பேச்சுச் சமுதாயம்

சமூகமொழியியலில், பேச்சுச் சமுதாயம் என்பது, தங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தனித்துவமான முறையில் மொழியொன்றைப் பேசும் தனியான மக்கள் குழு ஒன்றைக் குறிக்கும்.

பேச்சுச் சமுதாயங்கள், தொழில்துறை ஒன்றுக்குச் சிறப்பான சொற்களைக் கலந்து பேசுகின்ற அத் தொழில்துறையைச் சேர்ந்தவர்களாகவோ, கல்லூரி மாணவர்களைப் போன்ற தனியானதொரு சமூகக் குழுவாகவோ, குடும்பங்கள், நண்பர்கள் குழாம் போன்ற இறுக்கமான தொடர்புகளையுடைய குழுக்களாகவோ இருக்கலாம். அத்துடன், பல இணையவழிக் குழுக்களும் கூட பேச்சுச் சமுதாயங்களாக இருக்கின்றன. பேச்சுச் சமுதாய உறுப்பினர்கள், தங்கள் குழுக்களின் சிறப்புத் தேவைகளுக்காகக் குறுமொழி (slang) மற்றும் தொழில்சார் மொழி (jargon) வழக்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

வரைவிலக்கணம் தொகு

பேச்சுச் சமுதாயம் என்பதை எவ்வாறு துல்லியமாக வரையறுப்பது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும், இவ் வரைவிலக்கணங்கள், பின்வரும் அம்சங்களை வேறுபட்ட அளவில் முன்னிலைப்படுத்துபவையாக அமைகின்றன.

  • பொதுவான சமுதாய உறுப்புரிமை (Shared community membership)
  • பொது மொழிசார் தொடர்பு (Shared linguistic communication)

எனினும், இவற்றில் ஒன்றுக்குச் சார்பான மற்றதின் முக்கியத்துவம் மற்றும் மேலே தரப்பட்டுள்ளவற்றின் துல்லியமான வரைவிலக்கணம் என்பன தொடர்பிலும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர், பேச்சுச் சமுதாயம் ஒரு உண்மையான சமுதாயமாக இருக்கவேண்டும் என வாதிடுகின்றனர். அதாவது அவர்கள், குறிப்பிட்ட நகரில் வாழ்பவர்கள் அல்லது அயலவர்கள் போல ஒரேயிடத்தில் வாழ்பவர்களாக இருக்கவேண்டும் என்பது அவர்கள் கருத்து. ஆனால் அண்மைக்காலச் சிந்தனைகளின்படி, ஒவ்வொருவரும், அவர்களுடைய வாழிடம், தொழில், பால், வகுப்பு, சமயம், மற்றும் இன்னோரன்ன அம்சங்கள் தொடர்பான பல்வேறுபட்ட சமுதாயக் குழுக்களில் ஒரே நேரத்தில் உறுப்பினராக உள்ளார்கள். அதனால் அவர்கள் அந்தந்தக் குழுக்கள் தொடர்பான பேச்சுச் சமுதாயத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதுபோலவே, பொது மொழித் தொடர்பு என்பது தொடர்பிலும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் பொதுவான தாய்மொழியோ அல்லது ஒரே மொழியின் வட்டார வழக்கு மொழிகளைப் பேசுபவர்களாக இருப்பது அவசியம் என்கின்றனர். வேறு சிலரோ, குறிப்பிட்ட மொழியில் பேசுவதற்கும், தொடர்பாடுவதற்கும் முடிந்தால் அதுவே போதுமானது என்று கருதுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சுச்_சமுதாயம்&oldid=2740688" இலிருந்து மீள்விக்கப்பட்டது