நன்றியறிதல் நாள் (அமெரிக்கா)

நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழன் அன்று ஐக்கிய நாடுகளில் கொண்டாடப்படும் விடுமுறை

நன்றியறிதல் நாள் (Thanksgiving Day) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வியாழனன்று கொண்டாடப்படுகின்ற முக்கியமானதொரு விழா ஆகும்.[1]

பிளிமத் நகரில் முதல் நன்றியறிதல் நாள் விழா. ஓவியர்: ஜென்னி ப்ரவுன்ஸ்கோம். வரையப்பட்ட ஆண்டு: 1914

வரலாறு தொகு

அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த காலத்தில், 1863ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அந்த ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் வியாழக்கிழமை "நன்றியறிதல் நாள்" எனக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்த ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு விழா, புத்தாண்டு விழா ஆகிய கொண்டாட்டங்கள் போன்று இதுவும் நீண்ட விடுமுறை கொண்ட விழா ஆகும்.

அமெரிக்கர்கள் "முதல் நன்றியறிதல் விழா" என்று அழைப்பது ஐரோப்பியர்கள் புதிய கண்டமாகிய அமெரிக்காவுக்கு வந்து அங்கே குடியேறுவதற்குத் துணை செய்த கடவுளுக்கு நன்றிசெலுத்தும் வகையாக அமைந்தது. அந்த முதல் நன்றியறிதல் விழா 3 நாள்கள் நீடித்தது. அதில் 13 ஐரோப்பிய பயணிகளும் (Pilgrims) 90 பூர்வீக அமெரிக்க குடிமக்களும் கலந்துகொண்டு விருந்து உண்டனர்.

அவர்கள் உண்ட உணவில் மீன்கள், சிப்பி வகை மீன்கள், காட்டுக்கோழிகள் (வாத்து, தாறா, அன்னப் பறவை, வான்கோழி), மான் இறைச்சி, காட்டுப் பழங்கள், காய்கறிகள் (பூசணி, பீட்) மற்றும் பார்லி, கோதுமை ஆகியவை அடங்கியிருந்தன. மேலும், அவரை, மக்காச் சோளம், புடலை போன்றவையும் இருந்தன.

இக்காலக் கொண்டாட்டம் தொகு

இன்று அமெரிக்க நன்றியறிதல் நாள் குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுகூடி வந்து, விருந்து உண்ணும் விழாவாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வாழ்கின்றவர்களும் தம் குடும்பத்திற்குச் சென்று, பெற்றோர் பிள்ளைகள், தாத்தா பாட்டி பேரப்பிள்ளைகள் என்று அனைவரும் குடும்பமாகக் கூடுவது சிறப்பு.

விருந்துக்கு முன்னால் கடவுளுக்கு நன்றிசெலுத்தும் மன்றாட்டைச் சொல்லி வேண்டுதல் செய்வார்கள். விருந்தின்போது அல்லது அதன்பின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அந்த ஆண்டின்போது தாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளையும் நினைவுகூர்ந்து நன்றிகூறுவார்கள்.

கோவில்களில் வழிபாடு தொகு

அமெரிக்காவில் கிறித்தவக் கோவில்களில் நன்றியறிதல் நாள் விழாக் கொண்டாடும் பொருட்டு சிறப்பு வழிபாடுகள் நிகழ்வதும் உண்டு.

2011ஆம் ஆண்டு நன்றியறிதல் நாள் தொகு

2011ஆம் ஆண்டு நன்றியறிதல் நாள் விழா, நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையாகிய 24ஆம் நாள் நடைபெறுகிறது.

ஆதாரங்கள் தொகு