வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு (Dakshinavarti Shankh) என்பது சங்குகளில் ஒரு அரிய வகை ஆகும். இது இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளைப் பெருந்தொகை அளித்து வாங்குபவர் உள்ளனர். இச்சங்கு திருவிதாங்கூர் கொடி, கேரள அரசு சின்னம், சிக்கிம் அரசு சின்னம் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளது.

திருவிதாங்கூர் கொடியில் உள்ள வலம்புரிச் சங்கு
செயற்கை வலம்புரி டிரைட்டன் சங்கு வகைச் சங்கு. வலம்புரிச் சங்கு அரிதானது என்பதால் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. சந்தையில் இவை போலிச் சங்குகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.

நம்பிக்கைகள் தொகு

வலம்புரிச் சங்குகள் கடற்கரைக்கு வந்து முத்துகளைக் கொட்டிவிட்டுச் செல்லும் என்றும், வலம்புரிச் சங்கு தானே முழங்கும் என்றும் நம்பிக்கை நிலவிவந்தது. வலம்புரிச் சங்கிலிருந்து விலையுயர்ந்த முத்து கிடைக்கும் என்ற நம்பிக்கை சங்க காலத்திலிருந்தே உள்ளது. சிலப்பதிகாரத்தில் வலம்புரியீன்ற நலம்புரி முத்தம் (27-244), மாசறு பொன்னே வலம்புரி முத்தே ( 2:73), வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும், வலம்புரியொரு முத்தன்ன (பெருந்தொகை 1712:25-27) வலம்புரி முத்து என்னும் கருதுகோள் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ளன.

தோன்றும் விதம் தொகு

இடம்புரி, வலம்புரிச் சங்குகளானது வெண் சங்கு என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. சங்குகள் கருமுட்டையாக வளரத் தொடங்கும்போது செல் பிளவுறும் கோணம் நேர் குறுக்காக அமையாமல் சற்று சாய்வாக அமைகிறது. அடுத்த பிளவுகள் முந்தைய பிளவின் சாய்கோணத்தில் அமைவதால் பிளவு நிலைகள் ஆரச்சுற்றில் நிகழ்கின்றன. புரிச்சுற்றின் அடிப்படையில் இதன் உடல் அமைவதால் அதை அடியொற்றி மேல்தோடும் அமைந்துவிடுகிறது. கருசெல் பிளவின் சாய்கோணம் இடது, வலது என விலகுவதற்கு இதன் மரபணுக்களே காரணம். இடம்புரி செல்பிளவு இயல்பானது. மரபணுவின் சடுதிமாற்றம் காரணமாகவே வலம்புரிச் சங்கு உருவாகிறது. மரபணு சடுதிமாற்றம் வெகு அரிதாக நிகழ்வது என்பதால் வலம்புரிச் சங்கும் அரிதாகவே கிடைக்கிறது.[1]

வகைகள் தொகு

வலம்புரி சங்கு உயர்வானது என்றாலும் அதைவிட உயர்வான சங்கு சலஞ்சலம்; சலஞ்சலத்திலும் உயர்வான சங்கு பாஞ்சசன்யம் என்று மக்கள் கருதினர். ஆயிரம் இடம்புரிச் சங்குக்கு இணையானது ஒரு வலம்புரி; ஆயிரம் வலம்புரிக்கு ஒரு சலஞ்சலம்; ஆயிரம் சலஞ்சலத்துக்கு நேரானது ஒரு பாஞ்சசன்யம் என்ற கருத்துக்கள் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளன.[2] சலஞ்சலத்தின் உள்ளே வெள்ளி நிறத்தில் இருக்கும் மூன்று கோடுகள் மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று சில சம்ஸ்கிருத நூல்கள் சொல்கின்றன. என்றாலும் இன்றுவரை சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்பதாக விவரிக்கப்படும் சங்குகளை எவரும் கண்டதில்லை.[3]

வலம்புரிச் சங்குகள் மேலான சக்தியைக் கொண்டவை என்பதற்கு சான்று எதுவுமில்லை வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை என்பது மட்டும் உண்மை.

மேற்கோள்கள் தொகு

  1. வறீதையா கான்ஸ்தந்தின் (3 பெப்ரவரி 2018). "எப்படி வருகிறது வலம்புரி?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "தமிழ்க் கலைக்களஞ்சியம்". கட்டுரை. தமிழ் வளர்ச்சித்துறை. p. 371. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2018.
  3. வறீதையா கான்ஸ்தந்தின் (28 சனவரி 2018). "வலம்புரி அதிர்ஷ்டமா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலம்புரிச்_சங்கு&oldid=3578216" இலிருந்து மீள்விக்கப்பட்டது