ஒரு சில கருவிகள், அதற்கு இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றும் தன்மை கொண்டவை. இச்சிறப்புக் கருவிகளில் தொடர்ச்சியாக இயக்கப்படும் வெவ்வேறு வகையான கட்டளைகளின் தொகுப்பே நிரலாகும். இந்த கருவிகள் உருவாக்கப்பட்ட விதத்திற்கும் இயங்கும் விதத்திற்கும் ஏற்றார் போல இக்கட்டளைகள் அமைக்கப்பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், ஒன்றிலே இந்த கட்டளைகளை அந்த கருவியால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் அல்லது, முறையாக இயற்றப்படாத கட்டளையால் அந்த கருவி பண்புகேடாக நமது விருப்பத்திற்கு மாறாக இயங்கிவிடக்கூடும்.

எடுத்துக்காட்டாக,

  • தானியங்கி பட்டுப்புடவைத் தறியில் பயன்படுத்தப்படும், ஒன்றோடொன்று தொடுக்கப்பட்டு துளையிடப்பட்ட அட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உருவ அமைப்பை, புடவையில் ஏற்படுத்தும் வண்ணம், தறியை இயங்கவைக்கும்.
  • தானியங்கி பியானோ இசைக்கருவியிலும் இதே போன்ற துளையிடப்பட்ட அட்டைகளின் தொகுப்பு பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அட்டையும் பியானோக்குள் செல்லச்செல்ல, வெவ்வேறு இசையை எழுப்பும்.
  • கோப்புகளில் சேமித்துவைக்கப்பட்ட கட்டளைத் தொகுப்பை, கணினி பயன்படுத்தி ஒரு செயலோட்டத்தை ஏற்படுத்தும். இதையே கணினிநிரல் என்கிறோம். கணினிக்காக உருவாக்கப்படும் நிரல்கள் பற்பல நிரலாக்கமொழிகளில் ஒன்றைப் பயன்படுத்தி தொகுக்கப்படுகிறது.

இவ்வாறாக, ஒரு நிரலின் பயன்பாடு என்பது, அதற்கு உண்டான கருவி, அந்நிரலில் இருக்கும் கட்டளைகளை ஒவ்வொன்றாக படித்துப் புரிந்துகொண்டு இயக்கம் காட்டுவதிலேயே அமைகிறது. ஒவ்வொரு கட்டளைகளிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளுக்கு ஏற்றார்போல அதன் இயக்கமுடிவில், அந்த கருவியில் ஒரு நிலைமாற்றம் ஏற்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரல்&oldid=1806010" இலிருந்து மீள்விக்கப்பட்டது