த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்

த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் (The Lost World: Jurassic Park) என்பது ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரில் இரண்டாவதாக 1997-இல் வெளியான அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும்[4]. இது அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் எழுதிய தி லாஸ்ட் வேர்ல்ட் புதினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்
இயக்கம்ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்புஜெரால்ட்.ஆர்.மோலன்
கொலின் வில்சன்
மூலக்கதைமைக்கேல் கிரைட்டன் எழுதிய தி லாஸ்ட் வேர்ல்ட்
திரைக்கதைடேவிட் கோப்
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்புஜெஃப் கோல்ட்ப்ளும்
ஜூலியான் மூர்
பீட் போஸ்ட்லெத்வெய்ட்
ஆர்லிஸ் ஹோவர்ட்
வின்ஸ் வான்
வனேசா லீ செஸ்டர்
ஒளிப்பதிவுஜானுஸ் காமினிஸ்கி
படத்தொகுப்புமைக்கேல் கான்
விநியோகம்யுனிவெர்சல் பிக்சர்ஸ்[1]
வெளியீடுமே 19, 1997 (1997-05-19)(லாஸ் ஏஞ்சலஸ்)
மே 23, 1997 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்129 மணித்துளிகள்[2]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$ 7.3 கோடி[3]
மொத்த வருவாய்$ 61.86 கோடி[3]

முந்தைய படத்தில் கணித வல்லுநர் இயான் மால்கம்-மாக நடித்த ஜெஃப் கோல்ட்ப்ளும் மீண்டும் அப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். ஏனையோர் புதுமுகங்களாவர். மேலும் சிறப்புத் தோற்றத்தில் ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஜோசெஃப் மெஸெல்லோ மற்றும் அரியானா ரிச்சர்ட்ஸ் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர்.

முதல் படத்தின் நிகழ்வுகளுக்குப் பின் நான்காண்டுகள் கழிந்த நிலையில் இப்படத்தின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.நடு அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவின் அருகிலுள்ள ஈஸ்லா சோர்னா என்ற கற்பனைத் தீவில் கதைக்களம் அமைந்துள்ளது. அங்கு ஜான் ஹேமன்டின் இன்ஜென் நிறுவனம் படியெடுப்பு முறையில் மீளுருவாக்கிய தொன்மாக்கள் (Dinosaurs) தங்கள் சொந்த சூழல் மண்டலத்தில் கட்டற்று உலாவுகின்றன. இன்ஜென்னின் புதிய தலைவரான தன் மருமகன், அவற்றைத் தலைநிலத்துக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதை அறியும் ஹேமன்ட், இதைத் தடுக்கவேண்டி இயான் மால்கம் தலைமையில் ஒரு குழுவை அங்கு அனுப்புகிறார். பேரிடர்ச் சூழலில் சந்தித்துக்கொள்ளும் இவ்விரு குழுவினரும் சூழல் கருதி ஒன்றிணைகின்றனர்.

முதல் புதினம் வெளியாகி அதன் திரைப்படத் தழுவலும் வெற்றியடைந்தபின் கிரைட்டன், ஸ்பில்பேர்க் ஆகிய இருவரையும் அவற்றின் தொடர்ச்சிகளை உருவாக்குமாறு வாசகர்கள் வற்புறுத்தினர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1995-ஆம் ஆண்டு கிரைட்டனின் த லொஸ்ட் வேர்ல்ட் புதினம் வெளியானபின்னர் திரைப்படத் தொடர்ச்சியின் தயாரிப்புப் பணி துவங்கியது. படப்பிடிப்பு 1996 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை கலிபோர்னியாவிலும் கவாய் தீவிலும் நடைபெற்றது. இத்தொடர்ச்சியின் கதையும் காட்சிப்புலனும் முந்தைய படத்தை விடக் கணிசமான அளவில் இருண்டுள்ளன. தொன்மாக்களைச் சித்தரிக்க CGI தொழில்நுட்பத்தையும் அனிமேட்ரானிக்ஸ் மாதிரிகளையும் விரிவான அளவில் இப்படம் கையாண்டுள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் இது 1997-இல் அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஜுராசிக் பார்க் III என்ற திரைப்படம், ஜூலை 18, 2001 அன்று வெளியானது.

கதைச் சுருக்கம் தொகு

ஈஸ்லா நுப்லார் தீவிலிருந்த ஜுராசிக் பார்க் அழிந்து நான்காண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் அதன் அருகமைத் தீவான ஈஸ்லா சோர்னாவுக்கு (Isla Sorna) தன் குடும்பத்தோடு சுற்றுலா வரும் கேத்தி போமேன் என்ற பிரித்தானியச் சிறுமி, காம்ப்ஸோக்னாதஸ் என்ற தொன்மாக்களால் தாக்கப்படுகிறார். அச்சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டபின், இன்ஜென் நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுக்கின்றனர். அதன் புதிய தலைவரான பீட்டர் லுட்லோ (ஹேமன்டின் மருமகன்) ஈஸ்லா சோர்னாவைப் பயன்படுத்தி நிதி இழப்புகளிலிருந்து மீள எண்ணுகிறார்.

இதற்கிடையே கணித வல்லுநர் இயான் மால்கம், ஹேமன்டைச் சந்திக்கிறார். ஈஸ்லா நுப்லாரிலிருந்த ஜுராசிக் பார்க் தொன்மாக்கள், முதலில் ஈஸ்லா சோர்னாவில்தான் உருவாக்கப்பட்டன. அத்தீவு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சூறாவளியின் போது கைவிடப்பட்டது என ஹேமன்ட் விளக்குகிறார். மேலும் அத்தீவுக்கு ஒரு குழுவை அனுப்பி அங்குள்ள தொன்மாக்களை ஆவணப்படுத்தினால் அங்கு நிகழவிருக்கும் மனிதக் குறுக்கீட்டைத் தடுக்கவியலும் என அவர் நம்புகிறார். அக்குழுவின் உறுப்பினரும் தன் தோழியுமான தொல்லுயிரியலாளர் சாரா ஹார்டிங் ஏற்கனவே அங்கு சென்றிருப்பதை அறியும் மால்கம் (அவரை மீட்டெடுக்கும் ஒரே நோக்கத்துடன்) ஈஸ்லா சோர்னாவுக்குச் செல்ல ஒப்புகிறார்.

பின் அவர் தனது அணியினரான எட்டி கார் மற்றும் நிக் வான் ஓவென் ஆகியோருடன் ஈஸ்லா சோர்னாவை அடைந்து சாராவைக் கண்டுபிடிக்கிறார். மேலும் இவர்கள் தங்கள் டிரெய்லர் ஒன்றில் மால்கம்மின் மகள் கெல்லி மறைந்து வந்துள்ளதை அறிகின்றனர். இச்சமயம் லுட்லோ தலைமையிலான இன்ஜென் குழுவும் வந்திறங்கி அங்குள்ள தொன்மாக்களைச் சிறைப்பிடிக்கிறது. இவையனைத்தும் சான் டியேகோ நகரில் புதிதாக அமையவுள்ள கருப்பொருள் பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்படுமென அறியும் மால்கம் குழுவினர், அன்றிரவு இன்ஜென் முகாமுக்குள் கமுக்கமாக நுழைந்து அவற்றை விடுவிக்கின்றனர். இவை அம் முகாமை முற்றாக அழிக்கின்றன.

இந்நிகழ்வுக்குச் சற்றுமுன் இன்ஜென் குழுவின் தலைமை வேட்டைக்காரர் ரோலன்ட் டெம்போ, ஒரு ஆண் டைரனோசாரஸை (டி ரெக்ஸ்) அதன் குட்டியின் அழுகுரலைக் கொண்டு கவரத் திட்டமிட்டிருந்தார். முகாம் அழிந்தபின் அக் குட்டியை மீட்கும் நிக், டிரெய்லரில் சாராவுடன் இணைந்து அதன் உடைந்த காலைச் சீர்செய்கிறார்.

இதே நேரத்தில் குட்டியை அதன் பெற்றோர் தேடுவதை உணரும் மால்கம், கெல்லியை எட்டியிடம் விட்டு டிரெய்லருக்கு விரைகிறார். சிறிது நேரத்தில் பெற்றோர் ரெக்ஸ்கள் டிரெய்லருக்கு அருகில் வருகின்றன. அவற்றிடம் குட்டி விடப்பட்டபின்னர் எதிர்பாராவிதமாக டிரெய்லரை அருகிலுள்ள குன்றிலிருந்து தள்ளி தொங்கவிட்டுச் செல்கின்றன. எட்டி, ஒரு SUV-ஐக் கொண்டு அந்த டிரெய்லரை மேலிழுத்து நிறுத்த முயல்கையில், திரும்பிவரும் பெற்றோர் ரெக்ஸ்களுக்கு இரையாகிறார்.

மால்கம், சாரா, நிக்,கெல்லி ஆகியோரை இன்ஜென் குழுவினர் மீட்கின்றனர். தங்களின் தளவாடங்கள் அனைத்தும் அழிந்துவிட்டதால் இரு குழுவினரும் இணைந்து அத்தீவில் முன்பு செயல்பட்ட இன்ஜென் நிலையத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். சாராவின் மேலாடையில் இருந்த குட்டியின் குருதியை மோப்பம் பிடித்துப் பின்தொடரும் பெற்றோர் ரெக்ஸ்கள் மறுநாள் இரவில் அக்குழுவைத் தாக்குகின்றன. இதில் தப்பும் அஜய் சித்துவும் பிற இன்ஜென் ஆட்களும் ஒரு அடர்ந்த புல்வெளியூடே தப்புகையில் வெலாசிராப்டர்களால் கொல்லப்படுகின்றனர்.

இன்ஜென் நிலையத்தை அடையும் மால்கம் குழுவினர், மேலும் சில ராப்டர்களைச் சமாளித்தபின் தலைநிலத்திலிருந்து சுழலிறகியை வரவழைத்து அத் தீவிலிருந்து வெளியேறுகின்றனர். ஆண் டி-ரெக்ஸை ரோலன்ட் கொல்வதைத் தடுக்க அவரின் தோட்டாக்களைத் திருடியதாக நிக் கூறுகிறார். எனினும் ரோலன்ட் அவ்விலங்கை மயக்கப்படுத்தியுள்ளதை இவர்கள் காண்கின்றனர். அஜய்யின் மரணத்தால் துயருறும் ரோலன்ட், லுட்லோவின் தீய நோக்கத்தை அறிந்துகொண்டமையால், சான் டியேகோ பூங்காவில் பணியாற்றும் வாய்ப்பை மறுத்துவிடுகிறார்.

சான் டியேகோவை அடைந்தபின் மால்கம்மும் சாராவும் லுட்லோவைக் காணவும் அவரின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தவும் முயல்கின்றனர். அப்பொழுது ஆண் டி-ரெக்ஸையும் குட்டியையும் சுமந்துவரும் சரக்குக் கப்பல், நகரின் கப்பல்துறையில் மோதுகிறது. அதிலுள்ள பிற தொன்மாக்கள் (ராப்டர்களாக இருக்கலாம்) அதன் மாலுமிகளைக் கொன்றுவிட்டதாகத் தெரிகிறது. இதன்பின் தற்செயலாக விடுவிக்கப்படும் டி-ரெக்ஸ், நகரில் நுழைந்து பேரழிவை ஏற்படுத்துகிறது.

சான் டியேகோ பூங்காவிலிருந்து டி-ரெக்ஸ் குட்டியை மீட்கும் மால்கம்மும் சாராவும் அதை வைத்து ஆண் டி-ரெக்ஸைக் கவர்ந்து கப்பலின் சரக்குக் கிடங்கினுள் மீண்டும் அடைக்கின்றனர். அங்கு சிக்கிக்கொள்ளும் லுட்லோ, குட்டிக்கு இரையாகிறார். ஆண் டி-ரெக்ஸை சாரா மயக்கப்படுத்தியபின் மால்கம் கிடங்கை மூடுகிறார்.

அவ்விலங்குகள் மீண்டும் ஈஸ்லா சோர்னாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. இதன்பின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும் ஹேமன்ட், அமெரிக்க மற்றும் கோஸ்டா ரிக்க அரசுகள் ஈஸ்லா சோர்னாவை ஒரு இயற்கைக் காப்பகமாக அறிவித்துள்ள செய்தியைப் பகிர்கிறார். மேலும் வாழ்க்கை வழிகாணும் (life will find a way) எனக் கூறி முடிக்கிறார்.

நடித்தவர்கள் தொகு

முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய கதைமாந்தரின் பட்டியல்

எண் கதைமாந்தர் நடித்தவர் குறிப்பு
1 இயான் மால்கம் (Dr.Ian Malcolm) ஜெஃப் கோல்ட்ப்ளும் (Jeff Goldblum) கணித வல்லுநர் மற்றும் ஒழுங்கின்மைக் கோட்பாட்டாளர்;

ஜுராசிக் பார்க் அழிந்தபோது உயிர்தப்பியவர்

2 சாரா ஹார்டிங் (Dr. Sarah Harding) ஜூலியான் மூர் (Julianne Moore) தொல்லுயிர் நடத்தை ஆய்வாளர்; மால்கம்மின் தோழி
3 கெல்லி கர்டிஸ் (Kelly Curtis) வனேசா லீ செஸ்டர் (Vanessa Lee Chester) மால்கம்மின் பதின்வயது மகள்
4 நிக் வான் ஓவென் (Nick Van Owen) வின்ஸ் வான் (Vince Vaughn) ஆவணப்படத் தயாரிப்பாளர்; சுற்றுச்சூழல் ஆர்வலர்
5 ரோலன்ட் டெம்போ (Roland Tembo) பீட் போஸ்ட்லெத்வெய்ட் (Pete Postlethwaite) ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெருவிலங்கு வேட்டைக்காரர்; இன்ஜென் வேட்டைக்குழுவின் தலைவர்
6 ஜான் ஹேமன்ட் (John Hammond) ரிச்சர்ட் ஆட்டன்பரோ (Richard Attenborough) இன்ஜென் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்; ஜுராசிக் பார்க்கை உருவாக்கியவர்
7 பீட்டர் லுட்லோ (Peter Ludlow) ஆர்லிஸ் ஹோவர்ட் (Arliss Howard) இன்ஜென் நிறுவனத்தின் புதிய தலைவர்; ஹேமன்டின் மருமகன்
8 டீட்டர் ஸ்டார்க் (Dieter Stark) பீட்டர் ஸ்டோர்மேர் (Peter Stormare) இன்ஜென் வேட்டைக்குழுவின் இரண்டாம்நிலைத் தலைவர்; குழுவிலிருந்து எதிர்பாராமல் பிரிகையில் காம்ப்ஸோக்னாதஸ் கூட்டம் ஒன்றுக்கு இரையாகிறார்
9 அஜய் சித்து ( Ajay Sidhu) ஹார்வி ஜேசன் (Harvey Jason) இந்தியாவைச் சேர்ந்தவர்; டெம்போவின் நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளி
10 எட்டி கார்ர் (Eddie Carr) ரிச்சர்ட் ஸ்கிஃப் (Richard Schiff) கள ஆய்வுக்கருவி வல்லுநர்
11 இராபர்ட் பர்க் (Dr. Robert Burke) தாமஸ் எஃப். டஃபி (Thomas F. Duffy) இன்ஜென் குழுவின் தொன்மா வல்லுநர்; பெண் டி-ரெக்ஸுக்கு இரையாகிறார்
12 அலெக்சிஸ் "லெக்ஸ்' மர்ஃபி (Alexis "Lex" Murphy) அரியானா ரிச்சர்ட்ஸ் (Ariana Richards) ஹேமன்டின் பேர்த்தி; ஈஸ்லா நுப்லார் நிகழ்வுகளில் தன் தம்பி டிம்முடன் உயிர்பிழைத்தவர்
13 திமோத்தி "டிம்" மர்ஃபி (Timothy"Tim" Murphy) ஜோசெஃப் மெஸெல்லோ (Joseph Mazello) ஹேமன்டின் பேரன்
14 கார்ட்டர் (Carter) தாமஸ் ரொஸெல்ஸ் ஜூனியர் (Thomas Rosales, Jr.) இன்ஜென் குழு உறுப்பினர்; பெண் டி-ரெக்ஸால் கொல்லப்படுகிறார்
15 கேத்தி போமேன் (Cathy Bowman) கமிலா பெல் (Camilla Belle ) காம்ப்ஸோக்னாதஸ்களால் தாக்கப்பட்ட சிறுமி
16 பால் போமேன் (‌‌Paul Bowman) ராபின் சாக்ஸ் (Robin Sachs) கேத்தியின் தந்தை
17 டீர்ட்ரெ போமேன் (‌‌Deirdre Bowman) சிட் ஸ்ட்ரிட்மாட்டர் (Cyd Strittmatter) கேத்தியின் தாய்
18 பெர்னார்ட் ஷா (ஊடகவியலாளர்) (Bernard Shaw) பெர்னார்ட் ஷா (ஊடகவியலாளர்) தொலைக்காட்சித் தோற்றம்

தயாரிப்பு தொகு

திரையில் தோன்றிய உயிரினங்கள் தொகு

முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்

ஜுராசிக் பார்க் படத்தில் பெரும்பாலும் ஸ்டான் வின்ஸ்டன் குழுவினர் உருவாக்கிய அசைவூட்டத் தொன்மாக்களே இடம்பெற்றிருந்தன. ஆனால் த லொஸ்ட் வேர்ல்ட் படம், இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் நிறுவனத்தின் CGI தொழில்நுட்பத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்தது. எனவே டிஜிட்டல் கலைஞர்கள் தொன்மாக்களைச் சேர்ப்பதற்கு வசதியாகப் பெரிய ஷாட்கள் படமாக்கப்பட்டன.[5] படத்தில் மொத்தம் 75 கணிணிவழி ஷாட்கள் உள்ளன.[6] வேட்டைக்காட்சியில் பாக்கிசெஃபலோசாரஸ் சிலவற்றின் ஷாட்களைத் தவிர மற்றவை கணிணிவழி ஷாட்களாகும்.[7]

ஜாக் ஹார்னரின் ஆலோசனைக்கிணங்க ஸ்பில்பேர்க், இயன்றவரை அறிவியல் துல்லியத்துடன் தொன்மாக்களைக் காட்ட முனைந்தார். தொல்லுயிரியல் உண்மைகளையும் ஊகங்களையும் அடிப்படையாகக் கொண்டு வின்ஸ்டன் குழுவினர் தொன்மாக்களை வடிவமைத்தனர். அசைவூட்ட மாதிரிகள் மட்டுமின்றி முன்னோட்டச் சிலை மாதிரிகளும் பயன்பட்டன.[7]. தொன்மாக்களின் அசைவுகளை உயிரோட்டமாகக் காட்டும் நோக்கில் ILM அசைவூட்டக் கலைஞர்கள், மரைன் வேர்ல்ட் / ஆப்பிரிக்கா யுஎஸ்ஏ பூங்காவிலுள்ள யானைகள், ஊர்வன மற்றும் காண்டாமிருகங்களின் அசைவுகளைப் படமெடுத்தனர்.[6] முதல் படத்தின் பின் தொழில்நுட்பம் பெருவளர்ச்சி பெறாவிடினும் படைப்பாற்றல் மிக்க கணிணிக் கலைஞர்களின் கலைத்திறன் முன்னேறியுள்ளதாக ஸ்பில்பேர்க் குறிப்பிட்டார். விலங்குகளிடம் மேம்பட்ட நுணுக்கமும், ஒளியமைப்பும் சதைச்சாயலும் அசைவும் உள்ளன.ஒரு தொன்மா தன் எடையை இடவலமாக மாற்றுகையில், கொழுப்பும் தசைநாணும் மென்மையாக, உடலியல்ரீதியில் சரியாக இயங்குகின்றன என்பதாகக் கூறினார்.[8] அனைத்துத் தொன்மாக்களின் முக அசைவுகளும் சர்வோ கட்டுப்பாட்டை (servo control) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.[7]

முதல் படம், தொன்மாக்களை சிறப்பு விளைவுகளின் வழியே போதுமான அளவு மீளுருவாக்க முடியும் எனக் காட்டியிருந்தாலும், இத் தொடர்ச்சி, அவற்றைக் கொண்டு என்ன செய்ய முடியும் என வினாவெழுப்பியது.[9][10] வின்ஸ்டன் கூறுகையில் ஜுராசிக் பார்க்கில் தாங்கள் காணாததை (கூடுதல் தொன்மாக்களும் கூடுதல் தொன்மா சாகசமும்) உலகிற்குக் காட்ட விழைந்தேன். 'கூடுதலாக, இன்னும் பெரிதாக, மேம்பட்டதாக' என்பதே எங்கள் குறிக்கோளாக இருந்தது என்றார்.[11] சில அசைவூட்ட மாதிரிகள் $ 10 லட்சம் செலவும் 9.5 டன் எடையும் கொண்டிருந்தன.[8] பெரிய டி. ரெக்ஸ் தானியங்கியால் வலமிருந்து இடமாக நகரும்போது இரண்டு G ஆற்றலை இழுக்க முடியும். இதைவைத்து யாரையாவது அடித்தால், அவர் இறந்துவிடுவார். எனவே ஒருவகையில் இம் மாதிரிகளை உயிருள்ள, ஆபத்தான விலங்குகளாகவே கருதினோம் என்று சிறப்பு விளைவு மேற்பார்வையாளர் மைக்கேல் லான்டியெரி கூறினார்.[11]

  • காம்ப்ஸோக்னாதஸ் (Compsognathus)[12]

ஸ்டான் வின்ஸ்டன் குழுவினரால் காம்பிகள் (Compies) என்றழைக்கப்பட்ட இவ்விலங்குகள், குழுவாக வேட்டையாடும் ஊனுண்ணி தெரொபோட் வகையினவாகும். திரைவண்ண மேற்பார்வையாளர் டென்னிஸ் முரென், இவற்றை ஆகச் சிக்கலான டிஜிட்டல் தொன்மாக்களாகக் கருதினார். சிறிய அளவிலான இவ்விலங்குகள் திரையில் முழுதும் தெரியக்கூடியனவாக இருந்தமையால் ஈர்ப்பு விசை மற்றும் எடை சார்ந்த உயர் உணர்வு தேவைப்பட்டது.

படத்தின் துவக்கக் காட்சியில் இவ்விலங்கின் எளிய பொம்மை மாதிரி ஒன்று இடம்பெற்றது. டீட்டர் ஸ்டார்க், காம்ப்ஸோக்னாதஸ் குழுவால் கொல்லப்படும் காட்சியில் அப்பாத்திர நடிகரான பீட்டர் ஸ்டோர்மேர், பல்வேறு ரப்பர் காம்பிகள் இணைக்கப்பட்ட மேலாடை ஒன்றை அணிந்திருந்தார்.[5] ஒரு காட்சியில் இராபர்ட் பர்க் இவற்றை Compsognathus triassicus என இல்லாத ஒரு பெயரால் தவறாகக் குறிப்பிடுகிறார் (Compsognathus longipes மற்றும் Procompsognathus triassicus ஆகிய பெயர்களின் இணைவு)[13].

  • காலிமைமஸ் (Gallimimus)

இவை, இன்ஜென் வேட்டைக்குழுவிடமிருந்து தப்பியோடுவனவாகக் காட்டப்பட்டுள்ளன.

  • மாமெங்கிசாரஸ் (Mamenchisaurus)

இவை, இன்ஜென் வேட்டைக்காட்சியில் சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளன.முதல் படத்தின் பிராக்கியோசரஸ் மாதிரி, இதற்கென மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் CGI முறையும் பயன்படுத்தப்பட்டது.[7]

  • பாக்கிசெஃபலோசாரஸ் (Pachycephalosaurus)

இவை, ஐந்தடி உயரமும் எட்டடி நீளமும் கொண்டவை. படப்பிடிப்புக்காக முழு ஹைட்ராலிக் பொம்மை, தலை மற்றும் தலையிடிப்பான் (head-butter) ஆகிய மூன்று மாதிரிகள் செய்யப்பட்டன. உயர் அடிவேகத்தைத் தாங்கும்படி செய்யப்பட்ட மூன்றாம் மாதிரி, வேட்டைக்குழுவின் சிற்றுந்தைத் தாக்கும் காட்சியில் பயன்பட்டுள்ளது. சிறைப்படும் காட்சியில் (ஆகச் சிக்கலானவற்றுள் ஒன்றான) முதல் மாதிரி பயன்பட்டது. இதன் கால்கள் காற்றழுத்த முறையில் இயக்கப்பட்டன.[7]

  • பாராசாரோலோஃபஸ் (Parasaurolophus)

இவை ஒரு காட்சியில் இன்ஜென் குழுவினரால் வேட்டையாடப்படுகின்றன. வின்ஸ்டன் குழுவினர் இக்காட்சிக்காகக் கைப்பாவை மாதிரி ஒன்றை உருவாக்குவதாக இருந்தது. எனினும் ILM குழு இறுதியில் CGI முறையில் அதைச் செய்தது. இதற்காக வின்ஸ்டன் குழுவினர் செய்த சிறிய சிலை ஒன்று பயன்பட்டது. நீக்கப்பட்ட துவக்கக் காட்சி ஒன்றில், ஒரு பாராசாரோலோஃபஸின் சிதைந்த உடலை ஜப்பானிய மீன்பிடிக் கலன் ஒன்று கண்டெடுப்பதாக இருந்தது. இதற்காக வின்ஸ்டன் குழுவினர் உருவாக்கிய செயல்முறை மாதிரி, டி-ரெக்ஸ் கூட்டுக்காட்சியில் தோன்றுகிறது.[14]

  • ஸ்டெகோசாரஸ் (Stegosaurus)

இயக்குநர் ஸ்பில்பேர்க், இத் தொன்மாக்களை பொது வேண்டுகோளுக்கிணங்க சேர்க்கப்பட்டவை என்று வருணித்தார். குட்டி, பெரிய விலங்கு ஆகிய இரு முழு உருவ ஸ்டெகோசாரஸ் மாதிரிகளை ஸ்டான் வின்ஸ்டன் குழுவினர் உருவாக்கினர். எட்டடி நீளமும் 400 பவுண்டு (181 கிலோ) எடையும் கொண்ட குட்டியின் மாதிரி, படப்பிடிப்புக்காக ரெட்வுட் காட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பெரிய மாதிரிகள், 16 அடி உயரமும் 26 அடி நீளமும் கொண்டிருந்தன. இவை காட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டாலும் நகர்வுத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பயன்படுத்தப்படவில்லை.[5] இறுதியில் இவற்றுக்காக டிஜிட்டல் மாதிரிகளைக் கையாள ஸ்பில்பேர்க் முடிவுசெய்தார்.[5] முழுவுருவ ஸ்டெகோசாரஸ் மாதிரி ஒன்று, கூண்டுக்காட்சியில் மட்டுமே சில நொடிகளுக்குத் தோன்றுகிறது.[13]

  • டிரைசெரடாப்ஸ் (Triceratops)

இவை, இன்ஜென் குழுவினரால் வேட்டையாடப்படுகின்றன. கூண்டுக்காட்சிக்காக வின்ஸ்டன் குழுவினர் டிரைசெரடாப்ஸ் குட்டி ஒன்றின் மாதிரியை உருவாக்கினர். முதல் படத்துக்காக இதேபோல் ஒரு மாதிரி செய்யப்பட்டுப் பின் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தகுந்தது.[13]

இவை, இரு பெற்றோரும் ஒரு குட்டியும் அடங்கிய குடும்பமாகத் தோன்றுகின்றன.[5] இவற்றுள் ஒன்றுக்காக முதல் படத்தின் மாதிரி பயன்பட்டது.[12] இரு செயல்வடிவ மாதிரிகள் இடம்பெற்றதால் இருமடங்கு உழைப்பு தேவைப்பட்டது.[5] தலையிலிருந்து இடைவரை மட்டுமே செய்யப்பட்ட இவை ஒன்பது டன் எடையும் $ 10 லட்சம் விலையும் கொண்டிருந்தன.[15][16] முழுவுடல் காட்சிகளுக்காக CGI முறை பயன்படுத்தப்பட்டது.[17] டிரெய்லர் வண்டியைத் தாக்கும் காட்சிக்காக இவை முன்பின்னாக நகரும் வகையில் ஒலிப்பதிவுத் தளத்தில் 80 அடி நீளத் தண்டவாளம் அமைக்கப்பட்டது.[17] இடையில் இவற்றை நகர்த்தவியலாமையால் புதிய செட்கள் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டன.[12][5] எட்டி பெற்றோர் ரெக்ஸ்களால் கொல்லப்படும் காட்சியில், இரு ஷாட்களில் CGI முறை பயன்பட்டது.[13]

குட்டிக்கு இரு வெவ்வேறு செயல்வடிவ மாதிரிகள் இருந்தன. அவை:

1. நடிகர்கள் எளிதில் கையாளக்கூடிய, தன்னிறைவு கொண்ட தொலையியக்கி மாதிரி

2. நீரியல் மற்றும் கம்பி வடங்களால் இயக்கப்பட்ட கலப்பு மாதிரி.[5]

இத் தொன்மாக்களுக்காக, உடலின் மேற்பாதியைக் காட்டும் ஒரு இயந்திர மாதிரியும், ஒரு டிஜிட்டல் முழுநீள கணினி மாதிரியும் உருவாக்கப்பட்டன.[18] படத்துக்காக ஒரு சூப்பர்-ராப்டரும் பரிசீலிக்கப்பட்டது. எனினும் அது திகில் படம்போலாகிவிடும். நான் ஒரு ஏலியனை உருவாக்க விரும்பவில்லை எனக் கூறி அதை நிராகரித்தார் ஸ்பில்பேர்க்.[6]

  • டெரெனெடான் (Pteranodon)

இவ்விலங்குகள், திரைப்படத்தின் இறுதியில் சில நொடிகளுக்குத் தோன்றுகின்றன.

  • எட்மான்டோசாரஸ் (Edmontosaurus)

இத் தொன்மாவின் மண்டையோடு மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "The Lost World: Jurassic Park". AFI Catalog of Feature Films. Archived from the original on June 29, 2018. பார்க்கப்பட்ட நாள் July 9, 2017.
  2. "The Lost World – Jurassic Park". பிரித்தானியத் திரைப்படத் தணிக்கை வாரியம். Archived from the original on January 7, 2016. பார்க்கப்பட்ட நாள் April 4, 2013.
  3. 3.0 3.1 "The Lost World: Jurassic Park (1997)". Box Office Mojo. Archived from the original on May 9, 2021. பார்க்கப்பட்ட நாள் May 27, 2021.
  4. "The Lost World: Jurassic Park (1997) - Steven Spielberg". AllMovie. Archived from the original on April 10, 2021. பார்க்கப்பட்ட நாள் February 27, 2021.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 "Return to Jurassic Park: Finding The Lost World", The Lost World: Jurassic Park Blu-Ray
  6. 6.0 6.1 6.2 Notbohm, Brent; Friedman, Lester D. (2019). Steven Spielberg: Interviews, Revised and Updated. Univ. Press of Mississippi. பக். 131, 136–138, 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4968-2404-2. https://books.google.com/books?id=V5qfDwAAQBAJ&pg=PA136. பார்த்த நாள்: February 20, 2020. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Duncan, Jody (1997). The Making of The Lost World: Jurassic Park. Ballantine Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780345407344. https://books.google.com/books?id=o6YqAAAAYAAJ. பார்த்த நாள்: February 20, 2020. 
  8. 8.0 8.1 Ressner, Jeffrey (May 19, 1997). "Cinema: I Wanted to See a T. rex Stomping Down a Street". Time. Archived from the original on October 3, 2018. பார்க்கப்பட்ட நாள் November 12, 2015.(subscription required)
  9. "Encore section". www.Lost-World.com. Archived from the original on July 12, 2018. பார்க்கப்பட்ட நாள் November 10, 2014.
  10. Warren, Bill; Shapiro, Marc (September 1997). "Writer of Rampages". Starlog. pp. 70–73. பார்க்கப்பட்ட நாள் February 20, 2020.
  11. 11.0 11.1 Crisafulli, Chuck (May 11, 1997). "How to Build a Better Dino". Los Angeles Times: pp. 1–3 இம் மூலத்தில் இருந்து December 3, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151203224913/http://articles.latimes.com/1997-05-11/entertainment/ca-57544_1_jurassic-park. 
  12. 12.0 12.1 12.2 "Pre-Production section". www.Lost-World.com. Archived from the original on October 19, 2019. பார்க்கப்பட்ட நாள் November 10, 2014.
  13. 13.0 13.1 13.2 13.3 Berry, Mark F. (2015). "The Lost World: Jurassic Park". The Dinosaur Filmography. McFarland. பக். 265–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4766-0674-3. https://books.google.com/books?id=NouACgAAQBAJ&pg=PA265. பார்த்த நாள்: March 6, 2020. 
  14. "Jurassic Party - JP 1-3 & Jurassic World Practical Dinosaur Crew Reunion". Stan Winston School. June 26, 2015. 3:02:30. Archived from the original on August 10, 2020. பார்க்கப்பட்ட நாள் May 28, 2020.
  15. "Chase, Crush and Devour". American Society of Cinematographers. June 1997. pp. 1–4. Archived from the original on March 6, 2020. பார்க்கப்பட்ட நாள் March 6, 2020.
  16. Stein, Ruthe (May 18, 1997). "Summer Movie Guide". SFGate இம் மூலத்தில் இருந்து February 20, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200220195814/https://www.sfgate.com/entertainment/article/SUMMER-MOVIE-GUIDE-We-re-Talking-BIG-2840339.php. 
  17. 17.0 17.1 "The Lost World Jurassic Park 2's T-Rexes". Stan Winston School of Character Arts. May 29, 2012. Archived from the original on March 19, 2020. பார்க்கப்பட்ட நாள் March 19, 2020.
  18. "Return to Jurassic Park: Something Survived", The Lost World: Jurassic Park Blu-Ray