பயணப்பிணி (Motion sickness, Travel sickness) பயணத்தினால் ஏற்படும் ஓர் உடல்நலக்குறைவு.

மக்களில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப் படுகிறார்கள். கொந்தளிப்பு, ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானமப் பயணங்களிலும் ஏற்படுவதால் இந்த பயணப்பிணி முறையே seasickness, car sickness, airsickness என்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாகக் குறிப்பிடப் படுவதும் உண்டு. இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு.

இந்நோய் ‘கின்னட்டோசிஸ்’ (kinetosis) என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. பயணப்பிணி ஏன் ஏற்படுகிறது என்ற சரியான விடையை இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் பல காரணங்களும் ஆராயப்பட்டு வருகிறது.

அறிகுறிகள் தொகு

குமட்டல் (nausea), வாந்தி (vomiting), தலைசுற்றல் (dizziness), மயக்கம் (fainting) , தலைவலி (headache), சோர்வு (fatigue) ஆகியவற்றை பயணப்பிணியினால் பாதிக்கபட்டோர் உணரும் அறிகுறிகளாகக் குறிப்பிடுவர்.

நோய்க்காரணி தொகு

பொதுவாகக் கருதப்படும் காரணம்; தனக்குக் கிடைக்கும் முரணான சமிக்கைகளை மூளை கையாளும் விதமே பயணப்பிணி தோன்றக் காரணம். நாம் ஓர் ஊர்தியில் பயணிக்கும் பொழுது, நமது புலன்கள் முரணான சமிக்கைகளை மூளைக்கு அனுப்புவதால், குழப்பமடைந்த மூளையின் எதிர்விளைவு பயணப்பிணியாக உருவெடுக்கிறது. நமது பயணத்தின் போது திசை, இயக்கம், அசைவு பற்றிய தகவல்களை மைய நரம்பு மண்டலதிற்கும், மூளைக்கும் அனுப்பும் புலனுறுப்புகள் கண், காது மற்றும் தோலின் திசுக்கள் ஆகியன [1].

கண் பார்வை மூலம் காணும் காட்சியின் வழி திசை மற்றும் இயக்கத்தையும், காதில் உள்ள உட்செவியின் உள்ள ‘செவி முன்றில்’ (vestibular system) உதவியால் சமநிலை, அசைவு ஆகியவற்றையும், தோலின் கீழ் உள்ள தசைகளில் பொதிந்துள்ள உணர்வு நரம்புகள் ஈர்ப்புவிசை, வேகம் போன்ற தகவல்களையும் உள்வாங்கி புலனுறுப்புகள் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. பயண ஊர்தியில் பயணிக்கும் பொழுது நமது கண்ணானது நாம் அறையில் அசையாமல் அமர்ந்திருப்பது போன்ற தகவலை மூளைக்கு அனுப்புகிறது, ஆனால் காதின் சமநிலைக்குக் காரணமான செவிமுன்றில் நாம் வேகமாகப் பயணிப்பதாகத் தகவல் அனுப்புகிறது. முரண்பட்ட இச்சமிக்கைகளால் மூளை குழப்பமடைந்து பயணப்பிணி தோன்றுகிறது. அது குமட்டலாக, வாந்தி வரும் உணர்வாக மாறுகிறது (Motion sickness caused by motion that is felt but not seen). திரைப்படத்தில் தோன்றும் பயணக் கட்சிகளும் இவ்வாறே குழப்பத்தைத் தரும். ஆனால் அது சற்று மாறுபட்ட வகையில் செயல்படுகிறது. கண் பார்வை திரையில் தோன்றும் வேகமாகப் பயணிக்கும் தகவலை மூளைக்கு அனுப்பும் பொழுது, காது அது போன்ற இயக்கம் ஏதும் நிகழவில்லை என்ற தகவலை மூளைக்கு அனுப்பும், இதன் விளைவாகவும் சிலர் எதிர் கொள்வது பயணப் பிணியைத்தான்

பக்க விளைவுகள் தொகு

இவ்வாறு வயிற்றினைப் பாதிக்கும் குமட்டலுக்கும் வாந்திக்கும் காரணம் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் விளக்கப்படுகிறது. விரைவுப் பயணங்கள் வரலாற்றில் நிகழ்வது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளில்தான். அதற்குமுன் மனிதர்களின் இயக்கம் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்தது. இயற்கையில் மனிதர்கள் நச்சினை உண்டுவிட்டால், உடல் மனித உயிரைக் காக்கும் பொருட்டு குமட்டல், வாந்தி எடுப்பதன் மூலம் உடலில் இருந்து அவற்றை வெளியேற்றி மனித உயிரைக் காக்கும். அது போலவே, முரணான தகவல்களையும் நரம்புமண்டலம் நச்சுப் பொருள் என்ற வகையிலேயேக் கையாண்டு, குமட்டல், வாந்தி மூலம் நச்சை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கையை எடுக்கிறது. குமட்டல், வாந்தி என்ற பயணப்பிணியின் முக்கியமானப் பக்க விளைவுகளைக் கொண்டே இந்த விளக்கம் பிறந்ததுள்ளது.[2] ஆனாலும் இக்கூற்று பல விளக்கங்களைத் தருவதில் தவறிவிடுகிறது. எதனால் பார்வையற்ற பயணிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? எதனால் ஆடவரைவிட மகளிர் அதிகம் பயணப்பிணியினால் பாதிக்கபடுகிறார்கள்? வண்டி ஓட்டுனரைக் காட்டிலும் பயணிகள் பெரும்பாலும் பாதிப்படைவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

பழக்கமற்ற சூழ்நிலைகளிலும், இடங்களிலும் நம் உடல் சமநிலையில் இருக்கமுடியாததால் ஏற்படும் கோளாறு இவ்வாறு பயணப்பிணியாக வெளிப்படுகிறது என்றும் மற்றொரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்துவிட்ட பொழுதும் எவ்வாறு சளி பிடிப்பதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோமோ அது போலவே பயணப்பிணியும் மனித குலத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

மருந்தும் சிகிச்சையும் தொகு

மூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இப்பிணியைத்தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி அமர்ந்து பயணிப்பதைத் தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப் படுகிறது [3].

பயணங்களில் இஞ்சியை மெல்லுவதும் உதவுவதாக அனுபவபூர்வமான அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது, பேருந்து நிலையங்களில் நம்மூரில் ‘இஞ்சி மொரப்பா’ மிட்டாய்கள் விற்கப்படும் காரணமும் இதனால்தான்.

சீனமருத்துவமான ‘அக்யூபங்க்ச்சர்’ (Acupuncture) முறையில் கண்டுணரப்பட்ட சிகிச்சைக்கான அதே உடற் பாகங்களிலேயே கொடுக்கப்படும் அழுத்தங்கள் (acupressure) உதவுவதாகவும் நம்பப்படுவதால் அந்த முறை சிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு கைக்காப்பு போன்ற பட்டைகளும் சிலரால் கை மணிக்கட்டில் அணியப்படுகிறது.

சான்றுகள் தொகு

  1. The mystery of motion sickness, Rose Eveleth, TED Ed Lessons, January 2014
  2. Treisman, M. Motion sickness: an evolutionary hypothesis. Science 197: 493-495, 1977
  3. FYI: What Causes Motion Sickness, And How Do You Cure It? Brooke Workneh, Popular Science, December 2012

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணப்பிணி&oldid=3679590" இலிருந்து மீள்விக்கப்பட்டது