துருத்தி

காற்று அழுத்தி

துருத்தி (ஆங்கிலம்-Bellows)என்பது, வளியை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பு ஆகும். அடிப்படையில் இது, துளைவாய் ஒன்றைக் கொண்ட, கனவளவை மாற்றக்கூடிய ஒரு கொள்கலன் எனலாம். துருத்தியின் கனவளவைக் குறைக்கும்போது துளைவாயினூடாக வளி வெளியேறும். பொதுவாகத் துருத்திகளில் வளி உள்ளே செல்வதற்காகத் தனியான வழி இருக்கும். இதில் தடுக்கிதழ் பொருத்தப்பட்டிருப்பதனால், துருத்தியின் கனவளவைக் குறைக்கும்போது இவ்வழியாக வளி வெளியேறுவதில்லை. துருத்தி பல்வேறு துறைகளில் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுகின்றது. தொழில்துறைகளிலும், இசைத்துறையிலும் கூட பல்வேறு கருவிகளில் துருத்தி ஓர் உறுப்பாக உள்ளது.

குளிர் காய்வதற்கான கணப்புகளில் பயன்படும் கையில் வைத்து இயக்கும் துருத்தியின் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

உலோகவியல் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bellows
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இரும்பு போன்ற உலோகங்களை உருக்குதல், ஒட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உயர்ந்த வெப்பநிலை தேவை. துருத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது சாத்தியமானது. துருத்திகள் எரிபொருளுக்குக் கூடுதலான வளியை வழங்கி அது எரியும் வேகத்தைக் கூட்டுவதன்மூலம் அதிக வெப்பத்தை உருவாக்க் உதவுகிறது.

 
நெருப்பு எரியத்தேவையான காற்றைத் தரவல்ல மரத்தினால் ஆன நெருப்புத்துருத்தி

உலோகவியலில் பல்வேறு வகையான துருத்திகள் பயன்படுகின்றன.

  • பெட்டித் துருத்தி - இது மரபுவழியாக ஆசியப் பகுதிகளில் பயன்பட்டு வருகின்றது.
  • பானைத் துருத்தி - இது பண்டை எகிப்தில் பயன்பட்டது.
  • தாத்தாரா - காலால் இயக்கும் சப்பானியத் துருத்தி.
  • அக்கோடியன் துருத்தி - மடிப்புடன் கூடிய பக்கங்களைக் கொண்ட இவ்வகைத் துருத்திகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் பயன்பட்டன.
  • ஆடுதண்டுத் துருத்தி - இது 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. எனினும், இரட்டைச் செயற்பாட்டுத் துருத்திகள் கிமு 3 ஆம் நூற்றாண்டளவில் ஹான் மன்னர் காலத்துச் சீனாவில் பயன்பட்டதாகத் தெரிகிறது.


பண்டைச் சீனக் கைப்பணியாளரான து சி என்பவர், வார்ப்பிரும்பைக் காய்ச்சியடிப்பதற்காக, நீர்ச் சில்லுகள் மூலம் நீர் ஆற்றலைப் பயன்படுத்தித் துருத்திகளை இயக்கியதாகத் தெரிகிறது. பண்டைக் கிரேக்கர்களும், பண்டைய ரோமர்களும் தேனிரும்புப் பாளங்களை உருவாக்கும் உலைகளில் துருத்திகளைப் பயன்படுத்தினர். தற்காலத்தில் ஊடாட்டத் துருத்திகளுக்குப் பதிலாகப் பெரும்பாலும் மின்னியக்கிகள் பொருத்தப்பட்ட காற்றூதிகளே பயன்படுகின்றன.

ஈரறை உலைத் துருத்தி தொகு

பொதுவாகக் கொல்லர் உலைகளில் காற்று வழங்குவதற்குப் பயன்படும் துருத்திவகை இது. சீரான அளவில் காற்று வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளதாலேயே இது பெரிதும் விரும்பப்படுகிறது. இதன் அமைப்பு கணப்புத் துருத்திகளைப் போலவே இருந்தாலும், இதில் இரண்டு அறைகள் இருப்பது ஒரு வேறுபாடு ஆகும். மடிப்புப் பக்கங்களைக் கொண்ட துருத்தியறை நடுவில் பிரிதகடு ஒன்றினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு அறைக்குள் செலுத்தப்படும் வளி மறு அறைக்குள் சென்று அங்கிருந்து சீராக வெளியேறுமாறு வடிவமைப்புச் செய்யப்பட்டு இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருத்தி&oldid=1608574" இலிருந்து மீள்விக்கப்பட்டது