அதன் தலைவர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]

வீரப்பனால் கன்னட நடிகர் 2000ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட போது மீண்டும் தவிப பற்றி அதிகம் செய்திகள் அடிபட்டது. இதிலிருந்து தவிப இயக்கதினருக்கும் வீரப்பன் கூட்டத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வீரப்பன் விடுவிக்கக்கோரிய சிறைக்கைதிகளில் 5 தவிப இயக்கத்தினர் இருந்தார்கள்.[4]

தலைமை தொகு

தமிழரசன் தலைமையில் தொகு

தமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக 'தமிழ்நாடு விடுதலைப் படை'யை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு 'அரசியல் விடுதலை' பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார். தமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மஜும்தார் வேண்டுகோலை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.[5] சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தோழிப்பு செய்துவந்தார்.

மிசா காலகட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர்.[6] மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார். தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர். தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. குறிப்பிட்ட நாளில் தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றி வங்கியைவிட்டு வெளியே வந்தனர். இதை எதிர்பார்த்த காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்தனர். கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் இறந்தனர்.[7]

மற்ற தலைமைகள் தொகு

தமிழரசன் மறைவுக்குப்பின் தெய்வசிகாமணி எனப்படும் லெனின் தவிப தலைவரானார். இவர் காலத்தில் தவிபவின் நடவடிக்கைகள் மேலும் வேகம் கொண்டன. அதன் கிளைகள் செயங்கொண்டான், அரியலூர், வல்லம், திருச்சி, தென்னார்காடென பெருகின. இவரின் தலைமையில் தவிப காவல்நிலையங்களையும் ஆயுதங்களையும் கொள்ளையடிக்க தொடங்கினர். மார்ச்சு 29 1994 அன்று முத்தாண்டிக்குப்பத்தில் இருந்த காவல்நிலையத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியின் போது தெய்வசிகாமணி கொல்லப்பட்டார். அதன்பிறகு கூவாகம் இராமசாமியும் இளவரசனும் மாறனும் இப்படைக்கு தலைமை தாங்கினர்.

கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகள் தொகு

தவிப ஒரு காலத்தில் கடலூர், சிதம்பரம், பெரம்பலூர் பகுதிகளில் இயங்கிவந்தனர். இந்த பகுதிகளில் மட்டும் 30,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட முந்திரிகாடுகளை தங்கள் வசம் வைத்திருந்தனர். தவிபவில் உள்முரண்கள் அதிகமாகி அதனால் நடந்த சண்டையில் கூவாகம் இராமசாமி உட்பட 12 தவிப நபர்கள் கொல்லப்பட்டனர். கூவாகம் இராமசாமி கொலை தொடர்பாக இளவரசனும் கைது செய்யப்பட்டார். இந்த சண்டை முடிந்ததன் பிறகு மாறன் தவிபவின் பல நபர்களை நேரில் சந்தித்து தன் பக்கம் சேர்த்துக்கொண்டு தவிபவின் தலைவரானார். மாறன் தலைமையில் தவிப கிளைகள் பெரம்பலூர், கடலூர், தனவூர், கிழக்கு செங்கற்பட்டு, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருச்சி, விழுப்புரம், நாகை, சென்னை, தர்மபுரி, தூத்துக்குடி என பரவி இருந்தன.

மற்ற ஆயுதக்குழுக்களுடனான தொடர்பு தொகு

தமிழ்நாடு விடுதலைப்படை தமிழ்த்தேசிய மீட்புப்படை, தமிழீழ விடுதலைப் புலிகள், வீரப்பன் குழுவினர் போன்ற ஆயுதக்குழுக்களோடு நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தனர்.

புலிகளுடன் தொகு

தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். புலிகள் தங்கள் இயக்கத்துக்கு ஆபத்துக்கால சரணாலயமாக தமிழ்நாட்டையே கொண்டிருந்தனர். புலிகள் இயக்கத்தவர்கள் ஆபத்துக்காலங்களில் தமிழ்நாட்டில் தஞ்சம் புக தமிழ்நாடு விடுதலைப்படை போன்ற ஆயுதக்குழுக்களே உதவி செய்தன. ஆனால் இராசீவு காந்தி படுகொலைக்கு பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.[8]

வீரப்பனாருடன் தொகு

தமிழ்நாடு விடுதலைப்படைக்கு நெருக்கமாக இருந்த மற்றொரு ஆயுதக்குழு வீரப்பன் படையினர் ஆகும். தவிப இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மாறன் தமிழ்நாடு கர்நாடக காவல்துறையால் தேடப்பட்ட போது மாறன் வீரப்பன் பாதுகாப்பில் ஒளிந்திருந்ததாகவும் கருதப்படுகிறது. வீரப்பனும் தவிபவும் கர்நாடக அரசை பொது எதிரியாக கருதினர். கர்நாடக தமிழக நீர் பங்கீட்டு சிக்கல்களில் கர்நாடக அரசு காவிரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு தராததும் கர்நாடக மாநிலத்திலுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதும் தவிபவும் வீரப்பனும் கர்நாடக அரசை பகைப்பதற்கு பொதுக்காரணங்களாக இருந்தன. வீரப்பனின் தம்பி அர்சுனன் கர்நாடக அரசால் கொல்லப்பட்டதும் மற்றொரு காரணமாய் வீரப்பன் குழுவினருக்கு இருந்தது.[8]

வழிபட்டவர்கள் தொகு

தமிழ்நாடு விடுதலைப்படை பல இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அவற்றுள் தமிழ்நாடு விடுதலைக்கழகம், விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், தமிழ்த்தேசிய பெண்கள் விடுதலை இயக்கம், உரிமை கோருவோர் ஒருங்கமைப்பு, தமிழ்நாடு இளைஞர் பேரவை, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.[8]

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. Karl R. DeRouen, Paul Bellamy (2008). International Security and the United States: An Encyclopedia. Greenwood Publishing Group. பக். 318. https://books.google.co.in/books?id=2DKJZbHxHDEC&pg=PA318&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIJDAC#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false. 
  2. பரத்குமார். Terrorism is Comes from Us by Barathkumar PKT. https://books.google.co.in/books?id=7WGIrrTRZyUC&pg=PT75&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIGzAA#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false. 
  3. "Tamil Nadu Liberation Army (TNLA)". satp.org. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 4.2 Barathkumar PKT. Terrorism is Comes from Us. https://books.google.co.in/books?id=7WGIrrTRZyUC&pg=PT76&dq=TNLA+1985+1987&hl=en&sa=X&ved=0ahUKEwjnkqW5sM3NAhWLwI8KHTKRDpAQ6AEIGzAA#v=onepage&q=TNLA%201985%201987&f=false. 
  5. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.71
  6. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.104
  7. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131
  8. 8.0 8.1 8.2 George Iype (2000). "A Call for Partition". http://www.rediff.com/. pp. Part 2. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2016. {{cite web}}: External link in |publisher= (help)

வெளி இணைப்புகளும் உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_விடுதலைப்படை&oldid=3930684" இலிருந்து மீள்விக்கப்பட்டது