மாநில சீர்திருத்தக் கட்சி

மாநில சீர்திருத்தக் கட்சி (State Reform Party, மலாய்: Parti Reformasi Negeri, சீனம்: 国家改革党) என்பது போர்னியோவைத் தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தேசியக் கட்சியாகும். சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக இந்தக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கட்சியைச் சுருக்கமாக ஸ்டார் என்று அழைப்பார்கள்.[1] போர்னியோ 7 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துவதே அதன் தலையாய நோக்கமாகும்.

மாநில சீர்திருத்தக் கட்சி
State Reform Party
国家改革党
தலைவர்டாக்டர் பாத்தாவ் ரூபிஸ்
Dr. Patau Rubis
1997 மார்ச் 9 லிருந்து - 2011 வரை
டாக்டர் டிரிபின் அனாக் சாகோய்
Dr. Dripin Anak Sakoi
2011 - தொடக்கம்
தொடக்கம்சரவாக், 1996 அக்டோபர் 9
சபா 2012 ஜனவரி 6
தலைமையகம்சரவாக் :
262 பத்து காவா சாலை,
93250 கூச்சிங்
சபா :
88300 கோத்தா கினபாலு.
இணையதளம்
http://reocities.com/capitolhill/congress/6332/aboutstar.htm
http://starsabah.webs.com/

வரலாறு தொகு

1995ஆம் ஆண்டு, சரவாக் மாநிலத்தின் அமைச்சரவையில் டாக்டர் பாத்தாவ் ரூபிஸ் ஓர் அமைச்சராக இருந்தபோது மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிராக, பாத்தாவ் ரூபிஸ் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினார் எனும் குற்றச்சாட்டின் பேரில், அவரை முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி ஹாஜி அப்துல் தாயிப் முகமட் பதவிநீக்கம் செய்தார். அப்போது சரவாக் தேசிய கட்சியில் (Sarawak National Party), பாத்தாவ் ரூபிஸ் முக்கிய பதவியில் இருந்தார்.

அதன் பின்னர், ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில், ஜியென் அனாக் நியோகெக் (Jien anak Nyokek) என்பவருடன் இணைந்த பாத்தாவ் ரூபிஸ், மாநில சீர்திருத்தக் கட்சியைத் தோற்றுவித்தார். 1996ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாநில சீர்திருத்தக் கட்சியைப் பதிவு செய்வதற்கு, கோலாலம்பூரில் இருக்கும் சங்கங்களின் பதிவதிகாரியிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.

1996 சரவாக் மாநிலத் தேர்தல் தொகு

சங்கங்களின் பதிவதிகாரியிடம் இருந்து அனுமதி கிடைப்பதற்கு காலதாமதமானது. அதனால், 1996 செப்டம்பர் மாதம் நடைபெற்ற சரவாக் மாநிலத் தேர்தலில் மாநில சீர்திருத்தக் கட்சி கலந்து கொள்ள முடியவில்லை. பாத்தாவ் ரூபிஸும் அவருடைய பங்காளிகளும் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் எவரும் வெற்றி பெறவில்லை. இருப்பினும், வைப்புத் தொகையை இழக்காத வகையில் கணிசமான வாக்குகளைப் அவர்கள் பெற்றனர்.

1996 அக்டோபர் 9ஆம் தேதி, மாநில சீர்திருத்தக் கட்சி, சங்கங்களின் பதிவதிகாரியால் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. 1997 மார்ச் 9ஆம் தேதி, அக்கட்சியின் தலைவராக பாத்தாவ் ரூபிஸ் பொறுப்பேற்றார். இன்று வரை, சரவாக் மாநிலத்தில் ஒரே எதிர்க்கட்சியாக மாநில சீர்திருத்தக் கட்சி இருந்து வருகிறது. 2012 ஜனவரி 6இல் இக்கட்சியின் சபா மாநில அலுவலகம் திறக்கப்பட்டது. 2013 மே 5இல் நடைபெறவிருக்கும் மலேசியப் பொதுத்தேர்தலில், இந்தக் கட்சி 28 நாடாளுமன்ற 49 சட்டசபை இடங்களில் போட்டியிடுகிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Sabah STAR chief warns Sarawakians against letting Umno into the state, alleging that the party is nothing but 'trouble'.
  2. For the first time in 35 years, all seats are contested and more than half of them will see multi-cornered fights.
  3. "A PKR's National Supreme Council member Jeffrey Jomion has resigned from the party to join the Sabah chapter of the State Reform Party (STAR) on Thursday". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.