வை. பாலசுந்தரம்

வை.பாலசுந்தரம் என்ற ஆளுமையைச் சார்நதே 1977-ல் ராஜாஜி அரங்கில் அன்றைய தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்ட
(வி. பாலசுந்தரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வை. பாலசுந்தரம் , (13 ஏப்ரல் 1942 – 6 திசெம்பர் 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சென்னை மாநகராட்சியின் மேயராக 1969–70ஆம் ஆண்டுகள் பதவி வகித்தார்.இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]சென்னையின் ஐம்பெரும் ஆளுமைகள் என்று அறியப்படுகிற ஐயா இளைய பெருமாள், சொல்லின் செல்வர் சக்திதாசன், பெரியவர் சுந்தரராசனார், டாக்டர் சேப்பன் இவர்களோடு ஒரு இணைப் போராளியாகச் செயலாற்றியவர்.அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவருமாவார் .[2][3]

பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆய்வுக்குழுவின் சட்டமன்றக் குழுத்தலைவராகவும் செயற்பட்டார். அக்குழு சார்பாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய அவர் அப்போது சென்னையில் கட்டத் தொடங்கியிருந்த அண்ணா மேம்பாலத்திற்கான மாதிரியாக, வரைபடம் ஒன்றைப் பரிந்துரைத்தார். அதன்படி அண்ணா மேம்பாலத்தின் அமைப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. காவலர்களுக்கான கால்சட்டை பற்றிச் சட்டப்பேரவையில் இவர் எழுப்பிய கேள்வியின் பேரிலேயே முழுக்கால்சட்டையாக அது மாற்றப்பட்டது.

அம்பேத்கர் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பின்னால் வைபா நடத்திய பேரணிகள், மாநாடுகள் தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. 1980களில் நிறையப் போராட்டங்களில் அமைப்பு ஈடுபட்டது. குறிப்பாக அம்பேத்கரிய இயக்கங்கள் பெரும்பாலும் வடமாவட்டச் செல்வாக்கிலானதாக இருந்துவந்த நிலையில் வடக்கே தொடங்கப்பட்ட அமைப்பானது தென்மாவட்டங்களிலும் சற்றே விரிந்து செயல்பட்டதென்றால் அது அம்பேத்கர் மக்கள் இயக்கம்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மதுரை வட்டாரத்தில் செல்வாக்குப் பெறும்வரையிலும் இந்த அமைப்பே அப்பகுதியில் இயங்கியது. 1950களில் வாடிப்பட்டி பொட்டுலுபட்டியில் காந்திஜி பள்ளியைத் தொடங்கிய பொன்னுத்தாய் அம்மாள் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகியாக விளங்கினார். 1980களில் சங்கனாங்குளம் ஊரில் தலித் பெண்கள்மீது வன்முறை ஏவப்பட்டது. திருமங்கலம் நாகராணி, வாடிப்பட்டி பஞ்சு கொல்லப்பட்டனர். இதற்கெதிரான போராட்டத்தை இந்த இயக்கமே நடத்தியது. வாடிப்பட்டி பஞ்சுவுக்காகப் போராட்டம் நடக்கவிருந்த நிலையில் மேடை கொளுத்தப்பட்டது. வைபா காரின் மேல் ஏறிநின்று கூட்டத்தில் பேசினார். 1980களில் தமிழகத்தில் முதன்முதலாகப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வைபா வழக்கு தொடர்ந்தார். அதே தருணத்தில் மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு ‘பஞ்சாயத்து ராஜ்நகர் பாலிகா’ என்ற மசோதாவைக் கொணர்ந்தது. அதுபற்றிய வழக்கில் நீதிமன்றம் வைபாவின் மனுவையும் கணக்கிலெடுக்கச் சொன்னது. எனவே அவர் வழக்கின் காரணத்தையும் சேர்த்துத்தான் உள்ளாட்சிகளிலும் இடஒதுக்கீட்டுக்கான தெளிவைப் பஞ்சாயத்து ராஜ்நகர் பாலிகா திருத்த மசோதாவில் இணைத்தனர்.

1985 இல் அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 2001 ஆம் ஆண்டு வை.பா அவர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  2. Muthurasa Kumar (8 April 2018). "How a Dalit Woman Used Education to Empower Herself and Those Around Her". The Wire. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
  3. "Demonstration seeking judicial probe". The Hindu. 10 January 2007. Archived from the original on 1 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.


முன்னர்
வேலூர் டி.நாராயணன்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1969-1970
பின்னர்
சா. கணேசன்
 

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._பாலசுந்தரம்&oldid=3804244" இலிருந்து மீள்விக்கப்பட்டது