தார்த்தாரியா வில்லைகள்

தார்த்தாரியா வில்லைகள் என்பன ருமேனியாவில் உள்ள தார்த்தாரியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று களிமண் வில்லைகளைக் குறிக்கும். இவ் வில்லைகளில் காணப்படும் குறியீடுகள் தொல்லியலாளர்கள் மத்தியில் சர்ச்சைகளை உருவாக்கின. சிலர் இவ் வில்லைகளில் காணப்படுபவை முறையான எழுத்துக்களே என்றும் அவையே உலகில் தோன்றிய முதல் எழுத்துக்கள் என்றும் கூறுகின்றனர் சிலர் அதை மறுக்கின்றனர்.

கண்டுபிடிப்பு தொகு

இவ்வில்லைகள் 1961 ஆம் ஆண்டில் பெயர்பெற்ற அல்பா லூலியா என்னும் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. குளூச் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிக்கோலே விலாசா (Nicolae Vlassa) என்பவர் அகழ்வாய்வு ஒன்றின்போது இந்தச் சுடப்படாத களிமண் வில்லைகளைக் கண்டெடுத்தார். இவற்றுடன், கல், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிறிய உருவங்களும், ஒரு கையணியும், வளர்ந்த ஆண் ஒருவருடைய எரிந்து உடைந்த எலும்புகளும் கிடைத்தன. இரண்டு வில்லைகள் செவ்வக வடிவம் கொண்டவை, ஒன்று வட்ட வடிவமானது. இவை அனைத்தும் மிகவும் சிறிய அளவு கொண்டவை. வட்ட வில்லை 6 சதமமீட்டர் விட்டம் கொண்டது. இவற்றுள் வட்ட வில்லையிலும், செவ்வக வில்லை ஒன்றிலுமாக இரண்டு வில்லைகளில் துளைகள் இடப்பட்டுள்ளன.

மூன்று வில்லைகளிலுமே அவற்றின் ஒரு பக்கத்தில் குறியீடுகள் காணப்படுகின்றன. இவற்றில் உள்ளது போன்ற குறியீடுகள் சேர்பியாவில் உள்ள வின்கா என்னுமிடத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டங்களிலும் தெற்கு பால்க்கன் பகுதிகளில் உள்ள வேறு பல இடங்களிலும் எடுக்கப்பட்ட பொருட்களிலும் காணப்படுகின்றன. துளையிடப்படாத வில்லையில் கொம்புள்ள ஒரு விலங்கும், இன்னொரு உருவமும், ஒரு மரக் கிளையும் உள்ளன. மற்ற வில்லைகளில் பலவிதமான பண்பியல் (abstract) குறியீடுகள் காணப்படுகின்றன. புதைப்பின் காரணம் என்னவெனத் திளிவாகத் தெரியவில்லை, ஆனால், புதைக்கப்பட்ட உடல் ஒரு ஆவியேறிப் பேசுபவருடையதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்த்தாரியா_வில்லைகள்&oldid=1353091" இலிருந்து மீள்விக்கப்பட்டது