நசிருதீன் உமாயூன்

இரண்டாவது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1530-1540, 1555-1556)

நசிருதீன் முகம்மது (Nasir-ud-Din Muḥammad, பாரசீக மொழி: ناصرالدین محمد) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) என்பவர் இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இன்றைய கிழக்கு ஆப்கானித்தான், பாக்கித்தான், வட இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய பகுதிகளை 1530-1540 வரையும், பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபுர். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை பாபுரைப் போலவே இவரும் தனது இராச்சியத்தை ஆரம்பத்தில் இழந்தார். பிறகு பாரசீகத்தின் சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். 1556இல் உமாயூனின் இறப்பின் போது முகலாயப் பேரரசானது கிட்டத்தட்ட 10 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது.

நசிருதீன் முகம்மது
உமாயூன்
அல் சுல்தான் அல் ஆசம்
[1]
உமாயூனின் ஓவியம்
முகலாயப் பேரரசின் 2வது பேரரசர்
முதல் ஆட்சி26 திசம்பர் 1530 – 17 மே 1540
முடிசூட்டுதல்29 திசம்பர் 1530, ஆக்ரா
முன்னையவர்பாபுர்
பின்னையவர்சேர் சா சூரி (சூர் அரசமரபு)
வாரிசுஅல் அமன் மிர்சா
இரண்டாம் ஆட்சி22 சூன் 1555 – 27 சனவரி 1556
முன்னையவர்அடில் ஷா சூரி
பின்னையவர்அக்பர்
பிறப்புநசிருதீன் முகம்மது [2]
6 மார்ச் 1508
காபூல் (தற்கால ஆப்கானித்தான்)
இறப்பு27 சனவரி 1556(1556-01-27) (அகவை 47)
தில்லி, முகலாயப் பேரரசு (தற்கால இந்தியா)
புதைத்த இடம்
பட்டத்து இராணி
மனைவிகள்
  • பலர், பின்வருமாறு:
  • மா சுச்சக் பேகம்
    (தி. 1546)
    [3]
  • கனிசு அகாச்சா
  • குன்வர் பீபி[4]
  • மெவா சான்[5]
  • சாந்த் பீபி
  • சாத் பீபி
குழந்தைகளின்
பெயர்கள்
  • அல் அமன் மிர்சா
  • அகிகா சுல்தான் பேகம்
  • பக்சி பானு பேகம்
  • அக்பர்
  • ஜஹான் சுல்தான் பேகம்
  • பக்துன்னிசா பேகம்
  • பரூக் பால் மிர்சா
  • மிர்சா முகம்மது அக்கீம்
  • இப்ராகிம் சுல்தான் மிர்சா
  • சகீனா பானு பேகம்
  • அமீனா பானு பேகம்
பெயர்கள்
நசிருதீன் முகம்மது உமாயூன் [2]
மறைவுக்குப் பிந்தைய பெயர்
ஜன்னத் அசுயானி (பொருள். சொர்க்கத்தில் வாழ்பவர்)
மரபுபாபுர் குடும்பம்
அரசமரபுதைமூர் குடும்பம்
தந்தைபாபுர்
தாய்மகம் பேகம்
மதம்சன்னி இசுலாம்

திசம்பர் 1530இல் தனது தந்தைக்குப் பிறகு உமாயூன் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த முகலாயப் பகுதிகளுக்கு ஆட்சியாளராக தில்லி அரியணைக்கு வந்தார். ஆட்சிக்கு வந்த போது உமாயூன் ஓர் அனுபவமற்ற ஆட்சியாளராக இருந்தார். அப்போது இவருக்கு வயது 22 ஆகும். இவரது ஒன்று விட்ட சகோதரரான கம்ரான் மிர்சா தங்களது தந்தையின் பேரரசின் வடக்குக் கோடிப் பகுதிகளான காபூல் மற்றும் காந்தாரம் ஆகியவற்றைப் பெற்றிருந்தார். இந்த இரு ஒன்று விட்ட சகோதரர்களும் கசப்புணர்வு கொண்ட எதிரிகளாக உருவாயினர்.

உமாயூன் முகலாயப் பகுதிகளை சேர் சா சூரியிடம் இழந்தார். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனைத் திரும்பப் பெற்றார். பாரசீகத்தில் இருந்து திரும்பிய உமாயூன் தன்னுடன் ஒரு பெரிய பாரசீக உயர்குடியினரின் பரிவாரத்துடன் வந்தார். முகலாய அவைக் கலாச்சாரத்தில் ஏற்படப்போகும் ஒரு முக்கியமான மாற்றத்தை இந்த சமிக்ஞை காட்டியது. முகலாய அரசமரபின் நடு ஆசியப் பூர்வீகமானது பாரசீகக் கலை, கட்டடக்கலை, மொழி மற்றும் இலக்கிய தாக்கத்தால் பெருமளவு மாறியது. உமாயூனின் காலத்திலிருந்து பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாரசீகக் கையெழுத்துப் பிரதிகள் இந்தியாவில் கிடைக்கப் பெறுகின்றன.

இறுதியாக உமாயூன் ஒரு மிகக் குறுகிய காலத்திலேயே தனது பேரரசை விரிவாக்கினார். இதன் மூலம் தனது மகன் அக்பருக்கு ஒரு பெரும் மரபை விட்டு சென்றார்.

1535இல் உமாயூன் குசராத்தின் ஆளுநராக இருந்த போது காம்பேவுக்கு (காம்பத்) அருகில் முகாமிட்டிருந்தார்.குசராத்தின் கோலிகளால் உமாயூனும், இவரது இராணுவமும் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது.[6][7][8][9]

பின்னணி தொகு

உமாயூன் நசிருதீன் முகம்மது என்ற இயற்பெயருடன் பாபுருக்கும் அவரது விருப்பத்துக்குரிய மனைவியான மகம் பேகத்திற்கும் 6 மார்ச் 1508 அன்று செவ்வாய்க் கிழமையில் பிறந்தார். அபுல் பசல் என்பவரின் கூற்றுப்படி, மகம் உண்மையில் குராசானின் சுல்தான் உசைன் மிர்சாவின் உயர் குடியினக் குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார். மேலும், அவர் சேக் அகமது சானுடன் உறவுமுறை உடையவராக இருந்தார்.[10][11]

செங்கிஸ் கானின் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்ட ஒரு பொதுவான நடு ஆசியப் பழக்கமாக இருந்த போதிலும், தன்னுடைய பேரரசின் நிலப்பரப்புகளை தனது இரு மகன்களுக்கு இடையே பிரித்துக் கொடுக்கும் பாபுரின் முடிவானது இந்தியாவில் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. முதல் மகனுக்கு அரசைக் கொடுக்கும் பழக்கங்களைக் கொண்ட பெரும்பாலான முடியாட்சிகளைப் போல் இல்லாமல் தைமூரியர்கள் செங்கிஸ் கானின் உதாரணத்தைப் பின்பற்றினர். தமது ஒட்டுமொத்த இராச்சியத்தையும் தம் முதல் மகனுக்குத் தைமூரியர்கள் கொடுக்கவில்லை. எனினும், இந்த அமைப்பின் கீழ் ஒரு சிங்கிசித்து மட்டுமே இறையாண்மைக்கும், மன்னனாக அதிகாரத்திற்கும் உரிமை கோர முடியும். செங்கிஸ் கானின் வழி வந்த எந்த ஓர் ஆணும் அரியணைக்குச் சரி சமமான உரிமை கொண்டவராக இருந்தார். எனினும், தைமூரியர்கள் சிங்கிசித்துகளாக இருக்கவில்லை.[12] செங்கிஸ் கானின் இறப்பின் போது அவரது பேரரசானது அவரது மகன்களுக்கு இடையே அமைதியாகப் பிரித்துக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், செங்கிஸ் கானுக்குப் பின் வந்த ஒவ்வொரு வழித்தோன்றலும் அரியணைக்கு வரும் போதும் அது கிட்டத்தட்ட எப்போதுமே உடன் பிறப்புகளின் கொலையில் முடிந்தது.[13][page needed]

தைமூர் தன் நிலப்பரப்புகளைப் பீர் முகம்மது, மீரான் ஷா, கலில் சுல்தான் மற்றும் சாருக் ஆகியோருக்கு இடையே பிரித்தார். இது குடும்பத்துக்குள்ளான போருக்கு இட்டுச் சென்றது.[12][full citation needed] பாபுரின் இறப்பின் போது, உமாயூனின் நிலப்பரப்புகளே குறைந்த பாதுகாப்பு உடையவையாக இருந்தன. பாபுர் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். அனைத்து உயர் குடியினருமே உமாயூனை உரிமை கொண்ட ஆட்சியாளராகக் காணவில்லை. உண்மையில், ஆரம்பத்தில் பாபுருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது உயர் குடியினரில் சிலர் பாபுரின் மைத்துனரான மகதி கவாஜாவை ஆட்சியாளராக அமர வைக்க முயற்சித்தனர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்த போதும், பின் வரும் பிரச்சினைகளின் ஓர் அறிகுறியாக இது இருந்தது.[14][full citation needed]

ஆரம்ப ஆட்சி தொகு

 
காபூலின் சர்பக்கில் உமாயூனின் பிறப்பைக் கொண்டாடும் பாபுர்.

முகலாயப் பேரரசின் அரியணைக்கு உமாயூன் வந்த போது இவரது சகோதரர்களில் பலர் இவருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். மற்றொரு சகோதரரான கலில் மிர்சா (1509-1530) உமாயூனுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், அரசியல் கொலை செய்யப்பட்டார். 1538இல் தனது சகோதரருக்காக ஒரு சமாதியைப் பேரரசர் கட்டத் தொடங்கினார். எனினும், பாரசீகத்திற்குத் தப்பும் நிலைக்கு வந்ததால் இவரால் அதை முடிக்க இயலவில்லை. இந்தக் கட்டடத்தை சேர் சா சூரி அழித்தார். உமாயூன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட பணிகள் இதில் நடைபெறவில்லை.[சான்று தேவை]

உமாயூனுக்கு இவரது நிலப்பரப்புகளுக்கு எதிராக இரண்டு முக்கிய எதிரிகள் இருந்தனர்: தென்மேற்கே குசராத்தின் சுல்தான் பகதூர் மற்றும் கிழக்கே பீகாரில் கங்கையாற்றின் பக்கவாட்டில் குடியமர்ந்திருந்த சேர் சா சூரி (சேர் கான்). உமாயூனின் முதல் படையெடுப்பானாது சேர் சா சூரியை எதிர்கொள்வதாக இருந்தது. இந்தத் தாக்குதல் பாதி அளவை எட்டியிருந்த போது உமாயூன் இதைக் கைவிட்டு விட்டு குசராத் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. குசராத்தில் அகமது ஷாவிடம் இருந்து வந்த ஓர் அச்சுறுத்தலை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குசராத்து, மால்வா, சம்பனேர் மற்றும் மாண்டுவின் பெரிய கோட்டை ஆகியவற்றை வெற்றிகரமாக உமாயூன் இணைத்தார்.[15]

உமாயூனின் ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகளின் போது பகதூரும், சேர் கானும் தங்களது ஆட்சியை விரிவாக்கினர். போர்த்துக்கீசியர்களுடன் கிழக்கில் ஏற்பட்ட அங்கொன்றும் இங்கொன்றுமான சண்டைகளால் எனினும் சுல்தான் பகதூர் அழுத்தத்தை எதிர்கொண்டார். உதுமானியப் பேரரசு மூலம் முகலாயர்கள் வெடிமருந்து ஆயுதங்களைப் பெற்ற அதே நேரத்தில், போர்த்துக்கீசியர்களிடமிருந்து ஒரு தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் மூலம் பகதூரின் குசராத்தானது வெடிமருந்து ஆயுதங்களைப் பெற்றது. வடமேற்கு இந்தியாவில் ஓர் உத்தி ரீதியிலான கால் ஊன்றலை நிறுவ போர்த்துக்கீசியர்களுக்கு இது வழி வகுத்தது.[16]

1535இல் போர்த்துக்கீசிய உதவியுடன் முகலாய நிலப்பரப்புகளின் மீது ஒரு தாக்குதலுக்காக குசராத்தின் சுல்தான் திட்டமிடுவது பற்றி உமாயூனுக்குத் தெரிய வந்தது. பகதூருக்கு எதிராக ஓர் இராணுவத்தைத் திரட்டி உமாயூன் அணி வகுத்தார். மாண்டு மற்றும் சம்பனேர் ஆகிய கோட்டைகளை ஒரு மாதத்திற்குள்ளாகவே கைப்பற்றினார். எனினும், தனது தாக்குதலை மேலும் தொடருவதற்குப் பதிலாகப் படையெடுப்பை உமாயூன் நிறுத்தினார். தான் புதிதாக வென்ற நிலப்பரப்பை நிலைப்படுத்தினார். அதே நேரத்தில், சுல்தான் பகதூர் தப்பித்தார். போத்துக்கீசியரிடம் தஞ்சம் அடைந்தார்.[17]

சேர் சா சூரி தொகு

 
முகலாயப் பேரரசர் உமாயூன் குசராத்தின் பகதூர் ஷாவை எதிர்த்து 1535இல் சண்டையிடுதல்

குசராத் மீது உமாயூன் அணி வகுத்ததற்குப் பிறகு சீக்கிரமே முகலாயர்களிடம் இருந்து ஆக்ராவின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பை சேர் சா சூரி கண்டார். முகலாயத் தலைநகர் மீது ஒரு சீக்கிரமான மற்றும் தீர்க்கமான முற்றுகையை நடத்தும் நம்பிக்கையில் தனது இராணுவத்தைத் திரட்ட ஆரம்பித்தார். இந்த அச்சமூட்டக் கூடிய செய்தியை அறிந்த உடன், உமாயூன் ஆக்ராவுக்குத் தனது துருப்புக்களைச் சீக்கிரமே அணி வகுக்கச் செய்தார். உமாயூன் தற்போது பெற்றிருந்த நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டைச் சீக்கிரமே பகதூர் மீண்டும் பெறுவதற்கு இது அனுமதியளித்தது. 1537இல் எனினும் போர்த்துக்கீசிய உயர் அதிகாரியைக் கடத்தும் ஓர் அரை குறைத் திட்டமானது ஒரு வெடிமருந்துச் சண்டையில் முடிந்தது. இந்தச் சண்டையில் சுல்தான் தோல்வியடைந்து கொல்லப்பட்டார்.[சான்று தேவை]

சேர் சாவிடம் இருந்து ஆக்ராவைத் தற்காத்துக் கொள்வதில் உமாயூன் வெற்றியடைந்த போதிலும் பேரரசின் இரண்டாவது நகரமான, வங்காள விலாயத்தின் தலைநகரமான கௌரானது சூறையாடப்பட்டது. தன்னுடைய துருப்புகள் பின் புறமிருந்து தாக்கப்படுவதைப் பாதுகாக்கும் முயற்சியாகச் சேர் சாவின் மகனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒரு கோட்டையான சுனாரைக் கைப்பற்ற முயற்சிக்கும் நேரத்தில் உமாயூனின் துருப்புக்கள் தாமதப்படுத்தப்பட்டன. பேரரசிலேயே மிகப் பெரியதாக இருந்த கௌரியில் இருந்த தானியக் கிடங்குகள் காலியாக்கப்பட்டன. உமாயூன் வந்த போது சாலைகளில் சிதறிக் கிடந்த இறந்த வீரர்களின் உடல்களை மட்டுமே காண முடிந்தது.[18] வங்காளத்தின் பெருமளவிலான செல்வமானது குன்றிப் போனது. போர் நடத்துவதற்கு ஒரு பெரும் அளவிலான செல்வத்தை சேர் சாவிற்கு இது கொடுத்தது.[16]

சேர் சா கிழக்கிற்குப் பின்வாங்கினர். ஆனால் அவரை உமாயூன் பின் தொடரவில்லை.[18][full citation needed] உமாயூனின் 19 வயது சகோதரான இன்டால் இவருக்கு இந்த யுத்தத்தில் உதவவும், இவரது இராணுவத்தின் பின்புறத்தைத் தாக்கப்படாமல் பாதுகாக்கவும் ஒப்புக்கொண்டார். ஆனால், தனது நிலையை இன்டால் விட்டு விட்டு ஆக்ராவிற்குத் திரும்பினார். அங்கு செயலளவில் பேரரசராகத் தன்னைத் தானே அறிவித்துக்கொண்டார். சேக் பகுலுலை அவருடன் பேச உமாயூன் அனுப்பிய போது சேக் கொல்லப்பட்டார். இது எதிர்ப்பை மேலும் அதிகமாக்கியது.[19]

 
சேர் சா சூரியின் ஒரு கூட்டாளியான தோடர் மால் பாரசீகத்தில் இருந்து உமாயூன் வருவதைத் தடுப்பதற்காகவும், பதவிக்கு உரிமை கோரிய பேரரசருடன் உள்ளூர் பழங்குடியினங்கள் இணைவதைத் தடுப்பதற்காகவும் ரோடாசு கோட்டையைக் கட்டினார்.[20][21]

உமாயூனின் மற்றொரு சகோதரரான கம்ரான் மிர்சா பஞ்சாப்பில் இருந்து தனது நிலப்பரப்புகளில் இருந்து அணி வகுத்தார். உமாயூனுக்கு உதவி புரிவதற்காக அவர் வருவது போல் தோன்றினாலும், உமாயூனின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பேரரசுக்கு உரிமை கோரும் நம்பிக்கை துரோக எண்ணங்களை அவர் கொண்டிருந்தார். உமாயூனைப் பதவியிலிருந்து நீக்கிய பிறகு கம்ரான் உருவாக்கும் புதிய பேரரசின் ஒரு பகுதிக்குப் பதிலாக இன்டால்[சான்று தேவை] தனது விசுவாசமற்ற அனைத்து செயல்களையும் நிறுத்த வேண்டும் என்று அவருடன் ஓர் ஒப்பந்தத்தைக் கம்ரான் ஏற்படுத்திக் கொண்டார்.[19]

சூன் 1539இல் பக்சருக்கு அருகில் கங்கை ஆற்றின் கரைகளில் சௌசா யுத்தத்தில் உமாயூனைச் சேர் சா சந்தித்தார். தங்களது நிலைக்குக் குழிகளை அமைப்பதற்காக இரு பக்கங்களும் ஏராளமான நேரத்தைச் செலவழித்தன. முகலாய இராணுவத்தின் பெரும்பாலான பகுதியான சேணேவியானது தற்போது நகர்த்த இயலாததாக இருந்தது. முகம்மது ஆசிசை தூதராகப் பயன்படுத்தி ஓரளவுக்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உமாயூன் முயற்சித்தார். வங்காளம் மற்றும் பீகாரைச் சேர் சா ஆட்சி செய்ய உமாயூன் ஒப்புக் கொண்டார். ஆனால், பேரரசர் உமாயூனால் ஷாவுக்கு அளிக்கப்பட்ட மாகாணங்களாகவே இவைக் கருதப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். முகலாயப் பேரரசில் முழுமையாக இணைக்கப்படுவதற்குச் சற்று குறைந்ததாக இந்நிலை திகழ்ந்தது. தங்களது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டு ஆட்சியாளர்களும் தங்களுக்கு அனுகூலங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். சேர் ஷாவின் துருப்புக்களை உமாயூனின் துருப்புகள் துரத்தும், தாங்கள் அச்சமடைந்தது போல் சேர் ஷாவின் துருப்புக்கள் பின்வாங்கும். இவ்வாறாக, உமாயூன் மரியாதையைப் பெறுவார் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.[22][[[|முதன்மையற்ற ஆதாரம் தேவை]]]

உமாயூனின் இராணுவமானது சேர் ஷாவின் துருப்புக்களை நோக்கி முன்னேறிய போது தங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட படி சேர் ஷாவின் துருப்புக்கள் பின்வாங்கினர். முகலாயத் துருப்புக்கள் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தின. ஒரு முறையான காவலர்களை நிலை நிறுத்தாமல் தங்களது பதுங்கு குழிகளுக்குத் திரும்பின. முகலாயர்களின் பலவீனத்தைக் கவனித்து வந்த சேர் ஷா தன்னுடைய முந்தைய ஒப்பந்தத்தைக் கைவிட்டார். அந்த நாள் இரவே முகலாய முகாமை நோக்கி அவரது இராணுவமானது முன்னேறியது. பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டு, முகலாயத் துருப்புகள் ஆயத்தமாக இல்லாமல் இருப்பதைக் கண்டனர். அவர்கள் முன்னேறினர். பெரும்பாலானவர்களைக் கொன்றனர். காற்று நிரப்பப்பட்ட "நீர்த் தோலைப்" பயன்படுத்தி கங்கை ஆற்றை நீந்திக் கடந்ததன் மூலம் பேரரசர் உயிர் பிழைத்தார். அமைதியாக ஆக்ராவிற்குத் திரும்பினார்.[16][page needed][23] கங்கையைக் கடப்பதற்கு சம்சல்தீன் முகம்மது உமாயூனுக்கு உதவி புரிந்தார்.[24]

ஆக்ராவில் தொகு

 
பாபர் நாமாவில் உமாயூன் குறித்த ஒரு சிறு ஓவியம்

உமாயூன் ஆக்ராவிற்குத் திரும்பிய போது தனது அனைத்து மூன்று சகோதரர்களும் அங்கு இருந்ததைக் கண்டார். உமாயூன் மீண்டும் தனக்கு எதிராகச் சதித் திட்டமிட்டதற்காக தனது சகோதரர்களை மன்னித்ததோடு மட்டுமல்லாமல், இன்டாலை அவரது வெளிப்படையான துரோகத்திற்காகவும் கூட மன்னித்தார். அமைதியான வேகத்தில் பயணத்தை மேற்கொண்ட சேர் ஷாவின் இராணுவங்கள் ஆக்ராவை நோக்கி வந்தன. சேர் ஷா நெருங்கி வந்து கொண்டிருந்தார். ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் இது ஒரு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் எவ்வாறு செயல்படுவது என உமாயூனுக்கும், கம்ரானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நெருங்கி வந்த எதிரி மீது ஒரு திடீர்த் தாக்குதலை நடத்த உமாயூன் மறுத்ததற்குப் பிறகு, கம்ரான் பின் வாங்கினார். மாறாகத் தன் பெயரில் ஒரு பெரிய இராணுவத்தைத் திரட்ட முடிவு செய்தார்.[சான்று தேவை]

கம்ரான் இலாகூருக்குத் திரும்பிய போது உமாயூன் தனது மற்ற சகோதரர்கள் அசுகாரி மற்றும் இன்டாலுடன் சேர்ந்து சேர் ஷாவை ஆக்ராவுக்குக் கிழக்கே 200 கிலோ மீட்டர்கள் தொலைவில் கன்னோசி யுத்தத்தில் 17 மே 1540 அன்று சந்திப்பதற்காக அணி வகுத்தார். உமாயூன் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டார். ஆக்ராவுக்குப் பின் வாங்கினார். சேர் ஷா இவரைத் துரத்தினார். பிறகு தில்லி வழியாக இலாகூருக்கு உமாயூன் சென்றார். சேர் ஷா குறுகிய காலமே இருந்த சூர் பேரரசை நிறுவினார். தில்லியில் பேரரசின் தலைநகரத்தை அமைத்தார். முதலாம் தமஸ்ப்பின் அவையில் 15 ஆண்டுகளுக்கு நாடு கடந்து உமாயூன் வாழ்வதற்கு இது இட்டுச் சென்றது.[25]

இலாகூரில் தொகு

நான்கு சகோதரர்களும் இலாகூரில் ஒன்று கூடினர். ஆனால், ஒவ்வொரு நாளும் சேர் ஷா நெருங்கி வருவதாக அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிரிந்தை அடைந்தபோது உமாயூன் தனது ஒரு தூதுவர் மூலம் செய்தி அனுப்பினார்: "நான் உனக்காக ஒட்டுமொத்த இந்துஸ்தானையும் (அதாவது, பெரும்பாலான கங்கைச் சமவெளியை உள்ளடக்கிய, பஞ்சாபின் கிழக்கே இருந்த நிலப்பகுதிகள்) கொடுத்துள்ளேன். இலாகூரை விட்டு விடு, உனக்கும் எனக்கும் இடையில் சிரிந்த் ஓர் எல்லையாக இருக்கட்டும்". எனினும், சேர் ஷா பின்வருமாறு பதிலளித்தார், "நான் உனக்குக் காபூலை விட்டுள்ளேன். நீ அங்கு தான் செல்ல வேண்டும்". உமாயூனின் சகோதரரான கம்ரானின் பேரரசின் தலைநகராகக் காபூல் இருந்தது. தனது சகோதரருக்குத் தன்னுடைய நிலப்பரப்புகளில் எதையும் கொடுப்பதற்குக் கம்ரானுக்கு விருப்பமில்லை. கம்ரான் சேர் ஷாவைத் தொடர்பு கொண்டார். உண்மையில் தனது சகோதரருக்கு எதிராகத் தான் எதிர்ப்பில் உள்ளதாகக் கம்ரான் கூறினார். பெரும்பாலான பஞ்சாபைத் தனக்கு அளித்தால் சேர் ஷாவுடன் கூட்டுச் சேரத் தான் தயாராக இருப்பதாகக் கூறினர். சேர் ஷா இந்த உதவியை நிராகரித்தார். இது தேவையற்ற ஒன்று என்று அவர் நம்பினார். இந்தத் துரோக முன்மொழிவு குறித்த தகவலானது வாய் வழியாக அனைவர் மத்தியிலும் பரவியது. மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கம்ரானைக் கொல்லுமாறு உமாயூனுக்கு அறிவுறுத்தப்பட்டது. உமாயூன் மறுத்தார். தனது தந்தை பாபுரின், "அவர்கள் உரியவர்களாக இருந்தாலும் கூட, உனது சகோதரர்களுக்கு எதிராக எதுவும் செய்யாதே" என்ற கடைசி வார்த்தைகளைக் கூறினார்.[26]

மேலும் பின்வாங்குதல் தொகு

 
தைமூர் முதலான உமாயூனின் பரம்பரை வரிசை

மேலும் தொலைவுக்குப் பின் வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்றும் உமாயூன் முடிவெடுத்தார். இவரும், இவரது இராணுவமும் தார்ப் பாலைவனம் வழியாகப் பயணம் மேற்கொண்டனர். அப்போது முகலாயப் பேரரசுக்கு எதிராகச் சேர் ஷா சூரியுடன் இராவ் மால்தியோ இரத்தோர் கூட்டுச் சேர்ந்திருந்தார். ஆண்டின் மிகுந்த வெப்பமான நேரத்தில் பாலைவனம் வழியாகத் தங்களது வழிகளைத் தானும், தன்னுடைய மனைவியும் எவ்வாறு தேடிச் சென்றனர் என உமாயூன் கூறியதைப் பல நூல்கள் குறிப்பிட்டுள்ளன. இவர்களிடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும், உணவும் குறைவாகவே இருந்தன. பாலைவனத்தில் குடி தண்ணீர் கூட ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்தது. அமீதா பானுவின் குதிரை இறந்த போது (எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்), இராணிக்கு எந்த ஒருவரும் தமது குதிரையைக் கொடுக்க முன்வரவில்லை. எனவே உமாயூன் தனது குதிரையை அவருக்குக் கொடுத்தார். இதனால் ஆறு கிலோ மீட்டர்களுக்கு ஓர் ஒட்டகத்தில் அவர் பயணம் செய்தார். எனினும், பிறகு கலித் பெக் தனது குதிரையை உமாயூனுக்குக் கொடுத்தார். தன்னுடைய வாழ்வில் மிகத் தாழ்மையான நிலையாக இந்த நிகழ்வை உமாயூன் பிற்காலத்தில் குறிப்பிட்டார். சிந்து மாகாணத்திற்குத் தான் பின்வாங்கிக் கொண்டிருந்த போது தனது சகோதரர்களை தன்னுடன் இணையுமாறு உமாயூன் கேட்டார். முன்னர் எதிரியாக இருந்த இன்டால் மிர்சா தொடர்ந்து விசுவாசமாக இருந்த போதிலும், காந்தாரத்திலிருந்த தனது சகோதரர்களுடன் இணையுமாறு அவருக்கு ஆணை இடப்பட்டது. கம்ரான் மிர்சா மற்றும் அசுகாரி மிர்சா மாறாக ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்த காபூலுக்குச் செல்ல முடிவெடுத்தனர். குடும்பத்தில் ஒரு தீர்க்கமான பிரிவாக இது இருந்தது. சிந்தின் எமீரான உசேன் உம்ரானியிடம் இருந்து உமாயூன் உதவியை எதிர்பார்த்திருந்தார். எனவே சிந்தை நோக்கிப் பயணித்தார். இவரை உமாயூன் தான் நியமித்திருந்தார். உமாயூனுக்கு அவர் தனது கூட்டணியைத் தெரிவித்திருந்தார். மேலும் உமாயூனின் மனைவி அமீதா சிந்துப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அங்கு பெருமைக்குரியர் பீர் குடும்பத்தின் மகளாக அவர் இருந்தார். இவர்கள் பாரசீகப் பாரம்பரியத்தை கொண்ட, சிந்தில் நீண்ட காலமாகக் குடியமர்ந்திருந்த குடும்பம் ஆவர். எமீரின் அவைக்குச் செல்லும் வழியில் தனது கர்ப்பமான மனைவியான அமீதா மேலும் பயணம் மேற்கொள்ள இயலாத காரணத்தால் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய தேவை உமாயூனுக்கு ஏற்பட்டது. அமர்கோட் (தற்போதைய சிந்து மாகாணத்தின் ஒரு பகுதி) பட்டணத்தின் பாலைவனச் சோலையின் ஆட்சியாளரிடம் உமாயூன் அடைக்கலம் கேட்டார்.[27]

அமர்கோட்டின் இராணா பிரசாத் இராவ் உமாயூனை எதிர்பார்த்தது போலவே தனது இல்லத்திற்கு வரவேற்றார். ஏழு மாதங்களுக்குத் தஞ்சமடைந்தவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தார். இங்கு இராசபுத்திர உயர் குடியினரின் வீட்டில் உமாயூனின் மனைவியும், ஒரு சிந்திக் குடும்பத்தின் மகளுமான அமீதா பானு எதிர்காலப் பேரரசரான அக்பரை 15 அக்டோபர் 1542இல் பெற்றெடுத்தார். இந்தப் பிறந்த தேதியானது பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். ஏனெனில், தன்னுடைய வானியலாளரை வானியல் அட்டவணைகளைப் பயன்படுத்தச் செய்தும், கிரகங்களின் அமைவை சோதிக்கவும் செய்து உமாயூன் அறிவுரைகளைக் கேட்டார். 34 வயது உமாயூனின் வாரிசாகவும், பல பிரார்த்தனைகளின் பலனாகவும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இந்தக் குழந்தை பிறந்தது. இந்தப் பிறப்பிற்குச் சிறிது காலத்திலேயே அமர்கோட்டிலிருந்து உமாயூனும், அவரது பரிவாரமும் சிந்துக்குப் பயணம் மேற்கொண்டனர். அக்பரை விட்டுச் சென்றனர். அக்பர் குழந்தையாக இருந்ததால் கடினமான பயணத்திற்கு அவர் தயாராகி இருக்கவில்லை. அக்பரைப் பிறகு அசுகாரி மிர்சா வளர்த்தார்.

இக்கட்டான சூழலும் பொறுப்பிலா உமாயூனும் தொகு

இவர் பதவியேற்கும் பொது முகலாயப் பேரரசு பல இடர்களுக்குள் சிக்கியிருந்தது. பஞ்சாப்பும் அதற்கு கிழக்கே உள்ள சில பகுதிகளும் மட்டுமே இவர் ஆட்சியேற்ற போது முகலாயப் பேரரசின் கீழ் இருந்தன. வங்காளத்தில் முகமது லோடியும் செர்கானும் தங்கள் ஆப்கானிய இனத்தின் வல்லமையை அதிகப்படுத்தி இருந்தனர். குஜராத், மாளவம் போன்ற நாடுகளை ஆண்ட பகதூர் சா தில்லியை தாக்க தருணம் பார்த்திருந்தார். இராசபுத்திரபுத்திர மன்னர்களும் முகலாயப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தினர். மேலும் உமாயூனின் சகோதரரான கம்ரான் காபூலை கவர்ந்ததால் பஞ்சாப் பகுதியையும் உமாயூன் தன் சகோதரருக்கே கொடுத்து விட்டார். துரோகம் செய்த இளைய சகோதரர்களுக்கே ஆட்சியை கொடுத்ததாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானதாலும் இவரால் இவர் தந்தையான பாபுர் போல் ஆட்சியை திறம்பட நடத்தவில்லை.

சிற்றரசர் நிலைக்கு தாழ்தல் தொகு

உமாயூன் செர்கானுடன் நட்புறவு செய்து கொண்டு முகமது லோடியை முதலில் தோற்கடித்தார். பகதூர் சாவை வென்று குஜராத்தையும் மாளுவத்தையும் கைப்பற்றினார். ஆனால் பகதூர் சா சில நாட்களுக்குப் பின் இப்பகுதிகளை மீண்டும் பிடித்துக் கொண்டார். செர்கான் அக்காலத்தில் பீகாரையும் வங்காளத்தையும் ஆண்டு வந்தார். அவருடன் முரண்பட்ட உமாயூன் அவரைத் தாக்கி சூனார் என்னும் கோட்டையையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பிடித்துக் கொண்டார். சில காலம் கழித்து வங்காளத்தையும் பிடித்துக்கொண்டார். ஆனால் அதை சரிவர நிர்வகிக்காதலால் செர்கான் உமாயூன் மீது படை எடுத்தார். பீகார், காசி, சூணார்க்கு கோட்டை போன்ற முக்கிய நாடுகளையும் கோட்டைகளையும் செர்கான் கைப்பற்றினார். மேலும் சௌன்சாவிலும் கனோச்சியிலும் நடந்த போர்களில் செர்கான் உமாயூனை தோற்கடித்தார். அதனால் உமாயூன் ஆக்ராவுக்கு சென்று அங்கிருந்து இலாகூருக்கு தப்பினார். செர்கான் செர்சா என்ற புனைப் பெயருடன் வட இந்தியாவின் முக்கியப் பகுதிகளை ஆண்டார்.

பாரசீகத்தில் தஞ்சம் தொகு

 
ஷா தமஸ்ப் உமாயூனுக்கு 12,000 குதிரைப் படை, 300 அனுபவமிக்க தனது பாதுகாவலர்கள் மற்றும் பொருட்களை தன் விருந்தாளிகள் இழந்த பகுதிகளை வெல்ல வேண்டும் என்பதற்காக வழங்கினார்.[28]
 
இஸ்பஹானில் ஷா முதலாம் தமஸ்ப் மற்றும் முகலாய பேரரசர் உமாயூன்.

பாரசீகத்தில் இருந்த சபாவித்து பேரரசில் தஞ்சம் அடைவதற்கு உமாயூன், 40 வீரர்கள், அவரது மனைவி பேகா பேகம்,[29] மற்றும் அவரது மனைவியின் உதவியாளர் ஆகியோருடன் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை கடந்து பயணித்தார். இப்பயணத்தில் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். உணவிற்காக வீரர்களின் தலைக்கவசத்தின் குதிரை மாமிசத்தை வேகவைத்து உண்டனர். ஹெராத்தை அடைவதற்கு முன்னர் ஒரு மாதத்திற்கு அவர்கள் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளாகினர். எனினும் ஹெராத்தை அடைந்தபிறகு நன்றாக கவனித்துக் கொள்ளப்பட்டனர். நகருக்குள் நுழையும் போது உமாயூன் ஆயுதமேந்திய வீரர்களால் வரவேற்கப்பட்டார். அனைவரும் உயர்தர விருந்து மற்றும் ஆடைகளுடன் கவனித்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு தங்குவதற்கு சிறப்பான முறையில் வசதிகள் செய்து தரப்பட்டன. சாலைகளில் இருந்த தடைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. ஷா தமஸ்ப் உமாயூனின் சொந்த குடும்பத்தினரை போல் இல்லாமல் முகலாய உமாயூனை வரவேற்று தனது தேசிய மதிப்பு வாய்ந்த விருந்தாளியாக கவனித்துக் கொண்டார். இங்கு உமாயூன் சுற்றி பார்ப்பதற்காக சென்றபோது பாரசீக ஓவியங்கள் மற்றும் கட்டடங்களை கண்டு வியந்தார்: அவற்றில் பெரும்பாலானவை தைமூரிய சுல்தானான உசைன் பய்கராஹ் மற்றும் அவரது முன்னோர், இளவரசி கவுகர் ஷாத் ஆகியோரின் வேலைகள் ஆகும். இவ்வாறாக உமாயூனால் தனது உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் வேலைகளை ரசிக்க முடிந்தது.[சான்று தேவை]

இங்கு உமாயூன் பாரசீக சிறு ஓவியம் வரைபவர்களின் அறிமுகம் பெற்றார். கமாலுதீன் பெசாத்தின் 2 மாணவர்கள் உமாயூனின் அவையில் இணைந்தனர். அவர்களது வேலைப்பாடுகளை கண்டு வியந்த உமாயூன் இந்துஸ்தானை தான் வென்றால் தனக்காக பணியாற்றுவீர்களா என்று அவர்களிடம் வினவினார்: அவர்கள் ஒத்துக் கொண்டனர். இவ்வாறாக உமாயூன் பல்வேறு கலைகளை கவனிப்பதிலேயே தனது கவனத்தை செலுத்தினார். ஜூலை மாதம் வரை ஷாவை சந்திக்கவே இல்லை. அப்போது உமாயூன் பாரசீகத்திற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. ஹெராத்திலிருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு கஸ்வின் நகரத்தில் இருவரும் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு ஆட்சியாளர்களின் சந்திப்பானது இஸ்பஹானில் உள்ள செகேல் சோடோன் (நாற்பது வரிசைகள்) அரண்மனையில் உள்ள புகழ்பெற்ற சுவர் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

திருமணமும் மகனும் தொகு

உமாயூனுக்கும் மனைவிகள் பலர் இருந்தனர். அதில் அமீதா பேகம் முக்கியமானவர். உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார். 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் அக்பரை பெற்றெடுத்தார்.

மீண்டும் பேரரசராதல் தொகு

செர்சா சில ஆண்டுகள் வட இந்தியாவை திறம்பட ஆட்சி செய்தார். காலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நடந்த குண்டு வெடிப்பினால் செர்சா இறந்தார். அவருக்கு பின் வந்தவர்கள் கீழ் பத்து ஆண்டுகளே வட இந்தியப் பகுதிகளை ஆண்டனர். அப்போது நடந்த குழப்பங்களை பயன்படுத்திக் கொண்ட உமாயூன் பாரசீகத்தில் படைபலத்தை பெருக்கிக் கொண்டு மீண்டும் செர்சா அரசின் மீது படையெடுத்து பழைய ஆட்சிப் பகுதிகளை பிடித்தார். செர்சா அரசின் கடைசி மன்னனான சிகந்தரை தோற்கடித்து மீண்டும் பேரரசர் ஆனார்.

இறப்பும் அக்பர் பதவியேற்பும் தொகு

இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து உமாயூன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

உமாயூனின் சமாதி தொகு

உமாயூனின் சமாதி பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மூலம் தொகு

  • இராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை. 
  1. Babur: Timurid Prince and Mughal Emperor, 1483-1530
  2. 2.0 2.1 Mehta, Jaswant Lal (1986) (in en). Advanced Study in the History of Medieval India. Sterling Publishers Pvt. Ltd. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120710153. 
  3. Gulbadan Begum (1902). The History of Humāyūn (Humāyūn-nāmah). Royal Asiatic Society. பக். 260. 
  4. Lal, Muni (1980). Akbar. Vikas. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7069-1076-6. 
  5. Mukhia 2004, ப. 124.
  6. Shah, Ghanshyam (1975) (in en). Caste Association and Political Process in Gujarat: A Study of Gujarat Kshatriya Sabha. New Delhi, India, Asia: Popular Prakashan. பக். 11: 1The Gazetteers and the Census describe Kolis as a tribe which entered Gujarat in the early 16th century. They came in groups and often looted villages and towns. In 1535, the camp of Moghul Emperor Humayun at Cambay was plundered by them. They attacked Mehmedabad, a town in Kaira district. https://books.google.com/books?id=zHHaAAAAMAAJ. 
  7. Shah, A. M. (2002) (in en). Exploring India's Rural Past: A Gujarat Village in the Early Nineteenth Century. New Delhi, India: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 22: Throughout the period of Musum rule in Gujarat, the Kolis are frequently referred to as dacoits, robbers, marauders and pirates, and as having helped many political adventurers by joining their irregular armies. The Kolis plundered the camp of the Mughal emperor Humayun at Cambay, and gave considerable trouble to Aurangzeb when he was Governor of Gujarat ( Commissariat 1938 : 356-7 ) . It is clear from all this information that the Kolis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-565732-6. https://books.google.com/books?id=zePZAAAAMAAJ. 
  8. Erskine, William (2012-05-24) (in en). A History of India Under the Two First Sovereigns of the House of Taimur, Báber and Humáyun. New Delhi, India: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-108-04620-6. https://books.google.com/books?id=PXzW-XS9TQMC&dq=Humayun+Koli&pg=PA61. 
  9. Lobo, Lancy (1995) (in en). The Thakors of North Gujarat: A Caste in the Village and the Region. New Delhi, India: Hindustan Publishing Corporation. பக். The Kolis had even plundered the camp of the Moghul Emperor Humayun at Cambay ( Khambhat ) in 1535. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7075-035-2. https://books.google.com/books?id=1DBuAAAAMAAJ. 
  10. வார்ப்புரு:Cite work
  11. வார்ப்புரு:Cite work
  12. 12.0 12.1 Sharaf Al-Din: "Zafar-nama".
  13. Soucek, Svat (2000). A History of Inner Asia. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-65704-4. https://archive.org/details/historyofinneras00souc. 
  14. Tabakāt Akbarī, a translation from Volume V of The History of India, as Told by Its Own Historians, 1867
  15. Keay, John (2000). India : A History. London: HarperCollins. பக். 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0002557177. 
  16. 16.0 16.1 16.2 Rama Shankar Avasthy: "The Mughal Emperor Humayun".
  17. Banerji 1938
  18. 18.0 18.1 Jauhar: "Tadhkirat al-Waqiat".
  19. 19.0 19.1 Gascoigne 1971, ப. 50: "Hindal ... had been stationed ... for the purpose of securing Humayun's rear, but he had deserted his post ... another brother, Kamran, ... was also converging on Delhi from his territories in the Punjap – ostensibly to help Humayun but in reality ... to stake his own claim to his brother's crumbling empire. [Kamran] dissuaded Hindal from further open disloyalty, but ... the two brothers now disregarded Humayun's urgent appeals for help on his dangerous journey back through the territory which had been relinquished by Hindal to Sher Khan."
  20. The Life and Times of Humāyūn by Ishwari Prasad, Published by Orient Longmans, 1956, p. 36
  21. Rehman, Abdur (1989). "Salt Range: History and Culture". Temples of Koh-e-Jud & Thar: Proceedings of the Seminar on Hindu Shahiya Temples of the Salt Range, Held in Lahore, Pakistan, June 1989. Anjuman Mimaran. பக். 8. இணையக் கணினி நூலக மையம்:622473045. "Babar established good relations with them [the Ghakhars] and hereafter they always sided with the Mughals. Sher Shah Suri therefore determined to crush the Ghakhars and built a fort at Rohtas;" 
  22. Badauni: "Muntakhab al-Tawarikh".
  23. Gascoigne 1971, ப. 50–51: "Humayun's brief advance brought his army out of its prepared defensive position, and Sher Shah, having withdrawn a few miles, returned at night to find the Mogul camp asleep and unprepared. The emperor himself escaped only because one of his water-bearers inflated his water-skin with air for Humayun to hold in his arms and float [across the Ganges] ... Humayun crept back to Agra."
  24. Ruby Lal (22 September 2005). Domesticity and Power in the Early Mughal World. Cambridge University Press. பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-85022-3. https://books.google.com/books?id=B8NJ41GiXvsC&pg=PA64. 
  25. Sen, Sailendra Nath (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80607-34-4. "Kamran withdrew from Agra to Lahore. ... In the Battle of Kanauj (17 May 1540) ... Humayun was defeated. His two younger brothers, Askari and Hindal, also ... Humayun fled to Agra but was pursued by the Afghans, who drove him first to Delhi and then to Lahore. ... Finally ... he took shelter at the court of the Iranian king, Shah Tahmasp. Thus began a weary exile which lasted for nearly 15 years." 
  26. Abul-Fazel: "Akbar-nama".
  27. Sarwani, Abbas Khan (2006). Tareekh-i- Sher Shahi. Lahore, Pakistan: Sang-i-Meel Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9693518047. 
  28. Eraly, Abraham (2000). Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780141001432. https://books.google.com/?id=04ellRQx4nMC&pg=PA108&dq=Shah+Tahmasp+Humayun+12,000+cavalry#v=onepage&q=Shah%20Tahmasp%20Humayun%2012%2C000%20cavalry&f=false. 
  29. Rapson, Edward James; Haig, Sir Wolseley; Burn, Sir Richard (1968). The Cambridge History of India. Volume 5. Cambridge University Press Archive. "The tomb was built by Humayun's widow, Haji Begum, who shared his long exile at the court of the Safavids." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிருதீன்_உமாயூன்&oldid=3621695" இலிருந்து மீள்விக்கப்பட்டது