ஹரோல்ட் பிண்டர்

ஹரோல்ட் பிண்டர் (Harold Pinter, அக்டோபர் 10, 1930 - டிசம்பர் 24, 2008) பிரித்தானியாவைச் சேர்ந்த நாடகாசிரியர், கவிஞர். 2005 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.

ஹரோல்ட் பிண்டர்
பிறப்புஹரோல்ட் பிண்டர்
(1930-10-10)10 அக்டோபர் 1930
லண்டன், இங்கிலாந்து
இறப்பு24 திசம்பர் 2008(2008-12-24) (அகவை 78)
லண்டன், இங்கிலாந்து
தொழில்நாடக, திரைக்கதை எழுத்தாளர், கவிஞர், நடிகர், இயக்குநர், அரசியல்வாதி
தேசியம்பிரித்தானியர்
காலம்1950 – 2008
வகைநாடகம், திரைப்படம், கவிதை, புதினம், கட்டுரை
குறிப்பிடத்தக்க விருதுகள்டேவிட் கோஹென் பரிசு (1995)
லோரன்ஸ் ஒலிவர் விருது (1996)
Companion of Honour (2002)
நோபல் பரிசு (2005)
Légion d'honneur (2007)
துணைவர்அண்டோனியா பிரேசர் (1980–2008)
விவியன் மேர்ச்சண்ட் (1956–1980)
பிள்ளைகள்6 பெறா மக்கள் (அண்டோனியாவுடன்)
ஒரு மகன் (விவியனுடன்)
இணையதளம்
http://www.haroldpinter.org/home/index.shtml

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாடக ஆசிரியராக அறியப்படும் இவர், 1930 ஆம் ஆண்டு கிழக்கு இலண்டனின் ஹாக்னி மாவட்டத்தில் யூத இனத்தைச் சார்ந்த தையற்காரரின் மகனாகப் பிறந்தார்.

தனது இளமைக்காலத்தில், யூத எதிர்ப்புணர்வின் (anti-semitism) காரணமாக கடுமையான மனப் போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார். தான் ஒரு நாடக ஆசிரியர் ஆகுவதென எடுத்த முடிவிற்கு இந்நிகழ்வுகள் முக்கியக்காரணமாக அமைந்தன எனப் பிண்டர் குறிப்பிடுகிறார். இளம் வயதிலிருந்து அரசின் போக்குக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து முன் வைத்த பிண்டர், கட்டாயப் போர்பயிற்சிக்கான எதிரி எனத் தன்னை அறிவித்துக் கொண்டு, கட்டாய இராணுவச் சேவையில் இணைய மறுத்து விட்டார்.

நாடகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, நாட்டுப்புற நாடக மேடைகளில் நடிக்கத் தொடங்கிய பிண்டர், தான் இயற்றிய 'த பர்த்டே பார்ட்டி' (1957) என்னும் நாடகத்தின் மூலம் பலரது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். இந்நாடகம் விசித்திரமான, தனித்துவம் மிக்க நடையைக் கொண்டிருந்தது. குரூரத்திற்கும், வெறுமைக்குமான இணைப்பினை நிறுவியிருந்தார் பிண்டர். இது விவாதங்களை நிறுத்தி, அந்த விவாதங்களை, கண்டறியவியலாத ஆழமான உணர்வுகளாக மாற்றியது.

பிண்டரின் கதாப்பாத்திரங்கள் கொண்டிருந்த உள்மன பயங்கள், ஆழமான ஆசைகள், தீர்க்கப்படவியலாத காம வேட்கைகள்யாவும் அதுவரையிலும் பிழைப்பிற்காக கட்டமைக்கப்பட்டிருந்த வாழ்வியல் முறைகளை தகர்த்தெறிபவைகளாக, அவைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக அமைந்தன. வழக்கமாக மூடப்பட்ட அறைக்குள், கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவைகளின் நடவடிக்கைகள்யாவும், செறிவு மிகுந்த வலியூட்டும் சோகமான விளையாட்டை ஒத்திருக்கும். பெரும்பாலான தருணங்களில், நடிகர்களின் பாவனைகள், வசனங்களுக்கு நேர் மாறானதாக அமைக்கப்பட்டு, பார்வையாளனை தனது மூர்க்கமான பிடியினுள் சிக்க வைப்பது இவரது பாணி.

அரிதான இவரது நாடக நடையும், மெளனங்களும் அதுவரை அறியப்படாத சாத்தியப்படத்தக்க, வித்தியாசமான நாடகச்சூழலைக் கொண்டு வந்தது. இப்புதிய நாடகச்சூழல் 'பிண்டெரெஸ்க்யூ' என்றழைக்கப்படுகிறது.

'கேர் டேக்கர்' (1959) பிண்டரின் மற்றொரு படைப்பு. இரு சகோதரர்களின் உறவில் ஒரு முதியவரின் இருத்தலும், அதன் விளைவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்த இந்நாடகம், இவரை வணிக ரீதியில் வெற்றியாளராக்கியது. வேறொரு படைப்பான, 'ஹோம்கம்மிங்' (1964), ஆண்களால் நிரம்பியிருக்கும் வீடொன்றினுள் பெண் நுழைவதால் மறைத்து வைக்கப்படும் கட்டுப்பாடற்ற வன்முறைகளையும், குழப்பமான காம உணர்வுகளையும் வெளிப்படுத்தி மிகுந்த கவனம் பெற்றது.

தொடர்ந்து 'த பேஸ்மெண்ட்'(1966), 'த டீ பார்ட்டி'(1964), 'ஓல்ட் டைம்ஸ்'(1970), 'நோ மேன்'ஸ் லேண்ட்'(1974) என புகழ் பெற்ற நாடகங்களை இயற்றினார். எண்பதுகளில், 'எ கைண்ட் ஆ·ப் அலாஸ்கா'(1982), 'ஒன் பார் த ரோட்'(1984), 'மெளண்டைன் லேங்குவேஜ்'(1988) ஆகிய ஓரங்க நாடகங்களை இயற்றினார்.

தனது நாடகங்களின் நுட்பங்கள், செறிவூட்டுவதற்கென செய்யப்பட்ட நுணுக்கங்கள் குறித்து நாடகத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களுக்கும் கூட விளக்க மறுக்கும் பிண்டர், அமைதியை கொண்டாடுபவராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார்.

"நாம் கேட்கும் பேச்சு, நாம் கேட்காதவற்றின் குறியீடு. எப்போதும் வன்முறையாகவும், ரகசியமாகவும் தொடர்ந்து நகர்கிறது. பேச்சு கொணரும் புகைத்திரை, மற்றவைகளை அவற்றின் உண்மையான இடத்தில் வைக்கிறது. அமைதி குலையும் போது நாம் எதிரொலிப்புகளுடன் விடப் படுகிறோம். அமைதியால் நிர்வாணத்தின் அருகாமைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, நிர்வாணத்தை மறைக்கும் தொடர்ச்சியான தந்திரமாகப் பேச்சு செயல்படுகிறது" எனக் குறிப்பிடும் பிண்டரின் இந்தப் பார்வையே, இவரின் நாடகங்களிள் தென்படும் ஆழமான மெளனங்களின் அடித்தளம்.

1981 இல், மெரில் ஸ்டிரீப் மற்றும் ஜெர்மி ஐயர்ன்ஸ் நடித்து வெளி வந்த 'த பிரெஞ்ச் லெப்டினென்ட்'ஸ் வுமன்' என்னும் திரைப்படம், ஜான் பவலின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் திரைக்கதை அமைத்ததற்காக ,பிண்டர் ஆஸ்கார் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு ஸ்வீடிஷ் அகாடமி இவருக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது .

எண்பதுகளில், மார்கரெட் தாட்சரின் சந்தைப் பொருளாதாரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பிண்டரின் செயல்பாடுகள் அதே காலகட்டத்தில் வேகமாக அரசியல் நோக்கித் திரும்பத் துவங்கின. அமெரிக்க-பிரித்தானிய அரசுகளின் போர் நடவடிக்கை குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பிண்டர், 2003 இல் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பிற்கு எதிராகத் தன் கருத்துக்களை கவிதைத் தொகுப்பொன்றில் பதிவு செய்தார்.

தனது நாட்டின் அரசு குறித்தும், உலக அரசியலில் அதன் போக்கு குறித்தும் விமர்சிக்கும் பிண்டர், இங்கிலாந்தின் அடிப்படையான நாகரீகத்தையும், உலகிற்கு அது வழங்கிய கிரிக்கெட்டையும் மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார். 'கெய்ட்டிஸ்' என்னும் கிரிக்கெட் கிளப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

மார்ச் 2005 இல் நாடகத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று, அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த பிண்டர், இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியுள்ளார். பி.பி.சி இவரின் 75 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இவர் இயற்றிய 'வாய்சஸ்' என்னும் வானொலி நாடகத்தை ஒலிபரப்பியது.

ஒரு எழுத்தாளர், பிண்டரை "நிரந்தரமாகத் தொந்தரவு கொடுப்பவர். வாழ்வு முறைகளிலும், கலைகளிலும் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மைகளின் தொடர்ச்சியான கேள்வியாளர்" எனக் குறிப்பிடுகிறார்.

தாக்கங்கள் தொகு

சாமுவேல் பெக்கெட், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, பிரான்ஸ் காஃப்க்கா, வில்பிரெட் ஒவென், மார்செல் புரூஸ்ட், ஷேக்ஸ்பியர், 40கள், 50கள், 60களின் ரஷ்ய, பிரெஞ்சு, அமெரிக்க திரைப்படங்கள்

மறைவு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரோல்ட்_பிண்டர்&oldid=2233084" இலிருந்து மீள்விக்கப்பட்டது