வைக்கம் [വൈക്കം) என்பது கேரளத்தில் உள்ள ஒரு நகரமாகும். வட்டத் தலைநகராக இருக்கும் இந்த ஊர் வைக்கம் போராட்டம் மூலம் அறியப்படும் முக்கிய நகரமாகும். கோட்டயத்திற்கு அருகே இந்த ஊர் உள்ளது.

வைக்கம் போராட்டம் தொகு

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்த வைக்கம் சோமநாதர் கோயிலில் வழிபாட்டு உரிமை நம்பூதிரிகளின் வசம் இருந்தது. இந்தக் கோயிலுக்குள் ஈழவர்களும் அவர்களுக்கு கீழ் வகுப்பினராகக் கருதப்பட்ட சாதிகளும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இந்தக் கோயிலைச் சுற்றியிருக்கும் தெருக்களில் நடப்பதற்குக் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.

1905ல் இந்த அநீதிக்கு எதிராக ஈழவர்கள் நடத்திய போராட்டம் திவான் வேலுப்பிள்ளை என்பவரால் முறியடிக்கப்பட்டது. பின்னர் திருவிதாங்கூரில் சட்டசபையில்ல் ஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு பரிபாலன சபை எனும் இயக்கத்தைச் சேர்ந்த பலர் உறுப்பினர்களாக ஆன போது மீண்டும் இந்தக் கோரிக்கை எழுந்தது. ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது. 1924 ஜனவரி 24 ல் டி. கே. மாதவன் முன்முயற்சியில் வைக்கம் ஆலயத்திலும், அதனைச் சுற்றிலும் உள்ள தெருக்களிலும் நுழைவதற்கான வைக்கம் போராட்டம் ஆரம்பித்தது.

இப்போராட்டம் காந்தியின் வழிகாட்டல்களின் படி காங்கிரசு கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ நாராயணகுருவின் இயக்கத்தவர் பெருவாரியாக பங்கெடுத்தனர். தமிழக காங்கிரஸ் சார்பில் ஈ. வெ. இராமசாமி, கோவை அய்யாமுத்துக் கவுண்டர், எம்.வி.நாயுடு, இராஜகோபாலாச்சாரி போன்றோர்களும் முக்கியப் பங்கெடுத்தனர். இப்போராடத்தில் மகாத்மா காந்தியும் 1925 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈ. வெ. இராமசாமி ஐந்து மாதங்கள் வரை சிறையில் இருந்தார் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கம்&oldid=3843218" இலிருந்து மீள்விக்கப்பட்டது