தொண்டைமான் இளந்திரையன்

இளந்திரையன்

தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவர். இவரது தலைநகர் காஞ்சி. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், இவரின் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

  • கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
  • இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
  • மள்ளருக்கு மள்ளன் (உழவருக்கெல்லாம் உழவன்), மறவருக்கு மறவன் (வீரருக்கெல்லாம் வீரன்), செல்வருக்குச் செல்வன் (வணிகருக்கெல்லாம் வணிகன்), போரில் மேம்பட்டவன் என்றல்லாம் இவர் போற்றப்பட்டுள்ளார்.
  • பரிசலர்க்குப் புத்தாடை தந்து, தானே உணவு படைத்துள்ளார்.
  • சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த தாமரை விருது சூட்டிப் பெருமைப்படுத்தியுள்ளார்.
  • விறலியர்க்குப் பொன்னால் செய்த மாலையை அணிவித்துள்ளார்.

காண்க தொகு

  • தொண்டையர் வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
  • திரையன் என்பவனின் தம்பி இளந்திரையன்.
  • திரையில் (கடலலையில்) வந்தவன் திரையன் எனப்பட்டான் என்னும் கருத்து உண்டு.[1]

அடிக்குறிப்பு தொகு

  1. கங்குலும் நண்பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
    மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் – ‘வெஞ் சின வேல்
    கான் பயந்த கண்ணிக் கடுமான் திரையனை
    யான் பயந்தேன்' என்னும் செருக்கு.

    என்னும் பெரும்பாணாற்றுப்படை இறுதி வென்பாவை இதற்குச் சான்றாகக் கொள்வர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமான்_இளந்திரையன்&oldid=3284119" இலிருந்து மீள்விக்கப்பட்டது