தி ஷைனிங் (திரைப்படம்)

'தி ஷைனிங்’ என்பது 1980 ஆம் ஆண்டு ஸ்டான்லி குப்ரிக் தயாரித்து, நாவலாசிரியர் டயான் ஜான்சனுடன் இணைந்து எழுதி இயக்கிய உளவியல் திகில் திரைப்படம். மேலும் 1977 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியான ஸ்டீபன் கிங்கின் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் ஜாக் நிக்கல்சன், ஷெல்லி டுவால், ஸ்கட்மேன் கிரோதர்ஸ் மற்றும் டேனி லாயிட் ஆகியோர் நடித்துள்ளனர்.

தி ஷைனிங் (திரைப்படம்)
இயக்கம்இசுடான்லி குப்ரிக்கு
தயாரிப்புஇசுடான்லி குப்ரிக்கு
மூலக்கதைஸ்டீபன் கிங்
திரைக்கதைஇசுடான்லி குப்ரிக்கு டியென் ஜான்சன்
இசைவெண்டி கால்ரோஸ் ராச்சல் எல்கிண்ட்
நடிப்புஜாக் நிக்கல்சன்

ஷெல்லி டுவால் ஸ்கேட்மேன் கிரோதர்ஸ்

டேனி லாயிட்
ஒளிப்பதிவுஜான் ஆல்காட்
படத்தொகுப்புரே லவ்ஜாய்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ்
வெளியீடுதி பிரொடியூசர் சர்கிள் கம்பெனி ஹாக் பிலிம்ஸ்
நாடுஅமெரிக்கா இங்கிலாந்து
மொழிஆங்கிலம்

படத்தின் மையக் கதாபாத்திரம் ஜாக் டோரன்ஸ் (நிக்கல்சன்) ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர் மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருபவர். மேலும் அவர் தனது மனைவி வெண்டி டோரன்ஸ் (டுவால்) மற்றும் மகன் டேனி டோரன்ஸ் (லாய்ட்) இருவருடன் கொலராடோ ராக்கிஸில் உள்ள ’ஓவர்லுக்’ என்றழைக்கக்கூடிய பாரம்பரியமிக்க ஒரு தனிமையான ஹோட்டலின் பருவமில்லாத நேரத்தில் கவனிப்பாளராக பதவியை ஏற்றுக்கொள்கிறார். அவர் மகன் டேனிக்கு பேசாமலே மனதில் சொல்வதை உணர்ந்து கொள்ளும் "ஷைனிங்" என்று பெயரிடப்பட்ட மனநல திறன் உள்ளது. பனிப்புயல் சூழ துவங்கிய பிறகு ஹோட்டலில் வசிக்கும் ஜாக்கின் மனநிலை அமானுஷ்யமான சக்திகளால் மாறுகிறது.

உண்மையான இடங்களைப் போலவே செட்கள் அமைத்து கிட்டத்தட்ட EMI Elstree Studios[தெளிவுபடுத்துக] இல் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. சில சமயங்களில் நடிகர்கள் மற்றும் பணியாட்களின் சோர்வினால் பல டேக்குகள் எடுப்பதற்காக ஸ்டான்லி குப்ரிக் பெரும்பாலும் ஒரு சிறிய குழுவினருடன் பணிபுரிந்தார். பல காட்சிகளை எளிதில் ஒளிப்பதிவு செய்ய புதிதாக ஸ்டெடிகாம் மவுண்ட் பயன்படுத்தப்பட்டது. இது படத்திற்கு ஒரு புதுமையான மற்றும் ஆழ்ந்த தோற்றத்தையும் உணர்வையும் கொடுத்தது. முரண்பாடுகள், தெளிவின்மைகள், குறியீடுகள் மற்றும் புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக படத்தில் உள்ள அர்த்தங்கள் மற்றும் செயல்கள் குறித்து பல யூகங்கள் உள்ளன.

இந்தப் படம் அமெரிக்காவில் மே 23, 1980 அன்றும், இங்கிலாந்தில் அக்டோபர் 2, 1980 அன்று வார்னர் பிரதர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. திரையரங்க வெளியீடுகளுக்குப் பல பதிப்புகள் இருந்தன. அவை ஒவ்வொன்றின் நீளமும் அதற்கு முந்தைய நீளத்தை விட இன்னும் குறைக்கப்பட்டன. மொத்தம் சுமார் 27 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. படம் வெளியான நேரத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தன; தனது நாவலில் இருந்து திரைப்படம் வேறுபட்டிருந்ததால் நாவலாசிரியர் ஸ்டீபன் கிங் இத்திரைப்படத்தை விமர்சித்தார். இந்தத் திரைப்படம் ராஸீஸில் இரண்டு பரிந்துரைகளைப் பெற்றது - ஒன்று மோசமான இயக்குனர் மற்றும் மோசமான நடிகை (டுவால்). கடைசியில் படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்தது. மேலும் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த திகில் படங்களில் ஒன்றாகவும், பாப் கலாச்சாரத்தின் பிரதானமாகவும் கருதப்படுகிறது.

2012 ஆம் ஆண்டில், சைட் & சவுண்ட் இயக்குநர்களின் வாக்கெடுப்பில் தி ஷைனிங் 75 வது சிறந்த திரைப்படமாக தரவரிசைப்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் பிலிம் ரெஜிஸ்ட்ரியில்காங்கிரஸின் நூலகத்தால் "கலாச்சார ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக" தேர்ந்தெடுக்கப்பட்டது.  படம் வெளியாகி முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியான 'டாக்டர் ஸ்லீப்' திரைப்படம் நவம்பர் 8, 2019 அன்று வெளியிடப்பட்டது.

கதை தொகு

ராக்கி மலைகளில் தொலைதூரத்தில் உள்ள ’ஓவர்லுக் ஹோட்டல்’ ஒவ்வொரு குளிர்காலத்திலும் மூடப்படும். அந்த யாருமற்ற சமயத்தில் பணிபுரிய ஜாக் டோரன்ஸ் குளிர்கால பராமரிப்பாளராக பணியாற்றுகிறார். அவரது வருகைக்குப் பிறகு, மேலாளர் ஸ்டூவர்ட் உல்மேன் தனது முந்தைய பராமரிப்பாளரான சார்லஸ் கிரேடி அவரது குடும்பத்தை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்ட செய்தியை தெரியப்படுத்துகிறார்.

போல்டரில், ஜாக்கின் மகன் டேனிக்கு முன்னறியும் சிந்தனையுடன் வலிப்பும் ஏற்படுகிறது. ஜாக்கின் மனைவி வெண்டி, குடிபோதையில் ஆத்திரத்தில் டேனியின் தோள்பட்டையை ஜாக் காயப்படுத்திய கடந்த கால சம்பவத்தை மருத்துவரிடம் கூறுகிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு ஜாக் மது அருந்துவதை நிறுத்தி விட்டதாக சொல்கிறார். தலைமை சமையல்காரர் டிக் ஹாலோரன் ஹோட்டலை விட்டு புறப்படுவதற்கு முன்பு டேனியிடம் டெலிபதிக் திறனைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார், அதை அவர் "ஷைனிங்" என்று அழைக்கிறார். ஹாலோரன், டேனியிடம் மோசமான கடந்தகால நிகழ்வுகளின் எச்சங்கள் காரணமாக ஹோட்டலுக்கும் "ஷைனிங்" இருப்பதாகக் கூறுகிறார், மேலும் அறை 237 ஐ தவிர்க்குமாறு எச்சரிக்கிறார்.

இரண்டு இரட்டை சகோதரிகள் உட்பட பயமுறுத்தும் காட்சிகள் சிறுவன் டேனிக்கு தோன்ற ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில், ஜாக்கின் மனநலம் மிகவும் மோசமடைகிறது. அவர் தனது எழுத்தில் திருப்தி அடையாததால் மனதளவில் வன்முறை வெடிப்புகளுக்கு ஆளாகிறார், மேலும் தனது குடும்பத்தையே கொல்லும் கனவுகளைக் காண்கிறார். அதீத ஆர்வத்தின் காரணமாக பூட்டு போடாத அறை எண் 237 ஐ பார்வையிட்ட பிறகு உடல் ரீதியாக காயமடைகிறான் சிறுவன் டேனி. அதே அறையில் ஒரு பெண் பேயை ஜாக் சந்திக்கிறார். ஆனால் காயங்களை தானே ஏற்படுத்தியதற்காக டேனியை குற்றம் சாட்டுகிறார். பேயாக மதுவை பணியாற்றும் லாயிட் மூலம் ஜாக் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறார். பட்லர் டெல்பர்ட் கிரேடி உட்பட பல பேய் உருவங்கள் பின்னர் ’தங்க அறையில்’ தோன்றத் தொடங்குகின்றன. சிறுவன் டேனி தனது "திறமையை" பயன்படுத்தி தலைமை சமையல்காரர் ஹாலோரனை அணுகியதாக கிரேடி, ஜாக்கிற்கு தெரிவிக்கிறார். மேலும் ஜாக் தனது மனைவி மற்றும் குழந்தையை "திருத்த வேண்டும்" என்று கூறுகிறார்.

"முழுநேர வேலைகளும் விளையாடாததும் ஜாக்கை ஒரு மந்தமான பையனாக்குகிறது" என்ற வாசகம் மீண்டும் மீண்டும் ஜாக் டைப் செய்த காகிதங்களை மனைவி வெண்டி பார்க்கிறார். அதை தெரிந்து கொண்ட ஜாக், வெண்டியின் உயிருக்கு அச்சுறுத்தல் தருவது போல வினோதமாக நடந்துகொள்ளத் துவங்குகிறார். பயந்து போன வெண்டி அவனை ஒரு பேஸ்பால் மட்டையால் அடித்து மயக்கி, சமையலுக்கான சரக்கு அறையில் அடைத்து விடுகிறார். ஆனால் ஜாக் முன்பே ஹோட்டலின் இரு வழி ரேடியோ மற்றும் ஸ்னோகேட்டை (பனி வண்டி) பழுதாக்கியிருந்ததால் அவளும் டேனியும் வெளியேற முடியாமல் போகிறது. தங்களுடைய ஹோட்டல் அறையில், டேனி பலமுறை ரெட்ரம் என்று சொல்லிக்கொண்டே, குளியலறையின் கதவிலும் எழுதுகிறான். கண்ணாடியில் அந்த வார்த்தையைப் பார்க்கும் வெண்டி, பின்னர் அந்த வார்த்தை "மர்டர்" (கொலை) என்று பின்னோக்கி உச்சரிக்கப்படுகிறது என்பதை உணர்கிறார்.

பேயான கிரேடியால், ஜாக் விடுவிக்கப்பட்டு, கோடாரியுடன் வெண்டி மற்றும் டேனியின் பின்னால் செல்கிறார். டேனி குளியலறையின் ஜன்னல் வழியாக வெளியே தப்பிக்கிறான். மேலும் குளியலறையின் கதவை ஜாக் உடைக்கும்போது வெண்டி கத்தியால் அவர் கைகளை காயப்படுத்துகிறார். சிறுவன் டேனியின் டெலிபதி அபாயத்திற்குப் பிறகு மீண்டும் கொலராடோவுக்குப் பறந்து, மற்றொரு ஸ்னோகேட் (பனி வண்டி) மூலம் ஹோட்டலை அடைகிறார் தலைமை சமையல்காரர் ஹாலோரன். அவரது வருகை ஜாக்கின் கவனத்தை திசை திருப்புகிறது. ஹோட்டலுக்குள் நுழையும் ஹாலோரனை லாபியில் பதுங்கியிருந்தபடி கோடாரியால் கொலை செய்கிறார் ஜாக். பின்னர் டேனியை தேடி புதர்களால் வடிவமைக்கப்பட்ட புதிர்பாதைக்குள் செல்கிறார்.வெண்டி, டேனியைத் தேடி ஹோட்டலுக்குள் ஓடுகிறார். அப்போது ஹோட்டலில் உள்ள பேய்கள் வெண்டி கண்களுக்கும் அகப்படுகிறது. மேலும் டேனிக்கு மட்டும் தெரிவதைப்போல வெண்டிக்கும் இரத்தம் ஆறாக ஓடுவது தெரிகிறது.

புதிர்பாதையில், ஜாக்கை தவறாக வழிநடத்துகிறான் டேனி. ஜாக் ஒரு தவறான பாதையைப் பின்தொடர்கிறார். புதிர்பாதையிலிருந்து தப்பித்து வெளியே வந்த டேனியும், ஹோட்டலிலிருந்து வெளியே வந்த வெண்டியும் மீண்டும் சேர்ந்து ஹாலோரன் (தலைமை சமையல்காரர்) வந்த ஸ்னோகேட்டில் (பனி வண்டி) தப்பித்து செல்கிறார்கள். வழி தெரியாமல் சோர்ந்து பொன ஜாக் குளிரில் உறைந்து புதிர்பாதைக்குள்ளே இறந்து போகிறார். ஹோட்டல் ஹால்வேயில் ஜூலை 4, 1921 இல் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், கூட்டத்திற்கு மத்தியில் ஜாக் நிற்பதாக படம் நிறைவடைகிறது.

நடிகர்கள் தொகு

  • ஜாக் நிக்கல்சன் - ஜாக் டாரண்ஸ்
  • ஷெல்லி டுவால் - வெண்டி டாரண்ஸ்
  • டேனி லாயிடு - டேனி டாரண்ஸ்
  • ஸ்காட்மேன் க்ரொதர்ஸ் - டிக் ஹாலரன்
  • பெரி நெல்சன் - ஸ்டுவார்ட் உல்மேன்
  • பிலிப் ஸ்டோன் - டெல்பெர்ட் க்ரேடி
  • ஜோ டுர்கெள் - டாக்டர்
  • டோனி பர்டன் - லாரி டர்கின்
  • லியா பெல்டாம் - குளிக்கும் இளவயது பெண்
  • பில்லி கிப்சன் - குளிக்கும் முதுமையான பெண்மணி
  • பேரி டெனன் - பில் வாட்சன்
  • லிசா மற்றும் லூயில்ஸ் பர்ன்ஸ் - கிரேடியின் இரட்டை மகள்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஷைனிங்_(திரைப்படம்)&oldid=3481895" இலிருந்து மீள்விக்கப்பட்டது