நார்த்தாமலை

நார்த்தாமலை (Narthamalai) எனும் ஊர் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை பிரதான சாலையிலிருந்து சுமார் 7 கிமீ தள்ளியிருக்கும் அந்த ஊரைச் சுற்றிக் காணப்படும் குன்றுகளில் கலையழகு மிகுந்த கோயில்கள் பல உள்ளன.

நார்த்தாமலை
நார்த்தாமலை
இருப்பிடம்: நார்த்தாமலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°31′N 78°46′E / 10.51°N 78.76°E / 10.51; 78.76
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம் தொகு

திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த நார்த்தாமலை.

சுற்றுலா தொகு

பல சிறிய மலைகளும், சிலைகள் நிறைந்த குகைகள் மற்றும் கற்றளிகளும் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. பல மூலிகை செடிகளும் உள்ளன.தொண்டைமான் மூலிகை காடு என்ற மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து நேரடியாகப் பேருந்து வசதியும் உள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்து பேருந்து மூலம் வருபவர்கள் பொம்மாடிமலையில் இறங்கி நார்த்தாமலைக்கு வரலாம்.கீரனுரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதியும் உள்ளது.

பெயர்க் காரணம் தொகு

இதிகாச நம்பிக்கைகளின்படி இருவிதக் கதைகளுடன் இந்த ஊர் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த நார்த்தாமலை குன்றுக் கூட்டமானது இராமாயணத்தில் ஆஞ்சநேயர் இலங்கைக்கு தூக்கிச் சென்ற சஞ்சீவ பர்வதம் என்ற மலையின் சிறிய சிதறல்களே என்று நம்பப்படுகிறது. அதனால்தான் இக்குன்றுகளில் அதிக அளவில் மூலிகைகள் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

மேலும் பெருங்களூர் கோவிலின் தல வரலாற்றின்படி இந்த ஊர் மாமுனி நாரதர் பெயரால் 'நாரதர் மலை' என்று அழைக்கப்பட்டதாகவும், அப்பெயர் திரிந்து நார்த்தாமலை என்று மாறியதாகவும் நம்பப்படுகிறது.

மேலும் நார்த்தாமலை என்ற பெயர் 'நகரத்தார் மலை' என்ற பெயரிலிருந்து மருவி வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார் என்பவர்கள் பண்டைய காலத்திலிருந்தே கடல் கடந்து வாணிகம் செய்வோர் ஆவர். அவர்களது செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் தலைமையகமாக நார்த்தாமலை இருந்திருக்கிறது.[3]

ஊரின் தொன்மை தொகு

நார்த்தாமலை இன்று உள்ளதுபோல் மொட்டைப் பாறைப் பிரதேசமாக இல்லாமல், பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைமையகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக, 'நானாதேசத்து ஐநூற்றுவர்' என்கிற வணிகர் குழுவிற்குத் தலைமைச் செயலகமாக இருந்திருக்கிறது.

ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ), பல்லவ இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில், விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்திய பிறகு நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது. அதன்பிறகு சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நார்த்தாமலை சிறப்புப் பெற்று விளங்கியதற்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) மற்றும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்துக் கற்றளிகளே சான்றுகள்.[4]

முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் பொழுது (கி.பி 985-1014), ‘தெலுங்குக் குல காலபுரம்’ என்று அம்மன்னனின் பட்டபெயர்களில் ஒன்றால் நார்த்தாமலை அழைக்கப்பட்டிருக்கிறது. நார்த்தாமலை சோழர்களின் கடைசி அரசனான மூன்றாம் இராஜேந்திரன் காலம் வரை சோழர்களின் ஆட்சியின் கீழும், அதன்பிறகு பாண்டியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.

கி.பி 13 ம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராயன் தலைமையிலான விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு பிறகு நேரடியாக மதுரை நாயக்கர்|மதுரை நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் நார்த்தா மலை புகழ் பெற்று விளங்கியது.

விஜயநகர பேரரசின் நாயக்கர் ஆட்சி காலத்தில் அக்கலராசா என்ற படைத்தளபதி இராமேஸ்வரம் செல்லும்பொழுது நார்த்தாமலை பகுதியில் இருந்த ‘விசெங்கி நாட்டுக் கள்ளர்’களின் அட்டகாசத்தை ஒழித்துக் கட்டி நார்த்தாமலை கோட்டையில் தங்கியிருந்துள்ளார். அப்பகுதியில் இருந்த 'அக்கச்சி பல்லவராயர்' என்பவர் கச்சிராயர் என்ற பட்டமுடைய கள்ளர் வீரரிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார்.[5] அக்கல் ராஜா கொல்லப்பட்ட பிறகு, அவரது ஏழு மனைவியரும் நார்த்தாமலைப் பகுதியின் ஓரிடமான 'நொச்சிக் கண்மாயில்' தீக்குளித்து இறந்து போனார்கள். இவர்களுடைய சந்ததியினர் இன்றுவரை ‘உப்பிலிக்குடி’ என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ‘உப்பிலிக்குடி ராஜா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

அதன்பிறகு புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர், நார்த்தாமலையைப் பல்லவராயர்களிடமிருந்து கைப்பற்றி அதனை இயற்கை அரண்களுடன் கூடிய இராணுவ நிலையமாகப் பயன்படுத்தியுள்ளனர். மன்னர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் வரை நார்த்தாமலை புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[3]

நார்த்தாமலை குன்றுக் கூட்டம் தொகு

நார்த்தாமலையில் மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்பன அவற்றின் பெயர்கள்.[4][6]

கடம்பர் மலை கோயில் தொகு

நார்த்தாமலை பேருந்து நிலையத்திலிருந்து அருகில், ஊர் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில் உள்ளது கடம்பர் மலைக்குன்று. இங்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) காலத்திய சிவன் கோயில் ஒன்று பிரதானமாக உள்ளது. இக்கோயிலில் மலைக்கடம்பூர் தேவர் வீற்றிருக்கிறார். இதற்கருகில் நகரீஸ்வரம் என்ற சிவன் கோயிலும் மங்களாம்பிகை அம்மன் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டவை. இப்பகுதியில் மங்கள தீர்த்தம் என்ற குளம் உள்ளது.

குன்றின் அடிவாரப்பகுதியில் பாறை குழிவாகக் குடையப்பட்டுப் பெரியதொரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அதில் சில இடங்கள் சேதமடைந்துள்ளன. முதலாம் ராஜராஜன் காலம் முதல் சோழ அரசர்களில் கடைசி மன்னனான மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் இந்த வளாகத்தில் உள்ளன.

மேலமலை கோயில்கள் தொகு

ஊரிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் இருக்கிறது மேலமலை. அதன் அடிவாரத்தில் சிறு குளம் இருக்கிறது. அங்கிருந்து சிறிது சிறிதாக உயர்ந்து செல்கிறது குன்று. முதலில் பிள்ளையார் கோயில் உள்ளது. அதன் பின்புறம் தலையருவிசிங்கம் என்ற சுனை உள்ளது. அங்கிருந்து பார்க்கும்போது சுற்றிலும் உள்ள மற்றக் குன்றுகள் தெரிகின்றன. ஊரின் தென்கிழக்கே மரங்கள் அடர்ந்த சிறுமலைகள் இருக்கின்றன. இந்தக் காடுகள் ஆண்டு முழுவதும் பசுமை மாறாத முட்புதர் காடுகளாகும்.

சமணர் குடகு தொகு

நீண்டு செல்லும் குன்றின் முக்கால் பங்கு உயரத்தில் விஜயாலய சோழீஸ்வரம் கோயிலும் சுற்றி ஆறு சிறு கோயில் கட்டுமானங்களும் உள்ளன. பிரதானக் கோயிலில் நந்திக்குப் பின்னால் இரு குடைவரை கோயில்கள் உள்ளன. முதலாவது சமணர் குடகு அல்லது பதினெண்பூமி விண்ணகரம் என்று அழைக்கப்படும் பெரிய குகை. ஏழாம் நூற்றாண்டில் சமணர் குகையாக இருந்த இந்தக் குடைவரைக் கோயில் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர விஷ்ணு சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்திற்கு முன்னுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட உருவங்களை வரிசையாகக் கொண்ட சிற்பத்தொகுதி உள்ளது.

பழியிலி ஈஸ்வரம் தொகு

தெற்கே உள்ள பழியிலி ஈஸ்வரம் என்ற சிறிய குடைவரை சிவன் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவராயர்களின் ஆட்சியின் கீழ் முத்தரையர் தலைவன் சாத்தன் பழியிலி கட்டியது.

விஜயாலய சோழீஸ்வரம் தொகு

மேல மலை மீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுமூலம் இக்கோவில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப் படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோவில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. . இது தமிழகக் கோவில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

கருவறை மீது அழகிய விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இது அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இது கட்டுமான கற்கோவிலாகும். இது காஞ்சி கைலாசநாதர் கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

கோவில் விமானத்தைச் சுற்றி எட்டு துணை ஆலயங்கள் இருந்தன எனப்படுகிறது. இவற்றில் ஆறு ஆலயங்கள் இப்பொழுது நல்ல நிலையில் உள்ளன. ஆனால், இவற்றில் தெய்வங்கள் வழிபாட்டிற்கு இல்லை.

குன்றிலிருந்து கீழே செல்லும் பாதையில் ஐயனார் கிராம தெய்வ கோயில் அமைந்துள்ளது. மேலமலையில் குளிர்ச்சி தரும் பாறைகளின் நடுவே மரங்களின் சூழலை அனுபவிப்பதற்காகப் பலர் இந்த இடத்துக்கு வருகிறார்கள்.

நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோவில் தொகு

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து அம்மன் ஆலயங்களின் தலைமை அம்மன் கோவிலாக இங்குள்ள முத்துமாரி அம்மன் கோவில் விளங்குகிறது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டும் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறும் முக்கியமான ஜல்லிக்கட்டுகளில் ஒன்றாகும். இதைவிட மிக முக்கிய குறிப்புகள்: நார்த்தாமலை பூவாடைகாரி, வேப்பிள்ளை காரி, மகமாயி, மாரிஅம்மா, என்று பல பெயர்களில் உறுமாறி கூப்பிடும் புகழ்பெற்ற நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரி அம்பாள் கருவறை சிலை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திர்க்கு உட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சியில் ,கீழக்குறிச்சி உழவுகாட்டில் இருந்து எடுத்து நார்த்தாமலையில் அம்பாளுக்கு கோவில்கள் கட்டி வணங்க படுகிறது, இதைவிட ஒன்று கீழக்குறிச்சி கிராம &ஊராட்சிக்கு தனிஒரு மண்டாக படி இருந்தது (அம்மன் ஒருநாள் திருவிழா ) அதை கீழக்குறிச்சி எல்லை கிராம கோவில்களின் சில பல காரணத்தால் விளத்துபட்டி ஊராட்சியான ஊரபட்டி கிராமத்திர்கு தாரை வார்த்து கொடுத்ததாக வரலாறு கூறுகிறது இன்றும் கீழக்குறிச்சி ஊராட்சி வாழ் மக்கள் அம்மனுக்கு வருடம் தவறாமல் பல இடங்களில் பிரமாண்டமான முறையில் தண்ணீர் பந்தல் அமைத்து அண்ணதாணம் செய்துவருகிரார்கள் & ஊர் மக்கள் பல வகையான காவடிகளும் பால் குடங்களும் அலகு குத்துதலும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ....

கோவில்களின் கட்டுமானத்தில் நார்த்தாமலை தொகு

தஞ்சை பெரிய கோவில் கட்டுமானத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் இப்பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களே ஆகும்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏனைய அம்மன் கோவில்களுக்கு கற்கள் இங்கிருந்தே எடுக்கப்பட்டவை.

கருவிநூல் தொகு

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006, & 2016 ன் பதிப்புகள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சி நண்பர்கள் .&ஊர் மக்கள் சார்பாக ,கீழக்குறிச்சி தமிழன் A.U.இளையராஜா.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-03-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
  5. Tamil Nadu District Gazetteers: Pudukkottai. 1917. பக். [817]. https://archive.org/details/dli.csl.3276/page/n863/mode/1up?q=. 
  6. http://www.jeyamohan.in/?p=8907
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்த்தாமலை&oldid=3861387" இலிருந்து மீள்விக்கப்பட்டது