பீட்டர் ஜூலியன் ஐமார்ட்

புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் (Saint Peter Julian Eymard, பெப்ரவரி 4, 1811ஆகத்து 1, 1868) பிரான்சு நாட்டு கத்தோலிக்க குருவும், இரண்டு துறவற சபைகளின் நிறுவனரும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவர் நற்கருணையின் திருத்தூதர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார். இவரது விழா ஆகத்து 2ந்தேதி கொண்டாடப்படுகிறது.

புனித பீட்டர் ஜூலியன்
நற்கருணையின் திருத்தூதர்
பிறப்பு(1811-02-04)4 பெப்ரவரி 1811
லா முரே, க்ரனோபுல், பிரான்சு
இறப்பு1 ஆகத்து 1868(1868-08-01) (அகவை 57)
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்1925
புனிதர் பட்டம்9 டிசம்பர் 1962 by திருத்தந்தை 23ம் ஜான்
திருவிழாஆகத்து 2

தொடக்க காலம் தொகு

பீட்டர் ஜூலியன் பிரான்சு நாட்டின் லா முரே பகுதியில் 1811ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் நாள் பிறந்தார்.[1] இவர் சிறு வயது முதலே, திவ்விய நற்கருணையில் இருக்கும் இயேசுவின் மீது பக்தி கொண்டிருந்தார். இவர் அடிக்கடி ஆலயத்துக்கு சென்று திவ்விய நற்கருணையை சந்தித்து, அதில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவோடு நெருக்கமாக பேசுவார். சிறுவனாக இருக்கும்போதே குருவாக வேண்டும் என்றும், நற்கருணையில் உள்ள இயேசுவைத் தாங்க வேண்டும் என்றும் ஆசையோடு இருந்தார்.

குருவாகும் ஆசையில் 18 வயதிலேயே ஐமார்ட் துறவற சபை ஒன்றில் இணைந்தார். உடல் நலம் ஒத்துழைப்பு கொடுக்காததால் சபையில் இருந்து விலகினார். பின்னர் மறைமாவட்டத்தில் குருத்துவப் பயிற்சி பெற்று 1834ஆம் ஆண்டு சூலை 20ந்தேதி குருவானார்.[2] சில ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 1839ல் மரியாவின் துறவற சபையில் இணைந்தார். புனித மரியாவின் பக்தியையும் திவ்விய நற்கருணை நாதரின் பக்தியையும் பரப்பினார்.

சபை நிறுவனர் தொகு

1856ஆம் ஆண்டு, பீட்டர் ஜூலியன் திவ்விய நற்கருணையின் சபை என்ற துறவற சபையைத் தொடங்கினார். மேலும் 1858ல், அருட்சகோதரி மார்கரெட் குய்லோட் என்பவருடன் இணைந்து இவர் திவ்விய நற்கருணையின் பணியாளர்கள் சபை என்ற துறவற சபையை நிறுவினார்.[2] இந்த சபைகளைச் சார்ந்த துறவிகள், முதல் முறை நற்கருணைப் பெறத் தயார் செய்யும் சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்பிப்பதில் ஆர்வமாக உழைத்தார்கள்.

ஜூலியன் அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளும் வழக்கத்தை கிறிஸ்தவர்கள் நடுவில் ஏற்படுத்த உழைத்தார்; திவ்விய நற்கருணை நாதரை அன்பு செய்ய மக்கள் பலருக்கும் இவர் அறிவுரை வழங்கினார். வாரம் ஒருமுறை நற்கருணை ஆராதனை செய்யும் பக்தி முயற்சியையும் இவர் மக்களிடையே பரப்பினார்.

புனிதர் பட்டம் தொகு

 
புனிதரின் அழியாத உடல்

அற்புதமான முறையில் திவ்விய நற்கருணையில் எழுந்தருளி இருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு தனது வாழ்வையே அர்ப்பணித்த பீட்டர் ஜூலியன் ஐமார்ட், 1868 ஆகத்து 1ந்தேதி மரணம் அடைந்தார்.[1] 1908ல் வணக்கத்திற்குரியவராகவும், 1925ல் அருளாளராகவும் இவர் உயர்த்தப்பட்டார்.

1962ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள், திருத்தந்தை 23ம் ஜான் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். இவரது கல்லறைத் தோண்டப்பட்ட போது இவருடைய உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 New Advent
  2. 2.0 2.1 "BlessedSacrament.com". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2011-10-19.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஜூலியன்_ஐமார்ட்&oldid=3563855" இலிருந்து மீள்விக்கப்பட்டது