மிகேல் டி நோரொன்யா, லின்யாரெசின் நாலாம் கவுன்ட்டு

இந்தியாவின் போர்த்துக்கேய ஆளுநர்

மிகேல் டி நோரொன்யா, லின்யாரெசின் நாலாம் கவுன்ட்டு (Miguel de Noronha, 4th Count of Linhares) (1585-1647), போர்த்துகலின் அரசர் மூன்றாம் பிலிப்புக்கு விசுவாசமான போர்த்துக்கேயப் பிரபுவும், படை வீரரும் ஆவார். இவர் போர்த்துக்கேய இந்தியாவின் வைசுராயாகப் பணியாற்றி உள்ளதுடன், போர்த்துகலிலும் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

டொம். மிகேல் டி நோரொன்யா

வரலாறு தொகு

1608 ஆம் ஆண்டில், இவரது ஒன்றுவிட்ட சகோதரர், டொம் பெர்னான்டோ டி நோரொன்யா பிள்ளைகள் இன்றி இறந்தபோது, லின்யாரெசின் நாலாம் கவுன்டு ஆனார். இவரது தந்தையாரைப்போல, இவர் 1624-1628 காலப் பகுதியில் தஞ்சியரில் ஆளுனராக இருந்து, இப்பகுதியில் முசுலிம்களுக்கு எதிரான போர்களில் பல வெற்றிகளையும் கண்டவர். இதன் பின்னர் 1629க்கும் 1635க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் போர்த்துக்கேய இந்தியாவின் 44 ஆவது ஆளுனராகவும், இந்தியாவின் 23 ஆவது வைசுராயும் ஆனார். இவரது பாட்டனாரும் 1550-1554 காலப் பகுதியில் இந்தியாவின் வைசுராயாக இருந்தார். இந்தியாவில் இவரது ஆட்சிக் காலத்தில் ஊழல், வெளித் தாக்குதல்கள் தொடர்பான பல கடுமையான பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டி இருந்தது. இலங்கையிலும், மொம்பாசாவிலும் இழப்புக்கள் ஏற்பட்டன.

ஐரோப்பாவில் நோரொன்யா தொகு

ஐரோப்பாவுக்குத் திரும்பிய பின்னர் மாட்ரிடில், போர்த்துகல் அவையின் உறுப்பினர் ஆனார். இங்கு இவர், இசுப்பெயின் இராச்சியத்துடன் தனிப்பட்ட ஒன்றியமாக இருந்த போர்த்துகல், ஒரு இராச்சியமாகவே இருக்கவேண்டும் என்பதற்காக வாதிட்டார். இவ்விடயத்தில், போர்த்துகல், இசுப்பெயினின் ஒரு மாகாணமாக இருக்க வேண்டும் எனக் கருதிய ஒலிவாரசுடன் கடுமையாக முரண்பட்டார். 1640 அம் ஆண்டில் போர்த்துக்கேய மீள்விப்புப் போரின்போது இவர் அரசர் பிலிப்புக்கு விசுவாசமாக இருந்தார். 1646 ஆம் ஆண்டில், ஓர்பிட்டெல்லோ போரில் பிரான்சுக்கு எதிராகப் போரிட்டார். இப்போரின்போது பிரெஞ்சுக் கப்பற்படையை அழிக்காது விட்டதற்காகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், சிறையிலும் அடைக்கப்பட்டார். 1647 ஆம் ஆண்டு இவர் மாட்ரிடில் காலமானார்.