பின்னணிக்காட்சி அமைப்பு

பின்னணிக்காட்சி அமைப்பு (Set construction) என்பது ஒரு திரைப்படத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அல்லது ஒரு நாடகத்தில் வரும் காட்சிச் சூழலைக் குறிப்பதற்காகச் செயற்கையாக முழு அளவுக்கு உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். பார்வையாளர்களைக் கதையின் களத்துக்குள் கொண்டு செல்வதில் பின்னணிக் காட்சியமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. அத்துடன், திரைப்படக் காட்சிகள் நம்பத்தக்கவையாகவும், வேண்டிய உணர்ச்சிகளைப் பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குவையாகவும் இருப்பதற்கு முறையான பின்னணிக்காட்சி அமைப்பு மிகவும் அவசியம். இதனாலேயே திரைப்படங்களில் இவற்றை உருவாக்குவதில் பெருமளவு உழைப்பும், கற்பனைத் திறனும் உள்ளிடப்படுகின்றன.

மரவேலையாட்கள் பின்னணிக்காட்சி அமைப்பொன்றை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் காட்சி
கட்டி முடிக்கப்பட்ட ஒரு பின்னணிக்காட்சி அமைப்பு

உருவாக்கம் தொகு

குறித்த தயாரிப்பின் இயக்குனரின் தேவைகளுக்கு ஏற்பக் கலை இயக்குனர் பின்னணிக்காட்சி அமைப்புக்களை வடிவமைப்புச் செய்வார். இவ்வடிவமைப்புக்கு அமைய ஒப்பந்தக்காரர்கள் அல்லது கட்டுனர்கள் இந்த அமைப்பைக் குறித்த இடத்தில் கட்டி முடிப்பர். பின்னணிக்காட்சி அமைப்பை வடிவமைப்பவர் தனது வடிவமைப்பை விளக்கும் வகையில், வரைபடங்களையும், அளவுத் திட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட சிறிய மாதிரியுரு ஒன்றையும் வழங்குவர். வரைபடங்கள், தளப்படம், நிலைப்படம், வெட்டுப்படம் போன்றவற்றையும் சில கூறுகளின் விபரப் படங்களையும் உள்ளடக்கும்.