முத்துராமலிங்கத் தேவர்

"தேசியம் என் உடல்; தெய்வீகம் என் உயிர்" என்ற இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தலைவர்

முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.[1][2]

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தபால் தலை
பிறப்புபசும்பொன் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்
(1908-10-30)30 அக்டோபர் 1908
பசும்பொன், இராமநாதபுரம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு30 அக்டோபர் 1963(1963-10-30) (அகவை 55)
கல்லறைபசும்பொன், இராமநாதபுரம், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தெய்வத் திருமகன்
பணிவிவசாயம், அரசியல்வாதி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு 1939 வரை
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்
சமயம்இந்து
பெற்றோர்உக்கிரபாண்டி தேவர்
இந்திராணி அம்மையார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து தொடங்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[3][4][5]

1957-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டுப் பின்னர் இந்தக் கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

மதுரையில் நடந்த ஜனநாயக காங்கிரசு மாநாட்டில் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரை

குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின், தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908-இல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார்.[6] இவரின் தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரின் தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்கத் தேவர் இவரின் உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த குழந்தைச்சாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்துத் தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர்த் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.

1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் நாள் மறைந்தார்.

தேவர் முஸ்லிம்கள் உறவு

தேவர் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். தேவரைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே,தேவரின் பெரியதாயார் திருமதி.மீனலோசனி அம்மாள் தனது மகன் வெள்ளைச்சாமி தேவருக்கு கொடுக்கும் பாலை தேவருக்கும் கொடுத்து வளர்த்தார்(ஆதாரம் தேவரின் உதவியாளர் எம்.எல்.ஏ ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் எழுதிய முடிசூடாமன்னர்பசும்பொன் முத்துராமலிங்கதேவர் புத்தகம் பக்கம் 18) இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டுப் போகக்கூடாது என அன்புக் கட்டளையிட்டார். தேவர், இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களைத் தீரமாக எதிர்த்தார்.

தேவரின் கன்னிப் பேச்சு

1933-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தைத் திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்குச் சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.

அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர், விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போலப் பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.

குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்தக் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920-ஆம் ஆண்டிலிருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராகத் தேவர் அவர்கள் முதன்முதலாகப் போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்புதான் இந்தப் போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்தச் சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினைக் கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டிப் போராடினார். இந்தப் போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்தச் சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்தச் சட்டம் நீக்கப்பட்டது.

1936 மாவட்ட வாரிய தேர்தல்

குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936-ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பின்னர்த் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.

1937 மாநில தேர்தல்

1937-ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களைக் காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படி செயல்வீரர்களாகத் திரட்டினார். தேவரின் இந்தச் செயல்கள் நீதிகட்சியினருக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்துப் பிரசாரம் செய்ய முடியாதபடிக்குச் சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.

1937-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியைக் கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு, பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர், அந்தத் தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.

பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்தக் காங்கிரஸ் கட்சி அரசு, குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்தச் சட்டத்தினை நீக்கவில்லை.

தேவர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்குப் பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர், அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம், தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-இல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும் சேர்ந்து வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.[7][8][நம்பகத்தகுந்த மேற்கோள்?][9][தொடர்பிழந்த இணைப்பு][10][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

தொழிலாளர்களின் தோழனாக

1930-களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில், மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கித் தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும், மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினைத் தேவர் தலைமை தாங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர், 1938-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945-ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

திரிபுரி காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்

1939-ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52-ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்துப் பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை, போஸூக்கு ஆதரவாகத் திரட்டினார்.

பின்னர்க் காந்தியின் தலையீட்டினால் போஸ் அந்தப் பொறுப்பை விட்டு விலகி, ஜூன் 22-ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபாட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைப்பாட்டின் காரணத்தினாலும் தேவர், போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6-ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது, தேவர் அவர்கள், போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினைக் கூட்டினார்.

சிறையில்

வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு, தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களைக் காரணம் காட்டி, 'மதுரா பாதுகாப்பு' என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்குத் தடுக்க நினைத்தது. பின்னர் 1940-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்குப் பயணித்த பொழுது, திருப்புவனத்தில் அவரைக் கைது செய்து, திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சிப் பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்குப் பின்னர், இவர் விடுதலையான பொழுது, சிறை வாசலிலேயே, இந்திய பாதுகாப்பு சட்டத்தினைக் காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர், 1945-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் விடுதலை ஆனார்.

சிறை வாசத்திற்குப் பின்

மார்ச் மாதம் 1946-ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர்க் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948-இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1949-ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று, தேவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி, அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில், "சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார்" என்றும், "அவர் விமான விபத்தில் இறந்ததாகக் கூறுவது பொய்" எனவும், அவரைத் தாமே சந்தித்தாகப் பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர், தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார். பின்னர் 1950-இல் மீண்டும் பொது வாழ்க்கைக்குத் திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில், தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும், இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்து, அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வந்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால், 1948-இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்தப் பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.

1952 பொது தேர்தல்

1952-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன், பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தன. இதில் தேவர், அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியைத் துறந்து, சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று, மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள், C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு

1955-ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவைக் கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்தத் தருணத்தில் 1955-ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும், தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்தப் பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1957 பொது தேர்தல்

1955-ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாகப் பர்மா சென்றார். அங்குப் பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்பு 1956-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள், பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காகத் தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்துக் கொண்டிருந்த வேளையில், மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.

தேவர் இந்த முறை, தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியைப் பேணினார். இதன் காரணமாக, பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க, தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்தத் தேர்தலிலும், தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும், முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

இராமநாதபுரம் கலவரம்

தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்தத் தொகுதிக்கு 1957-ஆம் ஆண்டு சூலை 1-ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்தக் கலவரம் இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.

இந்தக் கலவர நேரத்தில் லோக்சபா கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17-ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9-ஆம் நாள், திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10-ஆம் நாள் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த தேவேந்திரர்குல சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்துச் சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.  கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர் சமுதாய மக்களின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும் தேவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தேவர், தேவேந்திரர்குலம் சார்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்துக் கேள்வி எழுப்பினார். இதனால் அமைதி அறிக்கையில் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டுப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

மறுநாள் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28-ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்தப் பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் சதி திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர்ப் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது.

பார்வர்ட் பிளாக் கட்சி, தேவர் மீதான இந்த வழக்கு, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகத் தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் குற்றமற்றவர், நிரபராதி என்று இந்த வழக்கிலிருந்து சனவரி , 1959-இல் விடுவிக்கப்பட்டார்.

இறுதி நாட்கள்

வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959-ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ் (INDC - முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்தத் தேர்தலின் பொழுதுதான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும், பொது வாழ்க்கையில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.

பின்னர் 1962-இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை.

உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்தக் கட்சியின் முதல் தோல்வியாகும், 1957-இல் தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாகச் சேர்த்ததால் இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.

கொள்கைகள்

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.

  • தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
  • சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை
  • வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
  • வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும்
  • தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி
  • உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்
  • அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
  • யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்ந்தால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.

ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை.

அதே நேரம் தேவர், லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளர்

தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வோர் ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு, வள்ளலாரின் ஆன்மீக கருத்துகளை விவரித்துப் பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர்.

ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும் ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்குத் தெய்வத்திருமகன் என்ற பெயரைப் பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். இவரது சொற்பொழிவுகளில், தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.

குருபூஜை

தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாகத் தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும், தேவர் குருபூஜை நாளன்று, கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.[11][12][13] 1995-ஆம் ஆண்டு மத்திய அரசு, தேவரைக் கௌரவிக்கும் வகையில், அஞ்சல் தலை வெளியிட்டது.

தங்கக் கவசம்

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, 2010-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், "முத்துராமலிங்கத் தேவர் சிலைக்குத் தங்கக் காப்பு அளிக்கப்படும்" என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.[14][15]

மேற்கோள்கள்

  1. பசும்பொன் தேவர் குரு பூஜை விழா தினமணி 29.10.2013
  2. பசும்பொன் தேவர் குரு பூஜை: முதல்வர் சார்பில் அமைச்சர்கள் இன்று அஞ்சலி தினமணி 30.10.2013
  3. http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1951/VOL_1_51_LS.PDF Aruppukottai
  4. http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1957/Vol_I_57_LS.pdf பரணிடப்பட்டது 2014-10-08 at the வந்தவழி இயந்திரம் Srivilliputhur
  5. http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1962/Vol_I_LS_62.pdf பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம் Aru- http://www.dinamani.com/specials/kalvimani/2014/02/21/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0/article2069774.ece
  6. "முத்துராமலிங்க தேவர்".
  7. https://bsubra.wordpress.com/2007/11/05/pasumpon-muthuramalinga-thevar-biosketch-history/
  8. http://andhimazhai.com/news/view/maduraikkaaraynga-21.html
  9. http://www.vivekabharathi.in/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/
  10. http://tamilnaduthyagigal.blogspot.in/2010/07/blog-post_7613.html
  11. http://www.dinamani.com/latest_news/2013/10/29/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/article1862316.ece
  12. http://www.dinamani.com/tamilnadu/2013/10/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/article1863178.ece
  13. http://www.dinamani.com/galleries/events/article1320679.ece
  14. "தேவர் சிலைக்குத் தங்கக் கவசம்". தினமலர். 3 பிப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  15. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=79094 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் தினகரன்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துராமலிங்கத்_தேவர்&oldid=3884649" இலிருந்து மீள்விக்கப்பட்டது