முருக நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'அந்தணர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

முருக நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” என திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் கூறுகிறது.

முருக நாயனார்
பெயர்:முருக நாயனார்
குலம்:அந்தணர்
பூசை நாள்:வைகாசி மூலம்
அவதாரத் தலம்:திருப்புகலூர்
முக்தித் தலம்:நல்லூர்ப் பெருமணம்[1]

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார்[2][3]. நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூர்ப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
  2. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (31 ஜனவரி 2011). முருக நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1473. 
  3. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 

உசாத்துணைகள் தொகு

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=முருக_நாயனார்&oldid=3158167" இலிருந்து மீள்விக்கப்பட்டது