வான் ஏரி

துருக்கியின் மிகப்பெரிய ஏரி

வான் ஏரி (Lake Van, துருக்கியம்: வான் கெலூ, ஆர்மீனியன்: Վանա լիճ, வானா லீ, குர்திஷ்: கோலா வானே) அனத்தோலியாவின் மிகப்பெரிய ஏரி. இது துருக்கியின் கிழக்குப்பகுதியிலுள்ள வான் மற்றும் பிட்லிஸ் மாகாணங்களில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள மலைகளிலிருந்து இறங்கும் ஏராளமான சிறிய நீரோடைகளிலிருந்து தண்ணீரைப் பெறும் இது, ஒரு கார உப்புநீர் ஏரி. உலகின் மிகப்பெரிய நீர்வெளியேற்றுப் பாதையில்லா ஏரிகளில் வான் ஏரியும் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பினால் இந்த ஏரியின் இயற்கையான நீர்வெளியேற்றுப் பாதை மூடப்பட்டுவிட்டது. வான் ஏரி 1,640 மீ (5,380 அடி) உயரத்தில் கடுமையான குளிர்காலம் கொண்ட பகுதியில் இருந்தாலும், அதன் உயர் உப்புத்தன்மை, பெரும்பாலான ஏரி உறைவதிலிருந்து தடுக்கிறது, மேலும் ஆழமற்ற வடக்குப் பகுதி கூட அரிதாகவே உறைகிறது.[3]

வான் ஏரி
விண்வெளியிலிருந்து, செப்டம்பர் 1996
வான் ஏரி is located in துருக்கி
வான் ஏரி
வான் ஏரி
ஆள்கூறுகள்38°38′N 42°49′E / 38.633°N 42.817°E / 38.633; 42.817
வகைபுவி ஒடுக்கு ஏரி, உப்பு ஏரி
முதன்மை வரத்துகரசு, ஹோசாப், குசேல்சு, பெந்திமாஹி, சிலான் மற்றும் ஏனிகோர்ப்பு ஓடைகள்[1]
முதன்மை வெளியேற்றம்ஏதுமில்லை
வடிநிலப் பரப்பு12,500 km2 (4,800 sq mi)[1]
வடிநில நாடுகள்துருக்கி
அதிகபட்ச நீளம்119 km (74 mi)
மேற்பரப்பளவு3,755 km2 (1,450 sq mi)
சராசரி ஆழம்171 m (561 அடி)
அதிகபட்ச ஆழம்451 m (1,480 அடி)[2]
நீர்க் கனவளவு607 km3 (146 cu mi)[2]
கரை நீளம்1430 km (270 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,640 m (5,380 அடி)
Islandsஅக்தமார், சர்பானாக் (குடுட்ஸ்), ஆதிர் (லிம்), குஷ் (அர்தர்)
குடியேற்றங்கள்வான், தத்வான், அஹலாத், அர்சிஸ்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

நீர்நிலை மற்றும் வேதியியல் தொகு

வான் ஏரி அதன் அகலமான இடத்தில் 119 கிலோமீட்டர் (74 மைல்) நீளம் கொண்டுள்ளது, சராசரியாக 171 மீட்டர் (561 அடி) ஆழம் கொண்ட இந்த ஏரியின் ஆழமிகுந்த இடம் 451 மீட்டர் (1,480 அடி) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏரியின் மேற்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 1,640 மீட்டர் (5,380 அடி) மற்றும் கரையோர நீளம் 430 கிலோமீட்டர் (270 மைல்) ஆகும். வான் ஏரி 3,755 கிமீ 2 (1,450 சதுர மைல்) பரப்பளவுடன் 607 கன கிலோமீட்டர் (146 சதுர மைல்) கொள்ளவைக் கொண்டுள்ளது.[2]

ஏரியின் மேற்குப் பகுதி ஆழம்மிகுந்தது, தத்வானின் வடகிழக்கே, அஹலாத்தின் தெற்கே 400 மீ (1,300 அடி) ஆழத்தில் ஒரு பெரிய படுகை உள்ளது. ஏரியின் கிழக்குப்பகுதிகள் ஆழம் குறைந்தவை. வான்-அக்தமார் பகுதி படிப்படியாகச் சரிந்து, அதன் வடமேற்கு பக்கத்தில் அதிகபட்சமாக சுமார் 250 மீ (820 அடி) ஆழத்தில், ஏரியின் மற்ற பகுதிகளுடன் இணைகிறது. எர்சியின் கை எனப்படும் பகுதி மிகவும் ஆழம் குறைந்தது, பெரும்பாலும் 50 மீ (160 அடி) க்கும் குறைவான ஆழத்தை மட்டுமே கொண்ட அதன் ஆழமான பகுதி சுமார் 150 மீ (490 அடி) ஆகும்.[4][5]

சோடியம் கார்பனேட்டு மற்றும் பிற உப்புகள் நிறைந்த இந்த ஏரி நீர் கடுமையான காரம் கொண்டது (pH 9.7–9.8). அந்த உப்புக்கள் ஆவியாதல் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு அழுக்குநீக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[6]

நிலவியல் தொகு

கிழக்கு அனத்தோலியாவின் இந்தப் பகுதியினூடாகச் செல்லும் பல பெரிய பூமிப்பிளவுகளின் நகர்வின் காரணமாக பூமியின் மேலடுக்குகளுள் ஒரு பெருந்தொகுதியின் படிப்படியான அமிழ்வுகளால் 600,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த வான் ஏரி ஒரு புவி ஒடுக்கு ஏரியாகும்.

ஏரியின் தெற்கு விளிம்பானது புதுவெழு காலம் மற்றும் நான்காமைக் காலங்களைச் சேர்ந்த பிட்லிஸ் மாசிஃப்பின் உருமாற்ற பாறைகளுக்கும் எரிமலை அடுக்குகளுக்கும் இடையிலான எல்லையைக் குறிக்கிறது. ஏரியின் ஆழமான, மேற்குப் பகுதியானது இயல்பு, மோதல்-வீழல் பிளவு மற்றும் உந்துதல் ஆகிய புவியடுக்கு மாற்றங்களால் உண்டான புவியடுக்கு அழுத்தத்தில் அமைந்த ஒரு குவிமாட வடிவ வடிநிலமாகும்.[7]

ஏரி, கார்லியோவா முச்சந்திக்கு அருகிலிருப்பதால், பூமியுறையிலிருந்து திரவங்கள் வான் ஏரிக்கு அடியிலுள்ள அடுக்குகளில் குவிந்து, ஏரியின் புவியியல் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகின்றன.[7] ஏரியின் வடக்குக் கரையில் அடுக்கு எரிமலைகளுள் ஒன்றான சிபான் மலை உள்ளது. ஏரியின் மேற்கு முனைக்கு அருகில் ஏரியின் இரண்டாவது செயலற்ற எரிமலையான நெம்ருட் மலையின் பரந்த பள்ளம் உள்ளது. இப்பகுதி முழுவதும் வெப்பநீர்ச் செயல்பாடு உள்ளது.[7]

பனியுகக் காலம் வரை, வான் ஏரியின் தென்மேற்குப் பகுதியில் ஒரு நீர்வெளியேற்றப்பாதை இருந்துள்ளது. இருப்பினும், இந்த வரம்பு காலப்போக்கில் மாறுபட்டுள்ளது, ஏனெனில் நெம்ருட் எரிமலையிலிருந்து மேற்குப்புறமாக மியூஸ் சமவெளியை நோக்கிய அடுத்தடுத்த எரிமலைக் குழம்புப்பாய்ச்சல்களால் ஏரி தடுக்கப்பட்டுவிட்டது. இந்த வரம்பு சில நேரங்களில் அரிப்பு மூலமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் அளவியல் தொகு

வான் ஏரியின் முதல் ஒலி மதிப்பீடு 1974 இல் செய்யப்பட்டது.[4][8] இதனடிப்படையில், ஏரிக்குள் மூன்று தனித்துவமான நிலப்பரப்புகளை கெம்பே மற்றும் டிஜென்ஸ் அடையாளம் கண்டுள்ளனர்: கரையிலிருந்து செங்குத்துச் சாய்வு மாற்றம் வரையிலுள்ள தெளிவான படிமச்சாய்வு - ஒரு லாகஸ்ட்ரைன் படிவு (ஏரியின் பரப்பளவில் 27%); ஒரு செங்குத்தான லாகஸ்ட்ரைன் சாய்வு (பரப்பளவில் 63%); மற்றும் ஏரியின் மேற்கு மையத்தில் ஒரு ஆழமான, ஒப்பீட்டளவில் தட்டையான வடிநிலப்பகுதி (பரப்பளவில் 10%).[9] ஏரியின் ஆழமான பகுதி தத்வான் படுகை எனப்படும், இது முற்றிலும் பூமிப்பிளவுகளால் சூழப்பட்டுள்ளது.[8]

அண்மைய ஏரியளவு மாற்றம் தொகு

இந்த ஏரியின் அளவு 1990 களில் ஏறத்தாழ மூன்று மீட்டரளவு உயர்ந்து பெரும்பாலான வேளாண்நிலங்களை மூழ்கடித்தது. அதன்பின் வந்த குறுகிய காலத்தில் நிலைபெற்று தன் முந்தைய அளவுக்குக் குறைந்தபின் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்தாண்டுகளில் இந்த ஏரி ஏறத்தாழ இரண்டு மீட்டர்கள் உயர்ந்துள்ளது.[1]

காலநிலை தொகு

 
லாண்ட்சாட்டிலிருந்து எடுக்கப்பட்ட, வான் ஏரியின் படம்

துருக்கியின் மிக உயர்ந்த மற்றும் மிகப்பெரிய பகுதியில் வான் ஏரி அமைந்துள்ளது. இது கடுமையான கண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 22 முதல் 25 °C வரையிலும், ஜனவரியில் −3° முதல் −12 °C வரையிலும் இருக்கும். குறிப்பாக குளிர்மிகுந்த குளிர்கால இரவுகளில் வெப்பநிலை −30 °C ஐ அடைகிறது. வான் ஏரியானது சுற்றியுள்ள பகுதிகளின் காலநிலையை ஓரளவு தணிக்கிறது, அருகிலுள்ள வான் நகரில், ஏரியின் கரையில், ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 22.5 °C ஆகவும், ஜனவரி மாதத்தில் −3.5 °C ஆகவும் இருக்கும். வான் ஏரியின் படுகையில் சராசரி ஆண்டு மழை 400 முதல் 700 மி.மீ வரை இருக்கும்.[10][11]

சூழலியல் தொகு

 
சாலஞ்சர் விண்வெளி ஓடத்திலிருந்து பார்க்கையில் வான் ஏரியின் தோற்றம்

ஏரியில் நீலப்பச்சைப்பாசிகள், கசையுயிர்கள், இருகலப்பாசிகள், பச்சைப்பாசிகள் மற்றும் பழுப்புப்பாசிகள் உள்ளிட்ட 103 வகையான மிதவைத்தாவர உயிரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏரியில் வட்டுயிர், கிளாடோசெரா மற்றும் கோப்பெபோடா உட்பட 36 வகையான விலங்கின மிதவை நுண்ணுயிரிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.[12]

வான் ஏரியின் உப்புநீரில் வாழ்வதென அறியப்பட்ட ஒரே மீன் சால்கல்பர்னஸ் தரிச்சி அல்லது பேர்ல் முல்லட் (துருக்கியம்: inci kefalı) என்றறியப்படும், சப் மற்றும் டேசு மீனினத்துடன் தொடர்புடைய சைப்ரினிட் மீன். இது வசந்தகால வெள்ளத்தின் போது பிடிக்கப்படுகிறது.[13] மே மற்றும் ஜூன் மாதங்களில், இந்த மீன்கள் ஏரியிலிருந்து காரச்செறிவு குறைந்த நீருக்கு இடம்பெயர்கின்றன, அவை ஏரிக்கு வரும் ஆறுகளின் முகப்பிலோ அல்லது ஆறுகளிலோ முட்டையிடுகின்றன. குஞ்சு பொறிக்கும் பருவத்திற்குப் பிறகு அவை மீண்டும் ஏரிக்குத் திரும்புகிறன.[14]

வான் ஏரிப்பகுதி, இயல்புக்குமாறாகத் தண்ணீரைப் பெரிதும் விரும்பும் அரியவகைப் பூனையான வான் பூனை இனத்தின் தாயகமாகும். மேலும் இப்பகுதி பழம் மற்றும் தானியங்களைப் பயிரிடு்ம் வேளாண் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டில், வான் ஏரியில் 40 மீ (130 அடி) நீளமான நுண்படிமங்களைக் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இவை, ஏரி நீரிலிருந்து படியும் கால்சைட்டுடன் இணைந்து அரகோனைட்டை உண்டாக்கும் கோகோயிட் நீலப்பச்சைப்பாசிகளின் விரிப்புகளைக் கொண்டு உருவான இவை திடமான கோபுரங்களாகும்.[15]

கட்டிடக்கலை தொகு

 
அக்தமார் தீவும் அங்குள்ள ஆர்மீனிய பேராலயமும், பத்தாம் நூற்றாண்டு தேவாலயமும் மடவளாகமும். பின்னனியில் அர்தோஸ் {சாதிர்} மலை.

அக்தமார் தீவின் தென்கரையோரம் வான் கோட்டைக்கருகில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் (ஆர்மீனியன்: Սուրբ Խաչ, Surb Khach) உள்ளது. இது ஆர்மீனிய வஸ்புரகன் அரசின் அரசுத் தேவாலயமாக இருந்தது. ஆர்மீனிய மடங்களின் இடிபாடுகள் வான் ஏரியிலுள்ள மற்ற தீவுகளான லிம், அர்தர், குடுட்ஸ் ஆகியவற்றில் இன்றும் உள்ளன. வான் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்மீனிய மடங்கள் உள்ளன. அவற்றுள் பரவலாக அறியப்பட்டவை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நரேகவான்க், மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகவான்க். இவற்றில் நரேகவான்க் மடம் தற்பொழுது அழிவுற்றுள்ளது.

அஹலாத்ஷாக்கள் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லறைகளை அஹலாத் நகரைச்சுற்றி இட்டுள்ளனர். அந்தப்பகுதியின் உள்ளூர் ஆட்சியர்கள் அக்கல்லறைகளை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்க்க முயன்றுவருகின்றனர்.[16][17]

போக்குவரத்து தொகு

துருக்கி மற்றும் ஈரானை இணைக்கும் ரயில்வே, பாக்தாத் உடன்படிக்கைக் குழுவினரின் உதவியுடன் 1970 களில் கட்டப்பட்டது. கரடுமுரடான கரையோரத்தை சுற்றி ரயில் தடங்களை அமைப்பதற்கு மாற்றாக, தத்வான் மற்றும் வான் நகரங்களுக்கிடையில் வான் ஏரி வழியாக ரயில் படகு பயன்படுத்தப்படுகிறது. ரயிலில் இருந்து கப்பலுக்கு மாற்றி, பின் மீண்டும் கப்பலிலிருந்து ரயிலுக்கு மாற்றுவதால் மொத்த சுமக்கும் திறன் குறைவாகவே உள்ளது.

மே 2008 இல், துருக்கிக்கும் ஈரானுக்கும் இடையில் படகு வழிக்கு மாற்றாக மின்மயமாக்கப்பட்ட புதிய இரட்டைப்பாதையை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.[18] டிசம்பர் 2015 இல், துருக்கிய அரசு ரயில்வேயால் இயக்கப்படும் துருக்கியின் மிகப் பெரிய புதிய தலைமுறை ரயில் படகுகள், வான் ஏரியின் சேவையில் நுழைந்தன.[19]

வான் நகரில் உள்ள ஃபெரிட் மெலன் விமான நிலையம் வான் ஏரியின் கரைக்கு அருகில் அமைந்துள்ளது. துருக்கிய விமானச்சேவை நிறுவனம், அண்டொலுஜெட், பெகசுஸ் விமானச்சேவை நிறுவனம், மற்றும் சன்எக்ஸ்பிரஸ் போன்ற விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தில் வழமையாக விமானப் போக்குவரத்தைக் கொண்டுள்ளன.

விளையாட்டு தொகு

 
வான் ஏரியில் 2010 யுஐஎம்-ஐஓசி வான் கிராண்ட் பிரிக்ஸிலிருந்து ஒரு படம்

வான் ஏரியில் அவ்வப்போது பாய்மரப் படகோட்டம், உட்கரை திறன்படகுப் பந்தயம் போன்ற போட்டிகளும் வான் ஏரித் திருவிழாவும் நடைபெறுவதுண்டு.

தீவுகள் தொகு

  • ஆதிர் (லிம்) தீவுகள்
  • அக்தமார் தீவுகள்
  • சர்பானாக் (குடுட்ஸ்) தீவுகள்
  • குஷ் (அர்தர்) தீவுகள்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Coskun & Musaoğlu 2004.
  2. 2.0 2.1 2.2 Degens et al. 1984.
  3. "Lake Van" 1998.
  4. 4.0 4.1 Wong & Degens 1978.
  5. Tomonaga, Brennwald & Kipfer 2011.
  6. Sarı 2008.
  7. 7.0 7.1 7.2 Toker et al. 2017, ப. 166.
  8. 8.0 8.1 Toker et al. 2017, ப. 167.
  9. Kempe & Degens 1978.
  10. Матвеев: Турция [что значительно ниже установленной позже корректной цифры в 161,2 метра] (உருசிய மொழியில்)
  11. Warren 2006.
  12. Selçuk 1992
  13. Danulat & Kempe 2008.
  14. Sarı 2006.
  15. Kempe et al. Konuk.
  16. Oktay 2007.
  17. UNESCO n.d..
  18. APA 2007.
  19. Mina 2015.

மூலங்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வான் ஏரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_ஏரி&oldid=3833575" இலிருந்து மீள்விக்கப்பட்டது